என் மலர்
நீங்கள் தேடியது "விளாடிமிர் புதின்"
- தாக்குதலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது.
- தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கான்வாயில் சென்ற வாகனங்களில் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், வாகனம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து இந்த சம்பவம் அதிபர் புதினை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது.
இந்த சம்பவம் மாஸ்கோவில் உள்ள உளவுத்துறை தலைமையகமான எஃப்.எஸ்.பி. அருகே நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோக்களில் கார் தீப்பிடித்து எரிவதும், அங்கிருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.
அதிபர் கான்வாயில் இடம்பெற்று இருந்த ஔரஸ் செனட் லிமோசின் ரக கார் ஒன்றின் எஞ்சின் பகுதியில் தீ ஏற்பட்டு, பிறகு முகப்பு பகுதி முழுக்க பரவியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காரின் பெரும்பாலான பகுதி சேதமடைந்துள்ளது. தீப்பிடித்து எரிந்த காரில் இருந்தது யார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
- இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டார்.
- புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.
ரஷிய அதிபர் புதின் விரைவில் இந்தியா வரவுள்ளதாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய செர்ஜி லாவ்ரோவ், "பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3 ஆவது முறையாக பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ரஷ்யாவிற்கு தான் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். அவ்வகையில் இந்த முறை அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு வரவுள்ளார். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டார். புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடி கடந்தாண்டு ரஷியா சென்று அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிற்கு வருமாறு புதினுக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
உக்ரைன் - ரஷியா போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக புதின் இந்தியா வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் புதின் எப்போது இந்தியா வரவுள்ளார் என்ற தகவல் இன்னும் வரவில்லை.
- இரு நாட்டு தலைவர்களிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.
- டிரம்ப் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுகிறது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு நாடுகள் இடையிலான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு அமெரிக்கா சமீப காலமாக தீவிரம் காட்டி வருகிறது. அதன் பேரில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாட்டு தலைவர்களிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இருநாட்டு அதிபர்களிடம் பேசியதன் விளைவாக உக்ரைன் மற்றும் ரஷியா குறுகிய கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. அதன்படி இருநாடுகள் இடையே 30 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வரவுள்ளது. இருநாடுகளும் மற்றவரின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறி வைக்கக்கூடாது என்று ஒப்புக் கொள்ள செய்வதில் தான், போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்க டிரம்ப் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுகிறது.
அதிபர் புதினுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேர தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, இருநாட்டு தலைவர்களும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த வார இறுதியில் சவுதி அரேபியாவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம் என்று தெரிவித்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இருநாடுகளும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறி வைக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமெரிக்கா "எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள்" என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது. எனினும், இத்துடன் ரெயில்வே மற்றும் துறைமுகங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது.
அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜெலன்ஸ்கி தனது சமூக வலைதள பக்கத்தில், "போரை முடிவுக்குக் கொண்டுவரும் முதல் படியாக எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவது தான் இருக்க முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு தான் எப்போது போர் நிறுத்த ஒப்ந்தம் அமலுக்கு வரும் என்று தெரியவரும்.
- சர்வதேச அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
- போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார்.
உக்ரைன் மற்றும் ரஷியா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். தொடர்ந்து நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சி சர்வதேச அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
முன்னதாக சவுதி அரேபியாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். ஆனால் போர் நிறுத்தம் தொடர்பாக புதின் கூறும் போது சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ள நிலையிலும் ரஷியா போர் நிறுத்தத்திற்கு உடன்படவில்லை. ஒருப்பக்கம் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இருதரப்பும் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் உக்ரைனுடன் விரைவான போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் ரஷிய அதிபர் புதின் இந்த வாரம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது போர் நிறுத்தம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மேக் இன் இந்தியா என்ற அவரது திட்டம் பொருளாதார ரீதியாக மிக முக்கியமானது.
- பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த இந்தியா, அபரிமித வளர்ச்சியை அடைந்துள்ளது.
மாஸ்கோ:
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், மாஸ்கோவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்து நவீன நாடாக மாறியுள்ள இந்தியா வளர்ச்சியில் அபரிமிதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்திய மக்கள் மற்றும் உறுதியான வளர்ச்சியே, அனைவருக்கும் இந்தியா மீதான மரியாதை மற்றும் அபிமானத்தை வழங்குகின்றன.
இந்தியாவுடன் எங்களுக்கு (ரஷியாவிற்கு) சிறப்பான உறவு உள்ளது. இது பல தசாப்தங்களாக நெருங்கிய நட்பால் உருவாக்கப்பட்டது. நாங்கள் ஒருபோதும் கடினமான சிக்கல்களை எதிர்கொண்டதில்லை, ஒருவருக்கொருவர் ஆதரவளித்தோம், அது இப்போது நடக்கிறது. எதிர்காலத்தில் இது நடக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது, நாங்கள் வர்த்தக அளவை அதிகரித்துள்ளோம். இந்திய விவசாயத்திற்கு மிகவும் முக்கிய உரங்களின் விநியோகத்தை அதிகரிக்குமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன் அளவை 7.6 மடங்கு அதிகரித்துள்ளோம். விவசாய வர்த்தகம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடி தனது நாட்டின் தேசபக்தர். மேக் இன் இந்தியா என்ற அவரது திட்டம் பொருளாதார ரீதியாகவும் நெறிமுறையிலும் மிக முக்கியமானது. அதன் எதிர்காலம் இந்தியாவுக்கே சொந்தம், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொள்ளலாம்.
உள்நாட்டில் சில தடுப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் தனது தேசத்தின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் திறன் கொண்டவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். இவ்வாறு புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- ஐரோப்பிய நாடுகளின் வளம் முழுமைக்கும் ஆப்பிரிக்க சுரண்டல் மட்டுமே காரணம் என்று நான் கூறவில்லை.
- மிக முக்கிய காரணம் கொள்ளை, அடிமை வணிகம் ஆகியவையே ஐரோப்பியாவின் செழுமைக்கு முக்கிய காரணம்.
மாஸ்கோ:
ரஷிய ஒற்றுமை தினம் தலைநகர் மாஸ்கோவில் கொண்டாடப்பட்டது. இதில் அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இந்தியாவை வெகுவாக பாராட்டி பேசினார். அவர் கூறியதாவது:-
இந்தியாவை பாருங்கள் உள்நாட்டு வளர்ச்சிக்கு தேவையான ஒரு திறமையான, கடுமையாக உழைக்க கூடிய மக்களை கொண்டு உள்ளது. இந்தியர்கள் மிகவும் திறமையானவர்கள். ஊக்கத்துடன் செயல்படக் கூடியவர்கள்.
அவர்களால் இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது. விரைவில் இந்தியா, வளர்ச்சியில் மிகப்பெரிய சாதனை படைக்கும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஏறக்குறைய 150 கோடி மக்களை கொண்ட நாடு அது. அதுவே அவர்களுக்கான ஆற்றலாக உள்ளது. அந்த நாட்டு மக்கள், வளர்ச்சிக்கான மிகப்பெரிய ஆதாரமாக உள்ளனர்.
ஆப்பிரிக்கா நாட்டை மேற்கத்திய நாடுகள் கொள்ளையடித்து சூறையாடி சென்று விட்டன. அது ஒரு வெளிப்படையான உண்மை. காலனி ஆதிக்கத்தில் ஈடுபட்ட நாடுகளின் செல்வசெழிப்புக்கு ஆப்பிரிக்காவை அவர்கள் கொள்ளையடித்ததுதான் காரணம்.
அதை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் மறைக்கவில்லை. ஆப்பிரிக்காவின் துயரத்தில் இருந்தும், வேதனையில் இருந்துமே இந்த நாடுகள் வளம் பெற்றுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளின் வளம் முழுமைக்கும் ஆப்பிரிக்க சுரண்டல் மட்டுமே காரணம் என்று நான் கூறவில்லை. ஆனால் மிக முக்கிய காரணம் கொள்ளை, அடிமை வணிகம் ஆகியவையே ஐரோப்பியாவின் செழுமைக்கு முக்கிய காரணம்.
கிறிஸ்தவ மதத்தின் அப்படையில் ரஷியா ஐரோப்பிய கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க ஒரு அங்கம். ஆனால் ரஷிய நாகரிகமும், கலாச்சாரமும் தனித்தன்மை வாய்ந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போரை முடிவுக்கு கொண்டு வர புதினை சந்திக்க தயார் என ஜோ பைடன் தகவல்.
- அமெரிக்காவும், பிரான்சும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்க முடிவு.
ரஷியா உக்ரைன் போர் கடந்த 9 மாதங்களாக நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மேக்ரனை, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வரவேற்றார். பின்னர் இருவரும் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜோ பைடன் உக்ரைன் மீதான ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியை ரஷிய அதிபர் புதின் உண்மையிலேயே தேடுகிறார் என்றால், அவரை சந்திக்கவும் தயார். ஆனால், புதின் அவ்வாறு தேடவில்லை. அமெரிக்காவும், பிரான்ஸும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
'பின்னர் பேசிய மேக்ரன், ரஷியாவுடன் சமரசமாக செல்லுமாறு உக்ரைனை நாங்கள் வற்புறுத்த மாட்டோம், அதனை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார். இந்நிலையில் அமெரிக்க அதிபரின் கருத்து குறித்து தனது நிலைப்பாட்டை ரஷியா வெளிப்படுத்தி உள்ளது.
மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், சமரச பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அதேநேரத்தில், அதற்கு முன்பாக உக்ரைனை விட்டு ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என்று அது நிபந்தனை விதித்துள்ளது.
இந்த நிபந்தனையை ரஷியா ஒருபோதும் ஏற்காது. அதோடு, ரஷியாவுடன் இணைக்கப்பட்ட புதிய உக்ரைன் பகுதிகளை அமெரிக்கா இன்னும் அங்கீகரிக்கவில்லை. அந்தப் பகுதிகளுக்கு ரஷியா சட்டவிரோதமாக உரிமை கோருவதாகவே அமெரிக்கா தெரிவித்து வருகிறது. எனவே, இத்தகைய சூழலில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
- கடந்த வார இறுதியில் புதின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அதில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை.
- வரும் நாட்களில் புதினின் திட்டங்கள் மற்றும் முடிவுகள் பாதிக்கும். அவர் உக்ரைன் விவகாரத்தில் முழுமையாக பங்கேற்க முடியாது என்று தி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாஸ்கோ:
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அடிக்கடி தகவல் வெளியானது. 70வயதான அவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுபற்றி ரஷிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் புதின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கடந்த வார இறுதியில் புதின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அதில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. இதனால் அவருக்கு புதிய சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிகிச்சை வருகிற மார்ச் 5-ந்தேதி தொடங்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் புதினின் திட்டங்கள் மற்றும் முடிவுகள் பாதிக்கும். அவர் உக்ரைன் விவகாரத்தில் முழுமையாக பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
- புதிய தொடக்கம் என்ற பெயரில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- 2021ல் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. 1991ல் போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியான நிலையில், 2010ம் ஆண்டு புதிய தொடக்கம் என்ற பெயரில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 2021ல் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா தற்காலிகமாக வெளியேறியது. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷியா தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று பாராளுமன்றத்தில் பேசினார்.
ரஷியா இன்னும் ஒப்பந்தத்தில் இருந்து முழுமையாக விலகவில்லை. அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால், ரஷியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் புதின் பேசினார்.
போர் நடைபெறும் உக்ரைனுக்கு சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்று ஆதரவு தெரிவித்த நிலையில், ரஷியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி கூறினார்.
- அமெரிக்கா, ரஷியா இடையிலான ஒப்பந்தம், நடைமுறையில் உள்ள கடைசி பெரிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமாகும்.
அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா தற்காலிகமாக வெளியேறியது. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷியா தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று தெரிவித்தார். அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால், ரஷியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் புதின் பேசினார்.
ரஷியாவின் இந்த முடிவு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் கூறியதாவது:-
புதிய தொடக்கம் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது தொடர்பான ரஷியாவின் அறிவிப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் பொறுப்பற்ற செயல். ஆனால் ஆயுத கட்டுப்பாடுகள் குறித்து ரஷியாவுடன் பேச அமெரிக்கா தயாராக உள்ளது.
ரஷியா உண்மையில் என்ன செய்கிறது என்பதை உன்னிப்பாக கவனிப்போம். எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்காக நாங்கள் சரியான நிலையில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா, ரஷியா இடையே 2010ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், நடைமுறையில் உள்ள கடைசி பெரிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமாகும். ஆனால் அது சமீபத்திய ஆண்டுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி ரஷியா நடந்துகொள்ளவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டிவருகிறது.
- ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்களின் படி அதிபர் புதின் நிலை தடுமாறி கீழே விழுந்திருப்பதை போன்று காட்சியளிக்கிறது.
- முன்னதாக மார்ச் மாதமும் இதே போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தி மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்களின் படி அதிபர் புதின் நிலை தடுமாறி கீழே விழும் போது தரையில் கைகளை வைப்பதை போன்றும், கீழே படுத்திருக்கும் நிலையிலும் காட்சியளிக்கிறது.
"புதின் கீழே விழுந்தார். முன்னாள் சோவியத் உறுப்பினர்களை சந்தித்த பின் அதிபர் புதின் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை உதவியாளர்கள் மீட்டனர்" எனும் தலைப்பில் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இணைய தேடல்களில் தி மாஸ்கோ டைம்ஸ் இவ்வாறு எந்த செய்தியையும் பதிவிடவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்கிரீன்ஷாட் மே 16 ஆம் தேதி காலை பதிவிடப்பட்டு இருக்கிறது. ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு மே 12 ஆம் தேதி உருவாக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மார்ச் மாதமும் இதே போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதுவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். அந்த வகையில், தற்போது வைரலாகும் தகவலில் உண்மையில்லை என்று உறுதியாகி இருக்கிறது.
- உக்ரைன் மீது படையெடுப்பதற்கான புதினின் முடிவிற்கு வட கொரியா துணை நிற்பதாக கிம் உறுதியளித்துள்ளார்.
- ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கி, முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்தது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன், 'கரம்கோர்ப்பதாகவும்', நாட்டை சக்திவாய்ந்ததாக்கும் இலக்கிற்காக, திட்டமிட்ட செயலாக்கத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உறுதியளித்துள்ளதாக, அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷியாவின் தேசிய தினத்தையொட்டி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கிம் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அந்த செய்தியில், உக்ரைன் மீது படையெடுப்பதற்கான புதினின் முடிவிற்கு வட கொரியா துணை நிற்பதாகவும், ரஷியாவிற்கு முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை அளிப்பதாகவும் கிம் உறுதியளித்துள்ளார்.
"நீதி வெற்றி பெறுவது உறுதி என்றும், வெற்றி வரலாற்றிற்கு ரஷிய மக்கள் தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள்", என்றும் கிம் தெரிவித்துள்ளார்.
ரஷியாவுடன் நெருக்கமான திறன் வாய்ந்த ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கும் கிம், இரு நாட்டு மக்களின் பொதுவான விருப்பத்திற்கு இணங்க, தத்தம் நாடுகளை சக்தி வாய்ந்த நாடாக கட்டியெழுப்பும் பெரும் இலக்கை நிறைவேற்ற, ரஷிய அதிபருடன் உறுதியாக கரம் கோர்ப்பதாக அவர் தெரிவித்ததாக அச்செய்தி மேலும் கூறுகிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதேச்சதிகார மற்றும் மேலாதிக்க கொள்கைகளை குற்றம் சாட்டி உள்ள வட கொரியா, கடந்த ஆண்டு ரஷியா, உக்ரைனை ஆக்கிரமித்த பின்னரும் அந்நாட்டை ஆதரித்து நெருக்கமான நட்புறவை ஏற்படுத்த முயற்சித்தது.
கடந்த 2021ம் ஆண்டு ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கி, முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்தது. இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனை ஆதரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்ளன. இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ரஷியாவிற்கு ஆதரவளித்திருப்பது உலக அரங்கில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.