என் மலர்
நீங்கள் தேடியது "கொடைக்கானல்"
- 5 பேர் சிவராஜை சரமாரியாக தாக்கி மது பாட்டிலை உடைத்து குத்தினர்.
- டீசல் ஊற்றி எரித்து 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு தப்பிச் சென்றனர்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கால் நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 60). இவர் பெரும்பள்ளம் பகுதியில் சொந்தமாக தங்கும் விடுதி வைத்து நடத்தி வந்தார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.
மது பழக்கத்துக்கு அடிமையான சிவராஜை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மதுரை அழகர் கோவில் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். 2 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவராஜை அவரது சகோதரி சாந்தி அங்கிருந்து கொடைக்கானலுக்கு அழைத்து வந்தார்.
அதன் பின் சிவராஜ் வீட்டுக்கு செல்லாமல் தனது விடுதி அறையிலேயே தங்கி இருந்தார். இந்நிலையில் சிவராஜூக்கும் மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த மதுரை தத்தனேரியைச் சேர்ந்த மணிகண்டன் (29), அருண், ஜோசப், சந்தோஷ், நாகசரத் ஆகியோருக்கும் இடையே தொடர்ந்து நட்பு ஏற்பட்டது.
அவர்கள் செல்போனில் அடிக்கடி பேசி வந்த நிலையில் சிவராஜின் விடுதிக்கு கடந்த வாரம் வந்துள்ளனர். மறு வாழ்வு மையத்தில் இருந்து போதையில் இருந்து மீண்ட அவர்கள் மீண்டும் ஒன்றாக மது குடித்ததாக தெரிகிறது.
பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. போதை தலைக்கேறிய நிலையில் சிவராஜிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் ஆத்திரமடைந்த அவர்கள் 5 பேரும் சிவராஜை சரமாரியாக தாக்கியதுடன் மது பாட்டிலை உடைத்து குத்தினர்.
படுகாயமடைந்த சிவராஜை அருகில் இருந்த பயர் கேம்ப்பில் வைத்து டீசல் ஊற்றி எரித்தனர். பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை சுமார் 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு அனைவரும் தப்பிச் சென்றனர்.
இதனிடையே சிவராஜ் மாயமானது குறித்து அவரது சகோதரி சாந்தி கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், அவருடன் தங்கி இருந்த 4 பேர் மாயமானதை அறிந்த போலீசார் அவர்களின் விபரத்தைக் கேட்டனர்.
மேலும் சிவராஜ் தங்கி இருந்த அறையில் ரத்தக்கறை இருந்ததால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடலை தேடிய போது பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலை மீட்டனர். அந்த உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விடுதியில் இருந்து தப்பிச் சென்ற மணிகண்டன் தாங்கள் சிவராஜை தாக்கி கொலை செய்தது குறித்து மறுவாழ்வு மைய நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மணிகண்டனை அவர்கள் கைது செய்தனர். கொடைக்கானல் போலீசாரும் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர். குடிபோதையில் இந்த கொலை நடந்ததா? அல்லது விடுதியை அபகரிக்கும் நோக்கில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உடல் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மறு வாழ்வு மையத்தில் ஏற்பட்ட பழக்கம் கொலையில் முடிந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும்.
- அரசு பேருந்து, ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என நீதிபதி.
இதேபோல், கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.
வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். அரசு பேருந்து, ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. மின்சார வாகனங்ளுக்கு இ-பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
ஊட்டி, கொடைக்கானலுக்கான கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
- கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. கொடைக்கானலில் வெயில் அதிகரித்த நிலையில் நேற்று அதிகாலையில் சாரலாக தொடங்கிய மழை பின்னர் கனமழையாக பெய்தது.
தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள் சிரமமடைந்தனர். பகல் பொழுதிலேயே கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேல்மலை பகுதியில் பெய்த மழை சாகுபடி பணிக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வந்தது. இதனை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தற்போது பெய்துள்ள மழை காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவித்தனர். கோடைகால சீசன் தொடங்க உள்ள நிலையில் மழைப்பொழிவு குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இருந்தபோதும் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் 20, காமாட்சிபுரம் 13.2, நிலக்கோட்டை தாலுகா 17, நிலக்கோட்டை 16.20, சத்திரப்பட்டி 7.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 8.4, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 8.2, பழனி 7, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 13, பிரையண்ட் பூங்கா 14 என மாவட்டம் முழுவதும் 124.20 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
- கொடைக்கானல் நகர் பகுதிகளில் வந்து இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதங்களில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொடைக்கானலுக்கு வரும் இவர்கள் இங்கேயே தங்கி இருந்து தங்கள் மத வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
மேலும் இவர்களுக்கு போதை காளான், கஞ்சா போன்றவற்றை வழங்குவதற்காக சிலர் உதவி செய்து வருவது கடந்த காலங்களில் நடந்து வந்தது. எனவே அது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் வட்டக்கானல் பகுதி நுழைவுச்சாலையில் கொடைக்கானல் போலீசார் சோதனை சாவடி அமைத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள தங்கும் விடுதி மற்றும் கடை உரிமையாளர்களை அழைத்து கொடைக்கானல் டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது இஸ்ரேல் நாட்டினர் இங்கு வரும் சூழலில் அவர்களை கண்காணித்து குற்றச்செயல்களில் ஈடுபட்டாலோ, சந்தேகத்திற்கிடமான நபர்கள் தென்பட்டாலோ அது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் போலீசார் அவர்களின் நடமாட்டத்தை சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். தற்போது கொடைக்கானல் நகர் பகுதிகளில் வந்து இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள்தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
- போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் போலீசார் பல வழக்குகள் பதிவு செய்தும் இதுவரை இந்த கலாச்சாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை.
- காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலேயே பயன்படுத்துகின்றனர்.
கொடைக்கானல்:
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்காக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருபுறம் இருந்தாலும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதற்காக சில இளைஞர்கள் வருவதும் வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக கொடைக்கானலில் இயற்கையாக இருக்கக்கூடிய போதைக் காளான் என்ற போதை பொருள் புல்வெளிகளிலும், காடுகளிலும் வளர்ந்து வருகிறது. பல வகையான காளான்கள் கொடைக்கானலில் விளைகிறது. கொடைக்கானலில் மட்டும் இதுவரை 400 வகைகளுக்கு மேலாக காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் போதைக்காளானும் ஒரு வகையாகும். இவை மட்டுமல்லாது உணவுக்காக எடுத்துக் கொள்ளக்கூடிய காளான் வகைகள் மற்றும் விஷத்தன்மை உடைய காளான்களும் இங்கு இயற்கையாகவே கிடைக்கிறது.
போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் போலீசார் பல வழக்குகள் பதிவு செய்தும் இதுவரை இந்த கலாச்சாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை. இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய இளைஞர்கள் மத்தியில் போதை காளான் பிரபலமடைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் இளைஞர்கள் பலர் வனப்பகுதிகளிலும், புல்வெளிகள் நிறைந்த பகுதிகளிலும் போதை காளான்களை தேடி சென்று அதனை பறிப்பது போன்று வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
அவ்வாறு பறிக்கப்படும் காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலேயே அவர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் இதுபோன்ற வீடியோக்கள் பல இளைஞர்களால் கவரப்பட்டு வருகிறது. இதற்கு சமூக வலைதள பக்கங்களும் உதவியாக உள்ளது.
இதனை சைபர் கிரைம் போலீசார் முழுவதுமாக கண்காணிக்க வேண்டும். தற்போது தொடர் விடுமுறையால் இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். இவர்களிடம் போதைக்காளான் குறித்த தகவல் வந்தால் அவர்களும் இதற்கு அடிமையாகும் நிலை ஏற்படும். எனவே போதைக் காளான் கலாச்சாரத்தை ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குறிஞ்சிச்செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக வளரும் ஒரு செடியாகும்.
- கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் அரியவகை மலரான 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் பூப்பது அபூர்வ நிகழ்வாக உள்ளது. குறிஞ்சியில் கல் குறிஞ்சி, சிறு குறிஞ்சி, நெடுங்குறிஞ்சி, நீலக்குறிஞ்சி எனப்பல வகைகள் உண்டு. இவற்றில் நீலக்குறிஞ்சி மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலைப்பகுதிகளில் பூக்கும் மலர் ஆகும்.
குறிஞ்சிச்செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக்குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது.
30-க்கும் மேற்பட்ட இவ்வகை மலர்கள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன. பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் "குறிஞ்சி" திணையாகக் குறிக்கப்படுகின்றன. இதன்மூலம் தமிழர்களின் வாழ்வியல் முறை நிலத்தை ஒட்டியே இருந்தது என்பது உறுதியாகும்.
கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, 12 வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும். இதற்கு ஏற்றத் தட்பவெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரையிலும் வளரும்.
1994-ஆம் ஆண்டில் பூத்த இச்செடி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலும் கேரளாவிலும் 2006-ஆம் ஆண்டில் பூத்தது. அதன்பிறகு 2018-ம் ஆண்டில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கிய நிலையில் தற்போது மற்றொரு வகையான குறிஞ்சி மலர்கள் 2023-ம் ஆண்டில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் பூத்து குலுங்கி வருகிறது.
மணி போன்ற வடிவம் கொண்ட குறிஞ்சி மலர்கள் மலைச் சரிவுகளில் பூத்துக்குலுங்கி மலைப் பகுதிகளுக்குப் புதிய வண்ணங்களைத் தீட்டி வருகின்றன.
இயற்கையாக வளரும் இவ்வகை செடிகளை பறித்து தனியார் தோட்டங்களிலும் சிலர் வளர்த்து வருகின்றனர். தற்போது அவ்வகை செடிகளில் பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது. இதனை கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
- இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் தற்போது இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
- பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
கொடைக்கானல்:
இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் தற்போது இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகளின் வருகை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. வருகை தரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, பில்லர் ராக் உள்ளிட்ட இடங்களை கண்டு களிக்கின்றனர்.
இந்நிலையில் பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவை குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மட்டும் பூத்துக்குலுங்கி தானாக உதிர்ந்து விழுகின்றன, இந்த வகை மலர்களில் இருந்து தேன்சிட்டு குருவிகளும், தேனீக்களும் தேன் எடுக்கும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த செர்ரி மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
- கோக்கர்ஸ் வாக் பகுதியில் உள்ள மலை முகடுகளில் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் திடீரென கடும் பனிமூட்டம் நிலவியது.
- வானம் முழுவதும் கீழே இறங்கி வந்தது போல வெண்நுரை போன்ற ஒரு அற்புதமான நிகழ்வு நிகழ்ந்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் தற்போது கடும் உறைபனி நிலவி வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. மாலை நேரங்களில் மீண்டும் கடும் பனி நிலவி வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கள் அறைகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கோக்கர்ஸ் வாக் பகுதியில் உள்ள மலை முகடுகளில் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் திடீரென கடும் பனிமூட்டம் நிலவியது. வானம் முழுவதும் கீழே இறங்கி வந்தது போல வெண்நுரை போன்ற ஒரு அற்புதமான நிகழ்வு நிகழ்ந்தது.
இந்த அற்புதமான காட்சி பனி அதிகமாக உள்ள நிலையில் பனிக்கடலை நேரில் பார்த்தது போல் இருந்ததாக சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். வெளிநாட்டில் உள்ளது போன்ற ஒரு நிகழ்வை கண் முன் நிறுத்தியதாகவும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனை தங்கள் செல்போனிலும் படம் பிடித்து மகிழ்ந்தனர். கோக்கர்ஸ் வாக் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் இருந்த இந்த காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
இதேபோல் கொடை க்கானலில் தற்போது நிலவும் சீதோசன நிலை சுற்றுலா இடங்களை காண ரம்மியமாக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
- சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக உள்ள பிரையண்ட் பூங்காவில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
- பிரையண்ட் பூங்காவில் தற்போது சுற்றுலா பயணிகளிடம் ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் பகல் நேரங்களில் வெயிலும் மாலை நேரங்களில் கடும் குளிரும் நிலவி வருகிறது. மேலும் அதிகாலை வேளையில் உறைபனி காணப்படுகிறது.
நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை நன்கு பெய்ததால் தாமதமாக உறைபனி சீசன் தொடங்கியது. பகலில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியஸ், வெப்ப நிலையும், இரவில் குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் காணப்படுகிறது. இதனால் நகரின் நீர்பிடிப்பு பகுதி தாழ்வான பகுதிகளில் உறைபனி காணப்படுகிறது.
அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, ரோஜா பூங்கா உள்ளிட்ட நகரின் உயரமான பகுதிகளிலும் வெண்போர்வை போர்த்தியதுபோல உறைபனி காணப்படுகிறது.
சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக உள்ள பிரையண்ட் பூங்காவிலும் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இங்கு நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகள் தற்போது கருகி வருகிறது. தொடர்ந்து தற்போது நடவு செய்யப்பட்ட நாற்றுக்கள் மட்டுமே உள்ளது.
கொடைக்கானலில் இடைவிடாது கொட்டி வரும் குளிர் காரணமாக சொட்டர், கம்பளி ஆடைகளை அணியாமல் யாரும் தெருவில் நடமாட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் வறண்ட வானிலை நீடிக்கும் என்பதால் கொடைக்கானலில் மேலும் சில நாட்கள் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரையண்ட் பூங்காவில் தற்போது சுற்றுலாப் பயணிகளிடம் ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகள் காண்பதற்கு மலர்களே இல்லாததால் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிப்படை வசதியான கழிப்பறை வசதி, முறையான பராமரிப்பு இல்லாத நிலையில் கட்டணம் வசூலிப்பதை அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
எனவே மலர்கள் இன்றி இருக்கும் பனிக்காலத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பனிமூட்டத்துக்கிடையே பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர்.
- கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த 15 நாட்களாக கடும் குளிருடன் உறைபனி பொதுமக்களை வாட்டி எடுத்தது. கொடைக்கானல் நகர் மற்றும் மலைப்பகுதி கிராமங்களில் கடும் உறைபனி நிலவியதால் பொதுமக்களின் அன்றாடப்பணிகள் பாதிப்படைந்தது.
அதிகாலை நேரங்களில் விவசாய பணிகளுக்கு செல்ல முடியாத விவசாயிகள் கடுமையான இன்னலுக்கு ஆளாகி வந்தனர். மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் அறைகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. ஏரிச்சாலை பகுதியில் கடும் உறைபனி நிலவியதால் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. முழுமையான பனிமூட்டம் நிலவியது.
இதன் காரணமாக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மாலை வேளையில் திடீர் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. விட்டு விட்டு பெய்த சாரல் மழை இரவு 12 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக உறைபனி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்னும் ஓரிரு நாட்கள் மழை தொடர்ந்தால் பனிக்காலம் குறைந்து இதமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்றும் காலையில் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் காலை நேரங்களில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர்.
பனிமூட்டத்துக்கிடையே பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர். பனிக்காலம் ஓரளவு குறைந்தாலும் கடும் பனிமூட்டமும், சாரல் மழையும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது.
இருந்தபோதும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
- மலைப்பகுதிகளில் மட்டுமின்றி நகர்ப்பகுதிகளிலும் பனி மூட்டம் மற்றும் மேக மூட்டம் நிலவுகிறது.
- கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் விடுதிகளிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல்:
தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வரும் நிலையில் கொடைக்கானலில் கடும் பனி மூட்டத்துடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மலைப்பகுதிகளில் மட்டுமின்றி நகர்ப்பகுதிகளிலும் பனி மூட்டம் மற்றும் மேக மூட்டம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இரவு, பகல் என 24 மணி நேரமும் கொடைக்கானலில் தற்போது ஒரே சீதோசனம் நிலவி வருகிறது. தெருக்கள் மற்றும் சாலைகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எதிரில் வருபவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்கவும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்யும் மழை காலையிலும் தொடர்வதால் பள்ளி மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்கள் பின்னர் ஏமாற்றத்துடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.
கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் விடுதிகளிலேய முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் இதுபோன்ற ஒரு சீதோசனம் கொடைக்கானலில் காணப்படுவது அபூர்வமான நிகழ்வாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகளும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
- சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக ஜிகரெண்டா மலர்கள் பூத்து குலுங்குகிறது.
கொடைக்கானல்:
சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலின் இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானலில் கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை புன்னகையோடு வரவேற்கும் விதமாகவும் மலைச்சாலைகளின் இருபுறமும் பூத்துகுலுங்கும் ஜிகரெண்டா மலர்கள் வெகுவாக கவர்ந்து வருகிறது.
கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு மற்றும் பழனி செல்லக்கூடிய சாலை ஓரங்களில் உள்ள இந்த மரங்களில் இளநீல ஊதா நிறத்தில் மரம் முழுவதும் பூக்கள் பூத்து குலுங்குகிறது. இந்த பூக்கள் கோடைகாலத்தை வரவேற்கும் வகையில் மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மட்டுமே பூக்கக்கூடிய பூக்களாகும். தற்போது இவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக பூத்து குலுங்குகிறது.