என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து குவிப்பு வழக்கு"

    • கடலூர் கோர்ட்டு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
    • உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை:

    கருணாநிதி தலைமையில் கடந்த 1996-2001 மற்றும் 2006-2011-ம் ஆண்டுகளில் நடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் கோர்ட்டு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி வேல் முருகன் முன் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வழக்கில் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கையை மேற்கோள் காட்டி வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

    எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து கடலூர் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சரி என்றும் வாதிடப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல் முருகன், லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல் முருகன், அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    மேலும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து 6 மாதங்களில் விசாரணையை முடிக்கும் படி, கடலூர் சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டார்.

    • வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
    • ஆ.ராசா உள்பட 3 பேர் ஜனவரி 10-ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

    இதற்கிடையே, ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் உள்பட 16 பேர் மீது கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் தேதி அன்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    அதாவது, 1999-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி கூடுதலாக ரூ.27.92 கோடி அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.

    இதனடிப்படையில் ஆ.ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது. டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 2ஜி வழக்கில் கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. சோதனையின் போது வருமான வரி கணக்குகள், சொத்து ஆவணங்கள், நிதிநிலை அறிக்கைகள் மற்றும் நிலையான வைப்பு ரசீதுகள் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த ஆவணங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை தற்போது முடிவிற்கு வந்துள்ளது. 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுமார் 7 ஆண்டுகள் ஆன நிலையில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆ.ராசா உள்பட 3 பேர் ஜனவரி 10-ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

    • சுப்ரீம் கோர்ட்டுக்கு சமூக ஆர்வலர் 2-வது முறையாக கடிதம் அனுப்பியுள்ளார்.
    • ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    பெங்களூரு :

    சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வரும்போது, ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் நீக்கப்பட்டது.

    இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர். அவர்கள் தண்டனை காலத்தை அனுபவித்து விட்டு வெளியே சென்றுவிட்டனர். இந்த வழக்கின்போது, ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த பட்டு சேலைகள், சால்வைகள், 750 ஜோடி செருப்புகள் ஆகிய பொருட்களும் அடங்கும்.

    இதில் சேலைகள், சால்வைகள், செருப்புகள் ஆகிய 3 பொருட்களும் சேதம் அடையும் வகையானவை என்பதால் அவற்றை ஏலம் விட வேண்டும் என்று கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, சுப்ரீம் கோர்ட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அந்த பொருட்கள் இதுவரை ஏலம் விடப்படவில்லை. இந்த நிலையில் இப்போது அவர் 2-வது முறையாக இதே கோரிக்கையை அதாவது அந்த 3 பொருட்களையும் ஏலம் விடக்கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கூறுகையில், 'ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் சேலைகள், செருப்புகள், சால்வைகள் ஏலம் விடப்படும் வரை நான் சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பி கொண்டே இருப்பேன்' என்றார்.

    • வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    • குற்றம் செய்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. இவர் மீதும், இவரது மனைவி மணிமேகலை மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் இருவரும் குற்றம் செய்ததற்கான எந்த விதமான முகாந்திரமும் இல்லை என அறிவித்து இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.

    • ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 2015-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
    • பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துவருவதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஆ.ராசா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 2015-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    விசாரணைக்கு பின்பு ரூ.5.53 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஆ.ராசா மற்றும் அவரது நண்பர்களான கோவை ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் மீது சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி கே.ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆ.ராசா தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகினர்.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துவருவதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஆ.ராசா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

    பின்னர், வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 3 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
    • வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.

    பெங்களூரு:

    சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி அடைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிந்து 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில் சிறையில் இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோருக்கு தனி சமையலறை, சொகுசு படுக்கைகள், பார்வையாளர்கள் சந்திக்க சிறப்பு வசதி உட்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.

    அப்போது மத்திய சிறைப் பாதுகாப்புப் பணியில் இருந்த கர்நாடக மாநிலத் தொழில் பாதுகாப்புப் படையில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கஜராஜா, மத்திய சிறை உதவிக் கண்காணிப்பாளர் அனிதா மற்றும் தலைமைக் கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது தனித்தனியாக வழக்குத் தொடர கர்நாடக அரசு அனுமதி வழங்கியது.

    இதை தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 3 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.

    • விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்ளிட்ட 56 இடங்களில நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • 10 ஆயிரம் பக்கங்களை கொண்ட 800 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க.வைச் சேர்ந்த தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்ளிட்ட 56 இடங்களில நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக நேற்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.

    இதில் 10 ஆயிரம் பக்கங்களை கொண்ட 800 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த குற்றப்பத்திரிகையை நீதிபதி முழுமையாக படித்து முடித்த பின்னர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    • ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
    • தற்போது 11,344 பட்டு சேலைகள், 750 ஜோடி செருப்புகள், 250 சால்வைகள் இல்லை என்று கூறுகின்றனர்.

    பெங்களூரு :

    சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் அரசு வக்கீலாக கிரண் எஸ்.ஜவலி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5-ந் தேதி விசாரணையின் போது ஜெயலலிதாவின் வாரிசு ஜெ.தீபா என கோர்ட்டு உத்தரவிட்டு, சொத்துகளை ஒப்படைத்துள்ளதால், கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் பொருட்களையும், அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வக்கீல் கூறி இருந்தார். அப்போது இந்த வழக்கில் முறையாக ஆஜராகி வாதாட ஜெ.தீபா தரப்பில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அதே நேரத்தில் இந்த வழக்கை தொடர்ந்திருந்த நரசிம்மமூர்த்தி கூறியபடி ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள், சால்வைகள் இல்லை என்று நீதிபதி கூறி இருந்தார். இதையடுத்து, அரசு கருவூலத்தில் இருக்கும் பொருட்கள் குறித்து கருவூல துறையிடம் இருந்து ஆவணங்களை பெற்று கொடுப்பதாக நரசிம்மமூர்த்தி கூறினார்.

    இதையடுத்து, அன்றைய தினம் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 26-ந் தேதி (இன்று) ஒத்திவைத்திருந்தார். அதன்படி, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி வழக்கு விசாரணை பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சொத்து குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றிய போது, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது 11,344 பட்டு சேலைகள், 750 ஜோடி செருப்புகள், 250 சால்வைகள் இல்லை என்று கூறுகின்றனர்.

    இதுபற்றி கர்நாடக அதிகாரிகள், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் இருந்து ஆவணங்கள், தகவல்களை பெற்றுள்ளேன். நீதிபதி உத்தரவின்படி ஆவணங்கள், தகவல்களை கோர்ட்டில் அளிப்பேன். இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி ஒருவர் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கிறேன், என்றார்.

    • சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார்.
    • 28 வகையான பொருட்களை பெற்ற பாஸ்கரன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தாலும், சுப்ரீம் கோர்ட்டு அதை உறுதி செய்து தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து விடுதலை ஆகினர்.

    இந்த நிலையில் இந்த சொத்து குவிப்பு வழக்கில் 30 கிலோ தங்க, வைர நகைகள், புடவைகள், செருப்புகள் உள்பட 29 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி பெங்களூருவை சோ்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையின்போது, அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவளி நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கில் ஆஜராகி வந்தார்.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர், அந்த சிறப்பு கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்து, தாங்கள் வாரிசுகள் என்பதால் ஜெயலலிதாவின் பொருட்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிடக் கோரினர். இந்த மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த வழக்கு தொடர்பான பொருட்களில் கர்நாடக அரசிடம் தற்போது 30 கிலோ தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 28 வகையான பொருட்கள் குறித்த தகவலை சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிக்க வேண்டும் என்று வாய்மொழியாக நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே கடந்த 9-5-2023 அன்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்களை பெங்களூரு கோர்ட்டில் உடனடியாக ஒப்படைக்குமாறு அவர் கோரினார்.

    இந்த நிலையில் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி அதற்கு தபால் மூலம் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ''நீங்கள் கடந்த 9-5-2023 அன்று எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை.

    அதற்கு பதிலாக அந்த பொருட்கள் மதிப்பீட்டு பணிகளுக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட நபரான (நாமினி) பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக எங்களிடம் எதுவும் நிலுவையில் இல்லை''.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடிதத்தில் கூறப்பட்டுள்ள நபரான பாஸ்கரன் யார்? என்பது தெளிவாக கூறப்படவில்லை. ஏனென்றால், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் சகோதரியான ஸ்ரீதளா தேவியின் கணவரது பெயரும் பாஸ்கரன் (வயது 58). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 17-ந்தேதி மரணம் அடைந்தார்.

    இன்னொரு பாஸ்கரன், டி.டி.வி.தினகரனின் சகோதரர் ஆவார். ஆனால், இந்த இரு பாஸ்கரனிடமும் ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் ஒப்படைக்கப்படவில்லை. அப்படி என்றால், 28 வகையான பொருட்களை பெற்ற பாஸ்கரன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பாஸ்கரன் என்பவரிடம்தான் 28 வகையான பொருட்களும் ஒப்படைக்கப்பட்டதாக ஜெயலலிதா தரப்பு வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

    28 வகையான பொருட்கள் எவை?

    1.பட்டுப்புடவைகள்-11,344

    2.குளிர்சாதன எந்திரங்கள்-44

    3.தொலைபேசிகள்-33

    4.சூட்கேசுகள்-131

    5.கைக்கெடிகாரங்கள்-91

    6.சுவர்கெடிகாரங்கள்-27

    7.மின்விசிறிகள்-86

    8.அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள்- 146

    9.டீப்பாய்கள்-34

    10.மேஜைகள்-31

    11.மெத்தைகள்-24

    12.உடை அலங்கார டேபிள்கள்-9

    13.அலங்கார தொங்கும் மின்விளக்குகள்-81

    14.ஷோபா ஷெட்டுகள்-20

    15.செருப்புகள்-750 ஜோடிகள்

    16.உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள்-31

    17.மதுபானம் அருந்தும் கண்ணாடி டம்ளர்கள்-215

    18.இரும்பு பெட்டகங்கள்-3

    19.சால்வைகள்-250

    20.குளிர்பதன பெட்டிகள்-12

    21.டி.விக்கள்-10

    22.வி.சி.ஆர்.கள்-8

    23.வீடியோ கேமரா-1

    24.சி.டி.பிளேயர்கள்-4

    25.ஆடியோ பிளேயர்கள்- 2

    26. ரேடியோ பெட்டிகள்-24

    27.வீடியோ கேசட்டுகள்-1,040

    28. 700 கிலோ வெள்ளி பொருட்கள்.

    • வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டதாக வாதம்.

    விருதுநகர்:

    கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆஜரானார்.

    கடந்த டிசம்பர் 22ம் தேதியும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டது எனவும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும் அமைச்சர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஜூன் 27ம் தேதியும் விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த விருதுநகர் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு கடந்த டிசம்பர் மாதம் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்தது.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி அளித்த தீர்ப்பை படித்து விட்டு 3 நாட்கள் நான் தூங்கவில்லை.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அமைச்சர்களாக இருந்த பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    அ.தி.மு.க. ஆட்சியின்போது தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பான விசாரணை கீழ் கோர்ட்டுகளில் நடைபெற்று வந்தது.

    விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வந்த பொன்முடி மீதான வழக்கு விசாரணை ஐகோர்ட்டு நிர்வாக உத்தரவின்பேரில் வேலூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இருந்து கடந்த ஜூன் மாதம் பொன்முடியை விடுவித்து வேலூர் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதேபோன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு கடந்த டிசம்பர் மாதம் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்தது.

    இதற்கு எதிராக ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன் வந்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விளக்கம் அளிக்க அவர் உத்தரவிட்டார்.

    அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், இப்படி தாமாக முன்வந்து விசாரணை நடத்துவது தவறான முன்னுதாரணமாகி விடும். லஞ்ச ஒழிப்பு போலீசார் இதன் மூலம் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று வாதிட்டார்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடே சன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தவறு நடக்கும்போது கண்ணை முடிக்கொண்டு இருக்க முடியுமா? ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி அளித்த தீர்ப்பை படித்து விட்டு 3 நாட்கள் நான் தூங்கவில்லை. அமைச்சர்கள் விடுவிக்க கோரி மனு அளித்தபோது முதலில் எதிர்ப்பு தெரிவித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை அதிகாரி பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தீர்ப்புக்கு ஒரு வடிவத்தை வைத்துக்கொண்டு தேதியை மட்டும் மாற்றி தீர்ப்பு கூறியது போல தெரிகிறது. யார் அதிகாரத்துக்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப் போகச் செய்கிறார்கள்.

    சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதாலேயே தாமாக முன் வந்து விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்றம் என்பது குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது. கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் ஒரே மாதிரியாக உள்ளன. இதனை பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் கடமையில் இருந்து தவறியது போல் ஆகி விடும்.

    எனவே இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் 2 அமைச்சர்களும் உரிய பதில் அளிக்க உத்தரவிடுகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார். பொன்முடி வழக்கில் ஏற்கனவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விடக்கோரி மனு
    • முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    வழக்கு விசாரணை முடிவடைந்து, குற்றவாளிகள் தண்டனை அனுபவித்த நிலையில், அரசு வழக்கறிஞர் ஒருவரை நியமித்து சொத்துகள் ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அத்துடன் சொத்து குவிப்பு வழக்கில் என்னென்ன இணைக்கப்பட்டிருந்தன என்ற விவரங்கள் முழுவதையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என தமிழக லஞ்சத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில், தமிழக லஞ்சத்துறை அதிகாரிகள் சார்பில் ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பொருட்களை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளை அரசு வழக்கறிஞரிடம் இருந்து கேட்டறிந்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களின் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம், வைப்புநிதி உள்ளிட்ட விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.

    மனுதாக்கல் செய்திருந்த நபர், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சால்வை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஏலம் விட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி, சட்ட விரோதமாக சேர்த்த சொத்துகள் பட்டியலில் இல்லாததை ஏலம் விட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

    ஜெயலலிதாகவின் ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை சட்டவிரோதமாக சேர்த்த சொத்து பட்டியலில் இல்லை.

    ×