என் மலர்tooltip icon

    வட கொரியா

    • அந்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
    • டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டு ராணுவ பயிற்சி.

    விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்று்ம தென் கொரியா இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சிகளை தொடர்ந்து வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

    ஏவுகணை சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் மேற்பார்வையிட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஏவுகணை சோதனை அந்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.

    அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி முகாமின் இறுதநாளில் வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து 11 நாட்கள் வரை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இது அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டு ராணுவ பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

    கூட்டு ராணுவ பயிற்சி குறித்து பேசிய வட கொரிய செய்தி தொடர்பாளர் ஒருவர், அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

    • அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.
    • போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுவீசி 30 பேர் காயமடைந்தனர்,

    வட கொரியா கடலுக்குள் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

    இன்று, தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சியைத் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தும்.

    இந்த இராணுவப் பயிற்சி இந்த இரு படைகளின் வருடாந்திர பயிற்சியின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இது தாக்குதலுக்கு முந்தைய ராணுவப் பயிற்சி என கூறி, வட கொரியா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

    எனவே அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.

    இந்த ஏவுகணைகள் ஹ்வாகி மாகாணத்திலிருந்து ஏவப்பட்டன. வருடத்தில் ஐந்தாவது முறையாக வடகொரியா இதுபோன்ற ஏவுகணைகளை கடற்பகுதியில் ஏவியுள்ளது என்று தென் கொரியாவின் கூட்டு ராணுவத் தலைவர் தெரிவித்தார்.

    தென் கொரியா - அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியை எதிர்த்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வெளியே போராட்டம் நடந்து வருகிறது. இந்த பயிற்சி நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால் அதை நிறுத்த போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

     

    கடந்த வாரம் ஒரு பயிற்சியின் போது, வட கொரிய எல்லையில் உள்ள போச்சான் பகுதியில் இரண்டு தென் கொரிய KF-16 போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுவீசின.

     

    இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் கூட்டு ராணுவ பயிற்சியும், கடலில் வடகொரியாவின் ஏவுகணை வீச்சும் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    • 6000 முதல் 7000 டன் எடையுள்ளதாகவும், சுமார் 10 ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும் இருக்கும்
    • இந்தத் திட்டம் உறுதியான வடிவம் பெறுவதால், வட கொரியாவின் ராணுவத் திறன்களில் பெரிய மாற்றம் ஏற்படும்.

    வட கொரியா தனது முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது கட்டுமானத்தில் உள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் இருந்து ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது.

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கப்பல்கட்டும் தளங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள கடற்படை கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமான திட்டங்களை நேரில் ஆய்வு செய்த படங்களை அந்நாட்டு அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

    அப்போது பேசிய அவர், கடற்படை சக்தியை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். மேலும், கடலால் சூழப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கு, கடற்படை சக்தி மற்றும் அணு ஆயுதங்கள் மிக முக்கியமானவை என்றும் குறிப்பிட்டார்.

    இந்த நீர்மூழ்கிக் கப்பல் 6000 முதல் 7000 டன் எடையுள்ளதாகவும், சுமார் 10 ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த செய்தி தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

    2021 ஆம் ஆண்டு நடந்த ஒரு ராணுவ மாநாட்டின் போது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதாக கிம் ஜாங் உன் அறிவித்தார். இப்போது இந்தத் திட்டம் உறுதியான வடிவம் பெறுவதால், வட கொரியாவின் ராணுவத் திறன்களில் பெரிய மாற்றம் ஏற்படும்.

     

    பிற நாடுகளிடம் இருந்து துண்டிக்கப்பட்ட போதும் இத்தனை நவீன தொழில்நுட்பங்களை வட கொரியா எங்கிருந்து பெறுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பலர் ரஷியாவின் திசையை நோக்கி கை காட்டுகின்றனர். 

    • சேனல்கள் அல்லது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை மறந்துவிடுங்கள், அவற்றைத் தேடுவது கூட குற்றமாகக் கருதப்படுகிறது.
    • குழந்தைகள் மூன்று வகையான சிகை அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தன்னந்தனியாக தனக்கென தனித்த சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடு வட கொரியா. கடந்த நூற்றாண்டு தொட்டு ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.

    வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே இருந்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளை கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது தென் கொரியா மற்றும் பிற உலக நாடுகளின் கூற்று.

    அத்தகு அடக்குமுறைகளிலிருந்து யாரும் வெளிநாடுகளுக்கு தப்பிக்க முயன்று பிடிபட்டால் சித்திரவதைக்கும் கடுமையான தண்டனைக்கும் உள்ளாவார்கள். 1950களில் இருந்து குறைந்தது 30,000 வட கொரிய குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தப்பியோடியவர்களில் பெரும்பாலானவர்கள், தென் கொரியா, சீனா, ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் குடியேறினர்.

    அவர்களில் ஒருவர் திமோதி சோ. இரண்டு முறை முயற்சித்த பிறகு திமோதி நாட்டை விட்டு தப்பிச் சென்று தற்போது இங்கிலாந்தில் மனித உரிமை ஆர்வலராகப் பணியாற்றுகிறார். வட கொரியாவில் மக்களின் வாழ்க்கை குறித்து சமீபத்தில் அவர், LADbible நிகழ்ச்சியில் பேசினார்.

    அவர் கூறியதாவது, வட கொரியாவில் ஒருவர் டிவி வாங்கினால், ஒரு அரசு அதிகாரி அவரது வீட்டிற்கு வந்து, அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கிறாரா என்று சரிபார்க்கிறார்.

    வீட்டில் நிறுவப்பட்ட அனைத்து ஆண்டெனாக்களும் அகற்றப்பட்டு, ஒரே ஒரு ஆண்டெனாவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் கிம் ஜாங் உன்னின் பிரச்சாரத்தை மட்டுமே அரசாங்க சேனலில் காண முடியும். வேறு எந்த சேனலையும் யாராவது பார்க்க முயற்சித்தால், அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

    வட கொரியாவில் அரசாங்க பிரச்சாரம் தொடர்பான நிகழ்ச்சிகளை மட்டுமே குடிமக்கள் பார்க்க முடியும் என்ற கடுமையான விதி உள்ளது. வேறொரு நாட்டின் சேனல்கள் அல்லது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை மறந்துவிடுங்கள், அவற்றைத் தேடுவது கூட குற்றமாகக் கருதப்படுகிறது.

    இந்த விதியை யாராவது மீறினால், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். சில சமயங்களில் அவர்கள் கடுமையான சித்திரவதைகளையும் சந்திக்க நேரிடும். வட கொரியாவில் மக்கள் தங்கள் விருப்பப்படி முடியை வெட்டக் கூட அனுமதிக்கப்படுவதில்லை.

    பள்ளி செல்லும் குழந்தைகள் மூன்று வகையான சிகை அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அங்குள்ள முடி திருத்துபவர்கள் கூட வேறு எந்த வகையான சிகை அலங்காரத்தையும் வெட்டத் துணிவதில்லை.

     

    அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஸ்டைலிலிருந்து வேறுபட்ட ஸ்டைலில் சிறுவர்கள் தலைமுடியை வெட்டினால், அவர்களது பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவுசெய்வார்கள்.

    பல நேரங்களில் மக்கள் தங்கள் தலைமுடி காரணமாக கடுமையான சித்திரவதைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    இத்தகைய விதிகள் காரணமாக, அங்குள்ள மக்கள் எப்போதும் அடக்குமுறை மற்றும் பயத்தின் சூழலில் வாழ்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தவுடன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.  

    • வடகொரியாவை சமாளிக்க தென்கொரியா அமெரிக்காவுடன் கைகோர்த்து வருகிறது.
    • தீபகற்ப கொரிய பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    சியோல்:

    வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாக பகை இருந்து வருகிறது. இதனால் வடகொரியா கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.

    வடகொரியாவை சமாளிக்க தென்கொரியா அமெரிக்காவுடன் கைகோர்த்து வருகிறது. தீபகற்ப பகுதியில் இரு நாட்டு கூட்டுப்படைகளும் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    தென்கொரியாவில் சக்தி வாய்ந்த ராணுவ தளம் அமைப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளது. இந்த ராணுவ தளத்தால் தங்களுக்கு அச்சுறுத்தல் வரலாம் என வடகொரியா கருதுகிறது.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் அதிநவீன விமானம் தாங்கிய போர்க்கப்பல் தென்கொரியாவுக்கு வந்துள்ளது.

    வடகொரியா இந்த ஆண்டு இதுவரை 4 ஏவுகணை சோதனை நடத்தி உள்ள நிலையில் அமெரிக்கா போர்க்கப்பல் தென்கொரியாவுக்கு வந்துள்ளது வட கொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்பின் இந்த நடவடிக்கை வடகொரியாவை நேரடியாக பாதிக்கும் அபாய சூழ்நிலை நிலவுகிறது.


    இதையடுத்து அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டு அதிபர் ஜிம் ஜாங் உன்னின் சகோதரியும், சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவருமான ஜிம் யோ ஜாங்கின் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

    அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் இலக்குகளை குறிபார்த்து தாக்ககூடிய ஏவுகணை சோதனைகள் நடத்தலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் தீபகற்ப கொரிய பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டு உற்பத்தி இலக்கையும் தாண்டி தயாரிக்க கிம் உத்தரவிட்டுள்ளார்.
    • ரஷியா மற்றும் வடகொரியா இடையில் ராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது.

    அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றது முதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலையை  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தங்கள் நாட்டின் அணு ஆயுத உற்பத்தி மையத்தை பார்வையிட்டு அமெரிக்காவிடம் தனது இருப்பை மீண்டும் நிரூபித்துள்ளார்.

    கிம் ஜாங் உன் அணு ஆயுத கூடத்தில் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி அந்நாட்டின் அணுசக்தி போர்த் திறனை குறித்து உலக நாடுகளைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. முன்னதாக கடந்த 2019 இல் அதிபராக இருந்த சமயத்தில் டிரம்ப் வடகொரியா சென்று கிம் ஜாங் உன் - ஐ சந்தித்தார். வடகொரியாவுக்கு ஒரு அமெரிக்க அதிபர் செல்வது அதுவே முதல் முறை.

    ஆனால் அதன்பின் அமைந்த ஜோ பைடன் அரசுடன் வடகொரியா நல்லுறவைப் பேணவில்லை. மாறாக மேற்கு நாடுகளைப் பகைத்து உக்ரைனுடன் போரிடும் ரஷியாவுடன் வட கொரியா கைகோர்த்தது. ரஷியா மற்றும் வடகொரியா இடையில் ராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது. உக்ரைன் உடனான போரில் வடகொரிய வீரர்களை ரஷியா பயன்படுத்தியது.

    இதற்கிடையே அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதனை செய்து வட கொரியா தனது திறனை பறைசாற்றி வருகிறது. கடந்த நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற சமயத்திலும் வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது.

    மேலும் கடந்த செப்டம்பரில் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் மையத்தில் கிம் ஜாங் உன் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி மேற்கு நாடுகளை மிரள வைத்தது. இந்நிலையில் நேற்று அணு ஆயுத உற்பத்தி மையத்தில் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையான யுரேனியம் செறிவூட்டலை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நாட்டின் அணுசக்தி கேடயத்தை வலுப்படுத்த இந்த ஆண்டு உற்பத்தி இலக்கையும் தாண்டி தயாரிக்க கிம் உத்தரவிட்டுளளார் என்று கூறப்படுகிறது.

     

     

    எதிரி நாடான தென் கொரியா மீது எந்நேரமும் வடகொரியா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் பதவியேற்ற பின் ஒரு பேட்டியில், கிம் ஜாங் உன் புத்திசாலி என்றும் வடகொரியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக டிரம்ப் பேசியிருந்தார்.

    தென் கொரியாவின் அனுமானப்படி 2018 ஆம் ஆண்டிலேயே வட கொரியா 20 முதல் 60 அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டது. ஆனால் வடகொரியாவிடம் 100 க்கும் அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்ற வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். 

    • தென்கொரியா தொடர்ந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது.
    • கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    பியாங்க்யாங்:

    கொரிய தீபகற்ப பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு வடகொரியாவுக்கு ஐ.நா.சபை தடை விதித்துள்ளது.

    அதனை பொருட்படுத்தாமல் வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருகிறது. இதனால் தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றது.

    ஆனால் இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனினும் தென்கொரியா தொடர்ந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரியா நேற்று ஏவுகணை சோதனையை நடத்தியது. இது சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவு பாய்ந்து இலக்குகளை தாக்கியது. இதனை தொடர்ந்து அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    • அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் எதிர்த்து வருகின்றன.
    • 1,100 கிலோமீட்டர் (685 மைல்) தூரம் ஏவுகணை பறந்ததாகவும் தெரிவித்துள்ளது.

    பியாங்யாங்:

    உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

    இந்த நிலையில் வட கொரியா இன்று கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணையை செலுத்தியது. இதை தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே உள்ள நீரில் இறங்குவதற்கு முன் 1,100 கிலோமீட்டர் (685 மைல்) தூரம் ஏவுகணை பறந்ததாகவும் தெரிவித்தது.

    வட கொரிய தலைநகரான பியாங்யாங்கிற்கு அருகில் உள்ள பகுதியில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவத்தினரால் ஏவுகணை ஏற்பாடுகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டதாகவும் தெற்கின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

    • போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.
    • குர்ஸ்க் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் முனைப்பில் ரஷிய படைகள் ஈடுபட்டு இருந்தன.

    நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் படையெடுத்தது. இந்நிலையில், போர் தொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் இருதரப்பிலும் அமைதி பேச்சுவார்த்தையில் பலன் ஏற்படவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.

    உக்ரைனுக்கு எதிரான போரில் 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷியா திட்டமிட்டு உள்ளது என அமெரிக்கா குற்றச்சாட்டாக கூறியிருந்தது. அது உண்மை என அடுத்தடுத்து தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இந்த போரில் ரஷிய படை வீரர்களை, அதன் கூட்டணி நாடான வடகொரியாவின் வீரர்களே தவறான புரிதலால் சுட்டு கொன்ற அவலம் நடந்துள்ளது.


     குர்ஸ்க் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் முனைப்பில் ரஷிய படைகள் ஈடுபட்டு இருந்தன. ஆனால், அதனால் எதிரி படைகளை எளிதில் வெற்றி கொள்ள முடியவில்லை.

    இந்நிலையில், ரஷிய படையினரின் உத்தரவுகளை சரியாக புரிந்து கொள்ள முடியாத சூழலில் வடகொரியா வீரர்கள் இருந்துள்ளனர். இதனால், ரஷிய வீரர்களை தவறுதலாக எதிரிகள் என அவர்கள் நினைத்துள்ளனர். அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ரஷிய வீரர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    ரஷியாவுக்கு இந்த ஒரு விசயம் மட்டுமே முக்கிய சவால் என்றில்லாமல், உக்ரைனுக்கு வடகொரிய வீரர்களை அழைத்து வந்ததில் பல சவால்களை சந்தித்து வருகிறது. அதில், உத்தரவுகளை வீரர்கள் சரியாக புரிந்து கொள்ளாத இந்த விசயமும் அடங்கும்.

    • தென் கொரியாவை அதிகாரப்பூர்வமாக எதிரி நாடாக அறிவித்து அதனுடன்
    • தொடர்ச்சியாக வினோதமான சத்தங்களை வட கொரியா ஸ்பீக்கர்கள் ஒளிபரப்பை வருகிறது.

    தென் கொரியாவுடன் பகைமை பாராட்டி வரும் வட கொரியா அணு ஆயுத மிரட்டல், ஏவுகணை சோதனை என உலக நாடுகளை பதற்றத்திலேயே வைத்துள்ளது. சமீப காலமாக ரஷியவுடன் ராணுவ உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம், உக்ரைன் போருக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது என வட கொரியா தனது இருப்பை வெளிப்படுத்தி வருகிறது.

    சமீபத்தில் தென் கொரியாவை அதிகாரப்பூர்வமாக எதிரி நாடாக அறிவித்து அதனுடன் இருந்த அணைத்து எல்லை தொடர்பு சாலைகளைத் துண்டித்து அழித்தது. தென் கொரியாவுக்குள் தங்கள் நாட்டின் குப்பைகள் நிரம்பிய பலூன்களை அனுப்புவது என தொல்லை கொடுத்த வந்த வட கொரியா தற்போது தென் கொரியாவை சீண்ட நூதன வழியை கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறது.

     

    அதாவது, எல்லைப் பகுதியில் அதிக ஒலிகளை எழுப்பும் ஸ்பீக்கர்களை நிறுவி 24 மணி நேரமும், எல்லைக்கு அந்த புறம் இருக்கும் தென் கொரிய கிராமங்களில் உள்ள மக்களைப் பாடாய் படுத்தி வருகிறது. அமானுஷ்யமான, வினோத ஒலிகளை 24 மணி நேரமும் ஒலிக்கச் செய்வதால் அம்மக்களின் அன்றாட வாழ்வு சீர்குலைந்துள்ளது.

    குறிப்பாக எல்லையில் தென் கொரியாவுக்குள் உள்ள டாங்கன் என்ற கிராமம் இதனால் அதிகம் பாதிப்படைந்துள்ளது. கார் விபத்துகள் ஏற்படுவது போன்ற சத்தம், பேய் அலறுவது, உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது, ஓநாய்கள் ஊளையிடுதல், பீரங்கித் தாக்குதல் சத்தம் எனதொடர்ச்சியாக வினோதமான சத்தங்களை வட கொரியா ஸ்பீக்கர்கள் ஒளிபரப்பை வருகிறது.

     

    குண்டு ஒன்று தான் வீசவில்லை என்றாலும் அதற்க்கு ஈடாக இந்த சத்தங்கள் தங்களை பைத்தியமாக்குவதாகவும் இரவில் தூக்கமில்லை என்றும் அந்த கிராம மக்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

     

    கடந்த ஜூலை மாதம் முதல் 24 மணி நேரமும் இடைவிடாமல் இதுபோன்ற சத்தம் வந்துகொண்டிருப்பதாக அவர்கள் புலம்பித தவிக்கின்றனர். இந்த சத்தங்கள் [ NOISE BOMBING] தென் கொரியா மீதான வடகொரியாவின் உளவியல் தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. 

    • ரஷியா - வட கொரியா ராணுவ உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டுள்ளது.
    • புகைப்படங்களைச் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது

    சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடாக வட கொரியா உள்ளது. அதன் அதிபராக கடந்த 2011 முதல் கிம் ஜாங் உன் [40 வயது] செயல்பட்டு வருகிறார். ராணுவ கட்டமைப்புக்கு அதிகம் செலவு செய்யும் வட கொரியா கடந்த 2006 ஆம் ஆண்டு தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தி அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இணைந்தது.

    தென் கொரியா உடனான எல்லை பிரச்சனை, அந்நாட்டுக்கு உதவி செய்யும் அமெரிக்காவை எதிர்ப்பது என செயல்பட்டு வரும் வட கொரியா அவ்வப்போது அணு ஆயுதங்களை பயன்படுத்தப்போவதாக மிரட்டலும் விடுத்து வருகிறது. மேலும் சமீப காலமாக ரஷியாவுடன் நெருக்கம் காட்டும்வட கொரியா ராணுவ உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டுள்ளது.

    தென் கொரியா தாராளவாதத்தைப் பின்பற்றும் நாடாக உள்ள நிலையில் வட கொரியா கடுமையான சட்டங்களையும், அதிக சமூக கட்டுப்பாட்டையும் மக்கள் மீது கொண்ட நாடாக விளங்குகிறது. அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், வாழ்வாதாரம், சமூக நிகழ்வுகள் என என்ன நடக்கிறது என்று வெளியுலகுக்குத் தெரியாத அளவுக்கு அதிக தணிக்கை விதிமுறைகளும் வட கொரியாவில் உள்ளது.

    மக்கள் சுதந்திரமாக இல்லை என சர்வதேச சமூகத்தில் பொதுவான கண்ணோட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் வட கொரியாவில் இதுவரை வெளியுலகுக்குத் தெரியாத கட்டமைப்புகள் மற்றும் இடங்களின் புகைப்படங்களைச் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்களில் தென் கொரியாவிலிருந்த காணும் தூரத்தில் உள்ள Gijungdong கிராமம், Liaoning மாகாணத்தில் Dandong பகுதியிலிருந்து பார்க்கக்கூடிய தூரத்தில் உள்ள Sinuiju பகுதி உள்ளிட்ட பல பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 

     

     

     

     

     

     

    • அமெரிக்காவுக்கு வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் விடுத்து வருகிறது
    • இந்திய நேரப்படி இன்று மாலை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குகிறது

    உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்குகிறது. இந்நிலையில் தென் கொரியாவையும் அதற்கு உதவும் அமெரிக்காவையும் பரம எதிரியாக கருதும் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்து சர்வதேச அரங்கில் பீதியை கிளப்பியுள்ளது.

    சமீப காலங்களாகவே அமெரிக்காவுக்கு தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் விடுத்துவரும் வட கொரியா எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ரஷியாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு 12 ஆயிரம் வரையிலான வட கொரிய ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். தென் கொரியாவும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் இன்றைய தினம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னதாக வட கொரிய ராணுவம் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடல் நோக்கி ஏவி சோதனை செய்துள்ளது. இதை தென் கொரியாவும், ஜப்பானும் உறுதிப்படுத்தியுள்ளது.

     

    அந்த ஏவுகணைகள் சுமார் 400 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச அரசியல் களம் அமெரிக்க தேர்தலை நோக்கி திரும்பியிருக்க வடகொரியாவின் இந்த சோதனை உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    ×