search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎஸ்சி"

    • ஒரே வகையான கருப்பு மை பேனாவை (மையூற்றும், பந்துமுனை, ஜெல் பேனாக்கள்) மட்டுமே உபயோகிக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
    • கருப்பு மை பேனாக்களைத் தவிர மற்ற பேனாக்களை பயன்படுத்தினால் அவர்களுடைய விடைத்தாள் செல்லாததாக அறிவிக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குரூப்-1, 1பி பணிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வில் கையொப்பமிடுதல், விடை எழுதுதல், படம் வரைதல், அடிக்கோடிடுதல், மேற்கோள்காட்டுதல், விடை புத்தகத்தில் பயன்படுத்தாத இடங்கள் மற்றும் தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான விடைகளை அடித்தல் போன்றவற்றுக்கு ஒரே வகையான கருப்பு மை பேனாவை (மையூற்றும், பந்துமுனை, ஜெல் பேனாக்கள்) மட்டுமே உபயோகிக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

    கருப்பு மை பேனாக்களைத் தவிர மற்ற பேனாக்களை பயன்படுத்தினால் அவர்களுடைய விடைத்தாள் செல்லாததாக அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், டி.என்.பி. எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலுக்கு சென்றுவிடும்.
    • தேர்வுகள், தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

    அந்த வகையில், குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கு போட்டித் தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு தொடர்பான அறிவிப்புகள், எழுதிய தேர்வுகளின் முடிவுகள் https://www.tnpsc.gov.in/ என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்திலும் வெளியாகிறது.

    இதன் மூலம் தேர்வர்கள் பார்த்து அறிந்து கொள்கின்றனர். இந்த நிலையில் தற்போது டெலிகிராம் சேனல் பக்கத்திலும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ பக்கத்தை தொடங்கி உள்ளது.

    இந்த பக்கத்தில் தேர்வர்கள் தங்களை இணைத்துக்கொள்ள https://x.com/TNPSC-Office என்ற எக்ஸ் தளப்பக்கத்துக்கு சென்று அதில் டெலிகிராம் சேனல் தொடங்கப்பட்டது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், டி.என்.பி. எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலுக்கு சென்றுவிடும். அதில் தேர்வர்கள் தங்களை இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் தேர்வுகள், தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து உள்ளது.

    • முதல்நிலைத் தேர்வுக்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்தனர்.
    • முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    துணை வணிகவரி அலுவலர், உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர், கூட்டுறவுத் துறை முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறித் துறை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட குரூப்-2, 2ஏ பதவிகளில் 2 ஆயிரத்து 327 காலி இடங்கள் இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூன் மாதம் அறிவிப்பை வெளியிட்டது.

    இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்தனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14-ந்தேதி நடந்து முடிந்தது.

    7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்த நிலையில், 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிந்து 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர்களுக்கான தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சூழலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த 2 ஆயிரத்து 327 காலிப் பணியிடங்களுடன் கூடுதலாக 213 இடங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. நேற்று அறிவித்துள்ளது. இதன் மூலம் குரூப்-2, 2ஏ பதவிகளில் 2 ஆயிரத்து 540 காலிப் பணியிடங்கள் வந்துள்ளன. ஏற்கனவே முதல்நிலைத் தேர்வு முடிந்துவிட்ட நிலையில் இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதியிருந்தனர். அந்தவகையில் ஒரு பணியிடத்துக்கு 228 பேர் போட்டியிடுகின்றனர்.

    • குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கு பதிலாக 2540 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு.
    • இதன் மூலம் கூடுதலாக 213 பேர் குரூப்-2, 2 ஏ பணியிடங்களில் சேருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான முதல் நிலை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெற்றது. இதில் நேர்முக தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முக தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் அடங்கும்.

    இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இதில் தேர்ச்சி பெறுப வர்களுக்கு முதன்மை தேர்வு நடத்தப்பட்டு அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவை எதிர்பார்த்து லட்சக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கு பதிலாக 2540 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர், முழு நேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலை கண்காணிப்பாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், நேர்முக எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப்-2 தேர்வுகள் மூலமாகவே நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாட்டில் மொத்தம் 190 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன.
    • 110 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை வெளியிடாமல் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர்களை தேர்வு செய்வது பல சிக்கல்களை உருவாக்கும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. அப்பணிக்கான போட்டித் தேர்வு வரும் 9-ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன் இதே பணிக்காக நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் முடிவுகளை வெளியிட டி.என்.பி.எஸ்.சி எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 110 பேரை தேர்ந்தெடுப்பதற்காக 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு 10.06.2018-ஆம் நாள் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. வழக்கமாக தேர்வு நடத்தப்பட்டு இரு மாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதற்கு முழுக்க முழுக்க டி.என்.பி.எஸ்.சி அமைப்பு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    டி.என்.பி.எஸ்.சி நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது முதல் தேர்வு நடத்தப்பட்டது வரை ஏராளமான குழப்பங்கள் நிகழ்ந்தன. அதனால், பாதிக்கப்பட்ட தேர்வர்கள் பல வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும் போதும் விசாரணையை ஒத்திவைக்கக் கோருவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் டி.என்.பி.எஸ்.சி, வழக்கை முடிவுக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், 6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் எதிர்காலம் என்னவாகும்? என்பது தெரியாமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 190 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 4 இடங்களைத் தவிர மீதமுள்ள அனைத்து இடங்களும் காலியாகத் தான் உள்ளன. அதனால், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் இப்போது 45 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், 110 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை வெளியிடாமல் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர்களை தேர்வு செய்வது பல சிக்கல்களை உருவாக்கும்.

    6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவர்கள் பணியில் அமர்த்தப்படாமல், புதிதாக தேர்வு செய்யப்படுபவர்கள் பணியமர்த்தப்பட்டால் யாருக்கு பணிமூப்பு வழங்குவது என்பதில் குழப்பம் உண்டாகும். அதைத் தவிர்க்கும் வகையில் 45 மோட்டார் வாகன ஆய்வாளர்களை நியமிப்பதற்கான தேர்வின் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே 2018-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 110 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு முடிவுகளை அறிவித்து அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்றார். 

    • டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் சுமார் 20 லட்சம் பேர் எழுதினர்.
    • தேர்வாணையத்தின் கூட்டம் முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி நடைபெற்றது.

    VAO பில் கலெக்டர் உள்ளிட்ட 6,224 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. 20 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 7:247 மையங்களில் 15.8 லட்சம் தோவர்கள் தேர்வு எழுதி இருந்தனர்

    இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

    இன்று காலை தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த சில மணி நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in, tnpscexams.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதும் முறைகேடுகள் தொடர்கின்றன.
    • தி.மு.க. தலைமை காட்டும் இடங்களில் கையெழுத்திடும் பணியை மட்டும் செய்து கொண்டு அவர் அமைதி காக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. செய்தி தொடர்பாளர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுத் துறைகளில் நான்காம் தொகுதி பணியிடங்கள் லட்சக்கணக்கில் காலியாக இருக்கும் நிலையில், அப்பணிக்காக டி.என்.பி.எஸ்.சி நடத்திய போட்டித்தேர்வுகளின் மூலம் நிரப்பப்படவுள்ள இடங்களின் எண்ணிக்கையை 8,932-லிருந்து 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

    டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதும் முறைகேடுகள் தொடர்கின்றன. அவை குறித்த அனைத்து விவரங்களும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்குத் தெரியும். அவற்றைக் களைய வேண்டும் என்று நினைத்தால், ஊடகங்கள் முன்னிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களிடம் இதுகுறித்து கருத்துக் கேட்கலாம். அதற்கு அமைச்சர் கயல்விழி தயாரா? இப்படியாக டி.என்.பி.எஸ்.சி அமைப்பில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கும் போது சமூகநீதிக்காக குரல் கொடுத்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குறை கூற அமைச்சர் கயல்விழி முயல்வது கண்டிக்கத்தக்கது.

    அவருக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு 3.5 லட்சம் காலியிடங்களை நிரப்புவதுடன், 2 லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க. தலைமை காட்டும் இடங்களில் கையெழுத்திடும் பணியை மட்டும் செய்து கொண்டு அவர் அமைதி காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நடப்பாண்டில் முன்கூட்டியே ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
    • இந்த அட்டவணையில் மேலும் தேர்வு குறித்த அறிவிப்புகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் கீழ் வரும் துறை சார்ந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த பணியிடங்களுக்கு எப்போது அறிவிப்பு வெளியாகும்? அவர்களுக்கான தேர்வு எப்போது நடக்கும்? என்பது உள்ளிட்ட விவரங்களை ஆண்டு அட்டவணையாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும். வழக்கமாக இந்த ஆண்டு அட்டவணை, முந்தைய ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும். ஆனால் நடப்பாண்டில் முன்கூட்டியே ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

    அந்த அட்டவணையில், அடுத்த ஆண்டில் (2025) 7 விதமான தேர்வுகளை நடத்துவது தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 15-ந்தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, ஒவ்வொரு ஆண்டும் அதிகம் பேர் போட்டியிடக் கூடிய குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலை மாதம் 13-ந்தேதி நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.



    அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முகத்தேர்வுடன் கூடிய) தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் 7-ந்தேதியும், தேர்வு ஜூலை மாதம் 21-ந்தேதியும் நடைபெறும் எனவும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முகத்தேர்வு அல்லாத) தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் 21-ந்தேதி வெளியிடப்பட்டு, ஆகஸ்டு 4-ந்தேதி தேர்வு நடத்தப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

    டிப்ளமோ, ஐ.டி.ஐ. தரத்திலான தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஜூன் மாதம் 13-ந்தேதியும், எழுத்துத்தேர்வு ஆகஸ்டு 27-ந்தேதியும் நடைபெற உள்ளது. குரூப்-2, 2 ஏ பதவிகளுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 15-ந்தேதியும், முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28-ந்தேதியும், ஒருங்கிணைந்த சிவில் பணிகளுக்கான குரூப்-5ஏ தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் 7-ந்தேதியும், அவர்களுக்கான தேர்வு டிசம்பர் 21-ந்தேதியும் நடத்தப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அட்டவணையில் மேலும் தேர்வு குறித்த அறிவிப்புகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் எவ்வளவு காலி இடங்கள் உள்ளன? என்பது பற்றிய அறிவிப்பு, அதற்கான அறிவிப்பாணை வெளியிடும்போது தெரிவிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது.

    • குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • 10 ஆயிரம் வரை காலிப்பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.

    டி.என்.பி.எஸ்.சி. சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த மாதம் 11ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் 480 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.

    இதற்கு 10 ஆயிரம் வரை காலிப்பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில், தற்போது கூடுதலாக 2208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 8,932-ஆக அதிகரித்துள்ளது.

    • முதல்நிலை போட்டித்தேர்வு, தமிழகம் முழுவதும் கடந்த 14-ந்தேதி நடைபெற்றது.
    • குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. அந்தவகையில், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பணியிடங்களில் 507 காலிப்பணியிடங்கள் உள்ளன.

    அதேபோல், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் ஆகிய குரூப்-2ஏ பணியிடங்களில் ஆயிரத்து 820 பணியிடங்களும் காலியாக உள்ளன. இதற்கான முதல்நிலை போட்டித்தேர்வு, தமிழகம் முழுவதும் கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. தேர்வுக்கான, விடைக்குறிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில், குரூப்-2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. அதேபோல், குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வானது அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

    • டிஎன்பிஎஸ்சியின் குரூப்-2 தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.
    • வருகிற 30-ந்தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது.

    தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.

    இதில், குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.

    இந்நிலையில், இந்த நிலையில், குரூப்-2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைகுறியீடுகளை டி.என்.பி.எஸ்.சி. https://tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிட்டது.

    இது குறித்து டி.என்.பி.எஸ்.சி தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

    குரூப் 2, 2ஏ தேர்வுக்கான வினாத்தாள்களுடன் கூடிய உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப் பட்ட விடைகள் சரியான விடை 'டிக்' குறியீடு மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

    தேர்வின் போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்.

    உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் ஆகியவற்றை 7 நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும். தபால் வழியாகவோ, இ-மெயில் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

    வருகிற 30-ந்தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது. இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.

    பொது ஆங்கிலத்தில் வினா எண்கள் 177 முதல் 181 வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள், வினா எண் 177-க்கு மேல கொடுக்கப்பட்ட பத்தியில் இருந்து தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 3 ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 பேருக்கும், தனியார் நிறுவனங்களில் 5.08 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • 2 ஆண்டுகளில் மேலும் 75000 பேர் அரசுப் பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என விளக்கம்.

    குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை விட, கூடுதலாக அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 34,384 நபர்களுக்கும், பல்வேறு அரசுத்துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 33,655 நபர்களுக்கும் என மொத்தம் 68,039 நபர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், கடந்த சுதந்திர நாள் விழா உரையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தவாறு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 75,000 இளைஞர்கள் பல்வேறு அரசு துறைகளில் பணி நியமனம் செய்ய ஏதுவாக சம்பந்தப்பட்ட அமைப்புகள், அரசுத் துறைகள் வாயிலாக ஆயத்தப் பணிகள் செவ்வனே நடைபெற்று வருகின்றன.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவரும் குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு துறையும் தங்களது காலிப் பணியிடங்களை நேரடியாகத் தெரிவித்து தேவையான பணியாளர்களை பெற்று வருகிறது.

    தேர்வாணையம் வெளியிடும் தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்படும் காலிப் பணியிடங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. கடந்த மூன்று முறை நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வுகளை ஒப்பிடுகையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் முறையே 9351, 6491 மற்றும் 7301, தேர்வுகள் நிறைவு பெற்று பணியிடங்கள் நிரப்பப்படுகையில் முறையே 11949, 9684 மற்றும் 10139 என அதிகரிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டை பொறுத்தவரையில் 6244 என அறிவிக்கப்பட்டிருந்த காலிப்பணியிடங்கள் தற்பொழுது 6724 என அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை, பணியிடங்கள் நிரப்பப்படும் வரை மேலும் அதிகரிக்கும்.

    இது மட்டுமல்லாமல் பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேர்வாணையம் போன்ற அமைப்புகளின் வாயிலாக இரண்டு ஆண்டுகளுக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தவாறு மேலும் 75,000 இளைஞர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.

    அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொழில் முன்னேற்றம் குறித்து எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகள் காரணமாக, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளின் வாயிலாகவும், "நான் முதல்வன்" திட்டம் உள்ளிட்ட சிறப்பு முயற்சிகளின் காரணமாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் முயற்சியால் 5,08,055 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் "நான் முதல்வன்" திட்டத்தின் வாயிலாக பொறியியல், தொழில்நுட்பம், கலை, அறிவியல், பாலிடெக்னிக் போன்ற படிப்புகள் பயிலும் 27,73,847 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    படித்த, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெற்று தரும் பணியினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×