என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "தூக்துக்குடி"
முள்ளக்காடு:
தூத்துக்குடி முள்ளக்காடு அருகே ராஜீவ்நகரில் நேற்று இரவு ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அங்கு சுமார் 40 வயதுடைய ஒரு ஆண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரை மர்ம நபர்கள் கம்பால் அடித்துக்கொலை செய்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இதையடுத்து அவரது பிணத்தை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் முத்தையாபுரம் அத்திமரப்பட்டியை சேர்ந்த கண்ணன் (வயது52) என்பது தெரிய வந்தது. கண்ணன் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
இவரது சொந்த ஊர் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. கடந்த 4 ஆண்டாக கண்ணன் அத்திமரப்பட்டியில் வசித்து வந்தார். இந்த நிலையில் ராஜீவ்நகர் 7-வது தெருவை சேர்ந்த ராஜா(22) என்பவர் மாடு வாங்க கண்ணனை அணுகினார்.
அதன்படி கண்ணன் மாடு வாங்கி கொடுத்துள்ளார். அந்த மாடு திருட்டு மாடு என அப்பகுதியினர் கூறியுள்ளனர். இதுபற்றி கண்ணனிடம் ராஜா கேட்டார். அதற்கு மாடு திருடப்பட்டது அல்ல என கண்ணன் கூறினார்.
இந்த நிலையில் இதுபற்றி பேச வருமாறு கண்ணன் அழைத்தார். அதற்காக நேற்று இரவு கண்ணன் ராஜீவ்நகருக்கு வந்தார். வந்த இடத்தில் கண்ணனுக்கும், ராஜாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ராஜா மற்றும் அவரது நண்பர் காந்திநகரை சேர்ந்த தினேஷ்குமார்(19) ஆகிய 2 பேர் சேர்ந்து கண்ணனை சரமாரியாக கம்பால் தாக்கினர்.
இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த ராஜாவும், தினேஷ்குமாரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து ராஜா, தினேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இன்று காலை அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.