என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106670"

    • இதய நலத்திற்காக வாழ்வியல் சில மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்
    • காலை உணவு என்பது நாம் தவிர்க்கக் கூடாத அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

    இதயம் நம் உடலின் மிக முக்கியமான ஒரு உறுப்பு. பிறந்தது முதல் இறக்கும் வரையில் இடைவெளி இன்றி நமக்காக உழைத்துக் கொண்டே இருக்கும் ஒரு உறுப்பு. அந்த இதயத்தை நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். இதய நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள், நம்மில் பலர் இதய நலத்திற்காக வாழ்வியல் மாற்றம் செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறும் பொழுது, எனக்கு நேரமில்லை, நிறைய வேலைகள் இருக்கிறது, என் உடல் நலத்திற்காக அதிக நேரம் என்னால் ஒதுக்க முடியவில்லை, இந்த வேலை எல்லாம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் பல சமாளிப்பு வார்த்தைகளை கூறுவதை நாம் கேட்கிறோம். சரி, அதிக உடற்பயிற்சி, முழுமையான உணவு கட்டுப்பாடு, தியானம் மனம் தளர்த்தும் பயிற்சிகள் என்று பலவற்றையும் முறைப்படி கற்றுக்கொண்டு என்னால் பின்பற்ற முடியவில்லை என்று கூறும் நண்பர்களுக்காக, உங்கள் இதயத்தைக் காக்க நீங்கள் செய்யக்கூடிய சில சின்ன சின்ன மாற்றங்களை கீழ்வரும் கட்டுரையில் காணலாம்.

    காலை உணவு:

    காலை உணவு என்பது நாம் தவிர்க்கக் கூடாத அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் காலை உணவை நல்ல ஆரோக்கியமானதாகவும் குறைந்த அளவிலும் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் நாம் பொதுவாக சாப்பிடக்கூடிய அதிகமான மாவுச் சத்துள்ள பொருட்கள், எண்ணெயில் செய்த பொருட்கள், அதிக இனிப்பு கொண்ட பொருட்கள் போன்றவற்றை முழுமையாய் தவிர்க்க வேண்டும். காலை உணவில் முழு தானியத்தால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு உணவை அதாவது இட்லி, தோசை, சப்பாத்தி, முழு தானிய கஞ்சி, முழு கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு போன்று ஏதாவது ஒன்றினால் செய்த காலை உணவை சாப்பிடுவது நல்லது.

    மேலும் காலை உணவில் அதிகமான அளவில் நார்ச்சத்து இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு நம்முடைய கெட்ட கொழுப்பினால் ஏற்படும் ரத்தக்குழாய் அடைப்புகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் அது ரத்த சர்க்கரையின் அளவை குறைத்து இதனால் இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் நீடித்த அழற்சிகள் உடலில் இருந்தால் அவற்றை சரி செய்யவும் நார்ச்சத்து உணவுகள் நமக்கு உதவுகின்றன. எனவே காலை உணவை ஆரோக்கியமானதாக நார்ச்சத்து நிறைந்ததாக முழு தானியம் கொண்டதாக குறைந்த அளவாக இருந்தாலும் எடுத்துக் கொள்வது சிறந்தது. அத்துடன் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    தனிமையை தவிர்த்தல்:

    இன்று பலர் வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளை செய்யக்கூடிய நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். இது பலருக்கும் அனுகூலமாக இருந்தாலும் அது மனதின் ஆரோக்கியத்தை குறைக்க கூடியதாகவும் அதன் மூலமாக இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்க கூடியதாகவும் இருக்கிறது என்பது சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள். என்னுடைய வேலைகளை எல்லாம் நான் வீட்டிலிருந்தபடியே கணினி மூலம் செய்கிறேன் அதை தாண்டி சமூக ஊடகங்களில் ஆழ்ந்திருப்பதும் ஏதேனும் சமூக அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் அவற்றின் மீட்டிங்குகளையும் ஜூம், வாட்ஸ் அப், கூகுள் மீட் போன்றவற்றிலேயே நான் செய்து விடுகிறேன் என்று கூறுபவராகவும் நீங்கள் இருந்தால் இதை நீங்கள் நிச்சயமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

    இந்த முறையில் செயல்படும் பொழுது குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தனிமையான உணர்வும் இதனால் மன அழுத்தமும் ஏற்படும். இது இதய நலத்தையும் பாதிக்கிறது. எனவே அவ்வப்பொழுது சில மீட்டிங்குகளை நேரில் சென்று மனிதர்களை சந்திக்கும் விதமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் நண்பருடன் சென்று காபி அல்லது டீ அருந்துவது, நண்பர்களுடன் மதிய உணவு வெளியில் சென்று உண்பது, மாலை நேரங்களில் ஒரு சிறிய நடைபயிற்சியை மேற்கொள்வது அந்த நேரத்தில் பலவிதமான மனிதர்கள் வந்து போகக்கூடிய இடங்களில் சிறிது நேரம் அமர்ந்திருப்பது, பொருட்கள் வாங்க அவசியம் இல்லை என்றாலும் கடைவீதிகளில் அல்லது மால்களில் சிறிது நடந்து விட்டு புதிய மனிதர்களையும் பொருட்களையும் பார்த்து வருவது போன்ற சிறுசிறு நிகழ்வுகளை நம் அன்றாட நடைமுறையில் புகுத்திக் கொண்டால் மனநலம் மட்டுமின்றி இதய நலனையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

    மனம் உடல் தளர்த்தும் தியானம்:

    மனம் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு அலைநீளத்தில் செயல்படுகிறது. பெரும்பாலான நேரம் நம் மனம் பீட்டா அலையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுதுமே இந்த அலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது நம் உடல் தளர்வாக இருப்பதில்லை. நம் உடல் தசைகள் ஒரு கடினத் தன்மையுடன் தயார் நிலையில் இருந்து கொண்டிருக்கும். உடல் தசைகள் தளர்வாக இருக்கும் பொழுது தான் நம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் உடலின் தசைகள் தளர்வாக இருக்கும் பொழுது, அது அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக ரத்தஅழுத்தம், மற்றும் மூளை இதயத்திற்கான ரத்தக்குழாய்களில் அடைப்பு போன்றவற்றை தவிர்க்க உதவுகிறது. உடல் தளர்வாக இருக்க வேண்டும் என்றால் அது மனதினால் மட்டுமே முடியும். மனம் தளர்வாக இருக்கும் பொழுது மட்டுமே அதை உடலும் கற்றுக் கொள்கிறது. எனவே மனதைக் கொண்டு தா ன் உடலை தளர்த்த வேண்டும். மனதை தளர்த்த தியானம் நமக்கு உதவுகிறது.

    • தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன.
    • ஒருவருக்கு தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும்.

    முதுமையில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. 60 வயதிற்கு பிறகு அனைவருக்குமே தூக்கம் சற்று குறைவது இயல்பானதுதான்.

    இந்த வயதில் 5 மணி நேரம் தூக்கம் கூட போதுமானது தான். ஆனால் தூங்கும் நேரத்தின் அளவைவிட எவ்வளவு நேரம் ஒருவர் தொடர்ந்து ஆழ்ந்த தூக்கத்தை பெறுகிறார் என்பதுதான் முக்கியம். உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும்.

    ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலத்தை பொறுத்து தூக்கம் அமைகிறது. முதுமை காரணமாகவோ, உடல்நிலை காரணமாகவோ தூங்கும் நேரம் குறைந்தாலும் தூக்கத்தின் அவசியம் குறைவதில்லை.

    தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன. இள வயதில் தேவையான அளவு தூங்காதவர்களுக்கு 40 வயதில் ஞாபக மறதி வந்து விடுகிறது. தேவையில்லாமல் கோபம் வருகிறது. ஒருவருக்கு தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும். அஜீரணம் தலைகாட்டும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். சோர்வும் தலைவலியும் நிரந்தரமாகிவிடும். மாத கணக்கில் நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

    1900-ம் ஆண்டுகளில் சராசரியாக மனித தூக்கம் 8 மணி நேரம் என்ற நிலையில் இருந்தது. தற்போது தூக்கம் 6 மணி நேரத்துக்கும் கீழாக குறைந்துவிட்டது என்கிறது ஒரு ஆய்வு முடிவு. பல வீடுகளில் பணியிலிருந்து திரும்பிய பிறகும்கூட செல்போனில் நீண்ட நேரம் பேசுவது, கணினியில் வேலை செய்வது போன்றவற்றில் நேரம் செலவழிவதால் பலருக்கும் தூக்க நேரம் இன்னும் சுருங்கிப்போகிறது. இன்னும் சிலர் தூக்க மாத்திரைகளை அவர்களாகவே மருந்துக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுவார்கள். ஒரு கட்டத்தில் அந்த மாத்திரையின் பக்கவிளைவால் தூக்கம் வராமல் அவதிப்படும் நிலையும் வரலாம் என மருத்துவ துறையினர் எச்சரிக்கிறார்கள்.

    • பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் நச்சுப்புகை சுவாசம், நுரையீரல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
    • முதலுதவி அளிப்பது எப்படி? என்று டாக்டர் கூறும் ஆலோசனைகளை பார்க்கலாம்.

    தீபாவளியை களைகட்ட செய்வது பட்டாசுதான். பட்டாசு இல்லாத தீபாவளி, திரியில்லாத புஸ்வானம் போல, சுரத்தே இல்லாமல் போய்விடும். பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் அப்பாக்களுக்கும், ஏன் தாத்தாக்களுக்கும் கூட ஆவல்தான். ஆனால் பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிக்காவிட்டால் தீபாவளியின் தித்திப்பு காற்றில் கரைந்துவிடும். பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது தொடர்பாக தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் தீவிர பிரசாரம் செய்யப்பட்டு வருவதால் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனால் விபத்துகளும் குறைந்து வருகின்றன என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    'காற்று மாசு ஏற்படும்' என்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது. இதனால் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறையும் என்றாலும், அந்த குறைவான நேரத்திலும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை கவனமாக கையாளாவிட்டால் ஆபத்தை விளைவிக்கும். கை, கால்களில் காயம், ஆடைகளில் தீப்பிடிப்பது போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. புஸ்வானம், தரைச்சக்கரம் போன்றவை சில நேரங்களில் வெடிக்கக்கூடும். அந்த தீப்பொறி பட்டு கண்கள் பாதிக்கப்படலாம். பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் நச்சுப்புகை சுவாசம், நுரையீரல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். பட்டாசு விபத்துகளால் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படாது. ஆனால் உடல் பாகங்களில் சேதம் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

    பட்டாசு வெடிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், பட்டாசு விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்தும் திருச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் கூறியதாவது:-

    * பட்டாசு வெடிக்கும் பகுதியில் ஒரு வாளி தண்ணீரை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

    *பெரியவர்களின் துணையுடன் மட்டுமே சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும்.

    * புடவை, பட்டுப்பாவாடை போன்ற தளர்வான ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக்கூடாது. பருத்தி ஆடை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொள்ளலாம்.

    * பட்டாசு வெடிக்கும்போது காலில் செருப்பு அணிவது அவசியம்.

    * கம்பி மத்தாப்புகளை கொளுத்தி முடித்ததும் வாளியில் உள்ள தண்ணீரில் போட்டுவிட வேண்டும்.

    * வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து பார்க்கக்கூடாது. அதன்மீது உடனே தண்ணீர் ஊற்றிவிட வேண்டும்.

    *எந்தப் பட்டாசுகளையும் கைகளில் வைத்து வெடிக்கக்கூடாது.

    * சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் பட்டாசுகளை போட்டு வைத்துக்கொண்டு பட்டாசுகளை கொளுத்தக்கூடாது.

    *நீளமான ஊதுவத்தியைப் பயன்படுத்தி தூரமாக நின்று பட்டாசை கொளுத்த வேண்டும்.

    * பட்டாசு கொளுத்திய பிறகு கிடக்கும் குப்பைகள், வெடிக்காத பட்டாசுகள் ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றாக வைத்துக் கொளுத்தக்கூடாது.

    முதலுதவி அளிப்பது எப்படி?

    *பட்டாசு விபத்து ஏற்பட்டால் அந்த காயத்தின் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன்பிறகு காயம்பட்ட இடத்தை சுத்தமான பருத்தி துணியை கொண்டு மூடி, காயம்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். எந்த காரணம் கொண்டும் காயம் ஏற்பட்ட இடத்தில் பேனா மை, எண்ணெய், பற்பசை, ஐஸ்கட்டி, மஞ்சள், மாவு போன்ற எதையும் தடவக்கூடாது.

    * வெடிக்கும்போது ஆடையில் தீப்பிடித்தால், தண்ணீர் அருகில் இல்லை என்றால், தீப்பிடித்தவர்களை ஒரு கம்பளியில் சுற்றி தரையில் உருட்டவேண்டும். கம்பளி சுற்றிய பகுதிக்குள் ஆக்சிஜன் செல்ல முடியாமல், தீ அணைந்துவிடும். அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர் அருண்ராஜ்

    • செயற்கையாக நிறமும் ஏற்றப்படுகிறதென்பதும் அதிர்ச்சியான உண்மை.
    • இந்துப்புவிலும் போலி அதிகம் இருக்கிறது என்பது 100/100 உண்மை.

    நாம் உபயோகிக்கும் தூள் உப்பு ஏறக்குறைய 97 முதல் 99 சதவீதம் சோடியம் குளோரைடு மட்டுமே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை பக்குவப்படுத்தும்போது வெகுநாட்களுக்கு கட்டியாகாமல் தூளாகவே இருப்பதற்காவும், நீர்த்துப்போகாமல் இருப்பதற்காவும் சோடியம் அலுமினோசிலிகேட் அல்லது மக்னீசியம் கார்போனேட் சேர்க்கப்படுகிறது என்பது தெரியுமா? இந்த வேதிப்பொருட்கள் உப்பிற்கு நல்லதே தவிர உடலுக்கு நல்லதல்ல.

    "இந்துப்பு" எனப்படும் பாறைகளிலிருந்து எடுக்கப்படும் கல் உப்பு பல்வேறு கட்ட சுத்தப்படுத்துதலுக்கு உள்ளாக்கிய பின்னரே உண்பதற்கு தகுதியாகிறது. அதன்பிறகு இந்துப்புவும் 99.99% சோடியம் குளோரைடு தான்.

    சிக்கல் என்னவென்றால் வணிகமயமாக்குதலால் சரிவர பக்குவப்படுத்தப்படாத இந்துப்புவில் சற்றே அதிகமாக கால்சியம், மெக்னீசியம், இரும்பு, காப்பர் இருப்பதால், உணவிலுள்ள வைட்டமின் 'சி' யை அழித்துவிடுதல், உணவு விரைவில் நீர்த்துப்போதல் போன்ற வேலைகள் நடப்பதை யாரும் கூறுவதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை. அதில் செயற்கையாக நிறமும் ஏற்றப்படுகிறதென்பதும் அதிர்ச்சியான உண்மை. இந்துப்புவிலும் போலி அதிகம் இருக்கிறது என்பது 100/100 உண்மை.

    உடலுக்கு நல்லது.. உடலுக்கு நல்லது என்று வியாபார ரீதியில் எந்த பொருளை விற்றாலும் வாங்கிக்கொண்டு இருக்கும் மக்கள் இருக்கும்வரை... உடலுக்கும், உணவுக்கும்... உலகுக்கும் கேடு விளைவிக்கும் பொருட்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கும்.

    "அப்போ எந்த உப்பைத்தான் நாங்கள் உபயோகிப்பது" என்று என்னை திட்டுவது நன்றாகவே கேட்கிறது.

    கடலில் இருந்து எடுக்கப்படும் கல்லுப்பும், அந்த கல்லுப்பை நீங்களே கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்துக்கொண்டு தூளுப்பு என்று கூறிக்கொண்டும் உபயோகப்படுத்துங்கள். அதையும் அளவோடு பயன்படுத்துங்கள்.

    - வண்டார்குழலி ராஜசேகர்

    • நமது அறிவு வளரவளரத் தேவையற்ற நரம்பு இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன.
    • மூளை வளர்கிறது என்று சொல்கிறோம். உண்மையில் ஏராளமான செல் மரணம்தான் அங்கே நிகழ்கிறது.

    கல்லிலிருந்து வேண்டாத பகுதிகளை உளியால் வெட்டி நீக்கினால் அதில் கற்சிலை தோன்றுவதுபோல, மூளையிலிருந்து தேவையற்ற நரம்புச்செல்களைக் கவாத்துச் செய்வதன் மூலமே அறிந்தவை பதிவாகின்றன.

    தினமும் புதிதுபுதிதாகப் பெயர்களை, காட்சிகளை, அனுபவங்களை நாம் பெறுந்தோறும் அவை மூளையில் புதிய நரம்புச் செல்சந்திப்புகளாக ஆக்கப்பட்டு நினைவுகளாகப் பதிகின்றன. அப்போது தேவையற்ற நரம்புச் செல்சந்திப்புகள் அகற்றவும் படுகின்றன. ஏனெனில் அறியாமை நீங்குவதுதானே அறிவு!

    நமக்கு வாழ்நாள் முழுவதும் எவ்வளவு தேவையோ அதைவிடப் பலமடங்குக்கு அதிகமான நரம்புச்செல் இணைப்புகளுடன் நாம் பிறக்கிறோம். நமது அறிவு வளரவளரத் தேவையற்ற நரம்பு இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. மூளைவளர்கிறது என்று சொல்கிறோம். உண்மையில் ஏராளமான செல் மரணம்தான் அங்கே நிகழ்கிறது.

    -பேரா.க.மணி

    • வளரும் குழந்தைகள் தினசரி ஒரு முட்டை சாப்பிட டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள்.
    • முட்டை சாப்பிடுவதின் அவசியத்தை நாம் உணர்வோம்.

    குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டச்சத்துகொண்ட உணவு முட்டை மட்டும்தான். வளரும் குழந்தைகள் தினசரி ஒரு முட்டை சாப்பிட டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள். ஊட்டச்சத்துகள் மட்டுமின்றி, உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும், தேவையான கனிம சத்துகளும் முட்டையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. மூளை மற்றும் தசை வளர்ச்சி, நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, பார்வை திறன் மேம்படுதல் போன்றவற்றுக்கு முட்டை உலகளவில் சிறந்த உணவு என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் உலக முட்டை தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

    முட்டையின் நன்மைகள் குறித்தும், அதில் உள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம். இந்த ஆண்டு உலக முட்டை தின கருப்பொருளாக, 'சிறந்த வாழ்க்கையை சாத்தியமாக்கும் முட்டை' என்பது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாளில் ஊட்டச்சத்துமிக்க முட்டையை தினமும் உணவில் சேர்த்து உடலை வலுப்படுத்துவோம் என அனைவருமே உறுதிமொழி ஏற்போம்.

    கடந்த ஆண்டு உலக முட்டை தினத்தையொட்டி, 100-க்கும் மேற்பட்ட நாடுகள் சமூக வலைதளங்களில் முட்டை தினத்தை கொண்டாடும் வகையில் பல போட்டிகளை வைத்து முட்டை உண்பதில் அவசியத்தை எடுத்துரைத்தது. இந்த ஆண்டும் முட்டை சாப்பிடுவதின் அவசியத்தை நாம் உணர்வோம். வளரும் தலைமுறையினரை வலுவாக்குவோம்.

    • இந்த டயட் முறையை கடைப்பிடிப்பதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது கட்டாயமாகும்.
    • உணவு பிரியர்கள் மத்தியில் இந்த 5:2 டயட் திட்டத்துக்கு வரவேற்பு அதிகம்.

    வாரத்தில் ஐந்து நாட்கள் வழக்கமான உணவை சாப்பிடலாம் என்பதற்காக, கொழுப்புச் சத்து நிறைந்த, எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் 2,000 கலோரிகளைத் தாண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. உடல் எடையைக் குறைக்க வேண்டும், அதே நேரம் மனதுக்குப் பிடித்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். இந்த ஆசைக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் '5:2 டயட்'.

    உணவு பிரியர்கள் மத்தியில் இந்த 5:2 டயட் திட்டத்துக்கு வரவேற்பு அதிகம். இதற்குக் காரணம், இது 'பார்ட் டைம் டயட்' என்பதுதான். அதாவது வாரத்தில் ஐந்து நாட்கள் நாம் பின்பற்றும் வழக்கமான உணவு முறையைக் கடைப்பிடிக்கலாம். மீதி இரண்டு நாட்கள் மட்டும்தான் 'டயட்' முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்காக எதையும் சாப்பிடாமல் பட்டினி இருக்கத் தேவையில்லை. அந்த இரண்டு நாட்கள் மட்டும், நாம் சாப்பிடும் உணவின் அளவைக் குறைத்துக்கொண்டால் போதும்.

    ஒரு நாளுக்கு உங்களுக்கு 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது என்றால், டயட் கடைப்பிடிக்கும் இரண்டு நாட்களில் 500 கலோரிகள் மட்டும் சாப்பிட வேண்டும். அதாவது நம் உடலுக்குத் தேவைப்படும் உணவின் அளவில் 25 சதவீதம் மட்டும் சாப்பிட்டால் போதும்.

    ஒரேயடியாகப் பட்டினி கிடப்பது செரிமான உறுப்புகளின் சமநிலையைக் குலைக்கும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் மட்டும் அளவோடு சாப்பிடும் இந்த வகை உணவு முறையில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. 'பார்ட் டைம் டயட்' முறையைக் கடைப்பிடிப்பவர்கள், இதன்மூலம் உடல் எடை வேகமாகக் குறைகிறது என்கிறார்கள். நாம் எதிர்பார்த்த அளவுக்கு உடல் எடை குறைந்துவிட்டால், வாரத்தில் ஒரு நாள் மட்டும் 500 கலோரிகள் அளவுக்கு சாப்பிடலாம்.

    வாரத்தில் ஐந்து நாட்கள் வழக்கமான உணவை சாப்பிடலாம் என்பதற்காக, கொழுப்புச் சத்து நிறைந்த, எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் 2,000 கலோரிகளைத் தாண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அதேசமயம் கல்யாணம், காது குத்து போன்ற விசேஷ நாட்களில் பிரியாணி, கோழி வறுவல், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்க்க முடியாமல் போகலாம்.

    அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் சத்துணவியலாளர்கள். சில வாரங்களுக்கு இந்த டயட்டை தொடர்ந்து கடைப்பிடித்தால் நாளடைவில் நாமே ஐந்து நாள் விருப்பச் சாப்பாடு, இரண்டு நாள் அளவுச் சாப்பாடு என்கிற நிலைக்கு இயல்பாக மாறிவிடுவோம்.

    திடீரென வாரத்தில் இரண்டு நாட்களுக்குக் குறைவாக சாப்பிடுவதால் சிலருக்கு தூக்கமின்மை, தலைவலி, சோர்வு, எரிச்சல் போன்றவை ஏற்படலாம். ஆனால், இவை போகப் போக சரியாகிவிடும். 5:2 டயட்டைத் தொடர்ந்தால் வாழ்நாள் அதிகரிப்பதுடன் இதய நோய், அல்சைமர், புற்றுநோய் போன்றவை வரும் வாய்ப்பு குறைவு. இந்த டயட் முறையை கடைப்பிடிப்பதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது கட்டாயமாகும்.

    • இந்த ரத்தத்தின் சிறப்பம்சம் என்ன வென்றால் இதில் ஆன்டிஜென்கள் இல்லை.
    • உலகம் முழுவதும் வசிப்பவர்களில் 45 பேரிடம் மட்டும்தான் அந்த ரத்த வகை இருக்கிறது

    ஒருவரது உடல் சீராக செயல்பட ஐந்து லிட்டர் ரத்தம் தேவை. ஏ, பி, ஏ.பி பாசிட்டிவ், ஏ.பி. நெகட்டிவ், ஓ போன்ற ரத்த வகைகளை பற்றித்தான் பலருக்கும் தெரியும். நமக்கு தெரிந்ததை விட அதிகமான ரத்த வகைகள் உள்ளன. அதிலும் ஒரு ரத்த வகை மிகவும் அரிதானது. உலகம் முழுவதும் வசிப்பவர்களில் 45 பேரிடம் மட்டும்தான் அந்த ரத்த வகை இருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா? ஆம்... அந்த ரத்த வகைக்கு ஆர்.எச். என்று பெயர். பூஜ்ஜிய ரத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

    மிகக் குறைந்த நபர்களிடையேதான் இந்த ரத்தம் காணப்படுவதால் விலை மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இந்த ரத்தத்தின் ஒரு துளி கூட தங்கத்தை விட அதிக விலை கொண்டதாக மதிப்பிடப்படுகிறது. அதனால்தான் உலகின் மிக அரிதான இந்த ரத்த வகை தங்க ரத்தம் (கோல்டன் பிளட்) என்றும் வர்ணிக்கப்படுகிறது.

    இந்த ரத்தத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்ன வென்றால் இதில் ஆன்டிஜென்கள் இல்லை. அதாவது, இந்த ரத்தத்தை எந்தவொரு ரத்த வகையை கொண்ட நபர்களுக்கு கொடுத்தாலும், அவரது உடல் அதை ஏற்றுக்கொண்டு விடும். ஜப்பான், பிரேசில், கொலம்பியா, அயர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ரத்த வகையை கொண்ட நபர்கள் வசிக்கிறார்கள்.

    ரத்தத்தில் ஏ, பி ஆகிய இரண்டு முக்கிய ஆன்டிஜென்கள் உள்ளன. இவை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் செயல்படக்கூடியவை. இது ஆர்.எச். காரணி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அரிய வகை ரத்தம் உள்ளவர்களுக்கு, ஆர்.எச் காரணி நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இல்லை.

    இத்தகைய ஆன்டிஜென்கள் இல்லாததால் இந்த ரத்த வகையை சேர்ந்தவர்கள் எளிதில் ரத்தசோகை பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதனை தவிர்க்க இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அரிய வகை ரத்தத்தை கொண்டிருக்கும் இவர்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் தேவைப்படுபவர்களுக்கு உடனே செலுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • உடலுக்குள் செல்லும் எல்லா போதை வஸ்துகளும் போதை பொருட்கள்தான்.
    • ஒயினை எடுத்துக்கொண்டால் அதுவும் உடலுக்கு நல்லது செய்வதில்லை.

    கொரோனா அச்சுறுத்தலால் மதுக்கடைகள் ஒரு மாதத்திற்கு மேல் அடைக்கப்பட்டிருந்ததால், மது விரும்பிகளின் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு திருப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மது அருந்தாமல் இருந்த நாட்களில், உடலில் ஏற்பட்ட நடுக்கம், தடுமாற்றத்தை உணர்ந்து, 'மது இந்த அளவுக்கு உடலை பாதித்துவிட்டதே! நல்ல நேரம் தப்பித்தோம். இனிமேல் பருகக்கூடாது!' என்ற முடிவினை பலர் எடுத்திருக்கிறார்கள். இன்னொரு பகுதியினர், இந்த 'லாக் டவுன்' காலகட்டத்தில் மது அருந்த முடியாததால் மீதமான பணத்தை கணக்கிட்டுப்பார்த்துவிட்டு, இத்தனை வருடங்களாக குடிக்கு செலவிட்ட தொகையை நினைத்து மலைத்துபோய் 'இனியும் குடி தேவையில்லை' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

    மது அருந்த முடியாமல் இருந்த காலகட்டம் மது பிரியர்களிடம் நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும் சிலர் இப்போதும் பீர், ஒயின் இரண்டையும் பெருமையாகப்பேசி கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். விஸ்கி, பிராந்தி, ரம் போன்றவைதான் மது என்பது போலவும், பீர்-ஒயின் போன்றவை போதை இல்லாதது போலவும் அவர்களது கருத்து அமைந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப துறையினரின் ஆஸ்தான பானம் பீர் என்றும் சொல்லப்படுகிறது. ஐ.டி. துறையில் தலை நிமிர்ந்து நிற்கும் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகியது போன்று 'பீர் பப்' களும் பெருகியது, அதற்கு ஒரு உதாரணம். இளைஞர்கள் மட்டுமின்றி இளம் பெண்களும் 'ஒரு பீர் தானே' என்று கூறி, வாய்ப்பு கிடைக்கும்போது பருகுவது வாடிக்கையானது.

    பீர் பருகுபவர்கள் 'இதர மதுவகைகளை போன்று பீர் ஆபத்து இல்லாதது' என்றும், 'மற்றவைகளை காட்டிலும் இதில் ஆல்கஹால் தன்மை குறைவு' என்றும் சொல்கிறார்கள். இந்த இருவித எண்ணமுமே தவறு. எல்லா மதுவகைகளும் உடல்ரீதியாக, மனோரீதியாக எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துமோ அதே பாதிப்புகளை பீரும் ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை.

    மனித உடலைப் பொறுத்தவரையில், உடலுக்குள் செல்லும் எல்லா போதை வஸ்துகளும் போதை பொருட்கள்தான். ஆல்கஹால் என்றால், எல்லாம் ஆல்கஹால்தான். அது பீர் என்றாலும், ரம் என்றாலும் ஒன்றுதான். எல்லாமும் ஆரோக்கியத்திற்கு எதிரிதான்.

    இன்னும் தெளிவான கணக்கு ஒன்றை உங்களுக்கு கூறுகிறேன். மது விரும்பி ஒருவர் ஒரு 'பெக்' (30 மி.லி.) பிராந்தியோ, விஸ்கியோ எடுத்துக்கொள்ளும்போது அத்துடன் 200 மி.லி. அளவுக்கு தண்ணீர் சேர்த்து பருகுகிறார். அதாவது 230 மி.லி, அவர் பருகுகிறார். 30 மி.லி.யில் 10 கிராம் ஆல்கஹால் கலந்திருப்பதாக கணக்கு.

    அதற்கு பதில் அதே மது விரும்பி 250 மி.லி. பீர் அருந்துகிறார் என்றால், பிராந்தியில் இருந்ததைவிட அதிக அளவு ஆல்கஹால் அவரது உடலுக்குள் சென்றுவிடுகிறது. எப்படி தெரியுமா? பீரில் ஆல்கஹால் 6 சதவீதம் என்று வைத்துக்கொண்டால், 250 மி.லி. மூலம் அவர் உடலுக்குள் 15 மி.லி. (12 கிராம்) ஆல்கஹால் சென்றுவிடுகிறது. அதாவது 30 மி.லி. பிராந்தி பருகுவதைவிட 250 மி.லி. பீர் பருகினால், உடலுக்குள் செல்லும் ஆல்கஹால் அளவு அதிகம் என்ற இந்த உண்மையை பலரும் புரிந்துகொள்வதில்லை. இந்த உண்மையை உணராமல் பலர் தங்கள் ஆரோக்கியத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள்.

    கண்டபடி பீர் அருந்திவிட்டு, தொப்பை வயிற்றோடு தோன்றும் 'கவ்பாய்' நடிகர்களை ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். அவர்களது மதுப்பழக்கம் வித்தியாசமானது. காலையில் ஒரு 'பெக்' மது குடித்து விட்டு பின்பு நாள் முழுவதும் பெரும்பாலான நேரங்களில் பீர் பருகிக்கொண்டிருப்பார்கள். இத்தகைய பழக்கத்திற்கு அவர்களது 'வயிறு'தான் சாட்சி. அப்படிப்பட்ட நிலையில் இந்தியாவில் நிறைய பேர் தொப்பையுடன் தோன்ற பீர் ஒரு காரணமாக இருந்துகொண்டிருக்கிறது.

    'கூடுதல் போதை கிடைக்க அதிக அளவில் பீர் அருந்தவேண்டும்' என்ற எண்ணம், மது விரும்பிகளிடம் இருந்துகொண்டிருப்பதால் அளவுக்கு அதிகமாக பீர் அருந்துகிறார்கள். அவர்கள் 2 முதல் 5 பாட்டில் பீரை ஒரே நேஇரத்தில் பருகுகிறார்கள். 6 முதல் 10 சத வீதம் ஆல்கஹால் தான் பீரில் இருக்கும் என்ற நிலை தற்போது இல்லை. பீரில் 25 சதவீதம் வரை ஆல்கஹால் அளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. போதை அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக பீரின் தரம் குறைந்துகொண்டே போகிறது. பீர் குடிப்பவர்களின் ஆரோக்கியம் கெட்டுக்கொண்டே போகிறது.

    சாதாரண பீரில் 4 முதல் 6 சதவீதம் ஆல்கஹால் அடங்கியிருக்கிறது. அதை 40 முதல் 45 சதவீதம் வரை அதிகரிக்கும் சூட்சுமத்தையும் பீர் தயாரிக்கும் ஒருசில நிறுவனங்கள் தெரிந்து வைத்திருக்கின்றன. 'தங்கள் நிறுவன பீர் பருகினால் போதை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை மது விரும்பிகளிடம் ஏற்படுத்தினால்தான் தாங்கள் தயாரிக்கும் சரக்குக்கு அதிக 'டிமான்ட்' ஏற்படும் என்பதை தெரிந்துவைத்திருக்கும் ஒருசில பீர் தயாரிப்பு நிறுவனங்கள், பருகுபவர்களின் உடல் நிலையை பற்றி சிந்திப்பதே இல்லை. தங்கள் பிராண்ட்டை கேட்டு வாங்கவேண்டும் என்பதற்காக ஆல்கஹால் அளவை அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் ஈரல் பாதிப்புகள், பீர் அருந்துபவர்களுக்கும் ஏற்படுகிறது.

    'பீரும் பாலியல் செயல்பாடும்' என்ற நோக்கில், அவ்வப்போது மேற்கத்திய நாடுகளில் விவாதம் நடக் கிறது. பொதுவாகவே மது அருந்துபவர்களுக்கு பாலியல் ஆசை அதிகம் இருக்கும். ஆனால் செயல்படும் ஆற்றல் குறைவாக இருக்கும் என்பது நவீன மருத்துவம் சொல்லும் தகவலாகும்.

    ஒயினை எடுத்துக்கொண்டால் அதுவும் உடலுக்கு நல்லது செய்வதில்லை. 'ரெட்ஒயின்' நல்லது என்ற சிந்தனை நம்மில் பலரிடமும் உண்டு. ஆனால் அதையும் அளவின்றி பருகுகிறார்கள். பலர் தங்கள் தேவைக்கு வீடுகளிலே ஒயின் தயார் செய்கிறார்கள். பெண்களும் பருகுகிறார்கள். ஆனால் ஒயினும் ஆல்கஹால்தான். அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாவிட்டாலும், சிறிதளவாவது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். சர்க்கரை நோயாளிகளும், ஏற்கனவே மது அருந்தியதால் ஈரல் பாதிக்கப்பட்டவர்களும் ஒயின் அருந்திவிடக்கூடாது. ஆண்களும், பெண்களும் இப்போது குழந்தையின்மையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் ஒயின் பருகுவதும் ஒரு காரணம். குறிப்பாக ஒயின் பருகும் பெண்களின் இனப் பெருக்க உறுப்புகளின் செயல்பாடு மந்தமாகிவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    லைட் பீர் ஒன்றில் 100 கலோரியும், ஒரு ரெகுலர் பீரில் 150- 200 கலோரியும் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் உடலுக்குள் இவ்வளவு கலோரி சென்றால், அதை எளிதாக அவர்களால் எரிக்கமுடியாது. அதனால் அவர்கள் உடல் மேலும் பாதிப்பிற்குள்ளாகும். அதோடு பீர் பிரியர்கள் குடித்ததும், அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்கிறார்கள். அதுவும் அவர்கள் உடலை கூடுதலாக பாதிக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் பீர் பருகுவதையும் தவிர்க்கவேண்டும்.

    ஊரடங்கு உத்தரவு தளர்ந்து கொரோனா கட்டுக்குள் வந்து மது கடைகள் திறந்தாலும், மது விஷயத்தில் உங்கள் மனக்கதவுகளை திறந்துவிடாதீர்கள். மது கடைகள் தொடர்ந்து பூட்டப்பட்டதாகவே நினைத்துக்கொள்ளுங்கள். பீர், ஒயின் எல்லாம் மதுதான். அவைகளில் எதை பருகினாலும் உடலுக்கு அது கெடுதிதான்.

    கட்டுரை: முனைவர் ஜே. தேவதாஸ் (உணவியல் எழுத்தாளர்), சென்னை.

    • குளிர்ந்த நீர் கலோரிகளை விரைவாக எரிக்கும் தன்மையும் கொண்டது.
    • நீச்சல் வீரர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படும் அபாயமும் குறைவு.

    ஆண்கள் குளிர்ந்த நீரில் குளித்தால் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும், நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாவதையும் தடுக்கும் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் சர்க்கம்போலர் ஹெல்த் பத்திரிகையில் 104 ஆய்வுகளின் பகுப்பாய்வு இடம் பெற்றுள்ளது. அதில் குளிர்ந்த நீரில் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    குளிர்ந்த நீர் பல்வேறு சுகாதார நன்மைகளை கொண்டிருப்பது அறிவியல் பூர்வமாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குளிர்ந்த நீரில் நீச்சல் அடிக்கும்போது நீரின் சுழற்சி வெளிப்பாடும், உடல் அசைவும் ஒருங்கே அமையப்பெறுகிறது. அந்த சமயத்தில் சருமத்தின் மேற்பரப்பில் உள்ள ரத்த நாளங்களை கட்டுப்படுத்துகிறது. சரும திசுக்களில் ரத்தம் ஆழமாக வேரூன்றி செல்வதால் ரத்த ஓட்டமும் மேம்படுகிறது.

    விளையாட்டு வீரர்கள் போட்டி அல்லது பயிற்சிக்கு பிறகு தசைகளில் வலியை எதிர்கொள்வார்கள். சோர்வும் எட்டிப்பார்க்கும். அந்த சமயத்தில் குளிர்ந்த நீரில் நீராடுவது உடல் வலியை குறைக்கவும் உதவும். தசைகளை தளர்வடைய செய்து சோர்வையும் போக்கும். குளிர்ந்த நீர் கலோரிகளை விரைவாக எரிக்கும் தன்மையும் கொண்டது.

    நீச்சல் வீரர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படும் அபாயமும் குறைவு. குளிர் காலங்களில் பயிற்சி மேற்கொள்ளும் நீச்சல் வீரர்களின் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரித்திருப்பதும், நீச்சல் வீரர்கள் அல்லாதவர்களின் உடலில் இன்சுலின் செறிவுகள் குறைந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதே வேளையில் பனிக்கட்டிகள் சூழ்ந்த கடும் குளிர் நீரில் நீராடுவது ஆபத்தானது. அதிக குளிர்ச்சி உடல் வெப்ப நிலையை குறைத்துவிடும். இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளை மோசமாக்கிவிடும்.

    உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வது இதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடலில் கொழுப்பின் அளவை குறைக்க சிரமப்படுபவர்கள் குளிர்ந்த நீரில் நீராட முயற்சிக்கலாம்.

    • சில உடல் உபாதைகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களின் மூலமே தீர்வு காணலாம்.
    • கீழ்கண்ட தகவல்கள் சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.

    உடல் பருமன் குறைய வெள்ளை பூசணிக்காயை எடுத்து ஜூஸ் பிழிந்து காலையில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். நெஞ்சு எரிச்சல் வராமல் இருக்கும்.

    சிறுநீரகத்தில் உப்பு தங்காமல் இருக்க வாழைத்தண்டு, புடலங்காய், கீரைத்தண்டு, முள்ளங்கி, திராட்சை, வெங்காயம், வெள்ளரிப்பிஞ்சு, வெங்காயத்தாள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

    செம்பருத்தி பூக்கள் மூன்றை எடுத்து அவற்றின் இதழ்களை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு எடுத்து பிழிந்து வடிகட்டி, கொஞ்சம் பால் சேர்த்து சாப்பிட்டால் ரத்தஅழுத்தம் குறையும்.

    பித்தம் தலைசுற்றல் சரியாக ஒருபிடி கொத்தமல்லி தழையை அரைத்து சாறு எடுக்கவும். அதில் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட, தலைசுற்றல் போகும்.

    ஒரு கோப்பை நல்லெண்ணெயில் 7, 8 பூண்டை நசுக்கிப் போடவும். அதை நன்றாக காய்ச்சவும். இறக்கி வைத்து ஒரு மூடி அளவு எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து எடுத்துச் சேர்த்து வைக்கவும். இதை தலையில் பூச்சிவெட்டு இருக்கும் இடத்தில் இரண்டு சொட்டு தேய்த்து வர, முடி வளர ஆரம்பிக்கும்.

    சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க நாவல் கொட்டை பொடி, வெந்தயப்பொடி, கடுக்காய் தோல் ஆகியவற்றில் சமபாகம் எடுத்துக் கலந்து வைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் இதை ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து காலையில் கால் தம்ளர் குடிக்கவும்.

    வறட்டு இருமல், சூடு குறைய அதிமதுரம் பொடியை வாங்கி, ஒரு தம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் பொடி போட்டு கொதிக்க வைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடவும்.

    வாயு, வயிற்றுவலி நீங்க ஒரு ஸ்பூன் சீரகத்தை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து ஒரு தம்ளர் தண்ணீர் விடவும். நன்றாக கொதித்ததும் பனைவெல்லம் சேர்த்து குடிக்கவும். கர்ப்பப்பையில் நோய் வராமல் தடுக்க துளசி, வில்வம், அருகம்புல், மிளகு உள்ளிட்டவை நாட்டு மருந்துக்கடைகளில் பொடியாகவே கிடைக்கும். இவற்றை வாங்கிக் கலந்து வைத்துக்கொண்டு வாரத்துக்கு ஒரு நாள் ஒரு ஸ்பூன் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.

    தினம் குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சம்பழத்தை பாதியாக வெட்டி போடவும். மறுநாள் காலை வரை இந்த தண்ணீரைக் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேற்கண்ட தகவல்கள் சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.

    • நகங்களை கடிப்பது விரல்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
    • பல்வேறு தொற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும்.

    நகங்களை கடிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு சிறுவயதிலேயே வந்து விடுகிறது. டென்ஷனாகவோ, மனக்குழப்பத்திலோ இருந்தால் நகத்தை கடிக்கும் சுபாவமும் பலரிடம் இருக்கிறது. அப்படி நகங்களை கடிப்பது விரல்களுக்கு தீங்கு விளைவிக்கும். பல்வேறு தொற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும். நகங்களுக்கு அடியில் இருக்கும் பாக்டீரியாக்கள் தொற்று பாதிப்பை அதிகப்படுத்திவிடும். நகத்தை தொடர்ந்து கடிப்பதால் விரல்களில் வீக்கம் ஏற்படுவது, நகத்தின் தசைப்பகுதி சிவப்பு நிறத்திற்கு மாறுவது, சீழ்படிவது போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

    பல் ஈறுகளில் காயம், முன்புற பற்களில் குறைபாடு போன்ற வாய்வழி பிரச்சினைகளும் நகம் கடிப்பதால் உண்டாகும். நீண்டநாட்களாக நகம் கடிக்கும் பழக்கத்தை தொடர்வது பற்களுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும். பற்களில் கறைகளை உருவாக்கி இறுதியில் பற்களை சிதைத்துவிடும். பற்களில் விரிசலையும் ஏற்படுத்திவிடும். நகங்களை கடிக்கும்போது அதிலிருக்கும் துகள்கள் ஈறுகளுக்குள் சென்றடைந்து பல் வலி, வீக்கம், நோய்தொற்று போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். கடித்த நகத்தை விழுங்கிவிட்டால் வயிறுதொடர்பான பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.

    நகம் கடிக்கும் பழக்கத்தை பின்பற்றுபவர்கள் எளிதில் குற்ற உணர்வுக்கு ஆளாகுவார்கள். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மதிப்பும் குறைந்துபோகும். நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு நெயில் பாலிஷ் உபயோகிக்கலாம். அதில் டெனாடோனியம் பென்சோயேட் எனும் ரசாயனம் கலந்திருக்கிறது. அது கசப்பு தன்மை கொண்டது. அது நகம் கடிக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்த வழிவகுக்கும். பிடித்தமான பொருளை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். நகம் கடிக்க தோன்றும்போதெல்லாம் அந்த பொருளை கையில் வைத்து ரசிக்கலாம்.

    ×