என் மலர்
நீங்கள் தேடியது "மீனவர்கள் எதிர்ப்பு"
எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மணலி தொழிற்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு குழாய் மூலம் திரவ இயற்கை வாயு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் கொசஸ்தலை ஆற்று படுகையில் கியாஸ் குழாய் அமைக்கப்படுகிறது.
இதற்கு எண்ணூர் அனைத்து மீனவ கிராமங்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. கியாஸ் குழாயில் பாதிப்பு ஏற்பட்டால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றில் கியாஸ் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதுபற்றி அறிந்ததும் ஏராளமான மீனவர் கிராம கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர்.
அவர்கள் கியாஸ் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இது குறித்து மீனவர்கள் கூறும்போது, ‘‘கொசஸ்தலை ஆற்றில் கியாஸ் குழாய் பதிக்கப்படுவதால் விபத்து ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
ஏற்கனவே வட சென்னை அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கொசஸ்தலை ஆறு வழியாக கியாஸ் குழாயை பதிக்க விடமாட்டோம்.
இந்த திட்டத்துக்காக கடற்கரை மண்டல ஒழுங்கு முறை அறிவிப்பாணை, சுற்றுப்புறசூழல் ஆணையரிடம் இருந்து எந்தவிதமான அனுமதியும் பெறப்படவில்லை. மேலும் காற்று மற்றும் நீர் மாசு தடுப்பு சட்டத்தின் கீழ் எந்தவித அனுமதியும் பெறவில்லை’ என்றனர். #tamilnews
ராமேசுவரம்:
மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி 90 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்காலம் நீங்க இன்னும் சில நாட்களே இருப்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பராமரிப்பு செய்து தயார்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடலுக்கு செல்லும் விசைப்படகுகளை வருடந்தோறும் மீன்பிடி தடைக்காலம் முடியும் நேரத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அப்போது விசைப்படகுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நீளம், அகலம், என்ஜின் திறன், அரசு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? போன்றவை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவார்கள். இவ்வாறு சான்றிதழ் பெற்ற விசைப்படகுகள் மட்டுமே கடலுக்குள்ள அனுமதிக்கப்படும்.
அதன்படி இன்று ராமேசுவரத்தில் விசைப்படகுகளை ஆய்வு செய்ய மீன்வளத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் உள்ள விசைப்படகுகளை ஆய்வு செய்ய சென்றனர்.
அப்போது திடீரென்று விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்யக்கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியாமல் திரும்பிச்சென்றனர்.
இதுதொடர்பாக ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள், மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.