search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    சர்வதேச தடைகளை மீறியதாக கூறி வட கொரியாவின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது.
    வாஷிங்டன்:

    வடகொரியா தனது அணு ஆயுத சோதனைகளை முழுமையாக கைவிடவேண்டுமென்று தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், தங்கள் நாட்டின் மீது உள்ள பொருளாதார தடைகள் உள்ளிட்ட பல சர்வதேச தடைகளில் இருந்து விலக்கு மற்றும் நிவாரணம் கோருகிறது வடகொரியா.

    இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில், வியட்நாமின் தலைநகர் ஹனோயில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசினர். இருநாட்டு தலைவர்களின் இந்த 2-வது சந்திப்பு எந்த உடன்படிக்கையும் எட்டப்படாமல் முடிந்தது.

    இதனால் அமெரிக்கா, வடகொரியா இடையிலான உறவு மீண்டும் மோசமடைந்துள்ளது. இந்த சூழலில் 4-ந் தேதி குறுகிய தொலைவு சென்று தாக்கக்கூடிய பல ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது.

    வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவை அதிரவைத்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் மீண்டும் வடகொரியா 2 ஏவுகணைகளை சோதித்தது.

    அணு ஆயுத பேச்சுவார்த்தையில் தங்களுக்கு சலுகைகள் வழங்க அமெரிக்காவுக்கு அழுத்தம் தரவே வடகொரியா இந்த சோதனைகளை நடத்தியதாக பார்க்கப்படு கிறது.

    வடகொரியாவின் இந்த ஆயுத சோதனைகள் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், “இந்த சோதனைகளால் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள் என்றும், அது குறித்து தொடர்ந்து பேசுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இன்னமும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவில்லை என்றே நான் எண்ணுகிறேன்” என கூறினார்.

    இந்த நிலையில், சர்வதேச தடைகளை மீறியதாக கூறி வடகொரியாவின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது. வடகொரியா அதிக அளவில் ஏற்றுமதி செய்துவரும் நிலக்கரியை கொண்டு செல்ல இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இந்த போக்குவரத்து ஐ.நா.வின் ஏற்றுமதி தடையை மீறியுள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

    வைஸ் ஹானஸ்ட் என பெயர் கொண்ட இந்த கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேசியாவில் சிக்கியது. அதனை தொடர்ந்து, இந்த கப்பலை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா தரப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் இந்தோனேசியா தற்போது வடகொரியாவின் வைஸ் ஹானஸ்ட் சரக்கு கப்பலை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. தற்போது வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியதற்கும், இந்த கப்பலை கைப்பற்றியதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரியை அதிகரித்து டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள முடிவால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து உள்ளது.
    வாஷிங்டன்:

    உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் மூலம் வேலைவாய்ப்புகளை திருடி வருவதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சீனாவின் வர்த்தக நடைமுறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் அவர், இதற்கு பதிலடியாக அந்த நாட்டு பொருட்கள் மீது அதிக அளவிலான வரி விதித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்த அதிரடியை அவர் மேற்கொண்டார். அதன்படி சீன இறக்குமதி பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) அளவுக்கு கடந்த ஆண்டு வரி விதித்தார்.

    டிரம்பின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த சீனாவும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனாவும் வரியை அதிகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக வர்த்தகப்போர் நடந்து வருகிறது.

    எனினும் இந்த வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. தற்போதுகூட சீன துணை பிரதமர் லியு ஹி, வாஷிங்டனில் டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறார்.

    இதில் அதிக முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் சீன பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு மேலும் வரி விதிப்பை அதிகரித்து நேற்று டிரம்ப் நிர்வாகம் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதாவது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரி அதிகரித்து இருப்பதாகவும், இந்த நடைமுறை உடனடியாக அமலில் வருவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் டிரம்ப் நிர்வாகம் இந்த அதிரடியை மேற்கொண்டிருப்பது சீனாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஆழ்ந்த வருத்தத்தை சீனா வெளியிட்டு உள்ளது.

    அதேநேரம் டிரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதில் நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக சீனாவும் அறிவித்து உள்ளது. இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தகப்போர் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #StrongStorms #UnitedStates
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டெக்சாஸ், அலபாமா, மிச்சிபிசி ஆகிய மாகாணங்களை பலத்த சூறாவளி தாக்கியது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சூழன்றடித்தது.

    இதில் மேற்கூறிய 3 மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தின் ஏஞ்சலினா கவுண்டி, அல்டோ, மிச்சிபிசியின் மெனாரே மற்றும் அலபாமாவின் பர்மிங்காம் ஆகிய நகரங்கள் சின்னாபின்னமாகின.

    சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பந்தாடப்பட்டன. பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.



    நெடுஞ்சாலைகளில் இருந்த அறிவிப்பு பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் நொறுங்கிவிழுந்தன. மேலும் பல பகுதிகளில் சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சூறாவளி காற்றில் சிக்கி மின்கம்பங்கள் சரிந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 3 மாகாணங்களிலும் சுமார் 1 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.

    சூறாவளியை தொடர்ந்து ஒரு சில இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன. இதனால் மக்கள் வீடுகளை இழந்து, பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    சூறாவளி மற்றும் அதுதொடர்பான விபத்துகளில் 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    அவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

    இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முழுவீச்சில் மீட்புபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையில் மிச்சிபிசி மாகாண கவர்னர் பில் பிரயாந்த் அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.   #StrongStorms #UnitedStates
    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ், வேட்பாளர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சியினரிடையே பிரசாரத்தை தொடங்கினார். #2020presidentialrun #KamalaHarris #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட தயாராக இருப்பதாக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் கடந்த வாரம் அறிவித்தார்.

    சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானவர். கலிபோர்னியா மாகாணத்தில் அரசு வக்கீலாக பதவி வகித்த கமலா ஹாரிஸ், ஜனாதிபதி டிரம்ப் கொள்கைகளுக்கு எதிரானவர்.

    கமலா ஹாரிசுக்கு அவரது கட்சியில் மிகுந்த செல்வாக்கு இருப்பதாக கருதப்படுகிறது. அவர், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் தான் இருப்பதாக அறிவித்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் அமெரிக்க டாலரை நன்கொடையாக பெற்றார்.

    ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் கமலா ஹாரிஸ் தவிர, எலிசபெத் வாரன், கிர்ஸ்டன் கில்லிபேண்ட், துளசி கப்பார்ட் என மேலும் 3 பெண்கள் களத்தில் இருக்கிறார்கள்.

    ஜனநாயக கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும். ஜூலை மாத இறுதியில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

    தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவார்.

    இந்த நிலையில் வேட்பாளர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சியினரிடையே கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தைதொடங்கினார். கலிபோர்னியா மாகாணத்தின் ஓக்லாந்தில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் உரையாற்றினார்.

    அப்போது ஜனாதிபதி டிரம்பின் கொள்கைகளை கடுமையாக சாடினார். பிரசாரத்தில் கமலா ஹாரிஸ் பேசியதாவது:-

    நான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன். ஏனென்றால் நான் எனது நாட்டை விரும்புகிறேன். மக்களால் ஜனாதிபதியாக விரும்பும் நான் மக்களுக்கான ஜனாதிபதியாக இருப்பேன்.

    எவரையும் எதிர்க்கும் திறன் என் அம்மாவிடம் இருந்து எனக்கு கிடைத்தது. அவர் எப்போதும் என்னிடம் “தவறுகளை கண்டால், குறை சொல்லிக்கொண்டு மட்டும் இருக்காதே. அதற்கு தீர்வு காண ஏதாவது செய்” என்று செல்வார்.

    பதவியில் இருப்பவரை எதிர்த்து போட்டியிடுவது என்பது சவாலான விஷயம் தான். வருகிற ஜனாதிபதி அவ்வளவு எளிதாக அமையப்போவதில்லை என்பதை நாம் அறிவோம்.

    முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. டிரம்பின் மெக்சிகோ எல்லை சுவர் திட்டம் போலித்தனமானது. அவரது வெளியுறவு கொள்கையால் உலக அளவில் அமெரிக்காவின் நிலைமை மிகவும் பலவீனம் அடைந்துள்ளது.

    அமெரிக்கா மக்களின் கனவுகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். அமெரிக்காவின் தார்மீக தலைமை பொறுப்பை நாம் மீண்டும் கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #2020presidentialrun #KamalaHarris
    அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரி கார்பரல் சிங் ‘தேசத்தின் கதாநாயகன்’ என ஜனாதிபதி டிரம்ப் புகழாரம் சூட்டினார். #AmericanHero #IndianOrigin #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நியூமன் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கார்பரல் சிங் (வயது 35).

    இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், கடந்த மாதம் 26-ந் தேதி, போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது, மெக்சிகோவை சேர்ந்த வாலிபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அந்த வாலிபரை கலிபோர்னியா போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.



    இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதி டிரம்ப் அனுதாபம் தெரிவித்தார். மேலும் கடந்த 4-ந் தேதி கார்பரல் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றிய சக போலீசாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜனாதிபதி டிரம்ப், சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரி கார்பரல் சிங் ‘தேசத்தின் கதாநாயகன்’ என தெரிவித்து அவருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் அவரை காட்டுமிராண்டி தனமாக சுட்டுக்கொலை செய்த மெக்சிகோ வாலிபரை ‘ஏலியன்’ என்றும் சாடினார். 
    அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்குகிற ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #GreenCard #TrumpAdministration
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா கொடுத்து பணி செய்வதற்கு முந்தைய ஒபாமா அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதியை திரும்பப்பெறுவதற்கு டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது இந்தியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் குடியிருப்பதற்கு நிரந்தர குடியுரிமை வழங்குகிற ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



    இது தொடர்பாக அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை, அரசுக்கு அளித்துள்ள ஆலோசனையில், அமெரிக்காவில் உணவு மற்றும் நிதி உதவி பெற்று வந்த பிற நாட்டினர் அல்லது பெற விரும்புகிற பிற நாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) வழங்க தேவையில்லை என்று கூறி உள்ளது. இந்த ஆலோசனையை டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து ஏற்றுக்கொண்டு, உத்தரவு பிறப்பித்தால் இதுவும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ள இந்த திட்டத்தை பேஸ்புக், மைக்ரோசாப்ட், டிராப்பாக்ஸ், யாகூ, கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை அமல்படுத்தினால், ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும் என இவை தெரிவித்துள்ளன. #GreenCard #TrumpAdministration  
    அமெரிக்காவின் கடலோர பகுதியான கரோலினா நகரை புளோரன்ஸ் புயல் தாக்கியதில் தாய், குழந்தை உள்பட் 5 பேர் பலியாகினர். #HurricaneFlorence
    வாஷிங்டன்:

    அட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான ‘புளோரன்ஸ்’ என பெயரிடப்பட்ட புயல் நேற்று கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது.

    வடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் நேற்று காலை புயல் கரையை கடந்தது. அதனால் பலத்த மழை கொட்டியது. மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

    கடும் மழை பெய்ததால், வடக்கு கரோலினா பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள 2 ஆறுகளின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் ரோடுகளில் 10 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கியது. தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன.

    அதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வடக்கு கரோலினா நகரம், அதை சுற்றியுள்ள பகுதிகளும் இருளில் மூழ்கின. அங்குள்ள தனியார் டெலிவி‌ஷன் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.


    புயல் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியாகிவிட்டனர். வில்மிங்டனில் ஒரு பெண் தனது குழந்தையுடன் பலியானார். இவர்களது வீட்டின் மீது மரம் விழுந்தது. அதில் அவர்கள் பலியாகினர். இறந்த பெண்ணின் கணவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் லெனாயிர் கவுன்டி பகுதியில் 70 வயது முதியவர் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மின்சாரம் தாக்கியும், மற்றொருவர் வீட்டின் வெளியே காற்றில் சிக்கி தவித்த தனது செல்ல நாயை காப்பாற்ற முயன்றபோதும் பலியாகினர். ஹாம்ஸ்டட் நகரில் ஒரு பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். வீட்டின் அருகே மரம் விழுந்து கிடந்ததால் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி கொண்டு செல்ல முடியவில்லை.

    இதற்கிடையே புயல் தாக்கிய வடக்கு கரோலினாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி அவசர உதவி மையங்களில் தங்கியுள்ளனர். ஜேக்சான் வில்லேவில் இரவில் ஓட்டல் மீது மரம் விழுந்தது. அங்கு தங்கியிருந்த 60 பேர் மீட்கப்பட்டனர்.

    நியூபெர்ன் மற்றும் வடக்கு கரோலினாவில் வீடுகளுக்குள் 10 அடி உயரத்துக்கு தண்ணீர் புகுந்தது. அங்கு தவித்துக் கொண்டிருந்த 30 ஆயிரம் பேர் பத்திரமாகமீட்டு வெளியேற்றப்பட்டனர். வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து 17 லட்சம் பேர் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 8 லட்சம் பேர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர். நிலைமை சீராகி மின் வினியோகம் கிடைக்க இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே புளோரென்ஸ் புயல் தெற்கு கரோலினாவுக்குள் ஊடுருவியிருப்பதாக வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பலத்த மழை பெய்யும். இதன்மூலம் 18 லட்சம் கோடி காலன்கள் மழைநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புயல் பாதித்த வடக்கு கரோலினாவுக்கு அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. #HurricaneFlorence
    அமெரிக்காவின் இ.பி-5 விசா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்திடம் டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 10 உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், குறைந்தபட்சம் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6 கோடியே 80 லட்சம்) தொழில் முதலீடு செய்கிற வெளிநாட்டினருக்கு ‘இ.பி-5 விசா’ வழங்கப்பட்டு வருகிறது. இதன்கீழ் வருகிறவர்களுக்கு ‘கிரீன் கார்டு’ என்ற நிரந்தர சட்டப்பூர்வ குடி உரிமை கிடைக்கிறது.

    இந்த விசா ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு தரப்படுகிறது. ஒரு நாட்டுக்கு அதிகபட்சம் 7 சதவீதம் வழங்கப்படும்.

    ஆனால் இந்த திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், மோசடிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இந்த விசா திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், ஒன்று, இந்த விசா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்திடம் டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

    இந்த விசா திட்டத்தின் கீழ் அதிகமாக விண்ணப்பிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா, வியட்நாமைத் தொடர்ந்து இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது.

    சீனாதான் அதிகளவில் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    ×