search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளகோவில்"

    வெள்ளகோவில் அருகே கார் மீது டெம்போ மோதி கேபிள் டிவி ஆபரேட்டர் பலியானார்.

    வெள்ளகோவில்:

    கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் அன்புராஜ்(65). கேபிள் டி.வி.ஆபரேட்டர். இவரது மனைவி ஞானமணி(60). இவர்கள் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ஒரு விஷேச வீட்டிற்கு காரில் சென்றனர். இவர்களுடன் அன்புராஜ் உறவினர் ஆறுமுகம் (70). அவரது மனைவி ஜெகதீஸ்வரி(62) ஆகியோரும் சென்றனர். இந்த கார் காங்கயம்-வெள்ளகோவில் சாலையில் எல்லை காட்டு வலசு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே டெம்போ வந்தது. திடீரென காரும் டெம்போவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் அன்புராஜ் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஞானமணி, ஆறுமுகம், ஜெகதீஸ்வரி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெள்ளகோவில் அருகே வேன் மோதி அசாம் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே வேன் மோதி அசாம் வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அலாதீன் (20) இவரது நண்பர் அஜ்ராவுல் அலோன் (20). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள முத்தூர் தொட்டிய பாளையத்தில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இரவு 8.30 மணிக்கு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முத்தூர் கடை வீதிக்கு வந்தனர். பின்னர் ஊருக்கு திரும்பினார்கள். அலாதீன் மோட்டார் சைக்கிளை ஓட்ட அஜ்ராவுல் அலோன் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

    முத்தூர் - கொடுமுடி சாலையில் மேட்டுக்கடை என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அலாதீன் தலையில் பலத்த அடிபட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலே இறந்தார்.

    அவரது நண்பர் அஜ்ராவுல் அலோன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்து குறித்து வெள்ளகோவில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

    வெள்ளகோவில் வடமாநில மில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நாட்ராயசாமி கோவில் அருகே தனியார் மில் உள்ளது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சதானந்த தாஸ் (வயது 26) என்பவரும் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மில் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சதானந்த தாசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதானந்த தாஸ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெள்ளகோவில் அருகே பழைய கார் விற்பனை கடையில் பணம் திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (வயது 28). இவர் கடந்த 5 ஆண்டுகளாக முத்தூரில் பழைய கார் விற்பனை நடத்தி வருகிறார்.

    நேற்று வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்தார். மதியம் மின் கட்டணம் செலுத்த சென்றார். மின் கட்டணம் செலுத்திய பின்னர் மீண்டும் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கல்லாவில் இருந்த ரூ.64 ஆயிரத்து 500 திருட்டுபோனது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்தார்.

    இந்நிலையில் வெள்ளகோவிலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேரும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வந்தனர். போலீசாரை பார்த்ததும் 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். உஷாரான போலீசார் அவர்களை விரட்டிச்சென்றனர். ஆனால் தப்பினர்.

    இது குறித்து முத்தூர் பகுதியில் உள்ள போலீசாருக்கு தெரிவித்தனர். அங்கிருந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் 3 பேர் வந்த மோட்டார் சைக்கிளை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது ரூ.64 ஆயிரத்து 500 மற்றும் 2 லேப்- டாப்புகள் இருந்தது.

    விசாரணையில் முத்தூரில் ராஜேஸ்குமார் நடத்தி வரும் கடையில் புகுந்து திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து பணத்தையும், லேப்- டாப்களையும் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் ஈரோடு லட்சுமி நகர் வெண்டிப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 19), நோயல் எபினேஷ் (18), மகேஸ்வரன் (18) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

    கடை உரிமையாளர் ராஜேஸ்குமார் இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    வெள்ளகோவில் அருகே மெக்கானிக் வீட்டின் கதவை உடைத்து நகை -பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம் பாளையம் வடிவேல் நகரை சேர்ந்தவர் முருகேசன் (38). இரு சக்கர வாகன மெக்கானிக்.

    இவர் தனது வீட்டை பூட்டி விட்டு நேற்று காலை குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். மதியம் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவு கம்பியால் நெம்பி திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்கப்பணம், வளையல், மோதிரம் உள்ளிட்ட 3 பவுன் நகைகளை திருட்டு போய் இருந்தது.

    இதனால் முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். அவர் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் நகை- பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை - பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    வெள்ளகோவில் அருகே டெம்போ மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 58). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார்.

    பழைய பஸ் நிலையம் அருகே வந்த போது அவ்வழியாக வந்த டெம்போ இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இறந்தார். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவிலில் பள்ளி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வரகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அதே பகுதியில் திருப்பூர் வீரபாண்டிபிரிவை சேர்ந்த மணிகண்டன் தனது மனைவி ராணி, 17 வயது மகனுடன் தங்கி அம்மிக்கல், ஆட்டுக்கல் கொத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது மாணவியும், மணிகண்டனின் மகனும் பழகி வந்தனர்.

    இந்நிலையில் 6-ந்தேதி காலை கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற மகள் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை அக்கம் பக்கம் மற்றும் உறவினர், தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. 

    இந்நிலையில் மணிகண்டனும் குடும்பத்துடன் மாயமாகிவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து பெண்ணின் தாய் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார்.

    இதனையடுத்து போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது மனைவி ராணி மற்றும் அவர்களது 17 வயது மகனையும் தேடி வருகிறார்கள். பள்ளி சிறுமியை மீட்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    ×