என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எய்ம்ஸ்"

    • அன்புமணி ராமதாஸ் தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் என்று சீமான் கூறியதால் பரபரப்பு
    • 2019ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அன்புமணி ராமதாஸ் தான் அடிக்கல் நாட்டினார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது யார்? திமுக - காங்கிரஸ் - பாமக கூட்டணியில் இருந்த போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் எய்ம்ஸ் காட்டவில்லை. கடந்த முறை 39 எம்.பி.க்கள் இப்போது 40 எம்.பி.க்கள் பாராளுமன்றம் போனார்களே அவர்கள் பேசி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவேண்டியதுதானே" என்று பேசியுள்ளார்.

    2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். உண்மை இப்படியிருக்க மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை சீமான் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பணிகள் 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
    • சென்னையைச் சார்ந்த லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் ரூ.1118.35 கோடிக்கு (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டுகளை கடந்தும் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் இருந்து வந்ததால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

    இதனைதொடர்ந்து கடந்த மார்ச் 14 ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தனியார் கட்டுமான நிறுவனமான L&T நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்.டி.ஐ.யில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் ஆர்.டி.ஐ.யில் கேள்வி எழுப்பி இருந்தார்.

    அதற்கு ஆர்.டி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மதுரை எய்ம்ஸ்-இன் கட்டுமான ஒப்பந்தத்தின்படி, தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள், உணவு கூடம், வெளி நோயாளிகள் பிரிவு, சேவை பிரிவு கட்டடங்கள் ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையைச் சார்ந்த லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் ரூ.1118.35 கோடிக்கு (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 22 மே 2024 அன்று கட்டுமானம் தொடங்குவதற்கு கடிதம் வழங்கப்பட்டு 33 மாதங்களில் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மதுரை எய்ம்ஸ்-க்கான திட்ட மதிப்பீடு ரூ.2021.51 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு, 33 மாதங்களில் மொத்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 18 ஆயிரத்து 927 சதுர மீட்டர் பரப்பளவில் மருத்துவமனை கட்டடங்கள், மருத்துவக் கல்லூரி கட்டடங்கள், விடுதிகட்டடங்கள், ஆசிரியர்கள் குடியிருப்புகள், உணவகங்கள், விளையாட்டுக் கூடங்கள் கட்டப்பட இருக்கின்றன. தற்காலிக கட்டடங்களாக திட்ட அலுவலகம், சேமிப்பு கிடங்குகள், காங்கிரீட் தயாரிப்பு ஆலை, மெடிக்கல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான கட்டடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவைகளை கவனிக்க சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் பணியாற்றி வருகிறோம்.
    • கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 4,100 நோயாளிகள் ஏர் ஆம்புலன்ஸ்களை வாடகைக்கு எடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செயல்படத் தொடங்கும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, நேற்று நடைபெற்ற 49வது தேசிய மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அமைச்சர் சிந்தியா மேலும் கூறியதாவது:-

    ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ்கள் செயல்படத் தொடங்கும். அதன் முன்மொழிவுக்கான கோரிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் அழைக்கப்படும். இதனால் விலைமதிப்பற்ற நேரத்தையும் உயிர்களையும் காப்பாற்ற ஹெலிகாப்டர்கள் சேவைக்கு ஒதுக்கப்படும்.

    ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவைகளை கவனிக்க சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் பணியாற்றி வருகிறோம். சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எங்களிடம் உள்ள 'பொன்னான நேரம்', நெடுஞ்சாலைகளில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்கும் அல்லது முதல் மையத்திற்கும் விரைவாக அழைத்து செல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தில் அமைச்சகம் பகிர்ந்து கொண்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் தற்போது 49 ஏர் ஆம்புலன்ஸ்கள் மட்டுமே உள்ளதாகவும், இவை 19 ஆபரேட்டர்களால் இயக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 4,100 நோயாளிகள் ஏர் ஆம்புலன்ஸ்களை வாடகைக்கு எடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

    • மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத் உடல்நலக் குறைவால் ஜாமீனில் உள்ளார்.
    • உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று கொண்டு செல்லப்பட்டார்.

    புதுடெல்லி:

    மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக் குறைவால் ஜாமீனில் இருந்து வருகிறார்.

    இதற்கிடையே, பாட்னாவில் உள்ள வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு மாடிப்படியில் இருந்து லாலு பிரசாத் தவறி விழுந்ததில் அவரது கால் மற்றும் தோள்பட்டை பகுதியில் முறிவு, காயம் ஏற்பட்டது. இதையடுத்து பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், லாலு பிரசாத்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில் மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பாட்னாவில் இருந்து லாலு பிரசாத் இன்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு லாலுவுக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மக்களுக்கு மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். #MaduraiAIIMS #Modi
    மதுரை:

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திரமோடி அனைவருக்கும் எனது வணக்கம் என்று தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும் மோடி பேசியதாவது:-

    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ள மதுரைக்கு வந்துள்ளதில் பெருமை கொள்கிறேன். இங்கு புகழ்பெற்ற சிவாலயம் உள்ளது. நாட்டின் குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இங்கு தொடங்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டின் சிறந்த மருத்துவனையாக திகழும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மக்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்கும். மேலும் குஜராத், கவுகாத்தி ஆகிய இடங்களிலும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் நடைபெற்று வருகிறது.

    மதுரையில் ரூ. ஆயிரத்து 264 கோடியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைகிறது. நாட்டு மக்களுக்கு சுகாதார வசதிகள் அமைப்பதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    பிரதமரின் சிறப்பு திட்டத்தின் கீழ் மதுரை, நெல்லை, தஞ்சை மருத்துவக்கல்லூரிகளில் பன்னோக்கு சிகிச்சை கட்டிடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் நவீன மயமாக்கப்பட்டுள்னன. ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது. உலகத்திலேயே இதுதான் சிறந்த காப்பீட்டு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 67 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் 89 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 2025 என்ற தொலை நோக்கு திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    சுகாதார சேவை வழங்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #MaduraiAIIMS
    மதுரை:

    எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. பிரசவத்தின்போது தாய்-சேய் இறப்பு சதவீதம் பெருமளவு குறைந்துள்ளது. தேசிய அளவில் குழந்தை இறப்பு விகிதம் 34 என்ற நிலை உள்ளது.

    ஐக்கிய நாட்டு சபை சுகாதாரம் குறித்த நிலையான வளர்ச்சியில் 2030-ம் ஆண்டு தாய்மார்கள் பேறுகால இறப்பு சதவிகிதத்தை 67 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழகம் 2016-ம் ஆண்டிலேயே இந்த இலக்கினை அடைந்து மத்திய அரசின் விருதினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் தொலைநோக்கு திட்டம் மூலம் மக்களுக்கு தரமான சுகாதார திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தமிழக சுகாதாரத்துறை பல்வேறு மருத்துவ திட்டங்களில் தனிக்கவனம் செலுத்தியதால் பல சாதனைகளை படைத்துள்ளது. 2018-ம் ஆண்டு முதல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்ட ரூ.2 லட்சம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இறந்தவர்களின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் எப்போதுமே மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது.

    தேசிய அளவில் மிக சிறந்து செயல்படும் என்ற மாநிலம் என்ற விருதினை கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசு தொடர்ந்து பெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வரவேற்று பேசினார். விழா மேடையில் பிரதமர் மோடிக்கு மீனாட்சி அம்மன் சிலையை நினைவு பரிசாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். #MaduraiAIIMS #Modi
    மதுரை:

    டெல்லியில் செயல்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்று நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக ரூ.1264 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 201.75 ஏக்கரில் அமைய உள்ளது. இங்கு 750 படுக்கைகள், 16 ஆபரேசன் தியேட்டர்கள், 18 ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரங்குகள் இந்த மருத்துவமனையில் அமைய உள்ளன. மேலும் 100 மாணவ- மாணவிகள் படிக்கும் மருத்துவக்கல்லூரி, 60 பேர் பயிலும் நர்சிங் கல்லூரி ஆகியவையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் இன்று நடந்தது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு பகல் 11.28 மணிக்கு மதுரை வந்தார்.

    அவரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் மண்டேலா நகர் விழா திடலுக்கு பிரதமர் மோடி சென்றார்.

    அங்கு நடைபெற்ற விழாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார். மேடைக்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அத்துடன் மதுரை மீனாட்சியம்மன் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.



    துணை-முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வரவேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    அதே மேடையில் தலா ரூ.150 கோடி மதிப்பில் மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைகளையும் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, மத்திய மந்திரிகள் நட்டா, பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காக பாரத பிரதமர் மோடி இன்று காலை 11.28 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். #MaduraiAIIMS
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக பிரதமர் மோடி இன்று காலை 11.28 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

    பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
    எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நலம் விசாரித்தார். #VenkaiahNaidu #ManoharParrikar
    புதுடெல்லி :

    கோவா மாநில முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் அவதிபட்டு வருகிறார். இதற்காக அவர் அமெரிக்காவில் சுமார் 3 மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

    அதன் பின்னர் கடந்த மாதம் முதல் வாரத்தில் அவர் நாடு திரும்பினார். அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்றபோதும், அவருக்கு நோய் பாதிப்பு குறையவில்லை.

    இதையடுத்து கடந்த மாதம் 15-ந் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    இது பற்றி வெங்கையா நாயுடு தனது டுவிட்டரில், ' கோவா மாநிலத்தின் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்து அவருடைய உடல் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தேன். அவர் நமது நாட்டின் மிகவும் அன்பான மற்றும் நேர்மையான மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். அவர் விரைவில் குணமடைந்து வந்து எப்போதும் போல இந்த சமூகத்துக்கு சேவையாற்றுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். ' என தெரிவித்தார். #VenkaiahNaidu #ManoharParrikar

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்ததை அடுத்து மத்திய, மாநில அரசுகளை பொய்யர்களின் கூடாரம் என முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். #MKStalin #AIIMS #RTI
    சென்னை :

    மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். 2 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட துவங்கும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

    இதற்கிடையே, மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை இயக்கத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

    அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக இதுவரை நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எனவும் அந்த பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என தெரியவந்ததை அடுத்து மத்திய, மாநில அரசுகளை பொய்யர்களின் கூடாரம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது பதிவில் கூறியிருப்பதாவது:–

    ‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியதாகவும், மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமானப் பணிகள்தான் தொடங்கவேண்டும் என்றனர் மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள். ஆனால், இவை அனைத்தும் பொய் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. பொய்யர்களின் கூடாரம் மத்திய–மாநில அரசுகள்’ என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும் மதுரையை சேர்ந்த ஹக்கீம் காசிம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பெற்ற இதுதொடர்பான விவரங்கள் அடங்கிய கடிதத்தையும் மு.க.ஸ்டாலின் பதிவேற்றம் செய்துள்ளார். #MKStalin #AIIMS #RTI
    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த கர்ப்பிணி மனைவியை பார்க்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் டாக்டர் வேடமிட்டு சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். #AIIMS
    புதுடெல்லி :

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வார்டுகளில் டாக்டர்கள் அணியும் வெள்ளை கோட் அணிந்தவாறு 25 வயது மதிக்கத்தக்க நபர் சுற்றித்திரிந்துள்ளார்.

    அவரது நடவடிக்கைகள் சந்தேகப்படும்படி இருந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரிடம் விசாரித்ததில் தாம் ஒரு மூத்த டாக்டர் என அவர் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் காவலர்களுக்கு சந்தேகம் தீராததால் அவரிடம் டாக்டர்கள் வைத்திருக்கும் அடையாள அட்டையை கேட்டபோது, பதற்றமைடைந்த அந்த நபர் தாம் டாக்டர் வேடமிட்டு வந்த உண்மையை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

    இதுகுறித்து தெற்கு டெல்லி காவல் துணை ஆணையர் ரோமிலா பணியா கூறுகையில், ‘ அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் காசியாபாத்தை சேர்ந்த அஷிஷ் திருப்பதி என்பது தெரியவந்தது.

    பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கர்ப்பிணி மனைவியை பார்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மனைவியை எளிதில் பார்க்க முடியாத அவர், டாக்டர் வேடமிட்டு சென்றால் எளிதில் மனைவியை பார்க்க முடியும் என்பதால் வெள்ளை கோட் அணிந்து மருத்துவமனை வார்டுகளில் சுற்றித்திரிந்துள்ளார்’ என தெரிவித்தார்.

    எனினும், அவர் மீது வழக்கு பதியப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.

    இதனை அடுத்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



    மேலும், மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், தேசிய கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் மந்திரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது. பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. 
    ×