என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கு வங்கம்"

    • திகாவில் நாங்கள் ஜெகநாதர் கோவில் கட்டியதற்கு அவர்கள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறார்கள்?.
    • மேற்கு வங்காளத்தில் ஜெகநாதரை வழிபடுவது குற்றமா?.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. 12ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாகும். இந்த கோவில் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது. பூரி ஜெகநாதர் கோவிலைப் போன்று, மேற்கு வங்கத்தில் உள்ள திகா என்ற இடத்தில் ஜெகநாதர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் சிலை பிரதிஷ்டை கடந்த 30ஆம் தேதி நடைபெற்றது.

    இந்த விழாவில் பூரி ஜெகநாதர் கோவிலைச் சேர்ந்த பல பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே ஸ்ரீகெஜநாதர் கோவில் நிர்வாகம், மூத்த பணியாளரிடம் பூரி ஜெகநாதர் கோவில் புனித வேப்பமரத்தின் உபரி பாகங்கள் திகா கோவில் சிலை செய்வதற்கான பயன்படுத்தப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்த நிலையில், ஏற்கனவே ஒடிசாவில் வேலைபார்த்து வரும் பெங்காளி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக தற்போது பூரி ஜெகநாதர் கோவில் புனித வேப்ப மரக்கட்டையை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டுகின்றனர் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    நாங்கள் ஏன் திருட்டு வேப்ப மரக்கட்டையை பயன்படுத்த வேண்டும்? வேப்ப மரக்கட்டைக்கான வளங்களை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலம் ஆதாரமற்றவை. ஏற்றுக்கொள்ள முடியாதது.

    திகாவில் நாங்கள் ஜெகநாதர் கோவில் கட்டியதற்கு அவர்கள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறார்கள்?. மேற்கு வங்காளத்தில் ஜெகநாதரை வழிபடுவது குற்றமா?.

    ஒடிசாவிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மேற்கு வங்கத்தில் அமைதியாக வேலை செய்வது போல, வங்காளத்தைச் சேர்ந்தவர்களும் ஒடிசாவில் வேலை செய்கிறார்கள். பெங்காளி மொழி பேசுவதனால் மட்டுமே தொந்தரவுக்கு உள்ளாகுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    மேற்கு வங்க டிஜிபி, ஒடிசா டிஜிபி-யிடம் இது தொடர்பாக பேசுவார். எங்களுடைய மக்கள் தாக்குப்படுவதை நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • நீக்கப்பட்ட ஆசிரியர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு.
    • தகுதியான எந்தவொரு ஆசிரியரும் நியாயமற்ற முறையில் தண்டிக்கப்படமாட்டார்கள் என மம்தா ஏற்கனவே கூறியிருந்தார்.

    மேற்கு வங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன.

    இதை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியர், அலுவலர் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது.

    மேற்கு வங்க அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவதாலும், ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைக்கு அதிக காலம் ஆவதாலும் மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும். இதனால் இந்த வருடம் இறுதி வரை தொடர்ந்து பணியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

    இந்த முறையீடு மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா, சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீக்கப்பட்ட ஆசிரியர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை பணியாற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

    மேலும், புதிய ஆசிரியர் தேர்வுக்கான நடைமுறையை மே 31ஆம் தேதிக்குள் தொடங்கி, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திரிணாமுல் காங்கிரஸ் வரவேற்றுள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "தொடக்கத்தில் இருந்தே மம்தா பானர்ஜி, தகுதியான எந்தவொரு ஆசிரியரும் நியாயமற்ற முறையில் தண்டிக்கப்படமாட்டார்கள் எனக் கூறி வந்தார்.

    இன்று, உச்சநீதிமன்றம் அவர்களை டிசம்பர் 31ஆம் தேதி வரை பணியாற்ற அனுமதித்துள்ளது. இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மக்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பதற்கான பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் சதிகளை நாங்கள் ஒருபோதும் அனுமிக்கமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • கொடுமையான வக்பு (திருத்தம்) சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்துகிறேன்.
    • தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும்.

    மத்திய அரசு வக்பு திருத்த சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    வன்முறையை தடுக்க மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தவறி விட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. இந்த நிலையில் முர்ஷிபாத் வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. பாதுகாப்புப்படையின் ஒரு பிரிவினர், மத்திய அமைப்புகள் மற்றும் பாஜக, வங்கதேசத்தில் இருந்து ஊடுருவலை எளிதாக்கி பதற்றத்தை தூண்டுகின்றன எனக் குற்றம்சாட்டினார்.

    முஸ்லிம் மதத் தலைவர்களுடன் மம்தா இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொடுமையான வக்பு (திருத்தம்) சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்துகிறேன். இது நாட்டை பிளவுப்படுத்தும். தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும்.

    முர்ஷிதாபாத் கலவரத்தில் எல்லைக்கு அப்பால் இருந்து வந்த சக்திகளின் பங்கு இருப்பதாகக் எனக்கு செய்திகள் வந்துள்ளன. எல்லையைப் பாதுகாப்பது பாதுகாப்புப்படை வீரர்களின் பங்கு இல்லையா?. மாநில அரசு சர்வதேச எல்லையை பாதுகாப்பதில்லை. மத்திய அரசு பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.

    வன்முறையின் எல்லைப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பணம் கொடுத்து வன்முறையின்போது கற்களை வீசுவதற்கு எல்லை பாதுகாப்புப்படை யாருக்கு நிதியளித்தது என்பதைக் கண்டுபிடிப்பேன்.

    அமித் ஷாவை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். அவரது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்.

    அமித் ஷா ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்? அவர் ஒருபோதும் பிரதமராக மாட்டார். பிரதமர் மோடி வெளியேறிய பிறகு அவர் என்ன செய்வார்?. பிரதமர் தனது உள்துறை அமைச்சர் மத்திய நிறுவனங்களை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். பிரதமர் மோடி அவரைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • எங்கெல்லாம் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனரோ, அங்கெல்லாம் அவர்கள் வாக்களிக்க மறுக்கப்படுகிறார்கள்.
    • காவல்துறையினர் ஆளுங்கட்சி தொண்டர்கள் போன்று செயல்படுகிறார்கள்.

    மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் நடத்தப்பட வேண்டும் என பாஜக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

    முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை காரணமாக சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது எனுவும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுவேந்து அதிகாரி கூறுகையில் "முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சுதி, துலியான் ஜாங்கிபூர், ஷாம்ஷெர்கஞ்ச் போன்ற பகுதியில் இன்னும் பதற்றமான நிலை நீடிப்பது, மக்களை காப்பாற்றுதல் மற்றும் அமைதியை நிலைநாட்டுதல் திறனை மாநில அரசு இழந்து விட்டது என்பதை காட்டுகிறது.

    எங்கெல்லாம் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனரோ, அங்கெல்லாம் அவர்கள் வாக்களிக்க மறுக்கப்படுகிறார்கள். காவல்துறையினர் ஆளுங்கட்சி தொண்டர்கள் போன்று செயல்படுகிறார்கள். சுதந்திரமான, வெளிப்படையான தேர்தலுக்கு, சட்டசபை தேர்தல் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் நடத்தப்பட வேண்டும்.

    சமீபத்தில் நடைபெற்ற வன்முறைக்கு பின்னால், jihadist சக்திகள் உள்ளது. இந்தக் குழுக்கள் வெறித்தனமாகச் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. நாங்கள் அவர்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம், ஆனால் ஒரு சமமான போட்டி இருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

    • அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
    • அவரது மனைவி, மகன் மற்றும் மகள் விருந்து ஏற்பாடு செய்துவிட்டு அவருக்காக காத்திருந்துள்ளனர்.

    ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா எம்.ஜி.ஆர். ரெயில்வே லைனில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் 5 ரெயில்வே பணியாளர்கள், 4 CISF வீரர்கள் காயமடைந்தனர்.

    தகவலின்படி, ஆலைகளுக்காக தனியாரால் இயக்கப்படும் ரெயில்வே தடத்தில் நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயிலானது, பார்ஹத் எம்.டி. ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காலியான மற்றொரு சரக்கு ரெயில் மீது அதிவேகத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இரண்டு ரெயில்களுக்கு இடையேயான சிக்னல் தொடர்பு சரிவர பராமரிக்கப்படாததே விபத்திற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.

    இந்த விபத்தில் உயிரிழந்த நிலக்கரி ஏற்றிவந்த ரெயிலின் லோகோ பைலட் கங்கேஸ்வர் மால் நேற்றைய தினத்துடன் ஓய்வு பெற இருந்தார். மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்தவர் கங்கேஸ்வர் மால்.

    நேற்று ஓய்வு பெறுவதற்கு முன் தனது கடைசி பயணத்தின்போதுதான் இந்த துயர சம்பவம் அவருக்கு நேர்ந்திருக்கிறது. நேற்று அந்த பயணம் முடிந்த பின் இரவில் தனது வீட்டில் ஓய்வு பெறுவதை கொண்டாடும் விதமாக விருந்தில் கலந்து கொள்ள இருந்தார்.

    அவரது மனைவி, மகன் மற்றும் மகள் விருந்து ஏற்பாடு செய்துவிட்டு அவருக்காக காத்திருந்துள்ளனர். கடைசியாக தான் சீக்கிரம் வந்து விருந்தில் கலந்துகொள்வேன் என அவர் போனில் கூறியிருக்கிறார்.

    ஆனால் அவர் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்திதான் அவரது குடும்பத்துக்கு சென்று சேர்ந்திருக்கிறது. இறந்த கங்கேஸ்வர் மால் உடல் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தங்களின் மொத்த உலகமும் நொறுங்கிவிட்டது என கங்கேஸ்வர் மாலின் மகள் துயரத்துடன் தெரிவிக்கிறார். 

    • ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • வீட்டில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.

    மேற்கு வங்காளத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    மேற்கு வங்கத்தின் சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதர் பிரதிமா பகுதியில் உள்ள தோலகாட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 9 மணியளவில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.

    இதில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தீயை அணைத்த பின் மீட்புக் குழுவினர் உள்ளே இருந்த 7 உடல்கள் மீட்கப்பட்டன. வெடிப்புக்கான காரணாம் குறித்த ஆய்வு நடந்து வருகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

    வீட்டில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. அங்கு பட்டாசு தயாரிப்பு நடந்து வந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • ஏப்ரல் 6-ந்தேதி ராம நவமி பேரணி நடத்தப்படும்.
    • ஒரு கோடி மக்கள் பேரணியில் கலந்து கொள்வார்கள்.

    மேற்கு வங்கத்தில் ஒரு கோடி இந்துக்கள் பங்கேற்கும 2 ஆயிரம் ராம நவமி பேரணிகள் ஏப்ரல் 6-ந்தேதி நடத்தப்படும் என அம்மாநில பாஜக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    கடந்த வருடம் ஆயிரம் ராம நவமி பேரணிகள் நடைபெற்றன. இதில் 50 ஆயிரம் இந்துக்கள் கலந்து கொண்டனர். இந்த வருடம், ஒரு கோடி இந்துக்கள் 2 ஆயிரம் பேரணிகளில் கலந்து கொள்வார்கள்.

    இந்த பேரணிக்கு நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. கடவுள் ராமரை பிரார்த்தனை செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டியதில்லை. நாங்கள் அமைதி காப்போம். ஆனால், மற்றவர்களை அமைதிகாக்க வைப்பது நிர்வாகத்தின் வேலை. இந்த வருட இறுதிக்கும் தன்னுடைய தொகுதியில் சோனாசுரா என்ற இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அதிகாரி போன்ற பாஜக தலைவர்களின் எந்த வார்த்தை ஜாலங்களாலும் மாநில மக்கள் மயங்க மாட்டார்கள். மத சடங்குகளை கடைபிடிக்கவும், பண்டிகைகளை அவர்கள் விரும்பும் வழியில் கொண்டாடவும் அனைவருக்கும் உரிமை உண்டு என மேற்கு வங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஃபிர்ஹாத் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

    • பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து தி.காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.-க்கள் வெளியேற்றப்படுவார்கள்- சுவேந்து அதிகாரி
    • இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது.

    மேற்கு வங்கமாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி தலைவரும், பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி பேசும்போது "பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து திரணாமுல் காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.-க்கள் வெளியேற்றப்படுவார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு ம்தா பானர்ஜி கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    நீங்கள் (பாஜக) இறக்குமதி செயத இந்து தர்மத்தை வேதங்கள் மற்றும் எங்களுடைய ஞானிகள் ஆதரிக்கவில்லை. முஸ்லிம்கள் குடியுரிமையை நீங்கள் எப்படி மறுக்க முடியும்?. இது மோசடியை தவிர வேறு ஒன்றுமில்லை. நீங்கள் போலி இந்துத்துவத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது. தயவுசெய்து இந்து என்ற கார்டை வைத்து விளையாட வேண்டாம்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    • மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் மட்டுமே செழித்து வருவதாக பாஜக விமர்சனம்.
    • மம்தா பானர்ஜி பதில் அளிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

    மேதினிபூர்:

    மேற்கு வங்க மாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதி அருகே உள்ள பூபதிநகரில் ஒரு வீட்டில் குண்டு வெடித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஓலை கூரையுடன் கூடிய அந்த வீடு முற்றிலும் சேதமடைந்ததாகவும், அங்கிருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ள நிலையில் குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தகவல்கள் தெரிவித்துள்ளன.

    இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ், மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் மட்டுமே செழித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அமைதியாக இருப்பது ஏன் என்றும், அவர் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு அமித் ஷா மேற்கு வங்காளத்திற்கு வந்தார்.
    • தற்போது மம்தாவுடன் சமரசம் செய்து கொள்ள பிரதமர் மோடி வருகிறார்.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். ரூ.7800 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் அவர், முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

    கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஹவுரா-நியூ ஜல்பாய்குரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் ஜோகா-தரதாலா இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில், பிரதமரின் மேற்கு வங்க பயணத்தை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளதாவது:

    ஒரு ரெயில் இயக்கத்தை நாட்டின் பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்பதை நாம் கேள்விப்பட்டதே இல்லை. நான் ரெயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளேன். ஆனால் எங்கள் ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங் எந்த ரெயில் இயக்கத்தையும் தொடங்கி வைத்ததில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை மந்திரி அமித் ஷா மேற்கு வங்காளத்திற்கு வந்தார். தற்போது மம்தாவுடன் சமரசம் செய்ய பிரதமர் மோடி வருகிறார். இதனால் மம்தா மற்றும் அவரது கட்சியினருக்கு எதிரான சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணையின் வேகம் குறையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • மசோதாவிற்கு 2 எம்.பி.க்களை தவிர அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்
    • தே.ஜ.க. கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லை

    மேற்கு வங்காளத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் (62). பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருபவர்.

    இந்தியாவின் பாராளுமன்ற தொகுதிகளிலும், மாநிலங்களின் சட்டசபை தொகுதிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான மசோதாவை நேற்று மக்களவையில் பா.ஜ.க. தாக்கல் செய்தது. இந்திய பாராளுமன்றத்திற்கான புதிய கட்டிடத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்கள் தொகை கணக்கெடுப்பும், பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மறுசீரமைப்பும் முடிந்ததும்தான் இந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். 2024 பொதுத்தேர்தலுக்கு பிறகு இதற்கான பணிகள் தொடங்கும் என அரசு தெரிவித்துள்ளது.

    மக்களவையில் 2 உறுப்பினர்கள் நீங்கலாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த எதிர்கட்சிகள் அதன் சில அம்சங்களை குறித்து விமர்சித்தனர்.

    இது குறித்த விவாதத்தின் போது மாநிலங்களவையில் பேசிய டெரிக் ஓ பிரியன் தெரிவித்ததாவது:

    பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பா.ஜ.க. உண்மையில் விரும்பவில்லை. தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்குவது வேறு; வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்குவது என்பது வேறு. மேற்கு வங்காளத்தில் சுகாதாரம், நிதி, நில சீர்திருத்தம், தொழில் துறை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றிற்கு பெண்கள்தான் அமைச்சர்களாக உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லை. நீங்கள் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து புது பாராளுமன்றத்திற்கு மாறலாம். ஆனால் முதலில் உங்கள் கண்ணோட்டத்தை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெரிக் ஓ பிரையன் அரசியலில் நிழைவதற்கு முன் தொலைக்காட்சிகளில் புகழ் பெற்ற போர்ன்விட்டா கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கேள்வியாளராக பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள, அமலாக்கத் துறையின் செயல் இயக்குநர் கொல்கத்தா விரைந்தார்.
    • மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போசை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    ரேஷன் விநியோக ஊழல் வழக்கு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் உள்ள பங்கான் நகராட்சியின் முன்னாள் தலைவருமான சங்கர் ஆதியாவிடம் விசாரணை நடத்த கடந்த 5ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.

    இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை செயல் இயக்குநர் ராகுல் நவீன் கொல்கத்தா விரைந்துள்ளார். நள்ளிரவில் கொல்கத்தா விரைந்த ராகுல் ரவீன் -க்கு துணை ராணுவ படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக கொல்கத்தா சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமலாக்கத்துறையின் விசாரணையில் உள்ள இதர வழக்குகளையும் விசாரிப்பார் என கூறப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து, தாக்குதலால் காயமடைந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போசை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ×