என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி"

    • வார நாட்களில் 6 ஆயிரம், சனி, ஞாயிறு 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
    • சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு

    ஊட்டி:

    ஊட்டி, கொடைக்கானலுக்கு வருடம் தோறும் சுற்றுலாப் பயணிகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மலைச்சாலையில் பல மணி நேரம் நகராமல் அணிவகுத்து நின்று வருகிறது.

    குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களான கோடை காலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளாலும், அவர்கள் வந்து செல்லும் வாகனங்களாலும் நீலகிரி மாவட்டத்தில் 2 மாதங்களும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இதனால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வனப்பகுதிகளுக்கு வரும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.

    வெளியூரில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற்றே நீலகிரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி ஏற்கனவே உள்ள இ-பாஸ் நடைமுறை இந்த ஆண்டும் தொடர வேண்டும்.

    மேலும் இ-பாஸ் நடைமுறையை பின்பற்றி வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும்.

    மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகளை வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை கண்டிப்பான முறையில் மாவட்ட நிர்வாகங்கள் அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். நாளை (1-ந் தேதி) முதல் புதிய கட்டுப்பாடுகள் நீலகிரி மாவட்டத்தில் அமலுக்கு வர உள்ளது.

    மாவட்டத்தில் நாடுகாணி, குஞ்சப்பனை, பர்லியார், கக்கநல்லா, கெத்தை, தேவாலா என 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் அனைத்திலும் நாளை முதல் சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சுற்றுலா வருபவர்கள் இ-பாஸ் பெற்றுள்ளனரா? தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருகின்றனரா? என சோதனை செய்ய உள்ளனர். இ-பாஸ் பெறாதவர்களுக்கு அந்த இடத்திலேயே இ-பாஸ் எடுத்து கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    ஐகோர்ட்டு கூறியுள்ளபடி வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும், வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி கொடுக்க உள்ளனர். உள்ளூர் மக்களுக்கும், அரசு பஸ்களில் வருபவர்களுக்கும் இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரி வருவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும், இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இ-பாஸ் மற்றும் வாகன கட்டுப்பாட்டை ரத்து செய்யக் கோரி அவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுமுன்தினம் தங்கள் கடைகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். நாளை மறுநாள் (2-ந் தேதி) மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    கொடைக்கானலில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அது குறித்த ஏற்பாடுகள் குறித்தும், கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்தும் கலெக்டர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் 100 வாகனங்கள் நிறுத்தும் வகையில் நகராட்சித்துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒருவார காலத்தில் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    அப்சர்வேட்ரி, ரோஸ் கார்டன் எதிர்புறம், பிரையண்ட் பார்க் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலியான இடங்களில் தற்காலிக சாலையோர வாகனம் நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    காவல்துறையின் சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவழி பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் மாதிரி ஒருவழி பாதை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் தற்போதுள்ள நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ரோஸ் கார்டன், பிரையண்ட் பார்க் ஆகிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கொடைக்கானல் நகராட்சியின் சார்பில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்படும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, காவல் துறையின் சார்பில் வழங்கப்படும் கியூ.ஆர். கோடு மூலம் அவசரம் மற்றும் அவசியம் குறித்து தெரிவிக்கும் வகையில் உதவி மையம் அமைக்கப்படும். சுற்றுலா மற்றும் பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில், இந்த உதவி மையத்தினை மேலும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    25 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும். சென்ற வருடத்தில் 15 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 10 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும்.

    மேலும், 25 இடங்களில் ஆர்.ஓ. குடிநீர் முறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினந்தோறும் குடிநீரை ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சாலைகளில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் விதி மீறல் இருப்பதாக தெரிய வருகிறது.

    அதனால் கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை தவிர மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • ஊட்டியில் 700 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி.
    • பல்வேறு வசதிகள் கொண்ட கூடுதல் கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

    ஊட்டி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டம் வாரியாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மக்களை முறையாக சென்றடைகிறதா? மாவட்டங்களில் நடந்து வரும் திட்டப்பணிகள் சரியாக நடக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலஉதவிகளையும் வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் ஏப்ரல் முதல் வாரம் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொள்கிறார். ஏப்ரல் 5 மற்றும் 6-ந் தேதிகளில் அவர் நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டு ஆய்வுப்பணியை மேற்கொள்ள உள்ளார்.

    அப்போது ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.

    இதையொட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்து வரும் இறுதிக்கட்ட பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டும், ஏற்படுத்தப்பட்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டியில் ரூ.143.69 கோடி செலவில் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை யினரும் இணைந்து நிலச்சரிவு, மழை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே இக்கட்டுமான பணிகளை சிறப்பாக கட்டி முடித்துள்ளனர்.

    இந்தியாவிலேயே 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைந்துள்ள மலை பிரதேசம் என்றால் அது ஊட்டி என்று தான் சொல்ல வேண்டும்.

    மேலும் இந்த மருத்துவ மனையின் சிறப்பம்சம் என்னவென்றால் பழங்குடியினருக்கு தனி வார்டு ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி பழங்குடியினருக்கென தனி வார்டு ஒன்று, ஆண்களுக்கு 20 படுக்கைகள், பெண்களுக்கு 20 படுக்கைகள் மற்றும் மகப்பேறுக்கென்று 10 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகள் கொண்ட வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இம்மருத்து வமனையை பொறுத்தவரை எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்பத்துடனும், 10 அறுவை சிகிச்சை அரங்கு களுடனும் அமைக்கப்பட்டு தற்போது திறக்கும் தருவாயில் உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 6-ந்தேதி அன்று ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.

    அதுமட்டுமல்லாமல் 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களையும், எமரால்டு அரசு மருத்துவமனையில் ரூ.8.60 கோடி செலவில் தங்கும் அறை, ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், தடுப்புச்சுவர், கழிவுநீர் சுத்திகரிப்பான் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட கூடுதல் கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூடுதலாக பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தலைமை அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும்.
    • அரசு பேருந்து, ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என நீதிபதி.

    இதேபோல், கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.

    வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். அரசு பேருந்து, ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. மின்சார வாகனங்ளுக்கு இ-பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

    ஊட்டி, கொடைக்கானலுக்கான கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்ட பெண்கள் இணைப்பு குழு சார்பாக கலை நிகழ்ச்சிகள், கலை இலக்கிய போட்டிகள் கோத்தகிரியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாராள் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பெண் குழந்தைகள் பற்றிய உரிமைகள் பாதுகாப்பு குறித்த சட்டங்கள், பெண் குழந்தை பாலியல் தாக்குதல்கள் குறித்து பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு, கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஐலண்டு அறக்கட்டளை இயக்குனர் அல்போன்ஸ்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி, அகரம்சிவா, பெண்கள் அமைப்பை சேர்ந்த லட்சுமி, விஜயநிர்மலா, ரஞ்சனி, பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.
    • கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    ஊட்டி,

    முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. இந்த நிலையில் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் கரடி, காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கடந்த சில தினங்களாக அதிகளவு தென்படுகிறது. நேற்று முன்தினம் கரடி ஒன்று சாலையோரம் வந்தது. அப்போது மசினகுடிக்கு சென்று திரும்பிய சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி கரடியை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். தொடர்ந்து தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர். இதனால் கரடி வந்த வழியாக திரும்பி சென்றது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சாலையில் வாகனங்களில் செல்லும்போது வனவிலங்குகள் நிற்பதை கண்டு ரசிப்பது தவறு இல்லை. ஆனால், வாகனங்களை எந்த காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. காட்டு யானைகள், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் எளிதில் தாக்கும் குணம் உடையவை. தற்போது கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • ஊதிய உயா்வு உள்பட ஒரு சில சலுகைகள் 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லை.
    • தன்னை கருணை கொலை செய்யும்படி மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.

     ஊட்டி

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொ ணவக்கரை ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக துரைராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறாா். தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஊராட்சி நிா்வாகம் கடந்த பல மாதங்களாக தனக்கு ஊதியம் தரவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.

    இது தொடா்பாக அவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கொணவக்கரை ஊராட்சியில் 1997-ம் ஆண்டில் நிரந்தரப் பணியாளராகப் பணியில் சோ்ந்தேன். எனக்கு ஊதிய உயா்வு உள்பட ஒரு சில சலுகைகள் 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    நான் அண்மையில் பக்கவாத நோயால் பாதிக்க ப்பட்டேன். சுய நினைவு இல்லாமல் இருந்த என்னை எனது குடும்பத்தாா் மைசூரு அழைத்து சென்று 2 மாதங்கள் மருத்துவமனை யில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனா். இந்நிலையில், கடந்த பல மாதங்களாக எனக்கு ஊராட்சி நிா்வாகம் ஊதியம் அளிக்கவில்லை. இதனால், மருந்து வாங்கவோ, மருத்துவமனைக்கு செல்லவோ முடியாமல் அவதியடைந்து வருகிறேன். எனவே, என்னை கருணை கொலை செய்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். கலெக்டர் அலுவலகம் வந்து தூய்மை பணியாளர்ஒருவர் தன்னை கருணை கொலை செய்யும்படி மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது. 

    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த கேக் தயாரிப்பு விழா நடந்து வருகிறது.
    • 25-வது ஆண்டாக ஜெம் பார்க் ஹோட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஊட்டி

    ஊட்டியில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நடத்தப்படும்.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த கேக் தயாரிப்பு விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் சம்பந்தப்பட்ட ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த கேக்கை தயாரிப்பார்கள்.

    மைதா மாவுடன் உலர் திராட்சை, செர்ரி, வால்நட், பாதாம், பிஸ்தா உள்பட 30-க்கும் மேற்பட்ட பொருட்கள் ஒன்றாக கலக்கப்படும். அதனுடன் ரம், ஒயின் உள்ளிட்ட மது வகைகளும் கேக் கலவையுடன் ஒன்றாக கலக்கப்படும்.

    பிறகு இந்த கலவையை குறைந்தது ஒரு மாதத்துக்காவது பாதுகாப்பாக வைத்து பின், கேக் தயாரிக்கப்படும். எவ்வளவுக்கு எவ்வளவு இந்த பொருட்கள் ஊறி வருகிறதோ அந்த அளவுக்கு கேக்கின் ருசியும் அதிகமாகும். இது கிறிஸ்துமஸ் விழாவுக்காகவே தயாரிக்கப்படும் கேக் என்பதால் இதற்கான விழா எப்போதுமே எல்லா நட்சத்திர ஓட்டல்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும்

    அதன்படி 25-வது ஆண்டாக ஜெம் பார்க் ஹோட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஓட்டலின் இருப்பிட இயக்குநர், சுரேஷ்நாயர் உணவு மேலாளர் பிரதீப்குமார், சிறப்பு செப் சுரேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓட்டலின் முக்கிய வாடிக்கையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இது குறித்து இருப்பிட இயக்குநர் சுரேஷ்நாயர், உணவு மேலாளர் பிரதீப்குமார் ஆகியோர் கூறியதாவது:-

    தற்போது நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சுமார் 60 கிலோ எடையிலான முந்திரி, உலர் திராட்சை, அத்திப் பழம், பேரீச்சம் பழம், பாதாம், பிஸ்தா உள்ளிட்ட 30 வகை பருப்புகளுடன், 7 வகையான மது, அன்னாசிப்பூ, இலவங்கம், ஜாதிக்காய் உள்ளிட்ட மருத்துவ மூலிகைகளும் சேர்த்து கலக்கப்பட்டு, மூடிவைக்கப்பட்ட மரக்குடுவையில் 30 நாள்களுக்கு இருட்டறை யில் வைக்கப்படும். இதை அவ்வப்போது திறந்து கிளறியும் வைக்க வேண்டும்.

    30 நாள்களுக்குப் பின்னர் இந்தக் கலவை யுடன் மைதா, முட்டை, நெய், தேன் உள்ளிட்டவற்றை சேர்த்து கேக் தயாரிக்க ப்படும். அப்போது 120 கிலோ எடையிலான கேக் கிடைக்கும். இது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் விருந்தினர்களுக்கு வினியோகிக்கப்படும்.

    ஐரோப்பியர்கள் தொடக்க காலத்தில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும்போது மது வகைகளை மட்டுமே அதிக அளவில் பயன்படுத்தினர். ஆனால், அவர்கள் இந்தியாவுக்குள் வந்த பின்னர்தான் இந்திய மசாலாப் பொருள்க ளையும் சேர்த்து கேக் தயாரிக்க ஆரம்பித்தனர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய கேக் வகைகளே பிரதான இடத்தில் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல ஊட்டியில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களிலும் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விதிகளை மீறி இயங்கியதால் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
    • 7 மீட்டா் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பேரிடா்கள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டும் மாஸ்டா் பிளான் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    அதன்படி, வீட்டுக்கு என்று அனுமதி பெற்று தங்கும் விடுதி மற்றும் வணிக கட்டிடங்களாக மாற்றக் கூடாது, குடியிருப்புப் பகுதிகளில் தங்கும் விடுதிகள், வணிக கட்டிடங்கள், உணவகங்கள் கட்டக்கூடாது. 7 மீட்டா் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இந்த விதிகளைப் பின்பற்றாத கட்டிடங்களைக் கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி, ஆணையா் காந்திராஜன் உத்தரவின்பேரில் நகராட்சி கட்டிட ஆய்வாளா் மீனாட்சி மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறியதாக ஆல்ப்ஸ் ஹவுஸ் சாலையில் உள்ள பிரபல தனியாா் ஓட்டல், அப்பா் பஜாரில் ஒரு கட்டிடத்தில் இயங்கிய பேக்கரி மற்றும் கோத்தகிரி சாலையில் ஒரு கட்டிடம் என 3 கட்டிடங்களில் இயங்கிய 12 கடைகளுக்கு 'சீல்' வைத்தனா்

    • நீலகிரி மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
    • பெயா் மாற்று சான்று வழங்க ஜெயலட்சுமி ரூ.1, 800 லஞ்சம் கேட்டுள்ளாா்

    நீலகிரி,

    மஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவா் கடந்த 2008ல் புதிதாக வாங்கிய தொழிலாளா் இல்லத்துக்கு பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, பெயா் மாற்று சான்று பெற கீழ்குந்தா நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய ஜெயலட்சுமி என்பவரை அனுகியுள்ளாா்.

    பெயா் மாற்று சான்று வழங்க ஜெயலட்சுமி ரூ.1, 800 லஞ்சம் கேட்டுள்ளாா்.

    இது குறித்து நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிவகுமாா் புகாா் அளித்தாா். அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெயலட்சுமியிடம், சிவகுமாா் வழங்கினாா்.

    அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா், லஞ்சம் பெற்ற ஜெயலட்சுமியை பிடித்தனா். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

    விசாரணை முடிவில் ஜெயலட்சுமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

    • திருச்சி மண்டலத்தில் கூட்டுறவு சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்
    • புதிய துணை பதிவாளருக்கு அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ஊட்டி :

    ஊட்டியில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) சை.அ.மீர் அஹசன் முசபர் இம்தியாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இதற்கு முன்பு திருச்சி மண்டலத்தில் கூட்டுறவு சார்பதிவாளராக பணியாற்றி வந்தார். அவர் பதவி உயர்வு பெற்று நேற்று கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் க.வாஞ்சிநாதன் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய துணை பதிவாளருக்கு சரக துணைப்பதிவாளர் இரா.மது, கூட்டுறவு சார்பதிவாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

    • இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது.
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி

    மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் பாதுகாப்பான பயன்பாடு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது. இதனை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. இதில் பணப்பரிவர்த்தனையின்போது செய்யப்படும் மோசடி, ஆன்லைன் செயலிகளை கவனமாக கையாளுதல், ரகசிய எண்களை ரகசியமாக வைத்து கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
    • கூட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் 110 மனுக்களை வழங்கினார்கள்

    நீலகிரி

    ஊட்டியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    நீலகிரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து கட்டுமான பணியின்போது உயிரிழந்த கூடலூர் அருகே ஓவேலி சின்னசூண்டி பகுதியை சேர்ந்த கலியபெருமாள் என்பவரது குடும்பத்துக்கு தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் நிவாரண தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

    மேலும் ஊட்டி அருகே தலைகுந்தா உல்லத்தி கிராமத்தில் உயிரிழந்த கார்த்திக் என்பவரது தாயாருக்கு ரூ.2½ லட்சத்துக்கான காசோலை, மனைவிக்கு ரூ.2½ லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

    இது தவிர இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தல் தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற சுவரொட்டி தயாரித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, முதல் பரிசாக ரூ.500-க்கான காசோலை மற்றும் சான்றிதழ், 2-வது பரிசாக ரூ.300-க்கான காசோலை மற்றும் சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் 110 மனுக்களை வழங்கினார்கள். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வாசுகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி பிரிவு) மணிகண்டன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×