search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளக்கம்"

    சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார். #Jayalalithaa #death #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் புவனேசுவரி சங்கர், செவிலியர் ராஜேசுவரி ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

    ஊட்டச்சத்து நிபுணர் புவனேசுரி சங்கர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-



    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சர்க்கரை நோய் நிபுணர் ஜெயஸ்ரீகோபால் அறிவுரைப்படி ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதை நான் தான் பரிந்துரைத்தேன். ஜெயலலிதாவுக்கு முதல் 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகள் கொடுக்கப்பட்டன.

    மருத்துவமனையில் தயாரித்த உணவு தனக்கு பிடிக்கவில்லை என ஜெயலலிதா கூறியதை தொடர்ந்து அவரது சமையல்காரர் மூலம் மருத்துவமனை சமையல் அறையில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

    எனது பரிந்துரையின் பேரில் அளிக்கப்பட்ட சில உணவுப்பொருட்களை ஜெயலலிதா சாப்பிட மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா விருப்பத்தின் பேரில் மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் அறிவுரைப்படி கிச்சடி, தயிர்சாதம், உருளைக்கிழங்கு வருவல், பிங்கர் சிப்ஸ், கப் கேக், திராட்சை பழம், மாம்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள், மாதுளை, மலை வாழைப்பழம், ஐஸ்கிரீம், இளநீர், லட்டு, ஜாங்கிரி, பாதாம் அல்வா போன்ற உணவுப்பொருட்களை ஜெயலலிதா எடுத்துக்கொள்ள அனுமதித்தேன்.

    இந்த உணவு வகைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், கலோரியை கணக்கிட்டும் தான் வழங்கப்பட்டது. இதனால், ஜெயலலிதாவின் உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

    செவிலியர் ராஜேசுவரி அளித்த வாக்குமூலத்தில், ‘பெரும்பாலான நாட்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. நான் பணியில் இருந்த போது ஜெயலலிதாவை பார்ப்பதற்காக கவர்னர் வித்யாசாகர்ராவ் 2 முறை மருத்துவமனைக்கு வந்தார். முதல்முறை வந்த போது ஜெயலலிதாவுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. இதனால், ஜெயலலிதா அவரை பார்க்கவில்லை. 2-வது முறை வந்தபோது பிசியோதெரபி சிகிச்சையில் இருந்தார். இதனால், அப்போதும் கவர்னரை ஜெயலலிதா பார்க்கவில்லை. ஜெயலலிதாவை கவர்னர் இருமுறை பார்க்க வந்த விவரத்தை அவரிடம் யாரும் கூறவில்லை’ என்று கூறி உள்ளதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  #Jayalalithaa #Death #ApolloHospital #tamilnews
    விமான நிலையங்களில் உள்ள கடைகளில் சர்வதேச பயணிகளுக்கான ஜி.எஸ்.டி. வரி குறித்து மத்திய அரசு தனது விளக்கத்தை தெரிவித்துள்ளது. #GST
    புதுடெல்லி:

    விமான நிலையங்களில் உள்ள வரி விலக்கு பெற்ற கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படும் என்று ஏ.ஏ.ஆர். எனப்படும் ஆணையத்தின் டெல்லி கிளை கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, விளக்கம் கேட்டு வருவாய்த்துறைக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன.

    இந்நிலையில், இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் கூறுகையில், “வரிவிலக்கு பெற்ற கடைகள், ஜி.எஸ்.டி. வசூலிக்காது. அந்த கடைகள், தங்களிடம் பொருட்கள் வாங்கும் சர்வதேச பயணிகளிடம் அவர்களது பாஸ்போர்ட் நகலை மட்டும் கேட்டுப்பெற வேண்டும். அதை ஆதாரமாக வைத்து, மத்திய அரசிடம் ஜி.எஸ்.டி. வரித்தொகையை திரும்பப்பெறலாம். இதுகுறித்த விளக்கத்தை விரைவில் வெளியிடுவோம்“ என்றார்.  #GST #tamilnews 
    தனது அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டது பற்றி மத்திய அரசின் 4-வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
    கட்டாக்:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, தனது அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டது பற்றி அவர் குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:-

    4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், எனது அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எனது அரசுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். அதனால்தான், நாட்டில் 20 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. எங்களது 4 ஆண்டு கால செயல்பாடுகளை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

    மோசமான ஆட்சியில் இருந்து நல்ல ஆட்சி நோக்கியும், கருப்பு பணத்தில் இருந்து மக்கள் பணத்தை நோக்கியும் நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது. ‘அனைவருக்கும் வளர்ச்சி’ என்ற தாரக மந்திரத்துடன் எனது அரசு செயல்பட்டு வருவதை மக்கள் காணலாம். இந்த நாட்டை மாற்ற முடியும் என்று அவர்கள் உணர்ந்துள்ளனர்.

    இந்த அரசு கடுமையான முடிவுகளை எடுக்க பயந்ததே இல்லை. இதுவரை 3 ஆயிரம் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதன்மூலம், கணக்கில் காட்டப்படாத ரூ.73 ஆயிரம் கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கருப்பு பணத்துக்கு எதிரான, ஊழலுக்கு எதிரான இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளால், சிலர் நடுங்கிப் போயுள்ளனர். அதனால், ஓரணியில் திரண்டுள்ளனர்.

    இந்த அரசு, உறுதிப்பாடு மிக்க அரசு. துல்லியமான தாக்குதல் நடத்தும் துணிச்சல் உள்ள அரசு. ஆனால், காங்கிரஸ் கட்சியோ அதிகாரத்தை கைப்பற்றுவது பற்றி மட்டுமே எப்போதும் நினைக்கிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இதற்கிடையே, தனது 4 ஆண்டு கால ஆட்சியின் செயல்பாடுகளை தனது பெயரிலான ‘நமோ’ செயலியில் மதிப்பீடு செய்யுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    மத்திய அரசின் செயல்பாடு, அதன் முக்கிய திட்டங்கள், தங்கள் தொகுதி எம்.பி., எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகள், தொகுதி வளர்ச்சி பணிகள் ஆகியவை பற்றி இந்த கருத்தாய்வில் பங்கேற்று கருத்து தெரிவிக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    மேலும், தங்கள் மாநிலத்திலும், தொகுதியிலும் மிகவும் பிரபலமான 3 பா.ஜனதா தலைவர்களை பட்டியலிடுமாறும் அதில் கேட்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மக்களவை தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருவது தெரிய வந்துள்ளது.

    பா.ஜனதா தலைவர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவுகளில், “மோடி அரசு நலிவடைந்த மக்களுக்காக ஏராளமான நலத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி அவர்களை வளர்ச்சிப் பாதையில் இணைத்துள்ளது. புகழ்பாடுதல், சாதிய, வாரிசு அரசியலுக்கு அவர் முடிவு கட்டி இருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் பெருமை உலக அரங்கில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்காக பிரதமரும், அவருடைய மந்திரிகளும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்” என்று குறிப்பிட்டுள்ளார். 
    ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அந்நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையில், மார்ச் 27-ம் தேதியில் இருந்து முதல் உலை இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.#bansterlite #sterliteprotest
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 1993-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பின் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு அப்போது இருந்தே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிறுவனத்திலிருந்து வெளிவந்த கழிவுகள் காரணமாக அப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிகப்பட்டனர்.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்புதல் வேண்டி விண்ணப்பித்திருந்தது. இதனை எதிர்த்து கடந்த 100 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் மக்களின் போராட்டம் கலவரமாக வெடித்ததில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

    இந்நிலையில், பங்கு முதலீட்டாளர்கள் வேதாந்தா குழுமத்தின் பங்குகளை வாங்குவதில் தயக்கம் காட்ட துவங்கியுள்ளனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகளுக்கு எழுத்துப்பூர்வமான விளக்கம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த மார்ச் 27-ம் தேதி இருந்து முதல் உலை இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு முதல் உலை மூடப்பட்டதாகவும், மூடப்பட்ட உலையின் தற்போதைய மதிப்பு ரூ.2100 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வெளியான பின்பே முடிவு தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #bansterlite #sterliteprotest
    ×