search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106327"

    தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் பெண்கள் மட்டுமே பங்கேற்று வடம் பிடித்த சிவசுப்பிரமணியசாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.
    தர்மபுரி:

    தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 17–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சாமி திருகல்யாண உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும், விநாயகர் தேரோட்டமும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று காலை பெண்கள் மட்டுமே வடம் பிடித்த சிவசுப்பிரமணியசாமி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலை பெயர்த்தனர். அதைத் தொடர்ந்து மாலை வாண வேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி பாரிமுனை நண்பர்கள், வாரியார் அன்னதான அறக்கட்டளை மற்றும் ஏழைகள் அன்னதான கமிட்டி சார்பில், பக்தர்களுக்கு சிற்றுண்டி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று (வியாழக்கிழமை) பிச்சாண்டவர் உற்சவம் மற்றும் குதிரை வாகன உற்சவமும், நாளை (வெள்ளிக்கிழமை) விழா கொடி இறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும், நாளை மறுநாள்(சனிக்கிழமை) சயன உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா, செயல் அலுவலர் முருகன், செங்குந்த சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.
    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது இருதரப்பு கருத்திலும் நியாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார். #Sabarimala #RahulGandhi

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை.

    இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் இருப்பது கோவில் ஆச்சாரம். அதை மீறக்கூடாது என்று ஐயப்ப பக்தர்களும், பந்தளம் ராஜகுடும்பம், கோவில் தந்திரிகளும் கூறி வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்தார். அதே நேரம் கேரள மாநில காங்கிரசார் இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இத்தீர்ப்பு தொடர்பாக கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் நடத்தி வந்த போராட்டத்திலும் பங்கேற்றனர். கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி ஆகியோரும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி கடந்த 2 நாட்களாக துபாய் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு வாழும் கேரள மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு ஆதரவான கருத்தையும், எதிர்ப்பான கருத்தையும் அறிந்து கொண்டேன். இரு தரப்பினரும் கூறுவதில் நியாயம் இருக்கிறது.

    ஒரு பிரிவினர் கோவிலின் ஆச்சாரத்தை ஒரு போதும் மீறக்கூடாது என்கிறார்கள். இன்னொரு பிரிவினர் அனைத்து வயது பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    பெண்களுக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம் கோவிலின் ஆச்சாரங்களை மீறக்கூடாது என்பதிலும் நியாயம் இருக் கிறது.

    எனவே இந்த விவகாரத்தில் இன்னும் குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது. என்ன நேர்ந்தாலும் காங்கிரஸ் கட்சி கேரள மக்களின் உணர்வுகளுக்கு, விருப்பத்திற்கு மாறாக செயல்படாது. மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதன்படி தான் செயல்பட வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #RahulGandhi

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து அமெரிக்க பக்தர்கள் அரோகரா கோ‌ஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி கோவிலில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து அமெரிக்க பக்தர்கள் அரோகரா கோ‌ஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசமும், பங்குனி உத்திர திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வரும் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் தற்போதே பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர்.

    அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் டக்ளஸ் புரூக்ஸ். இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். சமஸ்கிருதம் மற்றும் இந்துத்துவம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு போதித்து வருகிறார்.

    தமிழ் கடவுளான முருகப் பெருமான் மீது பக்தி கொண்ட இவர் ஒவ்வொரு ஆண்டும் அங்குள்ள நண்பர்களுடன் பழனி கோவிலுக்கு வருவது வழக்கம்.

    முருகப் பெருமான் மீது கொண்ட பற்று காரணமாக தனது பெயரை சுந்தரமூர்த்தி என மாற்றிக் கொண்டார். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுந்தரமூர்த்தி நியூயார்க் நகரைச் சேர்ந்த 18 பேருடன் சென்னை வந்தார்.

    பின்னர் அங்கிருந்து தனது நண்பர் ஜெகன்நாத்பாபு என்பவரை வழிகாட்டியாக கொண்டு பழனி கோவிலுக் வந்தார். இதில் ஆண்கள் அனைவரும் பட்டு வேட்டி, பட்டு சட்டையும் பெண்கள் பட்டுச் சேலையும் அணிந்து இந்திய பாரம்பரிய முறைப்படி வந்தனர்.

    உச்சிகால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த அவர்கள் அரோகரா கோ‌ஷம் எழுப்பி வழிபட்டனர். அமெரிக்கர்கள் அரோகரா கோ‌ஷம் எழுப்பியதை பார்த்து கோவிலில் இருந்த பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர். முன்னதாக இவர்களுடன் வந்த பேர்கிளாத் என்ற பெண் பக்தர் மயில் காவடி எடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். கோவில் நிர்வாகம் சார்பில் அளித்த திருநீரையும் நெற்றியில் பூசிக் கொண்டனர். அதன் பின்னர் திருப்பரங்குன்றம் செல்லப் போவதாக கூறி விட்டு சென்றனர்.
    ஒட்டன்சத்திரம் அருகே வருகிற 19-ந்தேதி பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அண்ணாமலையார் ஆன்மிக குழு ஏற்பாடு செய்துள்ளது.

    சென்னை:

    அசுரர்களை அழிப்பதற்காக அன்னை பார்வதி தேவியிடம் இருந்து முருகப்பெருமான் வேல் வாங்கிய தினமான தைப்பூசம் திருவிழா வருகிற 21-ந்தேதி முருகன் தலங்களில் கொண்டாடப்பட உள்ளது.

    தமிழகத்தில் உள்ள முருகன் தலங்களில் தைப்பூசம் விழா பழனியில் மிக கோலாகலமாக கொண்டாடப்படும்.

    தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் தைப்பூசத்தை முன்னிட்டு விரதம் இருந்து காவடியை சுமந்தபடி பாத யாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆண்டுக்கு ஆண்டு பாத யாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

    அப்படி செல்லும் பக்தர்களின் பசியை போக்குவதற்காக வழிநெடுக ஏராளமானோர் குடிநீர், பிஸ்கட் பாக்கெட், பழ வகைகள் போன்றவற்றை தானமாக கொடுப்பது உண்டு. சில அமைப்புகள் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்குகிறார்கள்.

    சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு கடந்த 8 ஆண்டுகளாக பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது 9-வது ஆண்டாக அன்னதானம் வழங்க அந்த குழுவினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் சன்னதி அருகே உள்ள எல்.என். திருமண மண்டபத்தில் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) அன்னதானம் நடைபெறுகிறது. இதற்காக அந்த திருமண மண்டபத்தில் “பழனி முருகன் அன்னதான குடில்” அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கு 18-ந்தேதி மாலை பக்தி இன்னிசை, கூட்டு வழிபாடு ஆகியவற்றுடன் அன்னதானம் தொடங்குகிறது.

    19-ந்தேதி காலை 9 மணிக்கு மகாசக்தி பூஜை, வேல் பூஜை, வேல்மாறல் பாராயணம் நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து காலை 10 மணி வரை பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். மதியம் 12 மணியில் இருந்து பக்தர்களுக்கு வாழை இலையில் அன்னதானம் வழங்கப்படும்.

    அன்னதான குடில் பகுதியில் பக்தர்களுக்கு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த அன்னதான சேவையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு பொருள் உதவி, நிதி உதவி செய்யலாம் என்று அண்ணாமலையார் ஆன்மிக குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நிதி உதவி செய்ய இயலாத பக்தர்கள் அன்னதான சேவையில் பங்கேற்று தங்களால் முடிந்த பணிகளை செய்யலாம். இந்த சேவையில் விருப்பம் உள்ள பக்தர்கள் 99443 09719, 98421 98889 எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம்.

    திருப்பதியில் கடும் குளிர் நிலவுவதால் திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்களுக்கு கூடுதலாக போர்வை வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். #Tirupati
    திருமலை:

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கி பேசினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள நான்கு மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகள் உலா வரும் வாகனங்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக மின்வயர், கேபிள், பக்திசேனல் வயர், கண்காணிப்பு கேமரா வயர்கள் செல்கிறது. இதனை சரிசெய்யும் விதமாக தரைவழியாக வயர்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

    நான்கு மாட வீதிகளில் இரும்பு கேட்டுகளை சீரமைத்து அமைக்க வேண்டும். அதுமட்டுமல்ல திருப்பதியில் உள்ள தெப்பகுளத்தை சுற்றியுள்ள இரும்பு தடுப்புகளை பித்தளை தடுப்புகளாக மாற்றப்படும்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள மரத்தேர் புதுப்பிக்க வேண்டும். மேலும் ரிங்ரோட்டில் மரக்கன்று, செடிகள் நடப்படும். திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தை சீரமைத்து பொதுமக்களின் வருகையை அதிகரிக்க வேண்டும்.

    இந்த மாதம் குளிர்காலம் என்பதால் திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்களுக்கு கூடுதலாக போர்வை வழங்க வேண்டும். மேலும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக கழிவறைகள் வசதி மேற்கொள்ள வேண்டும்.

    கபிலேஸ்வரசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து முடித்து உட்கார்ந்து செல்வதற்கு இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #Tirupati
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்ததால், 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய முடிந்தது
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்வார்கள்.

    இந்த திருவிழா காலங்கள் மட்டுமின்றி விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினங்களிலும் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அந்த வகையில், அய்யப்ப சீசன் தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே விடுமுறை நாளான நேற்று அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் அதிகாலை முதலே மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் அடிவாரம் பகுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர் கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. இதேபோல் பாதவிநாயகர் கோவில் அருகிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட 2 மடங்கு அதிகமாக இருந்தது.

    தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு செல்வதற்காக வந்த அய்யப்ப பக்தர்கள் தங்கள் வாகனங்களை கிரிவீதிகளில் நிறுத்தினர். இதனால் அடிவாரம் கிரிவீதியில், கிரிவலம் சென்ற பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் பக்தர்கள் வருகை நேற்று அதிகமாக இருந்ததால் மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் தரிசன வழிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    சபரிமலை கோவில் நடை திறந்த 13 நாளில் ரூ.19 கோடியே 37 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.31 கோடி குறைவு. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் பிரசித்திபெற்ற ஆன்மீக தலமாக திகழ்கிறது.

    இங்கு நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை போன்றவை மிகவும் சிறப்பு பெற்றது. இதுபோல ஒவ்வொரு மாதமும் கோவில் நடை திறந்து சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெறும்.

    இதனால் சபரிமலை கோவில் நடை திறக்கும் போதெல்லாம் அங்கு அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தலையில் இருமுடி கட்டு சுமந்து சாமியே சரணம் அய்யப்பா என்ற கோ‌ஷத்துடன் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

    சபரிமலையில் இளம்பெண்களை தரிசனம் செய்ய அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் வரலாறு காணாத வகையில் சபரிமலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போலீஸ் கெடுபிடி மற்றும் போராட்டங்கள் காரணமாக சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் இந்த ஆண்டு வெகுவாக குறைந்துவிட்டது.

    பக்தர்கள் வருகை குறைந்ததால் சபரிமலை கோவில் வருமானமும் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு மண்டல பூஜை தொடங்கிய 13 நாளில் ரூ.50 கோடியே 58 லட்சம் மொத்த வருமானம் கிடைத்திருந்தது.

    இந்த ஆண்டு 13 நாளில் ரூ.19 கோடியே 37 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. ரூ.31 கோடி வருமானம் குறைந்துள்ளது.

    சபரிமலை கோவிலில் உண்டியல் மூலம் கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.17 கோடி கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.9 கோடியாக குறைந்துவிட்டது. அதே போல சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை, அப்பம் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு பிரசாதங்கள் ரூ.7 கோடிக்குதான் விற்பனையாகி உள்ளது. #Sabarimala
    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் பக்தர்களுக்கு ஏழுமலையானின் தரிசனம் தங்குடையின்றி 44 மணி நேரத்துக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் மிக விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அன்று மட்டும் பக்தர்கள் வைகுண்ட வாயில் வழியாக தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் வைகுண்ட ஏகாதசியின் போது பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான அளவில் திரள்வது வழக்கம்.

    அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த தேவஸ்தானத்தின் அனைத்துத்துறை அதிகாரிகளின் கலந்துரையாடல் கூட்டம் திருமலையில் நேற்று நடந்தது.

    அதை தொடர்ந்து தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் டிசம்பர் 18-ல் வைகுண்ட ஏகாதசி உற்சவமும், 19-ல் துவாதசி உற்சவமும் நடைபெற உள்ளன. இவற்றில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு திரண்டு வருவர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனத்தை வழங்க தேவஸ்தானம் சில ஏற்பாடுகளை செய்துள்ளது. டிசம்பர் 17-ந் தேதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் 16-ந் தேதி இரவு முதல் வைகுண்டம் பகுதி 1-ல் உள்ள காத்திருப்பு அறைகளில் அனுமதிக்கப்படுவர். 18-ந் தேதி தரிசனம் செய்ய உள்ள பக்தர்கள் 17-ந் தேதி காலை 10 மணி முதல் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் காத்திருக்க அனுமதிக்கப்படுவர்.

    காத்திருப்பு அறைகள் நிறைந்தவுடன் அவர்கள் நாராயணகிரி தோட்டத்தில் உள்ள வரிசைகள், திருமலை மாடவீதியில் உள்ள பார்வையாளர் அரங்குகள், பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள கல்யாண மண்டபம், வெளிவட்டச் சாலையில் உள்ள தரிசன வரிசைகள் ஆகியவற்றின் வழியாக தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.

    அவர்களுக்கு 24 மணி நேரமும், உணவு, பால், தேநீர் உள்ளிட்டவை வழங்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    டிசம்பர் 18-ந் தேதி காலை 5 மணியளவில் வைகுண்டம்-2 காத்திருப்பு அறை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு டிசம்பர் 19-ந் தேதி நள்ளிரவு வரை ஏழுமலையானின் தரிசனம் தங்குடையின்றி 44 மணி நேரத்துக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இடையில் ஏழுமலையான் நைவேத்தியத்துக்காக மட்டும் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை தரிசனம் நிறுத்தப்படும். தரிசனம் முடித்த பக்தர்கள் வைகுண்ட வாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர். நீண்ட காத்திருப்பு என்பதால் பக்தர்கள் அமைதியுடன் இருந்து தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

    டிசம்பர் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பரிந்துரைக் கடிதங்களுக்கு வழங்கப்படும் அறைகள், நன்கொடையாளர்களுக்கு வழங்கும் அறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் டிசம்பர் 18, 19-ந் தேதிகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 18-ந்தேதி வி.ஐ.பி.க்கள் நேரடியாக வந்தால் ஒருவருக்கு 6 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். மத்திய அரசு அதிகாரிகளுக்கு 4 டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

    டிக்கெட் பெற்ற 5 ஆயிரம் பக்தர்கள் 18-ந் தேதி ரூ.300 விரைவு தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர். 19-ந் தேதி தர்ம தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

    டிசம்பர் 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர், நடைபாதை தரிசனம் உள்ளிட்ட அனைத்து முதன்மை தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. டிசம்பம் 18, 19-ந் தேதிகளில் மலைப்பாதைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 18-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு வைகுண்டவாசல் திறக்கப்பட உள்ளது. 1.30 மணி முதல் வி.ஐ.பி.க்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். வைகுண்ட ஏகாதசி அன்று காலை தங்க ரதத்தின் புறப்பாடும், துவாதசி அன்று காலை தீர்த்தவாரியும் நடைபெற உள்ளன. இந்த 2 நாட்களிலும்1.75 லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    வைகுண்ட ஏகாதாசியின் போது பக்தர்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்பதால், 7 லட்சம் லட்டுகளை தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். #TirupatiTemple
    கன மழையால் வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது. சபரிமலை சீசன் தொடங்கியதில் இருந்து அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் சுருளி அருவிக்கு வந்து நீராடி பின்னர் தங்கள் பயணத்தை தொடர்ந்து வந்தனர்.

    நேற்று மாலை ஹைவேவிஸ், சின்னமனூர், பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக சுருளி அருவியில் இன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் சுருளிக்கு வந்த அய்யப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கன மழை காரணமாக பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை மகா தீப தரிசனத்திற்கு மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    திருவண்ணாமலை:

    மகா தீப தரிசனத்துக்காக மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    மகா தீப தரிசனத்தன்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள தீப மலை மீது 2,500 பக்தர்கள் மட்டும் நிபந்தனைகளுடன் ஏற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.



    இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மலை ஏற அனுமதிச்சீட்டு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் 23-ந் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற வருபவர்கள் உரிய அடையாள சான்று, ஆதாரங்களை காண்பிக்க வேண்டும். அனுமதி சீட்டு பெற்றவர்கள் மலை ஏறுவதற்கென அறிவிக்கப்பட்ட பேகோபுரம் எதிர்புறத்தில் அனுமதி சீட்டை காண்பித்து மலை ஏற வேண்டும். மற்ற வழிகளில் மலை ஏற அனுமதி இல்லை.

    மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்து செல்ல வேண்டும். கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை கண்டிப்பாக எடுத்து செல்லக்கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட வழியில் மட்டுமே மலை ஏறவும், இறங்கவும் வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பரணி தீபம், மகா தீபம் ஏற்றும்போது, பக்தர்கள் கோவிலுக்குள் செல்லத் தேவையான கட்டண டிக்கெட்டுகள் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

    பரணி தீபத்துக்கான ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் 500 எண்ணிக்கையில் விற்கப்படுகின்றன.

    மகா தீபத்துக்கு ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் ஆயிரமும், ரூ.600 மதிப்பிலான டிக்கெட்டுகள் 100 என மொத்தம் ரூ. 1,600 எண்ணிக்கையிலான சிறப்பு கட்டண டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த டிக்கெட்டுகளை இன்று பகல் 11 மணி முதல் கோவிலின் இணைய தளமான www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். கட்டணச் சீட்டை பெற ஆதார் அட்டை, செல்லிடபேசி எண், இணையதள முகவரி ஆகியவை கண்டிப்பாகத் தேவை. ஓர் ஆதார் அட்டைக்கு ஒரு கட்டண சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.

    குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட செல்லிப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும். கட்டணச் சீட்டு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே அனுப்பப்படும்.

    தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டணச் சீட்டு அசல், ஆதார் அட்டை அசலுடன் வர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    தீபத் திருவிழாவிற்கு துணிப்பை, சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். #Thiruvannamalaitemple

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, பிச்சாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீபத்திருவிழா அன்று பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


    மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 தற்காலிக பஸ் நிலையங்களில் 2,420 பஸ்கள் நிற்க வைக்கலாம். 2,650 சிறப்பு பஸ்கள், 6,600 நடைகள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு செல்ல 59 தொடர் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தென்னக ரெயில்வே மூலம் 14 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடைசி நேரத்தில் பயணிகள் நெரிசல் தவிர்க்க விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வெளியே 70 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், உள்ளே 103 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

    அன்னதானம் 7 இடங்களில் மட்டும் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 8 குழுக்களாக உணவு தரம் குறித்து சோதனை மேற்கொள்வார்கள். ஆவின் பாலகம் 34 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பரணி தீபத்திற்கு 2,500 பக்தர்களும், மகா தீபத்தின் போது 3 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான துணிப்பை, சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதன்படி, 72 வெள்ளி நாணயங்களும், 2 கிராம் எடையுள்ள 6 தங்க நாணயங்களும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thiruvannamalaitemple

    அயோத்தியில் இருந்து இலங்கை வரை ஸ்ரீராமரின் வாழ்வோடு தொடர்புடைய இடங்களை தரிசிக்கும் ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில் 14-ம் தேதி டெல்லியில் தனது முதல் பயணத்தை தொடங்குகிறது. #ShriRamayanaExpress
    புதுடெல்லி:

    ஸ்ரீராமரின் வாழ்வோடு தொடர்புடைய இடங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் 16 நாள் பக்தி சுற்றுலாவாக செல்லும் ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் என்னும் சிறப்பு ரெயிலை இயக்க இந்திய ரெயில்வே துறை தீர்மானித்தது.

    இந்த சிறப்பு ரெயிலின் முதல் சேவை டெல்லி சப்தார்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து வரும் 14-11-2108 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது.

    அன்று மாலை சுமார் 4.30 மணிக்கு தொடங்கும் இந்த பக்தி பயணம் ராமர் பிறந்த அயோத்தியில் பஜனை, கீர்த்தனைகளோடு இரண்டாம் நாளும், அயோத்தியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள, ராமரின் வனவாச காலத்தில் பரதன் வாழ்ந்த இடமான நந்திக்கிராமத்தை மூன்றாம் நாளும் பக்தர்கள் தரிசிக்கலாம்.

    சீதை பிறந்த இடமாகக் கருதப்படும் சீதாமதியில் உள்ள ஜானகி கோவில், பினாரா, ராமன் - சீதை மணமுடித்த இடமான ஜானக்பூர் கோவில் ஆகிய இடங்களில் நான்காம் நாளும். வாரணாசியில் உள்ள துளசி மந்திர், சங்கட் மூச்சன் அனுமான் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவை ஐந்தாம் நாள் பயணத்தில் இடம்பெறும்.

    ஆறாம் நாளில் சீதையை பூமி மாதா தன்னுள் கொண்ட இடமாகச் சொல்லப்படும் சீதா சமகிஸ்தலம், சீதை கோவில், ராமன், சீதை, லக்ஷ்மணன் கங்கையைக் கடந்த ஸ்ரீரங்கவேற்புரம் கோவில்கள், கங்கா - யமுனா- சரஸ்வதி சங்கமமாகும் அலகாபாத் பரத்வாஜ் ஆசிரமம் மற்றும் ஏழாம் நாளில் சித்திரக்கூடத்தில் சங்கமம் ஹனுமான் கோவில் தரிசனம்.

    எட்டாம் நாள் சீதையை ராவணன் கவர்ந்து சென்ற இடமான தண்டகாரண்யம் என்றழைக்கப்பட்ட நாசிக் தன்மசாலையில் ஓய்வு. அங்குள்ள திரயம்பகேஸ்வரர் கோவில், அதை அடுத்து கோதாவரிக் கரையோர பஞ்சவடி ராமர் கோவில், லக்ஷ்மணனுக்கு உள்ள ஒரே கோவில் போன்றவை ஒன்பதாம் நாள் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.

    பத்தாம் நாள் அனுமன், ராமனையும் லக்ஷ்மணனையும் சந்தித்த கிஷ்கிந்தை (ஹம்பி) போய்ச் சேர்வது. பதினொன்றாம் நாள் எழில் கொஞ்சும் கோவில்கள்  காட்சி விருந்து. பன்னிரெண்டாம் நாள் ராமேஸ்வரம் சென்றடைதல்.

    பதிமூன்றாம் நாள் ராமேஸ்வரம் கோவில் தரிசனம், தனுஷ்கோடி பயணம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம்.

    பதினான்காம் நாள் சென்னை வரும் அந்த ரெயிலில் வரும் பயணிகள் இரு குழுவாக பிரிந்து விருப்பப்படும் குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம்  இலங்கை செல்வார்கள். மற்றவர்கள் டெல்லிக்கு ரெயில் மூலம் புறப்படுவர். 

    இரண்டாவது குழுவினர் பதினைந்தாம் நாள் முழுக்க ரயிலில் பயணித்து, பதினாறாம் நாள் டெல்லி சென்றடைவார்கள். டெல்லி-டெல்லிக்கான இந்த சுற்றுலாவுக்கான கட்டணம் நபர் ஒன்றுக்கு 15 ஆயிரத்து 120 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ரெயிலில் 800 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை சென்று 5 இரவுகள் மற்றும் 6 பகல் அங்கு தங்கி சுற்றிப் பார்ப்பதற்கான கட்டணம், உணவு, தங்கும் விடுதி செலவு மற்றும் சென்னையில் இருந்து கொழும்புவுக்கும், கொழும்புவில் இருந்து டெல்லிக்குமான விமான கட்டணம் என  நபர் ஒன்றுக்கு 47 ஆயிரத்து 600 ரூபாய் மொத்த கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விமானம் மூலம் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு அழைத்துச் செல்லப்படும் பயணிகள், ராவணன் இறந்த பிறகு விபீஷணன் முடிசூடிய கெளனியா, சீதையை தேடிவந்த அனுமன் ராவணனுடன் போர் செய்த ரம்பொட கோவில், மேகநாதன் சிவனிடம் வரம் வாங்கிய நுவரெலியா காயத்ரி பீடம், சீதை கோவில், அசோகவனம் உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவார்கள்.

    மேலும், திவ்கும்போலா கோவில், ராவணனைக் கொன்ற பின் பிரம்மமகஸ்தி தோஷம் கழிய ராமன், சிவனை கற்சிலையாய் வழிபட்ட முன்னேஸ்வரம் கோவில், மானாவாரி கோவில் ஆகிய கோவில்களும் இதில் அடங்கும். 

    பின்னர் அவர்கள் கொழும்புவிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றடைவர். சைவ உணவு, தங்குமிடம், சுற்றிக் காண்பித்து தல வரலாறுகளை சொல்லும் வழிகாட்டி உள்பட எல்லாம் இந்த சுற்றுலாவுக்கான கட்டணத்தில் அடங்கும் என்று இந்திய ரெயில்வே சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை தெரிவித்துள்ளது.

    அதாவது, இலங்கை பகுதி சுற்றுலாவையும் சேர்த்து 62 ஆயிரத்து 720  ரூபாயில் இந்த பக்தி சுற்றுலாவில் பங்கேற்கலாம். #ShriRamayanaExpress 
    ×