என் மலர்
நீங்கள் தேடியது "ஐகோர்ட்"
- திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு?
- சென்னையில் ஊர்வலம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது.
சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், முருக பெருமானுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா வைத்து இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதை கண்டித்து சென்னையில் வேல் ஏந்தி ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழி பாதை, நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.
பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும். ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். மீண்டும் அதே பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவதை நீதி மன்றம் ஊக்குவிக்க கூடாது' என்று வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு? என்றும் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் எனக்கூறி சென்னையில் ஊர்வலம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானதே எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
- பறக்கும் படைகளை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
- தமிழ்நாடு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
சென்னை :
கோவை அரசு மருத்துவமனையில் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் காலாவதியானதால், அந்த ஆஸ்பத்திரியின் மருந்து காப்பக பொறுப்பாளர் முத்துமாலை ராணிக்கு பணி ஓய்வு பலன்கள் வழங்க அரசு மறுத்து விட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், காலாவதியான மருந்துகள் அரசு ஆஸ்பத்திரியில் வினியோகம் செய்யப்படுகிறதா? அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து விலை உயர்ந்த மருந்து கடத்தப்படுகிறதா? புதுப்புது நோய்கள் பரவ என்ன காரணம்? என்று சரமாரியான கேள்விகளை கேட்டு, அதற்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
முத்துமாலை ராணி மீதான நடவடிக்கைகளை ரத்து செய்கிறேன். அவருக்கு எதிரான புகார் குறித்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகின்றனரா? நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்துவதற்காக மண்டல மற்றும் மாவட்ட அளவில் பறக்கும் படைகளை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.
இந்த பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா? என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
- 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
- இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.
சென்னை :
பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் அறிவிப்புக்குரிய தகுதியை பல்வேறு வகையில் பெறவில்லை எனக்கூறி, 152 பேருக்கும் அறக்கட்டளையை நிர்வகித்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் பிறப்பித்தார்.
மேலும், உதவி பேராசிரியர்கள் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் ஆர்.பிரேமலதா, எஸ்.சாந்தி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வக்கீல் ரவிச்சந்தர், சென்னை பல்கலைக்கழகம் சார்பில் வக்கீல் எம்.பழனிமுத்து, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் சந்திரசேகர், எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் திலகவதி, வக்கீல்கள் எம்.ரவி, ஜி.சங்கரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும். இவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்று அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி, கல்லூரிக் கல்வி இயக்குனர், 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் பணி அனுபவத்துக்காக வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், ''தேர்வு நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை, காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த 254 உதவி பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது. உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, இந்த பதவிக்கான தேர்வும், அதை தொடர்ந்த நடந்த நியமனமும் செல்லாது" என்று கூறியுள்ளார்.
- எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர்.
சென்னை :
சென்னை, கோவை மாநகராட்சிகளின் ஒப்பந்த பணிகளை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் அ.தி.மு.க. முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பெரும் ஊழல் செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் புகார் செய்தனர்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டிலும் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில், எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், போலீஸ் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, புகார்தாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, சுரேஷ், எஸ்.பி.வேலுமணி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் எஸ்.வி.ராஜூ, சித்தார்த் தவே, வக்கீல் ஜெ.கருப்பையாஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், அந்தத் தீர்ப்பு, இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு வழங்கப்படும் என ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்துள்ளது.
- தவறு செய்பவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதும் இல்லை.
- வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.
சென்னை :
கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''சட்டங்கள் பல இருந்தாலும் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் தவறு செய்பவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதும் இல்லை.
அவர்கள் தண்டிக்கப்படுவதும் இல்லை. எனவே, இதுபோன்ற தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே என் மனுவை பரிசீலிக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்து. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே மற்றொரு வழக்கில் இது சம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டனர்.
- விவசாய நிலத்துக்கு அருகே குவாரிகளை நடத்த தடை விதிக்க வேண்டும்.
- குவாரி நடத்த இந்த ஒப்பந்ததாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
சென்னை:
அரியலூர் மாவட்டத்தில் கிராவல் மண் குவாரிகள் நடத்த கலெக்டர் வழங்கியுள்ள உரிமத்தை நிறுத்தி வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், அரியலூர் மாவட்டம், சூரக்குழி கிராமத்தை சேர்ந்த ஆர்.கணேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் தெற்கே கொள்ளிடமும், வடக்கே வெள்ளாறும், மத்தியில் மருதையாறும் ஓடினாலும், பல பகுதிகளில் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் வட்டாரங்களில் கிராவல் மண் வளம் அதிகம் உள்ளன. இந்த வகை மண், சாலை அமைக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த மண் இயற்கை வளம் குறித்து எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளலாம், கிராவல் மண் எடுக்க குவாரி உரிமம் விருப்பம்போல் வழங்கப்படுகிறது. என்னுடைய விவசாய நிலத்துக்கு அருகே, சிலர் கிராவல் குவாரிகளை நடத்துகின்றனர்.
அரசியல் செல்வாக்கு உள்ள இவர்கள், சில நிலங்களை வாங்கியும், ஏழை விவசாயிகளின் நிலங்களை குத்தகைக்கு எடுத்தும் குவாரிகளை நடத்துகின்றனர்.
இவர்கள் மண் எடுக்க தொடங்கி விட்டால், குவாரிக்கு அருகே உள்ள விவசாய நிலத்தை இவர்களிடம்தான் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இவர்களிடம் குவாரி நடத்த அரசு வழங்கியுள்ள உரிமம் குறித்து கேள்வி எழுப்பியதால், அடுத்த நாளே எங்களது விவசாய நிலத்தில் உள்ள முந்திரி மரங்களை அகற்றி, அத்துமீறி நிலத்துக்குள் நுழைந்து விட்டனர். இதுகுறித்து அரசுக்கு புகார் செய்துள்ளேன். இவர்கள் சுமார் 7 ஹெக்டேர் வரை குவாரி நடத்தி, சுமார் 20 முதல் 30 அடி ஆழத்துக்கு குழி தோண்டி உள்ளனர். இதனால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன.
எனவே, விவசாய நிலத்துக்கு அருகே குவாரிகளை நடத்த தடை விதிக்க வேண்டும். குவாரி நடத்த இந்த ஒப்பந்ததாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த உரிமத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்த ஒப்பந்ததாரர் கிராவல் மண் எடுக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், 'இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகளும், குவாரி உரிமம் எடுத்துள்ள விக்ரமாதித்தன், கவிதா, விஜயகாண்டீபன் ஆகியோரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை இந்த ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் வழங்கிய குவாரி உரிமங்களை நிறுத்தி வைக்க வேண்டும். விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டுள்ளார்.
- கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- நேரடி மற்றும் ஆன்-லைன் என 2 முறையிலும் வழக்குகள் விசாரிக்கப்படும்.
சென்னை
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றினால் தமிழ்நாட்டில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் வருகிற 10-ந்தேதி முதல் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை ஐகோர்ட்டு (பொறுப்பு) தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதால் வருகிற 10-ந்தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் நேரடி மற்றும் ஆன்-லைன் என 2 முறையிலும் வழக்குகள் விசாரிக்கப்படும். இதன்மூலம், கோர்ட்டு அறை மற்றும் வளாகத்தில் மனிதர்களின் நடமாட்டத்தை குறைத்து, கொரோனா பரவலை தடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வசதியை வக்கீல்கள் மற்றும் நேரடியாக ஆஜராகும் வழக்காடிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதேபோல வழக்குகளையும் மின்னணு முறையில் தாக்கல் செய்யும் வசதியையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றிகரமான வக்கீல்களாக மாறலாம்.
- ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 14-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. போக்சோ குற்ற வழக்குகள் மீதான விசாரணை, புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீ திமன்றத்தில் செயல்பட்டு வந்தது. போக்சோ வழக்கை தலைமை நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்து வந்தார்.
இந்நிலையில் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்க விரைவு நீதி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி நீதிபதியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த போக்சோ நீதிமன்ற திறப்பு விழா இன்று நடந்தது. ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா போக்சோ விரைவு நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், நேரு எம்.எல்.ஏ , ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் மற்றும் புதுவை நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
வக்கீல்கள் அமரும் இருக்கையில் நீதிபதி ராஜா, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது போக்சோ நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போக்சோ நீதிமன்ற நீதிபதி சோபனாதேவி தலைமையில் விசாரணை நடந்தது. முதல் குற்றவாளியை அழைத்த போது மின்சாரம் தடைபட்டது.
இதனால் வந்திருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர். அப்போது நீதிபதி ராஜா, சற்று கோபத்துடன் மின்சாரத்தை சரி செய்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? என கேட்டார். தொடர்ந்து ஊழியர்கள் மின் தடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10 நிமிடம் மின்சாரம் இல்லை. இருப்பினும் 5 குற்றவாளிகள் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இதன்பின் அனைவரும் விழா மேடைக்கு வந்தனர். அங்கு போக்சோ விரைவு நீதிமன்ற பெயர் பலகையை நீதிபதி ராஜா திறந்து வைத்தார்.
விழாவில் ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியதாவது:-
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மாநிலத்தில் 29 நீதிமன்றங்களாக செயல்பட உள்ளது. புதுவையில் மட்டும் போக்சோ நீதிமன்றத்தோடு 18 நீதிமன்றங்கள் செயல்பட உள்ளன. அதிசயம், அற்புதமான மிக கடுமையான சட்டங்கள் போக்சோ நீதிமன்றத்தில் உள்ளன.
பல வழக்கில் கொலை, கொள்ளை அடித்தவர்களுக்கு மிகப்பெரும் தண்டனை தரப்படுகிறது. போக்சோவில் விசித்திரமான சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான சான்றிதழ், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு காயம், சாட்சிகள் இருந்தால் அவர் குற்றவாளி. குற்றத்தை செய்யவில்லை என அவரின் வக்கீல்கள்தான் நிரூபிக்க வேண்டும்.
குழந்தைகளை பயமுறுத்துவதுபோல கேள்வி கேட்க முடியாது. போக்சோ குற்றத்தில் ஈடுபட்டால், இறுதி மூச்சு இருக்கும் வரை ஆயுள்தண்டனை விதிக்கப்படும். வக்கீல்கள் போக்சோ வழக்கை சாதாரணமாக நடத்தி விட முடியாது.
இந்த வழக்கிற்கு இங்கு மட்டும்தான் ஜாமீன் பெற முடியும். ஒரு ஆண்டுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்கை கையாள வக்கீல்கள் திறமை களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தையின் விபரங்களை வெளியில் தெரிவிக்கக்கூடாது. பெற்றோர்களால் வழக்கை நடத்த முடியாவிட்டால், சட்டப்பணிகள் ஆணையம் மூலம் வக்கீல்களை பெறலாம்.
பாதிக்கப்பட்ட குழந்தை என நீதிபதி முடிவு செய்துவிட்டால், வழக்கு நடைபெறும்போதே குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட முடியும். கொடுமையான குற்றம் செய்திருந்தால் மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.
காலங்கள் மாறி வருகிறது. காலதாமதமின்றி நீதி வழங்கப்படுகிறது. சட்டங்களை அறிந்து கொள்ளாமல் வக்கீல்கள் நீதிமன்றதுக்கு வர முடியாது. வெற்றிகரமான வக்கீல்களாக மாற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். சட்டங்களை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வக்கீல்கள் எப்படி, எதை பேச வேண்டும் என அறிந்து பேச வேண்டும். இதனால் வக்கீலும், வக்கீல் தொழிலும், நீதிமன்றமும், நாடும் உயரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஸ்டேட் வங்கியும் தங்கள் கிளைகளில் அடையாள சான்று இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என்று கூறியுள்ளது.
- மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:
ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. செப்டம்பர் 30-ந்தேதி வரை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை எந்தவித அடையாள சான்றும் இல்லாமல் மாற்றிக்கொள்ளலாம். ஒரு நபர் தினமும் ரூ.20 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
இதே போல் ஸ்டேட் வங்கியும் தங்கள் கிளைகளில் அடையாள சான்று இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என்று கூறியுள்ளது.
எந்தவித அடையாள சான்றும் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் அறிவிப்பை எதிர்த்து வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சதீஷ்குமார் சர்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- 54 துறைகளில் குரூப்-4 மூலம் பணியில் சேர்ந்த பலர் அதிக பலன் அடைந்து வந்தனர்.
- அரசுத் துறையிலும் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இதில் ஒவ்வொரு ஜாதியினரும் வேலையில் சேர்ந்த பிறகு அவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தாலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் பதவி உயர் வழங்கப்பட்டது.
இந்த நடைமுறை 1990-ல் இருந்து பின்பற்றப்பட்டு வந்தது.
சுழற்சி அடிப்படையிலான பதவி உயர்வில் (ரோஸ்டர் சிஸ்டம்) காலியிடங்கள் பதவி மூப்பு அடிப்படையில் நிரப்பப்படாமல் ஜாதி அடிப்படையில் சில பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதன் மூலம் வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை, கணக்கு கருவூலம், வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 54 துறைகளில் குரூப்-4 மூலம் பணியில் சேர்ந்த பலர் அதிக பலன் அடைந்து வந்தனர்.
இதன் பிறகு இந்த நடைமுறையை அதிக அளவில் செயல்படுத்தி வந்துள்ளனர். இதன் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 இடங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 இடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 18 இடங்கள், பழங்குடியினருக்கு 1 இடம் மீதம் உள்ள இடங்களுக்கு பொது பிரிவு மூலம் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நடைமுறையால் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி இருந்தும் பல பேருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அரசு ஊழி யர்கள் அரசின் முடிவை எதிர்த்து 2004-ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட் ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சட்ட விரோதம், தமிழ்நாடு அரசு தேர்வாணைய விதிகளின்படி தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று 2015-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. சுப்ரீம் கோர்ட்டும் இதை உறுதி செய்தது.
ஆனாலும் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமல் பழைய நடைமுறைப்படியே (ரோஸ்டர்சிஸ்டத் தில்) பதவி உயர்வுகள் நிரப்பப்பட்டு வந்தது.
இதனால் சுப்ரீம் கோர்ட்டில் 2021-ம் ஆண்டு மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு நிரப்ப கூடாது என்றும் பணி மூப்பு அடிப்படையில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய விதிகளை பின்பற்றி அரசுப் பணிகளில் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும், அனைத்து நிலைகளிலும் சினியாரிட்டி லிஸ்டை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் கோர்ட்டு இப்போது தெளிவுபடுத்தியது.
இதன் அடிப்படையில் ரோஸ்டர் சிஸ்டத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் இப் போது பதவி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
அதிலும் குறிப்பாக வட்டார போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சித் துறை, கணக்கு கருவூலத்துறை, வணிக வரித்துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய் உள்ளிட்ட 54 துறைகளில் பணியாற்றும் சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
ஒவ்வொரு அரசுத் துறையிலும் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் சீனியாரிட்டியில் பணி மூப்பு மூலம் பதவி உயர்வு கிடைக்கும் நம்பிக்கையில் பல அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
- அரசாணையை எதிர்த்து வக்கீல் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
- மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணையில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் பொது நலனுக்கு எதிரானதும் இல்லை என, தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது.
திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பின்னர், பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து வக்கீல் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் உள்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் சார்பில் மதுவிலக்கு துறை ஆணையர் ரத்னா பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், திருமணம் போன்ற நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற வகை செய்யும் பிரிவுகள் நீக்கப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை விதிகளின்படியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படியும் தான் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற ஒன்று அல்லது சில நாட்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும்.
கல்வி நிறுவனங்களுக்கு அருகில் நடக்கும் நிகழ்வுகளுக்கு இந்த உரிமம் வழங்கப்படாது என்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த உரிமங்கள் வழங்கப்படும்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், வருவாய் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டு இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. மேலும் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனால், அரசின் உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை, பொதுநலனுக்கு எதிரானதும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசின் பதில்மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டு வழக்கின் விசாரணையை ஜூலை 5-ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அது வரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.
- தமிழக அரசு மதுபான சில்லரை விற்பனை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகளை மூடவில்லை.
- கலெக்டரிடம் முறையிட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது
சென்னை:
டாஸ்மாக் கடை மூடல் தொடர்பாக ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கு மனுவில், "தமிழக அரசு மதுபான சில்லரை விற்பனை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகளை மூடவில்லை" என்று கூறி இருந்தார்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், "விதிகளை மீறி அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கலெக்டரிடம் முறையிடலாம். கலெக்டரிடம் முறையிட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்தது.