என் மலர்
நீங்கள் தேடியது "சுசீந்திரம்"
- திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
- திருக்கல்யாண நிகழ்ச்சியில் தாம்பூலப்பை வழங்கப்படுகிறது.
சுசீந்திரம் தாணுமா லயன் சுவாமி கோவி லில் மாசி திருவிழா 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 4-ந்தேதி அறம் வளர்த்த அம்மன், பறக்கை காசி விஸ்வநாதர் கோவிலில் கதிர் குளிப்பு நிகழ்ச்சியில் அலங்கார கோலத்தில் ஆசிரமம் கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.
அன்று மாலையில் ஆலய பணியாளர்கள் அம்மனின் சார்பில் சீர் வரிசைகளை நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்து கோவிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் அலங்கார கோலத்தில் ஆசிரமம் கோவிலில் இருந்து எழுந்தருளும் அறம் வளர்த்த அம்மன் பக்தர்கள் புடை சூழ, மேள தாளங்கள் முழங்க வாகன பவனியாக சுசீந்திரம் கோவில் வந்தடைகிறார்.
திருக்கல்யாணம் தொடர்ந்து அன்று இரவு 7.30 மணிக்கு விஷ்ணு சுவாமி முன்னிலையில் அலங்கார மண்டபத்தில் நடக்கும் திருமண விழாவில் அறம்வளர்த்த அம்மன் கழுத்தில் சிவபெருமான் மங்கல நாண் பூட்டும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மங்கல கயிறு, தேங்காய், வெற்றிலை, பாக்கு சேர்ந்த தாம்பூலப்பை வழங்கப்படுகிறது.
மறுநாள் மாலை 5 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- சிவராத்திரி விழா அன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
- தாணுமாலயசாமிக்கு தங்க அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடைபெறும்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சிவராத்திரி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
சிவராத்திரியையொட்டி சனி பிரதோஷ விழாவும் சேர்ந்து வருவதால் அன்று நான்கு கால பூஜையுடன் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி மாலை 6 மணிக்கு கோவிலில் உள்ள அகல் விளக்குகள் அனைத்தும் ஏற்றப்படும். இரவு 7 மணிக்கு ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் இருக்கும்படி அமரச் செய்து கோவில் சுற்றுப்பிரகாரத்தில் மூன்று முறை ஸ்ரீபலி விழா நடக்கிறது. பின்னர் தாணுமாலயசாமிக்கு தங்க அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடைபெறும்.
தொடர்ந்து இரவு 11 மணிக்கு முதல் கால பூஜை தொடங்குகிறது. அப்போது தாணுமாலய சாமிக்கு நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு சாமிக்கு தங்கு அங்கி சார்த்தப்படும். நள்ளிரவு 12.30 மணிக்கு 2-வது கால பூஜையும், மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு 3-வது கால பூஜையும், 2.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெறும்.
அதிகாலை 4 மணிக்கு கோவிலை சுற்றி ஸ்ரீ பலி விழா நடக்கிறது. சிவராத்திரி விழா அன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். 12 சிவாலயங்களிலும் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று ஓடி வரும் பக்தர்கள் இறுதியாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும், திருக்கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
- திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம், குங்குமம், வெற்றிலை ஆகியவை வழங்கப்படும்.
- 5-ந்தேதி சப்பரத் தேரில் ரத உற்சவம் நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா இன்று (சனிக்கிழமை) மாலை தொடங்குகிறது. இதையொட்டி மாலை 6 மணி அளவில் கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. தொடர்ந்து காலை மற்றும் மாலை வேலையில் ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் வீதி உலா வருவர்.
அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி திருக்கல்யாண விழா நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனை பல்லக்கில் எழுந்தருள செய்து பறக்கையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் வைத்து அம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா நடக்கிறது. பின்னர் அம்மன் மண்டபத்தில் எழுந்தருளியதும் சிறப்பு பூஜை நடக்கிறது. அதைதொடர்ந்து அன்ன வாகனத்தில் ஆசிரமத்திற்கு எடுத்து வருவார்கள்.
ஆசிரமம் சோழன் திட்டை அணைக்கட்டு கரையில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. மாலையில் மணமகளான அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்கரித்து தந்த பல்லக்கில் பூ மாலை, தோரணம் கட்டி, மேளதாளம் முழங்க ஆசிரமத்தில் இருந்து வீதி வழியாக பக்தர்கள் வெற்றிலை, பூ, மாலை, திருமணப்பட்டு, மஞ்சள், குங்குமம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தாம்பூலத் தட்டுடன் மேள தாளத்துடன் ஊர்வலமாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலை வந்தடைவர்.
அன்று இரவு 9 மணிக்கு மேல் அலங்கார மண்டபத்தில் வைத்து ரிஷப வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் தாணுமாலயசாமி கரத்தில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு, கருடவாகனத்தில் திருமால் வீற்றிருக்க அவரது முன்னிலையில் தாணுமாலய சாமி கையில் உள்ள திருமாங்கல்யம் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் குலவையிட அறம் வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் கட்டப்படும். திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம், குங்குமம், வெற்றிலை ஆகியவை வழங்கப்படும்.
மறுநாள் 5-ந் தேதி மாலையில் இந்திரன் தேராகிய சப்பரத் தேரில் ரத உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு ஆராட்டு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
- இன்று இந்திரன் தேராகிய சப்பரத்தில் உற்சவமும், ஆராட்டு விழாவும் நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிகள் வழங்கினர்.
விழாவில் நேற்று சனி பிரதோஷ வழிபாட்டுடன் திருக்கல்யாண விழா நடந்தது. சனி பிரதோஷ வழிபாட்டையொட்டி நேற்று இரவு 7 மணியளவில் கோவிலில் உள்ள அகல் விளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டு ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் இருக்கும்படி அமரச் செய்து கோவிலை சுற்றி 3 முறை ஸ்ரீ பலி விழா நடந்தது.
தொடர்ந்து தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. முன்னதாக நேற்று காலை 8 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளச் செய்து பறக்கையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அம்மனுக்கு திருமஞ்சள்நீராட்டு வைபவம் நடந்தது. பின்னர் அம்மனை மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து பல்லக்கு வாகனத்தில் ஆசிரமம் கிராமத்தில் எடுத்து வந்து ஆசிரமம் சோழன் திட்டை அணைக்கட்டில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மாலையில் அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்கரித்து பல்லக்கில் பூமாலை, தோரணம் கட்டி ஆசிரமத்தில் இருந்து வெற்றிலை, பூ மாலை, திருமணப்பட்டு, மஞ்சள், குங்குமம், சீர்வரிசை பொருள்கள் அடங்கிய தாம்பூல தட்டுடன் ஊர்வலமாக தாணுமாலய சாமி கோவிலை வந்தடைந்தனர்.
இரவு 8 மணிக்கு மேல் அலங்கார மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த தாணுமாலய சாமி கையில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு, கருட வாகனத்தில் திருமால் வீற்றிருக்க அவரது முன்னிலையில் தாணுமாலய சாமி கையில் உள்ள திருமாங்கல்யம் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் குலவையிட அறம் வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் கட்டப்பட்டது. திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக தாணுமாலய பக்தர் சங்கம் சார்பில் சந்தனம், குங்குமம், வெற்றிலை சுருள் ஆகியவை வழங்கப்பட்டது. சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்க உறுப்பினர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருமணம் முடிந்த தம்பதிகளான உமா மகேஸ்வரர் மற்றும் திருமால், அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்த சங்க நிர்வாகிகளும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் இந்திரன் தேராகிய சப்பரத்தில் உற்சவமும், இரவில் ஆராட்டு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், திருக்கோவில் நிர்வாகத்தினரும் பக்த சங்கத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.
- ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்கு 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் மாதம்தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
அதேபோல் நேற்று மூலம் நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
- பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்படும்.
- தமிழ் புத்தாண்டையொட்டி வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அது போல தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு கனி காணும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள முறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின்படியும் நடப்பது வழக்கம். இதனால் சித்திரை விஷு கணி காணும் நிகழ்ச்சி இந்த ஆண்டு கேரள முறைப்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நாளை மறுநாள் தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சார்த்தப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க குடங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு பக்தர்கள் விஷு கனி காணும் வகையில் அன்று ஒரு நாள் மட்டும் பார்வைக்கு வைக்கப்படும். தாணுமாலய சாமி சன்னதி எதிரே உள்ள செண்பகராமன் மண்டபத்தில் தட்சிணாமூர்த்தியின் திரு உருவம் பல வண்ண மலர்களால் வரையப்பட்டு இருக்கும். அதன் அருகே ஆள் உயர கண்ணாடி வைக்கப்பட்டு அதன் மீது தங்க ஆபரணங்கள் சூட்டப்பட்டு, காய்கனிகள் அனைத்தும் படைத்து பக்தர்கள் காணும் வகையில் பார்வைக்கு வைக்கப்படுவதுடன், பக்தர்களுக்கு கை நீட்டமும் வழங்கப்படும்.
தமிழ் புத்தாண்டையொட்டி காலை மற்றும் மாலை வேளையில் வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர்கவிதா பிரியதர்ஷினி தலைமையில், கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் தாணுமாலய தொண்டர் அறக்கட்டளையினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
- இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி வருகிற 22-ந் தேதி இரவு நடைபெறுகிறது.
- மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் குரு பெயர்ச்சியை யொட்டி வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி வருகிற 22-ந் தேதி இரவு நடைபெறுகிறது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். இதையொட்டி 23-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு ஹோம பூஜை நடக்கிறது.
5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. கோவிலில் பக்தர்கள் பரிகாரங்கள் செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலைமாலை, வெள்ளை அரளிமாலை, மஞ்சள் நிற துண்டு, முல்லை பூ மாலை மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்து பயன்பெறலாம். என குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் சுசீந்திரம் தாழக்குளம் பிள்ளையார் கோவில், களியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேசுவரா கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர்கோவில், தாழக்குடி ஜெகதீஸ்வரர் கோவில், திருப்பதிசாரம் சடையப்பர் கோவில், அழகிய பாண்டியபுரம் மகாதேவர் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், களியங்காடு சிவன் கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் குமரி மாவட்டத்தில் குரு பகவான் சன்னதி உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- 21-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
- 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 30-ந் தேதி தெப்பத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அது போல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா வருகிற 21-ந் தேதி காலை 9 மணிக்குமேல் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை யொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை, போன்றவைகள் நடைபெறுகிறது. 29-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டமும், 30-ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதற்கான கால்நாட்டு விழா நேற்று கோவிலில் நடைபெற்றது. தாணுமாலய சாமி சன்னதியின் அருகே உள்ள முருகன் சன்னதி முன்பு கால்நாட்டு விழா நடந்தது. அதைத்தொடர்ந்து மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முகப்பில் பந்த கால் நடும் விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் பரமேஸ்வரன் சர்மா, தெற்கு மண் மடம் ஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி, நடுத்தெரு ஊர்வகை டிரஸ்டி ரவீந்திரன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
- 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 30-ந்தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. கோவிலில் உள்ள சித்திர சபை மண்டபத்தில் வைத்து நடராஜ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு 18 ஊர் பிடாகைகள், ஊர் தலைவர்கள், வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவபிரசாத், தெற்கு மண்மடம் ஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, துணை தலைவர் சுப்பிரமணியபிள்ளை, கவுன்சிலர்கள் வள்ளியம்மாள், சுரேஷ், நடுத்தெரு ஊர்வகை அறக்கட்டளை ரவீந்திரன் மற்றும் பக்த சங்க நிர்வாகிகளும், பக்தர்களும் கலந்து கொண்டு திருவிழாவுக்கான பத்திரிகைக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் இன்று (வியாழக்கிழமை) மாலையில் கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுபடி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்று விழாவையொட்டி காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், 9 மணிக்கு மேல் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 10.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு தேவார இன்னிசை, 6.15 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு பக்தி பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை சாமி வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு அபிஷேகம், சமய சொற்பொழிவு, இரவு வாகனத்தில் வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் 9-ம் நாளான 29-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் திருத்தேர்வடம் தொட்டிலுக்கும் தேரோட்டம் நடக்கிறது. இதில் அம்மன் தேர், பிள்ளையார் தேர், சப்பர தேர் என மூன்று தேர்கள் உலா வருகின்றன. தேரோட்டத்தை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். மாலை 6 மணிக்கு சாமி மண்டகப்படிக்கு தந்த பல்லக்கில் எழுந்தருளல், இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சப்தா வர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான 30-ந்தேதி இரவு 8 மணிக்கு மேல் தெப்பத்திற்கு சாமி, அம்பாள், பெருமாள் எழுந்தருளும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. தெப்பக்குளத்தை சுற்றிலும் தெப்பம் 3 முறை வலம் வருகிறது. முதல் சுற்றினை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றினை மேலத்தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழதெரு இளைஞர்களும் வடம் பிடித்து இழுத்து வருவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு வைபவம் நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி தலைமையில் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்த சங்க நிர்வாகிகளும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
- தாணுமாலயசாமி 4 ரத வீதிகளில் வீதி உலா வந்தார்.
- தாணுமாலயசாமி தங்க ஆபரணங்கள் சூட்டப்பட்டு வீதி உலா வந்தார்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடக்கிறது. விழாவில் நேற்று அதிகாலையில் தாணுமாலயசாமி ரிஷப வாகனத்தில் தங்க ஆபரணங்கள் சூட்டப்பட்டு வீதி உலா வந்தார். இதற்காக சாமி கோவிலில் இருந்து வெளியே வந்த போது போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தாணுமாலயசாமி 4 ரத வீதிகளில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இந்தநிலையில் நேற்று இரவும் சாமிக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் அணிவிக்கப்பட்டு பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி சாமி கோவிலில் வெளியே இறங்கி மாடத்தெருவில் சுற்றி வரும்போது 10 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது. எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென மின்தடை ஏற்பட்டதும், போலீஸ் பாதுகாப்பு போடப்படாததும் பக்தர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது
- நாளை நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடைபெறும்.
- 30-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை மாத தெப்ப திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
அதன்படி 7-ம் திருவிழா வான நேற்று காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாலை 5 மணிக்கு மூங்கில் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 9.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திரு வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று 8-ம் திருவிழா ஆகும். அதன்படி இன்று காலை 5 மணிக்கு சிதம்ப ரேஷ்வரர் வீதியுலா வருதல் நடைபெற்றது. 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் அலங்கார மண்டபத்தில் வைத்து நடராஜ பெருமாள், சிவாகாமி அம்பாளுக்கு அஷ்டாபிஷேகம், இரவு 9 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் வீதியூலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
9-ம் திருவிழாவான நாளை (29-ந்தேதி) காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகபடிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் திருவீதி யுலா வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி ஆகியவை நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா 30-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை எழுந்தருளச்செய்து 3 முறை தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தெப்போற்சவம் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு திரு ஆராட்டு நடைபெற உள்ளது.
தெப்ப திருவிழாவையொட்டி தெப்ப குளத்தின் நடுவே உள்ள மண்டபத்தில் அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் ஜொலிக்கும் மின் விளக்குகளின் ஒளி பிம்பம் தெப்பக்குளத்தில் பிரதிபலிக்கும் காட்சி கண்களுக்கு விருந்தளிக்கிறது.
- இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடைபெறுகிறது.
- தெப்பத்திரு விழா நாளை நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், வாகன வீதி உலா நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
9-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதையடுத்து சாமியும், அம்பாளும் அம்மன் தேருக்கு எழுந்தருளினார்கள். அறம் வளர்த்த நாயகி அம்மன் இந்திரன் தேரிலும், விநாயகர் விநாயகர் தேரிலும் எழுந்தருளினார்கள். இதைத் தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் இழுத்து சென்றனர். இதை தொடர்ந்து அம்மன் தேரும் பின்னர் இந்திரன் தேரும் இழுத்துச் செல்லப்பட்டது.
தேரோட்டத்தை மேயர் மகேஷ் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
தேரோட்டத்தில் பெண்கள், ஆண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 4 ரத வீதிகளிலும் இழுத்து வரப்பட்டு தேர் மதியம் நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்ட விழாவில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி இன்று காலை முதலே சுசீந்திரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திரு விழா நாளை (30-ந்தேதி) நடக்கிறது. இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை எழுந்தருள செய்து 3 முறை தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தெப்போற்சவம் நடைபெறுகிறது.
நள்ளிரவு 12 மணிக்கு திருஆராட்டு நடைபெற உள்ளது. தெப்ப திருவிழாவையொட்டி தெப்பகுளத்தின் நடுவில் உள்ள மண்டபம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.