என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலி குடங்களுடன் பெண்கள் மறியல்"

    திருத்தணி அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

    பள்ளிப்பட்டு:

    திருத்தணியை அடுத்த தாடூர் இருளர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 13 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். விவசாய கிணறு மற்றும் கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை திருத்தணி - சோளிங்கர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கிராம மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல் நகரில் தொடரும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் இன்றும் காலி குடங்களுடன் மறியல் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. போர்வெல்களிலும் தண்ணீர் இல்லாததால் விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    கோடை காலத்தில் நிலவும் வறட்சியை போன்று தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே தினசரி காலிகுடங்களுடன் மறியல், மாநகராட்சி முற்றுகை போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இன்று 13, 14-வது வார்டுகளுக்குட்பட்ட ஒய்.எம்.ஆர். பட்டி, ஜோசப்காலனி பொதுமக்கள் காலி குடங்களுடன் கல்லறை தோட்டம் பகுதியில் அமர்ந்து மறியல் செய்தனர். 3 சாலைகள் சந்திக்கும் பகுதியில் ரோட்டை மறித்து போராட்டம் செய்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்த நகர் வடக்கு போலீசார் விரைந்து சென்று மறியல் செய்த பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இங்கு வந்து உறுதி அளித்தால்தான் மறியலை கைவிடுவோம் என தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில் மாநகராட்சி புதியதாக பதித்து உள்ள ஜிக்கா பைப்புகளில் தண்ணீர் வரவில்லை. சோதனை ஓட்டம் என்று கூறி 5 நிமிடம் மட்டுமே தண்ணீர் வருகிறது. எனவே எங்களுக்கு பழைய பைப்புகளிலேயே தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அதன்பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் வந்து மறியல் செய்தவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    ×