என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் எண்"

    • ‘கூகுள்பே’ மூலம் மட்டும் தற்போது ஆதார் இணைக்கப்படாமல் மின் கட்டணம் செலுத்த முடிகிறது.
    • இணையதளம் வழியாக செலுத்த முடியாமல் மக்கள் தடுமாறுகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மின்சார கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவித்தது.

    மின்சார கட்டணத்தை ஆன்லைன் வழியாக கட்டும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. மின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று செலுத்துவோர் எண்ணிக்கை மிக மிக குறைவாகும்.

    மின் கட்டண உயர்வு பாதிப்பில் இருந்து விடுபடாத நிலையில் திடீரென ஆதார் எண்ணை இணைக்க கூறுவது மின் நுகர்வோரை மேலும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது. ஆதார் எண் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

    எந்த நோக்கத்திற்காக ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்ற விவரத்தை தெரிவிக்காமலும் கால அவகாசம் கொடுக்காமலும் திடீரென அறிவித்துள்ளது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

    'கூகுள்பே' மூலம் மட்டும் தற்போது ஆதார் இணைக்கப்படாமல் மின் கட்டணம் செலுத்த முடிகிறது. இணையதளம் வழியாக செலுத்த முடியாமல் மக்கள் தடுமாறுகிறார்கள்.

    கடைசி நேரத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகிற நிலையில் ஆதார் இணைக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற பயத்தில் பலர் இணைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கம்ப்யூட்டர் சேவை மையங்களை நாடி ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

    பாமர மக்களுக்கு உதவிட மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மின்சார அலுவலகங்களில் இதற்காக பிரத்தியேக கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.

    மின் நுகர்வோர் ஆதார் அட்டையை கொண்டு சென்றால் போதுமானது. அதனை எவ்வித கட்டணமும் இல்லாமல் இணைத்து கொடுக்கப்படுகிறது. வாடகை வீட்டுக்காரர்கள் வீட்டின் உரிமையாளரின் ஆதார் எண், செல்போன் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

    மின் இணைப்போடு ஆதார் இணைக்கும் போது அதில் பதிவாகி உள்ள மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் வரும். அதனால் ஆதாரில் குறிப்பிட்டுள்ள மொபைல் போன் எண்ணை கட்டாயம் மின்சார அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    சென்னையில் மின் இணைப்போடு ஆதார் இணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சென்னைக்கு வடக்கு மண்டலத்தில் 71, தெற்கு மண்டலத்தில் 54, மத்தி மண்டலத்தில் 71 ஆக மொத்தம் 185 மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் கூறும்போது, 'மின் இணைப்போடு ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும். ஆன்லைன் வழியாக இதனை மேற்கொள்ளலாம். மேலும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மின்சார அலுவலகத்திலும் கூடுதலாக ஒரு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.

    அதில் பொதுமக்களுக்கு ஆதாரை இணைக்க உதவி செய்யப்படும். ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் அவசியம். இந்த இரண்டும் இருந்தால் தான் இணைக்க முடியும்' என்றனர்.

    ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைப்பதற்கு 2 காரணங்கள் கூறப்படுகின்றன. 100 யூனிட்டிற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் ஏற்படும் இழப்பை ஆய்வு செய்ய இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றது.

    ஒரே பெயரில் எத்தனை இணைப்புகள் உள்ளன என்பதை கண்டுபிடிக்கவும், வரும் காலத்தில் மின்சார வாரியத்தை தனியாருக்கு கொடுப்பதற்கு ஏதுவாக எத்தனை இணைப்புகள் உள்ளன என்பதை துல்லியமாக ஆய்வு செய்ய ஆதார் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
    • ஆதார் இணைக்கும் வரை நுகர்வோர் ஆஃப்லைன், ஆன்லைன் முறைகள் மூலம் பணம் செலுத்த முடியாது.

    தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி அளவுக்கு மின் இணைப்புகள் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகள் 2 கோடியே 30 லட்சம் ஆகும். இது தவிர 10 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள், 1 லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளன.

    இந்த 4 வகையான மின் இணைப்புகளில் வீட்டு உபயோக மின் இணைப்புக்கும், விசைத்தறி மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    மானியம் பெறும் பயன்பட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று மின்வாரியம் கடந்த 16ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் மின் கட்டணத்தை செலுத்தும் பொதுமக்கள் பலர் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

    மின் கட்டணம் செலுத்தும் ஒவ்வொரு அலுவலகத்திலும் கூடுதலாக ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டு ஆதார் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலை கொடுத்தால் உடனே இணைத்து தருகிறார்கள்.

    இப்போது மின் வாரிய அலுவலகங்களில் கூட்டம் அதிகம் வருவதை கருத்தில் கொண்டு ஆதாரை இணைக்க மேலும் 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளில் இருந்து 2 நாட்களுக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்.

    இது தொடர்பாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் மலர்விழி அனைத்து கண்காணிப்பு பொறியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து அதை சரி பார்த்த பிறகே இணைய வழியிலும், நேரடியாகவும் மின் கட்டணத்தை வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்ட நவம்பர் 24 முதல் 30ம் தேதி வரை இறுதி நாள் உள்ள தாழ்வழுத்த பிரிவு மின் நுகர்வோர் அனைவருக்கும் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும்.

    உதாரணமாக ஒரு நுகர்வோருக்கு நவம்பர் 28ம் தேதி மின் கட்டணம் செலுத்துவதற்கு இறுதி நாள் என்றால் அவருக்கு நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும். ஆதாரை இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

    அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் தங்களது வீட்டு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனால் மின்வாரிய அலுவலகங்கள், இண்டெர் நெட் மையங்களில் வழக்கத்தை விட கூடுதலாக மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

    அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை பொது பயன்பாட்டு பகுதிகளில் உள்ள காமன் வராண்டா, மொட்டை மாடி, காம்பவுண்டு பகுதிகளுக்குள் உள்ள மின் விளக்குகளுக்காக தனியாக மீட்டர் வைத்திருந்தால் அது பொதுபயன்பாட்டில்தான் வரும். மானியம் இல்லாமல் முழு தொகையையும் செலுத்துவதால் அதற்கு ஆதாரை இணைக்க தேவை இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    • வாடகைக்கு வீடு வைத்திருப்பவர்கள் சர்வீஸ் கணக்கை வைத்து வாடகைதாரர் பெயரில் கூட ஆதாரை இணைக்கலாம்.
    • வீடுகளுக்கு ரீடிங் எடுக்க வருபவர்கள் வழக்கம் போல் வந்து கணக்கெடுப்பார்கள். ஆதாரை இணைத்த பிறகுதான் வருவார்கள் என்பது கிடையாது.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் மலர்விழி கூறியதாவது:-

    மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பலர் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. ஆதாரை இணைக்க 2 நிமிடம் நேரம் போதும். மின் கட்டணம் செலுத்தும் இடங்களில் இதற்காக தனியாக கூடுதல் பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    உரிமையாளர்தான் செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. யாரிடம் வேண்டுமானாலும் ஆதாரை கொடுத்து அனுப்பலாம். ஆதாரை கொண்டு வருபவர் தனது செல்போன் எண்ணை சொன்னாலும் அந்த ஓ.டி.பி.யை வைத்து பதிந்து விடலாம்.

    2 கோடியே 30 லட்சம் வீட்டு உபயோகிப்பாளர்களில் இதுவரை 5½ லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் வருகிறார்கள். அவர்களுக்கு எந்த சிக்கலும் கிடையாது. அதேபோல் பொது பயன்பாடு மீட்டர் 2 லட்சத்து 88 ஆயிரம் பேர் வைத்துள்ளனர். அவர்கள் முழு தொகையை கட்டணமாக செலுத்துவதால் அவர்களுக்கும் பிரச்சினை இல்லை.

    வீட்டு உபயோகத்தில் 2 கோடியே 30 லட்சம் மீட்டருக்கு 100 யூனிட் மானியம் வழங்கப்படுகிறது.

    இதில் ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்புதான் என்ற அடிப்படையில் ஆதாரை இணைக்க சொல்கிறோம். சப் மீட்டர் வைத்திருந்தால் அது எங்கள் கணக்கில் வராது. முழு ரீடிங்தான் கணக்கில் எடுக்கப்படும்.

    ஆனால் தனித்தனி வீடாக இருந்து தனித்தனி சர்வீஸ் வாங்கி இருந்தால் அந்த வீடுகளுக்கு 100 யூனிட் மானியம் கிடைக்கும்.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு பகுதிகளில் 'காமன்' வராண்டா, மொட்டை மாடி, காம்பவுண்டு பகுதிகளில் உள்ள மின் விளக்குகளுக்கு தனியாக மீட்டர் வைத்திருந்தால் அதற்கு மானியம் கிடையாது. முழு தொகையை தான் செலுத்த வேண்டும்.

    அதாவது முழு தொகையையும் செலுத்தும் அந்த மீட்டருக்கு ஆதார் எண்ணை பதிய வேண்டியதில்லை.

    ஒரு வீட்டில் ஒரே பெயரில் 2 மின் இணைப்பு இருந்தால் அதை ஆதார் மூலம் கண்டறிந்து ஒரு மீட்டராக கணக்கில் கொண்டு வருவோம். இல்லையென்றால் இன்னொரு மீட்டர் அவசியம் என்றால் அதற்கு பொது பயன்பாடு கட்டணமாக யூனிட் 8 ரூபாய் கணக்கில் வரும்.

    ஒருவருக்கு வெவ்வேறு முகவரியில் பல வீடுகள் இருந்தால் அதற்கு 100 யூனிட் மானியம் கிடைக்கும்.

    வாடகைக்கு வீடு வைத்திருப்பவர்கள் சர்வீஸ் கணக்கை வைத்து வாடகைதாரர் பெயரில் கூட ஆதாரை இணைக்கலாம். அதற்கு தடையேதும் கிடையாது.

    வீடுகளுக்கு ரீடிங் எடுக்க வருபவர்கள் வழக்கம் போல் வந்து கணக்கெடுப்பார்கள். ஆதாரை இணைத்த பிறகுதான் வருவார்கள் என்பது கிடையாது.

    மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதிக்கு பிறகும் பணம் கட்டாமல் ஆதாரை 2 நாளில் இணைக்காமல் இருந்தால் மின் இணைப்பு வழக்கம் போல் துண்டிக்கப்படும். 100 யூனிட் மானியம் பெறுபவர்கள் தகுதியான பயனாளிகள் தானா? என்பதை கண்டறியவும் ஆதார் இணைப்பு அவசியமாகிறது.

    எனவே பொது பயன்பாட்டில் முழு தொகையையும் செலுத்துபவர்கள், வணிக பயன்பாட்டில் மின் கட்டணம் செலுத்துபவர்கள் ஆதாரை இணைக்க வேண்டியது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • வரும் 28-ம் தேதி முதல் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    வரும் 28-ம் தேதி முதல் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.

    பண்டிகை தினங்கள் தவிர, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

    • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இணைய தளம் மூலமாக மிகவும் எளிதாக செய்து முடித்துவிட முடிகிறது.
    • ஆதார் எண்ணை இணைத்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தியும் வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்த நிலையில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்கிற குறுஞ்செய்தி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கிராமப்புறங்கள் தொடங்கி நகர்ப்புறப் பகுதிகள் வரையில் உள்ள இண்டர் நெட் மையங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை செய்து கொடுக்கிறார்கள். இதற்காக மக்கள் இண்டர் நெட் மையங்களை தேடிச்சென்று இணைத்து வருகிறார்கள்.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இணைய தளம் மூலமாக மிகவும் எளிதாக செய்து முடித்து விட முடிகிறது. இப்படி ஆதார் எண்ணை இணைத்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தியும் வருகிறது.

    இந்த பணியை மேற்கொள்ள மக்கள் தங்களது பகுதியை சேர்ந்த இணையதள மையங்களையே நாடி வருகிறார்கள். இணைக்கும் பணி எளிதாக இருந்த போதிலும் மக்கள் அதனை சிரமமாகவே கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழக மின்சார வாரியம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (28-ந்தேதி) முதல் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும், இந்த முகாம்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறை படியே மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை முகாம் நடைபெறும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நாளை முதல் மின்வாரிய அலுவலகங்களில் ஆதாரை இணைக்க மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் மூலம் ஆதாரை இணைக்க 34 நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது.

    இதற்கிடையே மின் இணைப்புடன் ஆதாரை 5½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்டுக்கு ரூ.6000, மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
    • பி.எம். கிஷான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    பெருமாநல்லூர் :

    தமிழ்நாட்டில் "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டமானது 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 விதம் ஆண்டுக்கு ரூ.6000, மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பண பரிமாற்றம் அந்தந்த பகுதியின் ஒன்றியங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் 13-வது தவணையாக அதாவது 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத் தொகை பி.எம். கிஷான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது ஊத்துக்குளி வட்டார விவசாயிகள் பொது சேவை மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ தங்கள் ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறையில் பதிவு செய்து கொள்ளலாம். ஆகவே தங்களது அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பி.எம். கிஷான் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியின் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம்.கிஷான் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஊத்துக்குளி வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் சசிரேகா தெரிவித்துள்ளார்.

    • ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வாக்காளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
    • சென்னை, கோவை போன்ற மாநகரப் பகுதிகளில் 20 மற்றும் 40 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    கோவை:

    நாடு முழுவதும் வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    மாவட்டத் தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

    கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வாக்காளர்களிடையே போதிய ஆர்வம் இல்லை. குறிப்பாக மாநகரம், நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள் ஆதார் எண் இணைப்பதில் அக்கறை காட்டவில்லை என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்டத்தேர்தல் பிரிவு அதிகாரி கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், 12 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே (40 சதவீதம்) ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆதார் எண் இணைப்பதன் மூலம் தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற முடியும்.

    ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வாக்காளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி போன்ற கிராமங்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    அதேவேளையில் சென்னை, கோவை போன்ற மாநகரப் பகுதிகளில் 20 மற்றும் 40 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    அனைத்து வாக்காளர்களும் ஆதார்எண்ணை இணைத்து பயன்பெற வேண்டும். எனவே, வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கு வரும் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் படிவத்தை நிரப்பிக் கொடுத்து ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ள வேண்டும்.

    தவிர தேர்தல் ஆணையத்தின் nvsp இணையதளம் வழியாகவும், வோட்டர்ஸ் ஹெல்ப் லைன் என்ற கைப்பேசி செயலி வழியாகவும் ஆதார் எண்ணை இணைத்துகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறு-குறு நிறுவனங்களின் உற்பத்தியாளர்களும் மின் கட்டண உயர்வால் தொழில் செய்ய முடியாத அளவில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • மின் அழுத்த நிறுவனங்களுக்கு 0 முதல் 50 கிலோவாட் உபயோகப்படுத்தும் தொழிற்சாலைக்கு ரூ.35 லிருந்து ரூ. 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    மின்சார பயனீட்டாளர்களை ஆதார் அட்டையுடன் இணைக்க சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இவர்களை ஆதார் எண்ணுடன் இணைத்து படிப்படியாக 100 யூனிட் இலவச மின்சார சலுகையை பறிப்பதே ஒன்றிய அரசின் நோக்கமாகும். இதனை தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த முன்வந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆதார் எண்ணுடன் இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சார சலுகை பறிக்கப்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ள நிலையில்-ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

    இதனால் பொதுமக்கள் மத்தியிலும் குறிப்பாக, வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

    மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வால் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மின் கட்டண உயர்வோடு, பொதுப் பயன்பாட்டிற்கான கட்டணமும் கூடுதலாக செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் படிக்கட்டு மின் விளக்குகள், மோட்டார், லிப்ட் ஆகியவற்றிக்கான மின்கட்டணம் இதுவரையில் 1-ஏ என்ற அடிப்படையில் மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 1-டி-யாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் வணிக பயன்பாட்டிற்குரிய கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ. 8 கட்டணமும், நிலையான கட்டணம் ரூ. 200ம் வசூலிக்கப்படுகிறது.

    இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு உபயோக மின் கட்டணத்துடன், பொதுப் பயன்பாட்டிற்கான கட்டணத்தையும் கூடுதலாக செலுத்த வேண்டிய இரட்டைச் சுமை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மாத வருமானத்தில் வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் மின் கட்டணத்திற்கே என்று பெரும் தொகை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    காலங்காலமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது பயன்பாட்டுக்கான மின் இணைப்பை தற்போது வணிக பயன்பாடு கட்டணமாக மாற்றியுள்ளது முறையற்றதாகும். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருவதால் இதில் வணிக பயன்பாடு எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்து பொதுமக்களும், குடியிருப்பு சங்கங்களும் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

    சிறு-குறு நிறுவனங்களின் உற்பத்தியாளர்களும் மின் கட்டண உயர்வால் தொழில் செய்ய முடியாத அளவில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நிரந்தர கட்டணம் (பிக்சட் சார்ஜஸ்) என்பது 4 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. அது தவிர குறைந்த மின் அழுத்த நிறுவனங்களுக்கு 0 முதல் 50 கிலோவாட் உபயோகப்படுத்தும் தொழிற்சாலைக்கு ரூ.35 லிருந்து ரூ. 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    50 முதல் 112 கிலோவாட் வரை உபயோகப்படுத்தும் தொழிற்சாலைக்கு ரூ. 300 என்றும், 112 கிலோ வாட்டுக்கு மேல் எச்.டி. தொழிற்சாலைகளுக்கு ரூ.35லிருந்து ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் பீக் ஹவர் சார்ஜஸ் மூலம் 15 சதவீதம் வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

    மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. உயர்வு, கொரோனா தாக்கம் ஆகியவற்றிலிருந்து மீள முடியாத சிறு-குறு நிறுவனங்கள் தற்போது மின் கட்டண உயர்வால் தொழில் நடத்த முடியாமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயமும் நேர்ந்துள்ளது.

    எனவே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்பதை கைவிடவும், தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்திட வேண்டுமெனவும், அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த மின் விளக்குகள், மோட்டார், லிப்ட் ஆகியவற்றிற்கு 1-ஏ என்ற அடிப்படையிலேயே கட்டண விகிதம் வசூலிக்க வேண்டுமெனவும், சிறு-குறு நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வையும், பிக்சட் சார்ஜ் மற்றும் பீக் ஹவர் கட்டணத்தையும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த மின் அலுவலகத்தில் நடைபெறும்.
    • தமிழக அரசு ஆதார் எண் இணைக்கும் தேதியை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.

    பெருமாநல்லூர் :

    தமிழக மின் வாரியம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் மற்றும் ஊத்துக்குளி ஒன்றியங்களில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.

    இம்முகாம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த மின் அலுவலகத்தில் நடைபெறும். தற்போது தமிழக அரசு ஆதார் எண் இணைக்கும் தேதியை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 15-ந் தேதி முதல் இதுவரை ஆன்லைனிலும், சிறப்பு முகாமிலும் 20 லட்சம் பேர் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளனர்.
    • மின் கட்டண வசூல் மையங்களில் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்பு தாரர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 2.34 கோடி வீடுகள், 22.87 லட்சம் விவசாய பம்பு செட்டுகள், 9.75 லட்சம் குடிசை வீடுகள், 1.65 லட்சம் விசைத்தறி ஆகிய நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பொதுமக்கள் சிரமத்தை போக்க மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் 2811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்படைந்துள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவு குவிந்து வருகிறார்கள்.

    சென்னையில் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், வடபழனி என பல்வேறு பகுதிகளில் உள்ள மின் கட்டண வசூல் மையங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கவுண்டர்களில் வரிசையில் நின்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தனர்.

    தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர். கடந்த 15-ந் தேதி முதல் இதுவரை ஆன்லைனிலும், சிறப்பு முகாமிலும் 20 லட்சம் பேர் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளனர்.

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம் தொடங்கிய முதல் நாளான நேற்று பல அலுவலகங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சென்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர்.

    மற்ற அலுவலகங்களில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். தமிழகம் முழுவதுமே நேற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.

    மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பொதுமக்கள் மின் கட்டண அட்டை, ஆதார் அட்டை, ஓ.டி.பி. வருவதற்கான செல்போன் ஆகியவற்றை கையோடு கொண்டு வர வேண்டும். சிலர் வீடுகளில் மற்றவர்கள் பயன்படுத்தும் செல்போன் நம்பரை கொடுத்து ஓ.டி.பி.-க்காக அவர்களிடம் போன் செய்து கேட்டு சொல்வதால் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.

    ஓ.டி.பி. அனுப்ப பயன்படுத்தும் செல்போன்களை முகாமுக்கு எடுத்து வந்தால் தேவையற்ற தாமதத்தை தவிர்க்க முடியும்.

    மின் கட்டண வசூல் மையங்களில் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பு முகாம்களில் தற்போது கூடுதல் கவுண்டர்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக சிறப்பு முகாம்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இன்றும் அனைத்து அலுவலகங்களிலும் ஏராளமானோர் திரண்டு நீண்ட வரிசையில் நின்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

    • வங்கிக்கு சென்று ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும்.
    • ஆதார் எண் விவரங்களை கேட்கவோ, ஆதார் நகலை பெறவோ கூடாது.

    ரேஷன் அட்டைதாரர்களில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிய வங்கிக் கணக்கை தொடங்க தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதில் ரேசன் அட்டை தாரர்களிடம் ஆதார் எண்ணை இணைக்க சொன்னால் மட்டும் போதும் என்று அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது

    இந்த நிலையில் இன்று உணவுத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்கள், புதிய வங்கி கணக்கு தொடங்க அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை நியாய விலைக் கடையில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    அதே சமயம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வங்கிக் கணக்கு உள்ளது என்றால், அந்த வங்கிக்கு சென்று அவர்களது ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இல்லையென்றால், அருகில் உள்ள கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அதை ஆதார் எண்ணுடன் இணைத்து, அந்த விவரங்களை அவரவர் ரேஷன் கடைகளில் தெரிவிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டு கேட்கவோ, ஆதார் நகலை பெறவோ கூடாது என சார் நிலை அலுவலர்களை அறிவுறுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வங்கிக் கணக்குகளை பெறுவது தொடர்பாக வெளியிடப்பட்ட கடிதத்திற்கு மாற்றாக இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் எனவும் உணவுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இந்த மாதம் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
    • ஆதார் எண் நகல், அதில் உள்ள செல்போன் எண் கொண்ட போனை எடுத்து சென்றால் போதுமானது.

    சென்னை:

    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்கும் பணி கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது.

    வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள் மற்றும் விசைத்தறி பயன்பாட்டாளர்கள் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது.

    இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இந்த மாதம் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மின் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் நேரில் சென்று ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

    ஆதார் எண் நகல், அதில் உள்ள செல்போன் எண் கொண்ட போனை எடுத்து சென்றால் போதுமானது. மின்சார அலுவலகங்களில் இதற்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று வரை 54 லட்சத்து 55 ஆயிரம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2811 சிறப்பு கவுண்டர்கள் மூலம் 83 ஆயிரமும், ஆன்லைன் வழியாக 1.55 லட்சமும் இணைக்கப்பட்டுள்ளன.

    தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரே வாரத்தில் 54 லட்சம் மின் இணைப்புகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளன.

    ×