என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிகே சிவகுமார்"

    • "ராகுல் காந்தி நாட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும், நாட்டிற்குள் ஏதோ ஒரு மோசமான விஷயம் நடக்கிறது"
    • அரசியல் விவாதங்களில் தேசிய நலனை இழுப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

    காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களுடன் ஒத்துப்போகின்றன என்று உணர்த்தும் சமூக ஊடகப் பதிவிற்காக கர்நாடக காவல்துறை அம்மாநில பாஜக ஐடி பிரிவு மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

    கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வையும், ராகுல் காந்தி மேற்கொண்ட அமெரிக்க பயணத்தையும் குறிப்பிட்டு அந்த பதிவு இருந்தது.

    சர்ச்சைக்குரிய அந்தப் பதிவில், "ராகுல் காந்தி நாட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும், நாட்டிற்குள் ஏதோ ஒரு மோசமான விஷயம் நடக்கிறது" என்று அவரின் புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவர் சி.எம். தனஞ்சயா அளித்த புகாரின் பேரில், பெங்களூருவில் உள்ள ஹை கிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் பாஜக ஐடி பிரிவு மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்,"அரசியல் விவாதங்களில் தேசிய நலனை இழுப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

    எங்களுக்கு, நாட்டின் ஒற்றுமை முதலில் முக்கியம் எக்காரணம் கொண்டும் நாட்டின் அமைதி பாதுகாக்கப்பட வேண்டும். இதுபோன்ற முக்கியமான விஷயங்களை யாரும் அரசியலாக்கக்கூடாது. ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் மிக முக்கியமானது" என்று கூறினார். 

    • முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.
    • எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.

    கர்நாடகாவில் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை கிழித்து சபாநாயகர் மீது வீசி பாஜக எம்எல்ஏக்கள் வீசி அமளியில் ஈடுபட்டனர். இதனால் 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று பாராளுமன்றக் கூட்டத்தொடரில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத ரீதியான இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்தார்.

    முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.

    குறிப்பாக இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், தேவைப்பட்டால் அரசியலமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று பேசியிருந்தார்.

    இந்த பாயிண்டை பிடித்த ஜேபி நட்டா, காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் தெற்கில் முஸ்லிம்களுக்கு ஒப்பந்தங்களில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது.

    கர்நாடக துணை முதல்வர் அங்குள்ள சபையில், தேவைப்பட்டால், அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறினார். அங்கு அரசியலமைப்பை துண்டு துண்டாக கிழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல வேண்டும் என்று சீறினார்.

    மேலும் இதுதொடர்பாக அவையில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய அரசியலமைப்பில் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் அமர்ந்து, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று கூறும்போது, அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தனது கருத்துக்கு டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 'நான் அரசியலமைப்பை மாற்றுவேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளின்படி திருத்தங்கள் இருக்கும் என்று பொருள்படவே கூறினேன்.

    இயல்பாக பேசியதை வைத்துக்கொண்டு பாஜக பொய்ப் பிரசாரம் செய்கிறது. எனது வார்த்தைகளை தவறாக சித்தரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். நான் 36 வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். எனக்கும் பொது அறிவு இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில், நான் நட்டாவை விட விவேகமான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. எங்கள் கட்சி ஒரு தேசிய கட்சி. எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.  

    • ராமநகரம் பகுதியை பெங்களூரு தெற்கு என பெயர்மாற்றம் செய்ய சட்டசபை ஒப்புதல் அளித்தது.
    • ஆனால் மத்திய அரசு இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் ராமநகரம் பகுதியை பெங்களூரு தெற்கு என பெயர்மாற்றம் செய்ய அம்மாநில சட்டசபை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் மத்திய அரசு இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி கே.டி.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம். கோடை தொடங்குவதற்கு முன்பு தண்ணீரை சேமிப்பதாக உறுதிமொழி எடுக்க ஒரு பிரசாரம் செய்ய விரும்புகிறோம்.

    நாளை மாலை காவிரி ஆரத்தி எடுப்போம். இது ஒரு அரசு திட்டம். நாங்கள் அரசியலுக்காக அல்ல, வளர்ச்சிக்காக இருக்கிறோம்.

    ராமநகரம் பெங்களூரு தெற்கு என பெயர் மாற்றப்படும். டெல்லியில் சில அமைச்சர்கள் குறும்பு செய்து வருகின்றனர். சட்டப்பூர்வமாக விஷயங்களை எப்படி கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும் என தெரிவித்தார்.

    • 2008-ம் ஆண்டு கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைத்தபோது காங்கிரஸ் சார்பில் சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.
    • 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 8 ஆண்டு காலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தை இழந்திருந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இருவருமே கடுமையாக உழைத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வளர்த்து வெற்றியின் பாதைக்கு கொண்டு சென்ற பெருமை இவர்கள் இருவருக்கும் உண்டு.

    கர்நாடக காங்கிரசில் இருபெரும் தலைவர்களாக இருக்கும் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோர் அரசியலில் கடந்து வந்த பாதை வருமாறு:-

    கர்நாடகாவில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை கொண்ட குருபா ஜாதியை சேர்ந்தவர் சித்தராமையா. இவர் ஆரம்பத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.

    கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தது. அப்போது சித்தராமையா மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னணி தலைவராக இருந்தார். இதையடுத்து அவருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது.

    ஆனால் கூட்டணி ஆட்சியின்போது தனக்கு முதல் மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு முதல் மந்திரி பதவி வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார்.

    மேலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சித்தராமையா அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    பின்னர் 2006-ம் ஆண்டு சித்தராமையா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தனது செல்வாக்கை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியில் முக்கிய இடத்துக்கு வந்தார்.

    2008-ம் ஆண்டு கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைத்தபோது காங்கிரஸ் சார்பில் சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 8 ஆண்டு காலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தை இழந்திருந்தது. காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அக்கட்சி தலைவர்களுடன் சித்தராமையாவும் கடுமையாக உழைத்தார். அவரது உழைப்பின் பலனாக 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது.

    இதனால் சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. 5 ஆண்டு காலம் அவரது ஆட்சி நீடித்தது.

    அதன்பிறகு 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. ஆனாலும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியை அமைத்தது. கூட்டணி அரசில் சித்தராமையாவுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. ஆனாலும் இரு கட்சிகளின் முன்னணி தலைவர்கள் அங்கம் வகிக்கும் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா பணியாற்றினார்.

    2019-ம் ஆண்டு மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. அப்போது சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    எதிர்க்கட்சி தலைவராக சித்தராமையா திறம்பட பணியாற்றினார். பா.ஜனதா ஆட்சியின் முறைகேடுகளை சட்டசபையிலும், மக்கள் மத்தியிலும் சித்தராமையா பகிரங்கப்படுத்தினார்.

    பா.ஜனதாவின் கொள்கைகளை அவர் துணிவுடன் எதிர்த்தார். இதையடுத்து அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகியது. இது காங்கிரசின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    மேலும் சித்தராமையா தேர்தல் பிரசாரத்தின்போது இது தனது கடைசி தேர்தல் என்று கூறி இருந்தார். எனவே தனக்கு மீண்டும் முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சித்தராமையா காத்திருக்கிறார்.

    டி.கே.சிவகுமார்

    கர்நாடகாவில் 2-வது பெரிய சமூகமான ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர் டி.கே.சிவகுமார். இவர் சித்தராமையாவுக்கு துணையாக இருந்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தினார். இவர் மாணவ பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவராக வளர்ந்து வந்தார். 1989-ம் ஆண்டு முதல் சாந்தனூர், கனகபுரா தொகுதிகளில் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றுள்ளார். இவர் நேரு குடும்பத்தின் செல்லப் பிள்ளையாகவும் விளங்கி வருகிறார்.

    டி.கே.சிவகுமார் அரசியலில் ராஜீவ் காந்தியால் அடையாளம் காட்டப்பட்டு சோனியா காந்தியால் வளர்த்தெடுக்கப்பட்டவர்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் பதவியில் இருந்தபோது 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் அதற்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து 2020-ம் ஆண்டு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டார்.

    கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியை தொண்டர்கள் பலம் கொண்ட கட்சியாக மாற்ற டி.கே.சிவகுமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பா.ஜனதா அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். மேலும் விலைவாசி உயர்வை கண்டித்தும், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டார்.

    பா.ஜனதா கட்சியின் குறைபாடுகளை மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதன்மூலம் கர்நாடகாவில் சரிந்து கிடந்த காங்கிரசின் செல்வாக்கை மீட்டெடுத்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியானது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி கொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    எனவே முதல்-மந்திரி பதவி தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டி.கே.சிவகுமார் காத்திருக்கிறார்.

    • காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை கேட்டறிந்து அறிக்கை சமர்பிக்க பார்வையாளர்கள் அறிவிப்பு.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றிய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை கேட்டறிந்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்பிக்க மூன்று பேர் அடங்கிய பார்வையாளர்கள் குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

    இதுபற்றிய அறிவிப்பில், மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொது செயலாளர் தீபக் பபாரியா ஆகியோர் சட்டமன்ற கூட்டத்திற்கு பார்வையாளர்களாக செயல்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய அரசை அமைப்பது, அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி விவாதிக்கப்படுகிறது.

    முதல்வர் பதவி யாருக்கு என்ற விஷயத்தில் கடந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநிலத்துக்கான காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் ஆகியோர் தங்களுக்கு ஆதரவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர். 

    • சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
    • உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தானது.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

    முதல்-மந்திரி பதவி கேட்டு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என 2 பேரும் பிடிவாதமாக இருப்பதால் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது.

    இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றுள்ளனர்.

    அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் டெல்லி செல்வதாக கூறினார். அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார்.

    சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா டெல்லி சென்ற நிலையில் டி.கே.சிவக்குமார் தனது பயணத்தை ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அடுத்த கர்நாடக முதல்-மந்திரி யார் என்பது குறித்து ஆலோசிக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தான நிலையில் இன்று அவர் டெல்லி செல்கிறார்.

    பிரியங்கா காந்தி டி.கே.சிவகுமாரை டெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.

    • யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்து பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது.
    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதல்-மந்திரி பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறது.

    கடந்த 13-ந்தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர்.

    இதையடுத்து யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்து பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். முதல்-மந்திரி பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார்.

    இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பு ஏற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

    கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் சித்தராமையாதான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று எழுதி கொடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பேரில் கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் சோனியா, பிரியங்கா ஆகியோர் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை அறிந்ததும் கார்கேவும் தனது நிலையை மாற்றிக்கொண்டு டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக பேசி வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், அகில இந்திய பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ரன்தீப்சுர்ஜிவாலாவும் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்து இருந்ததாக தெரியவந்துள்ளது.

    சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரில் யார் முதல்-மந்திரியாக தேர்வு பெறுவது என்ற விவகாரம் கர்நாடகா மாநில காங்கிரசை இரண்டு கோஷ்டிகளாக பிளவுபடுத்தி இருக்கிறது. அதன் எதிரொலி டெல்லி காங்கிரசிலும் கேட்க தொடங்கி உள்ளது. டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களும் இந்த விவகாரத்தில் இரு பிரிவாக பிரிந்துள்ளனர்.

    பெரும்பாலான மூத்த தலைவர்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்களின் விருப்பபடி சித்தராமையாவை முதல்-மந்திரியாக தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    டி.கே.சிவகுமார் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அது எதிர்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அந்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். என்றாலும் சோனியா, பிரியங்கா இருவரது ஆதரவும் இருப்பதால் டி.கே.சிவகுமார் தனது நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறார்.

    மாநில காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் தேர்தலில் வெற்றி பெற வைத்து இருப்பதால் தனக்கே முதல்-மந்திரி பதவி தரப்பட வேண்டும் என்று டி.கே.சிவகுமார் தொடர்ந்து பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறார். தனது பிடிவாதத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது.

    சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுப்பதால் 4 நாட்களாக புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடிக்கிறது.

    புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் பொறுப்பை காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கார்கேவிடம் ஒப்படைத்து இருந்தனர். ஆனால் அவரால் இறுதி முடிவு எடுத்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது பேச்சை டி.கே.சிவகுமார் மற்றும் கர்நாடகா மாநில தலைவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

    இதையடுத்து இன்று (புதன்கிழமை) 4-வது நாளாக டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்று காலை ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுத்தே தீர வேண்டும் என்று உறுதியான நிலைப்பாட்டுடன் களத்தில் இறங்கினார்.

    தன்னை வந்து சந்திக்கும்படி சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவருக்கும் அழைப்பு விடுத்தார்.

    அதன்படி 11.30 மணிக்கு சித்தராமையா ராகுலை சந்தித்து பேசினார். கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு தனது பங்களிப்பை அப்போது அவர் விளக்கி கூறினார். ராகுல் தெரிவித்த சில திட்டங்களை ஏற்றுக்கொண்டு சித்தராமையா முதல்-மந்திரி பதவியை தனக்கே தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அவரை தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு ராகுல் காந்தியை டி.கே.சிவகுமார் வந்து சந்தித்தார். 75 வயதாகும் சித்தராமையா ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் இருந்து விட்டார். எனவே காங்கிரசை வெற்றி பெற வைத்த தனக்கே முதல்-மந்திரி பதவி தர வேண்டும் என்று தெரிவித்தார்.

    இரு தரப்பினரின் கருத்துக்களை கேட்ட ராகுல் காந்தி அடுத்தகட்டமாக சோனியா, கார்கேவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பிறகு கர்நாடகா புதிய முதல்-மந்திரி யார் என்பதில் தீர்வு ஏற்படும் என்று தெரிகிறது. வெற்றி பெற்று 4 நாட்கள் ஆன பிறகும் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாததால் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.

    • கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையா பொறுப்பேற்க உள்ளார்.
    • துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்கிறார் என காங்கிரஸ் தெரிவித்தது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.

    கடந்த 5 நாளாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தள்ளது. பெங்களூரில் 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

    இதற்கிடையே, சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் இன்று மாலை டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பினர். அதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரைச் சந்தித்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

    தனக்கு ஆதரவளித்துள்ள எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். அப்போது டி.கே.சிவகுமார் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார்.
    • அப்போது, கர்நாடக அரசு காவிரியில் 22.54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்

    பெங்களூரு:

    தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் நேற்று சந்தித்தார்.

    அப்போது, காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார். எனவே, கர்நாடக அரசு காவிரியில் 22.54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்

    இந்நிலையில், துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் கூறுகையில், கர்நாடக மக்களின் குடிநீர் தேவையை தாண்டி அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம்.

    எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது.

    நீதிமன்ற தீர்ப்புக்கு எப்போதுமே கர்நாடக அரசு கட்டுப்படும்.

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது இரு மாநிலங்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும் என தெரிவித்தார்.

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது.
    • தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    பெங்களூரு:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. ஆனாலும் அங்குள்ள அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. மேலும் இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    இதற்கிடையே கர்நாடக மாநில துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவகுமார், எங்களிடம் நீர் இருப்பு இல்லாததால் தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று கூறினார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையமும் 10ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 108.86 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 219 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதேபோல் 84 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டமும் 78.70 அடியாக உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 18ஆயிரத்து 145 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.

    தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பெங்களூருவில் உள்ள முதல்-அமைச்சரின் இல்லமான கிருஷ்ணாவில் முதல்-அமைச்சர் சித்தராமையா, துணை முதல் அமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான சிவகுமார் ஆகியோர் மைசூரு, மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மைசூரு, மண்டியா மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரை உடனடியாக நிறுத்திவிட்டு கர்நாடக விவசாயிகளுக்கு முடிந்த அளவு தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இந்த கூட்டம் முடிந்ததும் துணை முதல்அமைச்சர் டி.கே.சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்குமேல் எங்களிடம் போதிய நீர் ஆதாரம் இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீர் வெளியேற்றத்தை நிறுத்தக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்திடம் உரிய மனுதாக்கல் விரைவில் செய்யப்படும்.

    மேலும் தண்ணீர் திறப்பின் கட்டுப்பாடு தற்பொழுது வரை மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது. அதை புரிந்து கொள்ளாமல் கர்நாடக மாநில பா.ஜ.க. மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் காங்கிரஸ் அரசு தண்ணீர் வெளியேற்றி வருவதாக குற்றம் சாட்டி அரசியல் செய்து வருகின்றனர்.

    வறட்சி காலத்தில் தற்போது போல் பா.ஜ.க. அரசு காலத்தில் தமிழகத்திற்கு ஆணைய உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு குறித்து கடந்த கால குறிப்புகள் எங்களிடம் உள்ளது. அதை தக்கசமயத்தில் வெளியிட்டு இந்த பிரச்சினையில் அரசியல் செய்துவரும் எதிர்கட்சியினருக்கு தக்க பாடம் புகட்டப்படும்.

    மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என வலியுறுத்தி வரும் எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று விரைவில் கர்நாடக மாநில அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறும்.

    மழை இல்லாததால் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனால் முதலில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டோம். ஆனால் அவர்களை திருப்திப்படுத்த முடியவில்லை. விவசாய தேவைகளை விட குடிநீர் தேவைக்காக தண்ணீரை வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த சூழலில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் பொம்மை அரசுக்கு கடிதம் எழுதினார். இதற்கு முன் அவரது ஆட்சிக் காலத்திலும், தமிழகத்திற்கு நெருக்கடியான காலங்களில் தண்ணீர் வழங்கப்பட்டது. தேவகவுடா பிரதமராக இருந்தபோதும் தண்ணீர் விடப்பட்டது. பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் திறக்கப்பட்டது. இது பற்றிய பதிவுகள் உள்ளன. இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மழை குறைவாக பெய்துள்ளதால் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • மத்தியில் உறுதியான அரசு இருந்தும், மகதாயி, கிருஷ்ணா நதிநீர் விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் கோர்ட்டு, சட்டம், அரசியல் சாசனத்தை நாம் மதிக்க வேண்டும். இதற்கு முன்பு இருந்த அரசுகளும் கோர்ட்டு உத்தரவை மதித்து தண்ணீரை திறந்து விட்டுள்ளன. ஆனால் நமது விவசாயிகளின் நலனை காப்பது எங்கள் மீது உள்ள மிகப்பெரிய பொறுப்பு. தண்ணீர் திறந்து விட்டுள்ளதை கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    இது சகஜம் தான். இத்தகைய நேரத்தில் அரசு சமநிலையில் செயல்பட வேண்டியுள்ளது. கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கவில்லை. கோர்ட்டு உத்தரவை மதித்து தண்ணீர் திறந்துள்ளோம். அதே போல் கர்நாடக விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

    மழை குறைவாக பெய்துள்ளதால் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் அந்த ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இதற்கு முன்பு இத்தகைய நெருக்கடியான நேரத்தில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் எவ்வளவு நீரை திறந்துவிட்டது என்பது குறித்த புள்ளி விவரங்களை எங்களால் வழங்க முடியும்.

    ஆனால் இதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. காவிரி, மகதாயி, கிருஷ்ணா விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளோம். மத்தியில் உறுதியான அரசு இருந்தும், மகதாயி, கிருஷ்ணா நதிநீர் விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை. இதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • வருகிற புதன்கிழமை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை உரிய வாதங்களுடன் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

    பெங்களூரு:

    காவிரி டெல்டா பாசனத்துக்காக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம், 38 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு திறக்கும்படி, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.

    இதற்கு கர்நாடக அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    இந்த நிலையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கர்நாடக மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றியும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதற்காக கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் மந்திரி சபை கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். அவரிடம் தமிழக அரசின் மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி கர்நாடக அணைகளின் நிலவரம் உள்ளிட்டவை குறித்து நாளை(திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இதனிடையே காவிரி நீர் பிரச்சினை, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்துள்ளார்.

    இந்த கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று அறிவித்தார். கூட்டத்தில் மூத்த எம்.பி.க்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

    ×