என் மலர்
நீங்கள் தேடியது "விநாயகர் சதுர்த்தி"
- பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.
- திருமண தடை அகலும்.
விநாயக பெருமானுக்கு உகந்த சங்கடஹர தினமான இன்று விநாயகரை நினைத்து வழிபாடு செய்வது பல நன்மைகளை தரும். விநாயகருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.
ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய
மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது
அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா
சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். இப்படி பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.
- விநாயருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள்.
- இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.
மதுரை அருகே திருப்புவனம் அருகே வைகை ஆற்றுப்பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி விழா, இந்த கோவிலில் நாளை(புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவுக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார். பொதுவாக விநாயருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.
இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.
- வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து, நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொள்ளவும்.
- தேங்காய், ஏலப்பொடி சேர்த்து நன்கு சேர்ந்தாற்போல் வரும்வரை கிளறி இறக்கவும்.
தேவையான பொருள்கள்:
கொழுக்கட்டை சொப்பு செய்ய:
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
நல்லெண்ணெய்
பூரணம் செய்ய:
தேங்காய்த் துருவல் – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலப்பொடி
செய்முறை:
சொப்பு:
முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்)
வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
மாவு சேர்த்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து காயவிடக் கூடாது.
பூரணம்:
வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து, நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொள்ளவும். தேங்காய், ஏலப்பொடி சேர்த்து நன்கு சேர்ந்தாற்போல் வரும்வரை கிளறி இறக்கவும்.
கொழுக்கட்டை:
ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு கையில் மாவை வட்டமாகத் தட்டி, நடுவில் குழித்து, தேங்காய் பூரணத்தை ஒரு டீஸ்பூன் உள்ளே வைத்து நாலுபக்கமும் சேர்த்து மூடவும். மேலே கிரீடம் போல் இழுத்துவிடவும். அதிக அரிசிமாவு உச்சியில் இருந்தால் அதை எடுத்து விடலாம்.
எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி நன்றாக மூடியிருக்கவேண்டியது முக்கியம். செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.
* அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால் (இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக, பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும்.
* சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை.
* மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை தேடுபவர்கள், அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும்.
* சிலர் பூரணத்திற்கு வெல்லம் குறைவாகச் சேர்ப்பார்கள். ஆனால் வெளியே இருக்கும் மேல்மாவு சப்பையாக இருப்பதால் பூரணம் நிறைந்த இனிப்புடன் இருப்பதே சாப்பிடும்போது சரியாக இருக்கும்.
* மேலே சொன்ன அளவில் சுமார் 50 கொழுக்கட்டைகள் வந்தன.
* பூரணத்தில் ஏலப்பொடி தவிர நம் விருப்பம் போல் முந்திரி, அரைத்த கடலைப்பருப்பு, கிஸ்மிஸ் என்றெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். சனிதசைக்காக விநாயகருக்கு கொழுக்கட்டை செய்பவர்கள், இரண்டு டீஸ்பூன் எள் வறுத்தும் சேர்ப்பார்கள்.
* தேங்காய்ப் பூரணத்திற்குப் பதில் வறுத்த அரைத்த எள் ஒரு கப், வெல்லம் அரையிலிருந்து முக்கால் கப் சேர்த்து எள் கொழுக்கட்டையும் செய்யலாம்.
* தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக்கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த உளுத்த மாவில் தோய்த்து சுகியன் மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.
* அரிசி மாவினால் தான் கொழுக்கட்டைக்கு சொப்பு செய்யவேண்டும் என்பதில்லை. மைதா மாவையும் தண்ணீரில் கரைத்து வேகவைத்துச் செய்யலாம். இன்னும் நன்றாக வரும்.
- சந்திர தரிசனத்தில் இருந்து விரதம் இருப்பவர்கள் தீவிரமாக விரதம் கடைப்பிடிப்பார்கள்.
- மறுநாள் காலையில் விநாயகரை வழிபட்டு அருள்பெற்று செல்வார்கள்.
சோழவள நாட்டில் பொன்னிமா நதியின் வடபால் ஸ்ரீ மஹாகணபதி க்ஷேத்திரங்களில் ஒன்றாய் அவரது திருநாமத்தாலேயே விளங்குவது கணபதி அக்ரஹாரம்.
கணபதி ஸ்தலங்களில் மிகவும் சிறப்பாகவும், பழமையாகவும் மிகுந்த அருளோடு விளங்குவதும் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் ஆன பெருமை உடையது. பின் ஒரு சமயம் இந்நாட்டில் ஏற்பட்ட கடும் பஞ்சம் நீங்க கௌதம மகரிஷியால் பூஜிக்கப்பட்டு பஞ்சம் நீங்கிய காரணத்தால் இவ்விடத்தை "அண்ணகோஷஸ்தலம்" என்று புராணங்களில் கூறப்படுகிறது.
ஒரு சமயம் அகஸ்திய முனிவர் தவத்திற்கு இடையூறாக இருந்த காவேரியின் "சல சல" என்று நீர்கட்டத்தின் ஆரவார சப்தம் அவரை கோபம் அடைய செய்து அவருடைய தவவலிமையால் காவேரியை தனது கமண்டலத்தில் அடக்கிவிட சோழதேசமானது வளம் குன்றி, பஞ்சம் ஏற்பட்டு தேவபூஜைகள் நின்று விட, தேவர்கள் எல்லாம் விநாயகப் பெருமானிடம் முறையிட விநாயகப்பெருமானும் காக்கை உருவம் ஏற்று கமண்டலத்தை தனது அலகால் தட்டிவிட காவேரியும் பெருக்கு எடுத்து சென்று எல்லா இடங்களிலும் பாய்ந்து மீண்டும் சோழ வளநாடு வளம் பெற்றது. அகஸ்திய மாமுனி தட்டி விட்ட காக்கையை பின்தொடர, அக்காக்கையே இவ்விடத்தில் விநாயகப்பெருமானாய் அவருக்கும், காவேரி தாய்க்கும் காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது.
மாதம் தோறும் வளர்பிறை சதுர்த்தியில் காலையில் அபிஷேக ஆராதனையும் மாலையில் சுவாமி புறப்பாடும் தேய்பிறை சதுர்த்தியில் "சங்கடஹர சதுர்த்தியில்" பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற விரதம் இருந்து அன்று இரவு வருவார்கள். பூஜையில் கலந்து கொண்டு பின் இல்லம் செல்வார்கள்.
சந்திர தரிசனத்தில் இருந்து விரதம் இருப்பவர்கள் தீவிரமாக விரதம் கடைப்பிடிப்பார்கள். மறுநாள் காலையில் விநாயகரை வழிபட்டு அருள்பெற்று செல்வார்கள். மேலும் இவ்வூரில் மிகவும் சிறப்பாக போற்றப்படுவதும் கொண்டாடபடுவதும் ஆன விநாயக சதுர்த்தியை மற்ற ஊர்களில் போல் தத்தம் இல்லங்களில் மண்ணினால் ஆன விக்கிரகத்தை வைத்து வழிபாடு செய்யாமல் அவ்வூர் மக்கள் அனைவரும் விநாயக ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்வார்கள்.
இத்திருத்தலத்தில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பத்து நாள் முன்னதாகவே கொடியேற்றம் நடைபெறும். கொடி ஏற்றத்தின்போது பக்தர்கள் அவர்கள் குறை போக்க தாங்கள் உடுத்தும் சட்டைத்துணியும், துண்டு வஸ்திரத்தை புதிதாக வாங்கி மஞ்சள் காசுடன் சேர்த்து விநாயக பெருமான் கோவிலில் சேர்த்து விடுவார்கள். அப்பொருட்களை சிவாச்சாரியார் பெற்று கொண்டு கொடியேற்றத்துடன் இவைகளையும் கொடிமரத்தில் ஏற்றி பின் கொடி இறக்கம் செய்யும் காலத்தில் பக்தர்கள் பெற்று தங்கள் குறைகளை நிவர்த்தி பெறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
கொடியேற்றம் நடைபெற்ற பின் காலை, மாலைகளில் விநாயகர் பல்வேறு விமானங்களில் வீதி உலா நடைபெறும். ஒன்பதாம் திருநாள் விநாயகரை தேர் உலா நடைபெற்று விநாயக சதுர்த்தி அன்று மஹா அபிஷேகம் நடைபெற்று விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பாடு செய்து யாகசாலையில் எழுந்தருளச் செய்து பொறிதூவி வழிபாடு செய்து திருவீதி உலா, மற்றும் தீர்த்தவாரி நடைபெற்று பின் பதினெட்டு காலம் பூஜிக்க பட்ட கலசத்துடன் ஆலயத்தை வலம் வந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின் அன்னதானம் நடைபெற்று இரவில் கொடி இறக்கம் நடைபெறும். மறுநாள் சப்தவரணம் என்கிற நிகழ்ச்சியாக ஏழுமுறை ஆலயத்தை வலம் வந்து ஒவ்வொரு முறையும் வலம் வரும் நிகழ்ச்சியாக வேத கோஷம், நாட்டியம், சங்கீதம், மௌனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மறுநாள் மாலையில் கண்ணாடி பல்லக்கு திருவீதி உலா நடைபெறும்.
அதன்பின் மஞ்சள் நீர் விளையாட்டு, பந்தல் காட்சிகள், ஊஞ்சல் சேவை என்று தண்டிகேஸ்வரர் உற்சவமும் மறுநாள் விடையாற்றி விழாவாக விநாயகருக்கு ஆஸ்தான பிரவேசம் நடைபெறும்.
இவ்வாலயத்தை தரிசிக்கும் பக்தர்கள் மீண்டும், மீண்டும் வரும் மனம் படைத்தவராகவும் அருள் பெற்றவராகவும் காணமுடிகிறது. நாம் அனைவரும் சென்று முருகனுக்கு மூத்தவரை முக்கண் மகன் கணபதியை வழிபட்டு வாழ்வில் சகல நலன்கள் பெறுவோமாக!
- வெற்றியைத் தந்தருள்வார் விநாயகர்.
- விநாயகர் அகவல் படித்தும் பூஜைகள் மேற்கொள்ளலாம்.
சங்கடஹர சதுர்த்தியில், பிள்ளையாரை வழிபடுங்கள். அவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வணங்குங்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருள்வார் விநாயகர்.
மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாள் வரும். இது விநாயகரை விரதம் இருந்து வழிபாடு செய்ய அற்புதமான நாள். மாதாமாதம் வருகிற சிவராத்திரி, சிவ வழிபாட்டுக்கு உரியது என்பது போல், சஷ்டியானது முருகப்பெருமானின் வழிபாட்டுக்கு உகந்தது என்று கொண்டாடுவது போல், ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை தரிசித்து வழிபடுவது போல், சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவது வழக்கம்.
இந்தநாளில், விநாயகர் அகவல் படித்தும் பூஜைகள் மேற்கொள்ளலாம். மாலையில், அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, ஆனைமுகனைத் தரிசியுங்கள். நலம் அனைத்தும் வழங்கி அருள்வார் ஆனைமுகத்தான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்றைய சங்கடஹர சதுர்த்தி நன்னாளில் (6.7.23) வியாழக்கிழமையில், விநாயகருக்கு கொழுக்கட்டையோ, சர்க்கரைப் பொங்கலோ நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் காரியம் அனைத்தையும் வெற்றியாக்கித் தந்தருள்வார் விநாயகப் பெருமான்.
எடுத்தகாரியம் அனைத்திலும் துணையாக இருந்து அருள்பாலிப்பார். வெற்றியைத் தந்தருள்வார் விநாயகர்.
- விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும்.
- ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது.
பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது.
மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.
அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.
ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர்.
தமிழகத்தில் இவ்விழா பெரும்பாலும் குடும்ப விழாவாகவே கொண்டாடப்பட்டது. வெகுகாலத்தின் பின்னரே பொது விழாவாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.
விநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்
ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிக்கச்சொன்னார்.
யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார்.
பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று, தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார்.
அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார்.
அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.
- நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணையுடன் சிரித்த முகத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
- புத்திரதோஷம் உள்ளவர்கள் வெண்ணெய், சர்ககரை பொங்கல், அவல் படைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும்
மதுரையில் எத்தனையோ கிருஷ்ணன் கோவில்கள் இருந்தாலும் பந்தடி 5-வது தெருவில் (விளக்குத்தூண் அருகே) உள்ள நவநீதகிருஷ்ணன் கோவிலுக்கு தனி சிறப்பு உண்டு.
சுமார் 500 வருடங்களுக்கு முன்பு இக்கோவில் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் மூலவர் நவநீதகிருஷ்ணன் ஆவார். மகாலட்சுமி அம்மனும் இங்கு உள்ளது. எத்தனையோ திருவிழாக்கள் நடந்தாலும் இந்த கோவிலில் கோகிலாஷ்டமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மிகவும் பிரசித்தம். இவற்றையெல்லாம் பின்பற்றும் வகையில் நடக்கும் விழா கிருஷ்ணஜெயந்தி விழா என்றால் மிகையில்லை.
இக்கோவிலின் முன்பு மண்டபத்தில் மகா கணபதி உள்ளார். சன்னதி முன்பக்கம் இடது புறம் ஆஞ்நேயரும், வலதுபுறம் கருடாழ்வாரும் உள்ளனர். இங்கு அருள்பாலிக்கும் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணையுடன் சிரித்த முகத்துடன் பாலகனாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவநீதகிருஷ்ணன் வீதி உலா செல்வது கிடையாது. ஒவ்வொரு ரோகினி நட்சத்திரத்திலும் சாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.
கிருஷ்ணர் பிறந்த தினமான கோகுலாஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். மறுநாள் மாலையில் பகவத்கீதை பாராயணம் நடக்கிறது. புத்திரதோஷம் உள்ளவர்கள் இவருக்கு வெண்ணெய், சர்ககரை பொங்கல், அவல் படைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசா மீது தொடர்ந்து 3 மாதங்கள் சூரிய ஒளி விழுவது சிறப்பு அம்சமாகும். தினமும் காலையில் கிருஷ்ணருக்கு பூஜை செய்யும்போது 27 நட்சத்திர தீபம் மற்றும் 108 தீபம் ஏற்றி தூபம் காட்டுகின்றனர்.
இந்த கோவிலில் கண்டகி நதியில் கிடைத்த சாளக்கிராம கற்கள் இருக்கின்றன. சாளகிராமம் மற்றும் ஜடாரிக்கு தினமும் பாலாபிஷேகம் நடக்கிறது. இந்த தரிசனம் காண்போருக்கு வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பொதுவாக பெருமாள் கோவில்களில் நவக்கிரக சன்னதி வைக்கப்படுவதில்லை. கண்ணன், காளிங்கன் என்ற நாகத்திற்கு முக்தி கொடுத்து அதன் மீது நின்று ஆடியவர் என்பதால் இங்கு ராகு, கேது கிரகங்கள் மட்டும் சிலை வடிவில் உள்ளன.
- சனிப்பிரதோஷ முதல் தொடங்கி அனுஷ்டிக்க வேண்டும்.
- 6 நாட்கள் சுப்பிரமணியரை நினைத்து அனுஷ்டிப்பது கந்தசஷ்டி விரதம்.
சோமவார விரதம்
கார்த்திகை மாத முதல் சோமவாரம் தொடங்கி சோமவாரம்தோறும் சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாகும். அதில் உபவாசம் உத்தமம். அது கூடாதவர் ஒரு பொழுது போசனஞ் செய்யக் கடவர். அதுவும் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் போசனஞ் செய்யக் கடவர்.
இவ்விரதம் வாழ்நாள் முழுவதும், பன்னிரண்டு வருஷகாலமாயினும், மூன்று வருஷ காலமாயினும், ஒரு வருஷ காலமாயினும் அனுட்டித்தல் வேண்டும். பன்னிரெண்டு மாதத்திலும் அனுட்டிக்க இயலாதவர் கார்த்திகை மாதத்தில் மாத்திரமேனும் அனுட்டிக்கக் கடவர். (உபவாசம் -உணவின்றியிருத்தல்.)
திருவாதிரை விரதம்
மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்திலே சபாநாயகரைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் செய்தல் வேண்டும். இவ்விரதம் சிதம்பரத்தில் இருந்து அனுட்டிப்பது உத்தமோத்தமம்.
உமாமகேஸ்வர விரதம்
கார்த்திகை மாதத்து பௌர்ணமியிலே உமாமகேஸ்வர மூர்த்தியைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்யக் கடவர். இரவிலே பணிகாரம் பழம் உட்கொள்ளலாம்.
சிவராத்திரி விரதம்
மாசி மாதத்து கிருஷ்ணபட்ஷ சதுர்த்ததி திதியிலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும். இதில் உபவாசஞ் செய்து நான்கு யாமமும் நித்திரையின்றிச் சிவ பூசை செய்தல் வேண்டும். நான்கு யாமப் ப+சையும் அவ்வக் காலத்தில் செய்வது உத்தமம். ஒரு காலத்தில் சேர்த்துச் செய்வது மத்திமம்.
பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும், சிவராத்திரி நானள்கு யாமப் ப+சையிலே சூரிய தேவர் முதலிய பரிவாரங்களுக்குஞ் சோமஸ்கந்தமூர்த்தி முதலிய மூர்த்திகளுக்கும் பூசை செய்ய வேண்டுவதில்லை. பரார்த்தத்திலே மகாலிங்க முதலிய மூல மூர்த்திகளுக்கும் ஆன்மார்த்தத்திலே மகாலிங்கத்திற்கும் மாத்திரம் பூசை செய்யக் கடவர். பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும் விநாயகக் கடவுளுக்கு மாத்திரம் நான்கு யாமமும் பூசை செய்யலாம்.
சண்டேஸ்வர பூசை நான்கு யாமமும் செய்தல் வேண்டும். சிவ பூசை செய்பவர் நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாட்சர செபமும் சிவபுராண சிரவணமும் பண்ணல் வேண்டும். இதில் உபவாசம் உத்தமம், நீரேனும் பாலேனும் உண்ணல் மத்திமம், பழம் உண்பது அதமம், தோசை முதலிய பணிகாரம் உண்பது அதமாதமம், சிவராத்திரி தினத்திலே இராத்திரியில் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் இலிங்கோற்பவ காலமாகும்.
நான்கு யாமமும் நித்திரையழிக்க இயலாதவர் லிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் நித்திரையழித்தல் வேண்டும். இக்காலத்திலே சிவதரிசனஞ் செய்வது உத்தமோத்தம புண்ணியம். இச்சிவராத்திரி விரதஞ் சைவசமயிகள் யாவராலும் அவசியம் அனுட்டிக்கத்தக்கது.
கேதார கவுரி விரதம்
புரட்டாதி மாதத்திலே சுக்கிலபட்ச அட்டமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியீறாகிய இருபத்தொரு நாளாயினும் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் சதுர்தசியீறாகிய ஏழு நாளாயினும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினுங் கேதாரநாதரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.
இதில் இருபத்தோர் இழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு போசனஞ் செய்து இறுதி நாளாகிய சதுர்த்தசியிலே கும்பஸ்தாபனம் பண்ணிப் பூசை செய்து, உபவசித்தல் வேண்டும். உபவசிக்க இயலாதவர்கள் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பணிகாரம் உட்கொள்ளக் கடவர்.
பிரதோஷ விரதம்
சுக்கில பட்சம் கிருஷ்ணபட்சம் எனும் இரண்டு பட்சத்துக்கும் வருகின்ற திரியோதசி திதியிலே சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும். இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாதங்களுள் ஒன்றிலே சனிப் பிரதோஷ முதலாகத் தொடங்கி அநுட்டித்தல் வேண்டும்.
பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்நானஞ்செய்து சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு பிரதோஷ காலங்கழிந்த பின் சிவனடியாரோடு போசனம் பண்ணல் வேண்டும். பிரதோஷ காலத்தில் போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகனமேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டும் செய்யலாகாது.
பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின் கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்திற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையே சிவ திரிசனத்துக்கு உத்தமகாலம்.
சுக்கிரவார விரதம்
சித்திரை மாதத்து சுக்கிலபட்சத்து முதற்சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்ழிதூறும் பார்வதி தேவியாரைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.
நவராத்திரி விரதம்
புரட்டாதி மாதத்து சுக்கிலபட்ச பிரதமை முதல் நவமியீறாகிய முதல் ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து அனுட்டிக்கும் விரதமாகும். இதிலே முதலெட்டு நாளும் பணிகாரம் பழம் முதலியவை உட்கொண்டு மகாநவமியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.
விநாயக சதுர்த்தி
ஆவணி மாதத்துச் சுக்கிலபட்ஷத்து சதுர்த்தியிலே விநாயகக்கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுதில் பகலிலே போசனஞ் செய்து இரவிலே பழமேனும் பலகாரமேனும் உட்கொள்ளல் வேண்டும். இத்தினத்திலே சந்திரனைப் பார்க்கலாகாது.
விநாயக சஷ்டி விரதம்
கார்த்திகை மாத்தது கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் மார்கழி மாதத்துச் சுக்கிலபட்ச சஷ்டியீறாகிய இருபத்தொரு நாளும் விநாயகக் கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனஞ் செய்து இறுதி நாளாகிய சஷ்டியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.
கார்த்திகை விரதம்
கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரம் முதலாகத் தொடங்கி கார்த்திகை நட்சத்திரந்தோறும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் உபவாசம் உத்தமம். அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளக்கடவர். இவ்விரதம் பன்னிரெண்டு வருஷகாலம் அனுட்டித்தல் வேண்டும்.
கந்த சஷ்டி விரதம்
ஐப்பசி மாதத்துச் சுக்கிலபட்சத்து பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாளும் சுப்பிரமணியக் கடவுளை குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும். இதில் ஆறு நாளும் உபவாசம் செய்வது உத்தமம். அது கூடாதவர் முதலைந்து நாட்களும் ஒவ்வொரு பொழுது உண்டு சஷ்டியில் உபவாசஞ் செய்யக்கடவர். இவ்விரதம் ஆறு வருஷ காலம் அனுட்டித்தல் வேண்டும். மாதந்தோறும் சுக்கிலபட்ஷ சஷ்டியிலே குப்பிரமணியக் கடவுளை வழிபட்டு, மா, பழம், பால், பானகம், மிளகு என்பவைகளுள் இயன்றது ஒன்று உட்கொண்டு வருவது உத்தமம்.
- திரு வலம்- வலம் வந்த விநாயகர் திரு வீழி மிழலை-படிக்காசு விநாயகர்
- மதுரை-முக்குறுணி பிள்ளையார் திரு வலஞ்சுழி-வெள்ளை விநாயகர்
பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது. அது ஏன் தெரியுமா? அதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.
விநாயக பெருமானை திருமணம் செய்ய வேண்டும் என்று துளசி பல்லாண்டு காலம் தவம் இருந்தாள். எப்போது என்னை மணம் முடிப்பீர்கள் என்று விநாயகரை கேட்டுக்கொண்டே இருந்தாள்.
இதனால் கோபம் அடைந்த விநாயக பெருமான் துளசியை பார்த்து நீ ஒரு செடியாக மாறக் கடவது என்று கூறினார். இதை கேட்ட துளசி மனம் வருந்தினாள். விநாயகரை பார்த்து என்னை இப்படி சபித்து விட்டீர்களே, ஒரு நாளேனும் உங்கள் திரு மேனியை நான் தாங்கியிருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டினாள்.
அவளது வேண்டுகோளை விநாயகர் ஏற்றுக்கொண்டார். விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் என் திரு மேனியில் நீ தங்கி இருக்கலாம் என்று வரம் கொடுத்தார். அதன்படி விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜையின்போது விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.
பிள்ளையார் சிறப்பு பெற்ற தலங்கள்
எல்லா ஆலயங்களிலும் விநாயகருக்கு தனி இடம் உண்டு. ஆனாலும் பிள்ளையார் சிறப்பாக வீற்றிருக்கும் தலங்கள் பல உள்ளன. அவை வருமாறு:-
திருவாவடு துறை-அழகிய விநாயகர்
திருவையாறு-ஓலமிட்ட விநாயகர்
விருத்தாசலம் ஆழத்து பிள்ளையார்
திருச்சி - உச்சி பிள்ளையார்
திருக்கடவூர்-கள்ள வாரண பிள்ளையார்
திரு முருகன் பூண்டி -கூப்பிடு பிள்ளையார்
வேதாரண்யம்-சிந்தாமணி கணபதி
கீழ்வேளூர்-சுந்தர கணபதி
அன்பிலாத்துறை -செவி சாய்த்த பிள்ளையார்
திரு நள்ளாறு-சொர்ண விநாயகர்
செங்காட்டாங்குடி-கணபதீஸ்வரர்
திரு வலம்- வலம் வந்த விநாயகர்
திரு வீழி மிழலை-படிக்காசு விநாயகர்.
பாண்டிச்சேரி- மணக்குள விநாயகர்
திரு விடை மருதூர்-படித்துறை விநாயகர்
திருநாரையூர்-பொல்லா பிள்ளையார்
திருவெண்ணைநல்லூர்- பொள்ளா பிள்ளையார்
திருவாரூர்- மாற்றுரைத்த பிள்ளையார்.
மதுரை-முக்குறுணி பிள்ளையார்
திரு வலஞ்சுழி-வெள்ளை விநாயகர்
பிள்ளையார் பட்டி-கற்பக விநாயகர்
விநாகர் சதுர்த்தி கொண்டாடுவது எப்படி?
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகரின் அவதார தினமாக அவரது பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அவர் பூலோகத்திற்கு வந்து தனது பக்தர்களை நேரடியாக காண்பார் என்பது ஐதீகம்.
விநாயகர் சதுர்த்தியை யொட்டி சிலைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி முதல் நாள் மாலையோ அல்லது விநாயகர் சதுர்த்தி அன்றோ வாங்கி வர வேண்டு ம். சுடாத களி மண்ணால் ஆன விநாயகர் பொம்மைகளை வாங்கி வருவது சிறப்பு.
ஒரு பலகையை சுத்தப்படுத்தி அதில் கோலமிட்டு அதில் பிள்ளையாரை அமர வைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் காலையிலே எழுந்து குளிக்க வேண்டும்.
பஞ்சினால் செய்த மாலையை இடையிடையே சிவப்பு நிறம் இருக்குமாறு குங்குமம் தடவி தயார் செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.
அருகம்புல். எருக்க மாலை போன்றவற்றை வாங்கி வைத்து கொள்ளவேண்டும். பூக்கள், அட்சதை, குங்குமம், ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பிள்ளையாருக்கு கொழுக்கட்டையும் தேங்காயும் மிக முக்கியம். எனவே கொழுக்கட்டை தயார் செய்து வைத்து கொள்ளவேண்டும். கொழுக்கட்டை குறைந்த பட்சம் 21 இருக்க வேண்டும். உப்பு கொழுக்கட்டை, சுண்டல், அப்பம் ஆகியவைகளை தயார் செய்து வைத்துக்கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
பூஜை தொடங்கும் முன் விநாயகர் சிலையில் குண்டு மணியை பதித்து கண் திறந்து சந்தனம், குங்குமம், திருநீறு பொட்டு இடவேண்டும். பின்னர் பூப்போட்டு எருக்கு மாலை அணிவிக்க வேண்டும். ஒரு தாம்பளத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் வைக்க வேண்டும்.
அதோடு விளாம் பழத்தை வெல்லத்தோடு கலந்து பழ பச்சடியும் வைக்க வேண்டும்.கணேச பஞ்ச ரத்தினம், விநாயகர் அகவல் சொல்ல வேண்டும்.பின்னர் ஓம் சித்தி விநாயக நம, ஓம் ஸ்ரீமகா ஹணபதியே நம என்று சொல்லி தூப தீபங்கள் காட்டி அனைவரும் வணங்க வேண்டும்.
எல்வோரும் வணங்கியதும் தயார் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டைகளையும் இதர பலகாரங்களையும் நிவேதனம் செய்யவேண்டும் நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்களை முதலில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதையடுத்து பெரியவர்கள் உண்ண வேண்டும். இரவு சந்திர தரிசனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று இரவு சந்திரனை தரிசித்தால்தான் பூஜை முழுமை பெறும்.
இதையடுத்து மறு நாளான பஞ்சமி அன்றோ அல்லது 2 நாட்களுக்கு பிறகோ சஸ்டி அன்று புனர் பூஜை செய்யலாம். தூப தீபம் காட்டி மந்திரம் சொல்லி வணங்கி சிறிது பால் அல்லது பாயாசம் நிவேதனம் செய்து விநாயகர் சிலையை வடக்கு பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் சிலையை எடுத்து சென்று கடலிலோ அல்லது நதியிலோ குளத்திலோ கரைக்க வேண்டும்.
- பவித்திர உற்சவம்-10 நாட்கள் திருவிழா
- சித்தி - புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம்
மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதூர்தி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜனவரி முதல் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று பக்தர்கள் அதிகமாக வந்து வழிபடுகிறார்கள்.
பிரமோற்சவம்-ஆவணி மாதம் 25 நாட்கள் திருவிழா, பவித்திர உற்சவம்-10 நாட்கள் திருவிழா
மாதந்தோறும் சங்கடகர சதூர்த்தி தினத்தில் மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
திருக்கல்யாணம்
பக்தர்கள் நேர்த்தி கடனாக சித்தி - புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள். இந்த கோவிலில்தான் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வெள்ளித்தேர் இழுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துகிறார்கள்.
தங்க கோபுரம்
மணக்குள விநாயகர் கோவிலில் தங்க கோபுரம் உள்ளது. அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டிருப்பது இங்கு மட்டும்தான். பக்தர்கள் செலுத்திய 10 கிலோ தங்கத்தால் இந்த தங்க கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.
மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளி அறை
விநாயகர் கோவிலில் எங்கும் பள்ளி அறை இருபதில்லை. ஆனால் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளியறை உள்ளது. தினமும் இரவு நைவேத்தியம் முடிந்தவுடன் பள்ளி அறைக்கு விநாயகர் செல்கிறார். இதன் அடையாளமாக பாதம் மட்டும் இருக்கும் உற்சவ விக்ரம் அங்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு விநாயகரோடு அவரது தாயார் சக்தி தேவியார் உடன் இருக்கிறார்.
சிறப்பு
மணக்குள விநாயகரை பாரதியார், அரவிந்தர், அன்னை ஆகியோர் வழிபட்டார்கள். இந்த கோவிலில் தினம் தோறும் 3 வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அன்னதானம் வழங்கப்படுகிறது. சிவ தலங்களில் இருக்கும் நடராஜரைபோல் இங்கு நர்த்தன விநாயகர் உள்ளார்.
இந்த கோவில் புதுவை புதிய பஸ்நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலும் புதுவை ரெயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்து உள்ளது.
பக்தர்களின் பிரார்த்தனை
திருமண வரம், குழந்தை வரம் கேட்டு பக்தர்கள் வந்து இங்கு வழிபடுகின்றனர். திருமணம் கூடி வந்ததும் திருமண பத்திரிக்கையை வைத்து வழிபட்டு செல்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் குழந்தையுடன் வந்து வழிபடுகிறார்கள். புது தொழில் தொடங்குவோர்.
புது கணக்கு தொடங்குவோர் வந்து வணங்கி செல்கிறார்கள். புதுவையை விட்டு வெளியூர் செல்வோர் மணக்குள விநாயகரை வந்து வழிபட்டு செல்கிறார்கள். பக்தர்கள் நேர்த்தி கடனாக காணிக்கை செலுத்துகின்றனர். விநாயகருக்கு அமெரிக்க வைரத்தாலே கவசம் செய்து கொடுத்துள்ளனர்.
- விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை பூஜை நடந்தது.
- மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்ற தலைவர் ராமராஜ் செய்திருந்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் ஒவ்வொரு வருடமும் மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறும்.இந்த ஆண்டு 36-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராஜபாளையம்-மதுரைரோட்டில் உள்ள மாயூரநாதசுவாமி கோவில் முன்புள்ள ஆதிவழிவிடும் விநாயகர் கோவில் வளாகத்தில் சிலை செய்வதற்கான பிரதிஷ்டை பூஜை நடைபெற்றது. திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரியார் பூஜையை நடத்தி வைத்தார்.
இதில் முக்கிய பிரமுகர்கள், பிரபல தொழில் அதிபர் குவைத்ராஜா மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்ற தலைவர் ராமராஜ் செய்திருந்தார்.
- அடுத்த மாதம் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது.
- தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைக்காக வைக்கப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட பல்வேறு அமைப்பினரும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
இதையடுத்து விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் கொசப்பேட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்ட போதிலும் பெரிய அளவிலான சிலைகளின் பாகங்கள் வெளியூர்களில் இருந்தே வரவழைக்கப்பட்டு ஒன்றாக்கி பின்னர் விற்பனை செய்யப்படுகிறது.
திருத்தணி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பண்ருட்டி, கள்ளக்குறிச்சி பகுதிகளிலும் அதிக அளவில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது.
சென்னை பகுதியான எர்ணாவூர் கிரிஜா நகரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகளில் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். 3 அடியில் இருந்து 10 அடி உயரம் வரையிலான சிலைகள் இங்கு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் வெளியூர்களில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். எர்ணாவூரில் மட்டும் தற்போது 300 சிலைகளை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சிலைகளின் தலை, கைகள், உடல் பகுதி உள்ளிட்டவைகளை ஒன்றாக்கி வர்ணம் தீட்டி அதனை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது. அன்று தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைக்காக வைக்கப்படுகின்றன. பின்னர் இந்த சிலைகள் ஒரு வார காலம் வைத்து பூஜை செய்யப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்பினர் தற்போதே தொடங்கியுள்ளனர். இந்து முன்னணி மற்றும் பாரத் இந்து முன்னணி அமைப்பினர் இது தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நேற்று நடத்தினர்.
இந்த கூட்டத்தில் 2 அமைப்புகளை சேர்ந்தவர்களும் தங்களது அமைப்புகளின் சார்பில் சென்னையில் தனித்தனியாக 5 ஆயிரம் சிலைகளை வைக்க முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் சென்னையில் மட்டும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் 10 ஆயிரம் சிலைகளை வைத்து பூஜை செய்ய உள்ளனர்.
இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் பக்தன்ஜி, முருகானந்தம், கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி, மணலி மனோகர், இளங்கோவன் மற்றும் விழா கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
செப்டம்பர் 18-ந்தேதி தொடங்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமரிசையாக நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 17-ந்தேதி அன்று விழாக் குழுவினர் அனைவரும் காப்பு கட்டி விரதம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட இடையூறுகள் விநாயகர் பெருமான் அருளால் நல்ல முறையில் தீர்ந்தன. எனவே இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக இந்து சமுதாய திருவிழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் மைய கருத்து "அன்னைத் தமிழைக் காக்க, ஆன்மீகத்தை வளர்ப்போம்" என்பதாகும். இக்கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்து முன்னணியினர் முடிவு செய்துள்ளனர்.
இதேபோன்று பாரத் இந்து முன்னணி அமைப்பின் ஆலோசனை கூட்டம் தலைவர் ஆர்.டி.பிரபு தலைமையில் நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பான முறையில் பூஜைகள் செய்து 24-ந்தேதி கடலில் கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் வைக்கக்கூடிய விநாயகர் சிலைக்காக சென்னை புளியந்தோப்பு பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்படுகிறது. வட சென்னை மாவட்டத்தில் வைக்கக்கூ டிய விநாயகர் சிலையும், ஆர்.கே.நகர் தொகுதியில் ஒன்று கூடி காசிமேடு கடற்கரையிலும், தென் சென்னை மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் திருவேற்காடு பகுதிகளில் வைக்கக்கூடிய விநாயகர் சிலைகள் நீலாங்கரை கடற்கரையிலும் கரைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.