என் மலர்
நீங்கள் தேடியது "சுப்ரீம் கோர்ட்"
- ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை இருந்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.
- விசாரணை அமைப்புகளுக்கு மனச்சோர்வை ஏற்படுத்துவது போன்று மனுதாரரின் பொதுநல மனு உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த 22-ந்தேதி 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' பொறுப்பு ஏற்றது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பஹல்காம் தாக்குதல் குறித்து மத்திய அரசு விசாரித்து வரும் நிலையில் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டும். தற்போதைய நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை இருந்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.
பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க முடியாது. விசாரணை அமைப்புகளுக்கு மனச்சோர்வை ஏற்படுத்துவது போன்று மனுதாரரில் பொதுநல மனு உள்ளது" என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து, பொறுப்பற்ற பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் பதேஷ் சாஹூவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரை நேரடியாக சந்தித்து விளக்கமளிக்க தயார் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
- எதிர்மனுதாரராக புகார் அளித்த பெண் பத்திரிகையாளரையும் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
பிரபல நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இதைத்தொடர்ந்து எஸ்.வி. சேகர் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரை நேரடியாக சந்தித்து விளக்கமளிக்க தயார் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
இதையடுத்து எஸ்.வி.சேகரின் முறையீட்டை ஏற்று அவர் சரண் அடைவதற்கு அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தனது தரப்பு விளக்கமளித்து மன்னிப்பு கோர தயார் என எஸ்.வி.சேகர் கூறி உள்ளதால் சரணடைவதற்கான காலத்தை நீட்டுகிறோம் என்று தெரிவித்த நீதிபதிகள், எஸ்.வி.சேகர் சரணடைவதற்கான காலஅவகாசத்தை ஜூலை மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.
மேலும் எதிர்மனுதாரராக புகார் அளித்த பெண் பத்திரிகையாளரையும் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
- பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை சாடி இருந்தனர்.
- சுப்ரீம் கோர்ட்டே சட்டம் இயற்றுமானால் பாராளுமன்றத்தை மூடிவிடுங்கள் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் அது தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந் தேதி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
மேலும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட கவர்னருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய சுப்ரீம்கோர்ட்டு மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற இத்தீா்ப்பை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில் நீதித்துறை மீது துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கா் கடும் விமர்சனங்களை முன் வைத்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து இருந்தன.
இதற்கிடையே பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை சாடி இருந்தனர். சுப்ரீம் கோர்ட்டே சட்டங்களை இயற்ற வேண்டி இருந்தால் பாராளுமன்ற கட்டிடத்தை இழுத்து மூட வேண்டும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பாஜக எம்.பி.க்களின் கருத்துகளுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜே.பி. நட்டா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "நீதித்துறை மற்றும் தலைமை நீதிபதி குறித்து பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே , தினேஷ் சர்மாவின் கருத்துக்களுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அவர்களின் தனிப்பட்ட கருத்துகள். ஆனால் பாஜக அவற்றுடன் உடன்பட வில்லை அல்லது அத்தகைய கருத்துக்களை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. பாஜக அவற்றை முற்றிலுமாக நிராகரிக்கிறது.
பாஜக எப்போதும் நீதித்துறையை மதித்து அதன் உத்தரவுகளையும் பரிந்துரைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளது. ஏனெனில் சுப்ரீம்கோர்ட்டு உள்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் நமது ஜன நாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அரசியலமைப்பு பாதுகாப்பின் வலுவான தூண் என்று நாங்கள் நம்புகிறோம்.
இதுபோன்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் நான் அறிவுறுத்தி உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள் மத்தியில் ஆளும் தரப்பை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.
- முதல் நபராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை சாடினார்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வழங்கிய சில உத்தரவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை அதிருப்தியில் உள்ளாக்கி இருக்கிறது. இதில் முக்கியமாக, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது கவர்னர் முடிவு எடுக்க காலதாமதம் ஏற்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதேபோல், மத்திய அரசு நிறைவேற்றிய வக்பு திருத்த சட்டத்திலும் சர்ச்சைக்குரிய சில பிரிவுகளுக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் இடைக்கால தடை விதித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுகள் மத்தியில் ஆளும் தரப்பை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதில் முதல் நபராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கடுமையாக சாடினார். குறிப்பாக, ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியதை கடுமையாக விமர்சித்த அவர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூப்பர் பாராளுமன்றமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், ஜார்க்கண்டை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே எமேற்படி வழக்குகள் குறித்து எதுவும் தெரிவிக்காமல் மறைமுகமாக சுப்ரீம் கோர்ட்டை சாடியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டே சட்டம் இயற்றுமானால் பாராளுமன்றத்தை மூடி விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
- 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2011-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
- மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் வரை சரண்டைவதில் இருந்து விலக்கு
சென்னை:
கடந்த 1997-2000-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.55 கோடி பணம் பெற்றதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
அதேபோல, இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு துணையாக செயல்பட்ட ஹைதர் அலி என்பவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறை யீட்டு வழக்கும் 2017-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப் பட்டது
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டில், வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக நிதி பெற்றதாக ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு விசாரணை ஐகோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
அதேவேளையில், இந்த தண்டனையை எதிர்த்து மனுதாரர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்காக ஒரு மாத காலத்துக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் கடந்த மார்ச் 14-ந்தேதி உத்தரவிட்டது.
இதனையடுத்து எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சரண் அடைய விதித்திருந்த காலக்கெடுவும் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து தாங்கள் சரண் அடைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஒரு இடையீட்டு மனுவை ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோர் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்கள்.
அந்த மனுவானது சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதி கோட்டீஸ்வர் சிங் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் வரை சரண்டைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோர் சரணடைய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
- கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்தது.
- நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
புதுடெல்லி:
மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன.இதை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது. அதில் சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது.
மேற்கு வங்காள அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற் படுத்திய இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில்,காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயல்முறையை நீதித்துறை ரத்து செய்ததைத் தொடர்ந்து வேலை இழந்த ஆயிரக்கணக்கான தகுதிவாய்ந்த பள்ளி ஆசிரியர்கள் விஷயத்தில் கருணையுடன் தலையிடக் கோரி, இந்திய ஜனாதிபதி திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சேர்ப்பின் போது செய்யப்படும் எந்தவொரு குற்றமும் கண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும். இருப்பினும், நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை கறைபடிந்த ஆசிரியர்களுக்கு இணையாக நடத்துவது கடுமையான அநீதியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
- டாஸ்மாக் நிறுவன அமலாக்கத்துறை சோதனை வழக்குகளை முதலில் உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்கட்டும்.
டெல்லி:
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கிற்கு மத்திய அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதற்கிடையே அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் டாஸ்மாக் நிறுவன அமலாக்கத்துறை சோதனை வழக்குகளை முதலில் உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்கட்டும். அதன் அடிப்படையில் விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, அமலாக்கத்துறை சோதனை வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய மனுக்களை திரும்ப பெறுகிறோம் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து திரும்பப் பெற அனுமதி வழங்கப்பட்டது.
- மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
- வழக்கை திங்கட்கிழமை பட்டியலிட ஒப்புதல் அளித்தார்.TASMAC
புதுடெல்லி:
தமிழகத்தில் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வேறு ஒரு ஐகோர்ட்டுக்கு மாற்றக் கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் முறையிடப்பட்டு உள்ளது. தமிழக அரசு அரசியல் சாசன பிரிவு 139-ன் கீழ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் விவகாரத்தை எழுப்பியுள்ளது.
எனவே இந்த வழக்கை விரைந்து வரும் திங்கட்கிழமை பட்டியலிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, இந்த வழக்கை வருகிற திங்கட்கிழமை பட்டியலிட ஒப்புதல் அளித்தார்.
- வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.
- காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.
பாராளுமன்ற மக்களவையில் நேற்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மேல்சபையில் இன்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன.
வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
சி.ஏ.ஏ. 2019, தகவல் அறியும் உரிமை திருத்த சட்டம், தேர்தல் நடத்தை விதிகளில் கொண்டுவந்த திருத்தங்கள், வழிபாட்டு தலங்கள் திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர உள்ளது. இந்திய அரசியலமைப்பில் உள்ள கொள்கைகள், விதிகள் மற்றும் நடைமுறைகள் மீதான மோடி அரசாங்கத்தின் அனைத்து தாக்குதல்களையும் நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்க்கிறோம், தொடர்ந்து எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்தது.
- நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட் முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்துசெய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பளித்தது. அதில் சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக ஐகோர்ட் தெரிவித்து இருந்தது.
இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஐகோர்ட் நியாயமின்றி ஆசிரியா் மற்றும் அலுவலா் பணி நியமனங்களை ரத்துசெய்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்பீல் வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.
கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்து உத்தரவிட்டது. நியமனங்கள் ரத்து செய்யப்பட்டவர்கள் தங்கள் சம்பளம் மற்றும் பிற ஊதியங்களை திருப்பி தரவேண்டிய அவசியம் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளித்து அவர்கள் பணியில் நீடிப்பார்கள் என தெரிவித்தனர்.
மேலும், புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதேநேரத்தில் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும். மீண்டும் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும் கம்யூனிஸ்ட்டும் சதி செய்துள்ளன என தெரிவித்தார்.
- 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
- 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.
சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
இதற்கிடையே, மருத்துவ காரணங்களுக்காக தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என ஆசாராம் பாபு காந்திநகர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மனுவை காந்தி நகர் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
ஆசாராம் ஜாமின் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவருக்கு மார்ச் 31 வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், இடைக்கால ஜாமினை மேலும் 3 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜூன் 30-ம் தேதி வரை அவரது இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.
- நாட்டின் தீவிரமான பிரச்சனையில் முற்றிலும் உணர்வுப்பூர்வமற்று அலகாபாத் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
- சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் மனிதத்தன்மை அற்ற வகையில் அணுகப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான ஆகாஷ் அந்த சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து ஒரு கால்வாயில் அருகே இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சிலர் இவர்களை பார்த்ததும் அந்த சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதும் ஐ.பி.சி. பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, "சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும், அவரின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து அவரை இழுப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்று தெரிவித்து அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகளை மாற்றியமைத்தார்.
அதாவது குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐபிசி பிரிவு 354-பி (ஆடையைப் பிடித்து தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9/10 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் மாற்றி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
பெண்ணின் மார்பகத்தை பிடித்து அழுத்துவது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் கீழ் வராது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அலகாபாத் நீதிபதி வழங்கிய சர்ச்சை தீர்ப்பை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட், நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இதுகுறித்து கூறியதாவது:-
போதிய sensitivity இல்லாமல் எழுதப்பட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது.
நாட்டின் தீவிரமான பிரச்சனையில் முற்றிலும் உணர்வுப்பூர்வமற்று அலகாபாத் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.
இது மிகவும் முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய சம்பவம். உணர்ச்சியற்ற மனநிலையில் இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கி உள்ளதை இது காட்டுகிறது. தீர்ப்பை எழுதியவருக்கு உணர்ச்சியே இல்லை. இதை சொல்வதற்கு எங்களுக்கு வேதனையாக உள்ளது.
சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் மனிதத்தன்மை அற்ற வகையில் அணுகப்பட்டுள்ளது. அலகாபாத் நீதிபதி தனது தீர்ப்பில் கடினமான வார்த்தையை பயன்படுத்தியதற்கு வருந்துகிறோம் என்று கூறினர்.