என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆனைமலை"
- கணக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
- பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஏரிகள் மற்றும் குளங்களில் நடைபெற்று வருகிறது.
உடுமலை:
தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஏரிகள் மற்றும் குளங்களில் நடைபெற்று வருகிறது.
அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட என். மருள்பட்டிகுளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், ராயகுளம், தேன்குளம், சின்ன ஆண்டிபாளையம்குளம், சாமளாபுரம் குளம், ராமியம் பாளையம் குளம், சங்க மாங்குளம், சேவூர்குளம், செம்மாண்டம் பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், உப்பார் அணை உள்ளிட்ட 20 குளங்களில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
இந்த கணக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். நீர்நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகில் புதர்களில் உள்ள பறவைகள் போன்றவை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
உடுமலை வனச்சரகத்தில் உள்ள செங்குளம் மற்றும் பெரியகுளம் பகுதி கணக்கெடுப்பு பணியில் உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், உயிரியளாளர் மகேஷ் குமார், ஆரண்யா அறக்கட்டளை கார்த்திகேயன்,ரவிக்குமார், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக் காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் மாங்குயில், நீல தாளை கோழி, நீர்காகம், புள்ளிச்சில்லை, நாமகோழி, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, மைனா, புதர் காடை, கொக்குகள், மீன்கொத்தி, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவைகள் கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த பணியானது இன்றும் நடைபெற்றது.
- மருத்துவச்சியோ ஏதோ கெடுதி நடப்பதற்கான அறிகுறி கனவாக கண்டது போல் திடுக்கிட்டு எழுந்தாள்.
- மனைவி காளி தேவியின் அம்சம் ஆவார்.
ஆனைமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இளம் கணவன் மனைவி வாழ்ந்து வந்தார்கள். இனிதே வாழ்ந்த இல்லாள் நிறைமாத கர்ப்பிணியானாள். ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பினால் பிரியமனமின்றி அவள் தன் தாய்வீடு செல்லாமல் கணவருடனே இருந்தாள்.
பிள்ளை பேறுகாலம் நெருங்கி விட்டது. இடுப்பு வலி ஆரம்பித்தது. மனைவியின் வேதனையைக் கண்ட கணவன் மருத்துவச்சியை அழைத்து வர புறப்பட்டான். ஆனால் மனைவியை தனியாக விட்டுவிட்டு செல்வதற்கு மனமில்லை. துணைக்கு ஒருவரும் இல்லை.
நன்றாக இருட்டி விட்டது. பகலிலே செல்வதற்கே அச்சமாக இருக்கும் அடர்ந்த காடு, திருடர்கள் துஷ்டர்கள் பயம் வேறு அதிகம். என்ன செய்வது என்று யோசித்தான். அவளுக்கோ பேறுகால வேதனை அதிகமானது.
கணவனின் தவிப்பை புரிந்து கொண்ட அவள் கணவனை பார்த்து, இனியும் நான் இங்கிருப்பது சரியல்ல. என் தாய்வீடு இரண்டு கல் தொலைவில் உள்ளது. அந்த ஊரில் தெய்வீகத் தன்மையுடையவளும் தர்ம சிந்தனையும் கொண்ட ஒரு மருத்துவச்சி இருக்கிறாள் அவள் முக்காலம் உணர்ந்தவள். பின்வருவதை முன் சொல்லும் ஆற்றல் உடையவள். என்னை அங்கு அழைத்துச் செல்லுங்கள். நான் மெதுவாக நடந்து வருகிறேன் என்றாள்.
அவள் சொல்வது அவனுக்கு சரி எனப்பட்டது. இருவரும் புறப்பட்டார்கள். மெதுவாக நடந்து ஒரு கல் தொலைவு சென்றார்கள். மை இருட்டாக இருந்தது. ஆந்தைகளின் அலறலும், கோட்டான்களின் சத்தமும் அச்சத்தை அதிகப்படுத்தியது. அவளுக்கோ பிரசவ வலி அதிகமானது.
கால்கள் பின்னின் ஓரடி எடுத்து வைப்பதும் கடினமாக இருந்தது. அவன் கைதாங்கலாகப் பிடித்து கொண்டான். ஆனாலும் வேதனை அதிகமானதால் என்னால் இனி நடக்க முடியாது என்று உட்கார்ந்து விட்டாள். அவன் என்ன செய்வது என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தான். ஊரை நெருங்கி தான் விட்டார்கள். அதோ விளக்கொளி தெரிந்தது.
ஆனால் அவளோ வேதனை தாங்க முடியாதபடி, என்னால் நடக்க முடியாது, நீங்கள் வரும் வரை நான் பத்திரமாக இருக்கிறேன், நீங்கள் சென்று வாருங்கள், என்று கணவனை அனுப்பி வைத்தாள்.
அவனும் வேறு வழியின்றி மிகுந்த மனக்கஷ்டத்துடன் உன் விருப்பப்படியே சென்று வருகிறேன் நீ தைரியமாக இரு என்று கூறி விரைந்து வெளிச்சம் வந்த திசை நோக்கிச் சென்றான்.
அங்கு சென்று விசாரித்து மருத்துவச்சியின் வீட்டுக் கதவை தட்டினான்.
மருத்துவச்சியோ ஏதோ கெடுதி நடப்பதற்கான அறிகுறி கனவாக கண்டது போல் திடுக்கிட்டு எழுந்து கதவைத் திறந்தாள். அவன் தன் மனைவி பற்றி கூறி உதவிக்கு அவளை அழைத்தான். உடனே அவள் மருத்துவத்திற்கான பொருட்களை எடுத்துக் கொண்டு தயாரானாள்.
அதற்குள் அக்கம் பக்கத்தில் விசாரித்து அந்த ஊர் நாட்டாமை, பூசாரி மற்றும் விவரமான சில ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தான்.
அதற்குள் மருத்துவச்சியும் கதவை பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள். அனைவரையும் அழைத்துக் கொண்டு அவன் விரைந்து நடந்தான்.
ஆனால் அவன் மனைவியை அங்கு காணவில்லை. அப்பொழுது கடவுளே இது என்ன சோதனை நான் கண்ட கனவு நிஜமாகியதே என்று மருத்துவச்சி கதறிக் கொண்டு ஓர் இடத்திற்கு ஓடினாள். அங்கே மிகவும் கோரமான காட்சியைக் கண்டார்கள். அவன் மனைவி இறந்து கிடந்தாள்.
கதறி அழுத அவன் மருத்துவச்சியை நோக்கி தாயே என் மனைவியும் குழந்தையை இப்படி கோரமாக இறந்து கிடப்பதற்கும், நீங்கள் ஏதோ கனவு கண்டதாகச் சொன்னீர்களே அதற்கும் என்ன சம்பந்தம்? என்று வேதனையுடன் கேட்டான். இதைக் கேட்டதும் அந்த மருத்துவ மூதாட்டி தான் கண்ட கொடூரக் கனவு பற்றி கூறினாள்.
உங்கள் மனைவி காளி தேவியின் அம்சம் ஆவார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், இந்த காட்டுப்பகுதியில் வந்த போது அரக்கன் ஒருவன் அவளை வழிமறித்தான். அந்த அரக்கனிடம் இருந்து தப்ப அவள் ஓடினாள். அப்போது ஓடும் வேகத்தில் அங்கு கிடந்த மாட்டுச்சாணியில் கால் வைத்து வழுக்கி விழுந்து விட்டாள். துரத்திக் கொண்டு வந்த வஞ்சகன் அவளைத் தொட முயன்றான்.
காளிதேவியை, உலக ரட்சகி, ஜெகன் மாதா என்று தெரிந்தும் அவளின் கையைப் பிடித்தான். அவ்வளவுதான். மேகம் திரண்டு மின்னலடித்து மின்னல் தாக்கிய அவன் கண் குருடாக அலறிக் கொண்டு ஓடினான். என்ன நடந்தது? என்று உணரும் முன் அவள் கீழே சரிந்தாள்.
கர்ப்பத்தில் இருந்த சிசுவும் உயிரற்று வெளியில் வந்தது. அவள் உடலிருந்து ஆவி ஜோதி ரூபமாகி வானளாவி நின்றது. அதில் கோடி சூரியப்பிரகாசமாய் ஒளிர்ந்தது. மேல் எழும்பிய ஜோதி, காளி போல் ஆக்ரோஷமாக சுழன்று அவனை பிடித்து இழுத்து நெஞ்சைப் பிளந்து கொண்டு வந்து அப்பெண்ணின் காலடியில் போட்டது. இப்படித்தான் நான் கனவு கண்டேன் என்று அந்த மருத்துவச்சி கூறினாள்.
இதை கேட்ட கணவன் அழுது புலம்பினான். இந்த அடர்ந்த காட்டில் என் மனைவியை தனியே விட்டு இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டனே! தெய்வமே இது என்ன சோதனை, என் மனைவியையும் குழந்தையையும் இப்படி பறிகொடுத்துட்டேனே என்று கண்ணீர் விட்டான்.
அங்கு கூடி இருந்தவர்கள் அதிர்ச்சியுற்று செய்வதறியாது திகைத்து நின்றார்கள். அப்பொழுது அவர்கள் எல்லோரையும் பார்த்து ஞானிக்கு நிகரான மருத்துவ முதாட்டி இறந்து போன தாயும் சேயும் சாதாரணமானவர்கள் அல்ல. இவர்கள் அம்மனின் அவதாரம். இவர்கள் சாதாரணமாக பிறக்கவில்லை.
வானத்தில் இருந்து மண்ணிற்கு தேவதைகள் போல தேரில் வந்தவர்கள். விண்ணகத்திலுள்ள தேவர்களும் முனிவர்களும் பூமாரி பொழிவது என் அகக்கண்களுக்குத் தெரிகிறது. இவர்கள் அவதார நோக்கம் நிறைவேறியபடியால் மீண்டும் தெய்வமானார்கள் என்றாள்.
மாட்டுச்சாணியில் வழுக்கி விழாமல் இருந்திருந்தால் வேறு ஏதாவது நடந்திருக்கலாம் என்று அங்கிருந்த நாட்டாமைக்காரர் கூறினார். அதற்கு மூதாட்டி, அய்யா அது அப்படி இல்லை இவளின் மானிடப் பிறவி எடுத்து இந்த சாணியை மிதித்தால் இது சாப விமோச்சனம் அடைந்தது என்று கூறினாள்.
சாணிக்கு சாப விமோச்சனமா? அது எப்படி? என்று அந்த ஊர் பூசாரி கேட்க, மீண்டும் மருத்துவ மூதாட்டி ஒரு விளக்கம் அளித்தாள்.
முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருபாற்கடலை கடைந்த போது அதில் இருந்து காமதேனு கற்பகவிருட்சம் போன்ற பல அரிய பொக்கிஷங்கள் கிடைத்தன.
அதில் காமதேனுவையும், கற்பக விருட்சத்தையும், வெள்ளையானை (ஐராவதம்) ஆகியவற்றை தேவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதைக் கண்டு பொறுக்காத அசுரர்கள் காமதேனுவை கைப்பற்ற ஆசை கொண்டு அதை இழுத்துச் செல்ல முயன்றார்கள். இதை உணர்ந்த காமதேனு பார்வதி பரமேஸ்வரனை தியானித்து அடைக்கலம் வேண்டி சரணடைந்தது. அதற்கு இரங்கி பார்வதி பரமேஸ்வரரும் அஞ்சாதே என்று கூறி ஒரு நந்தவனத்தில் அடைக்கலம் கொடுத்தார்கள்.
இதற்கிடையில் தேவர்கள் தங்கள் காமதேனுவை காணாமல் தேடி அலைந்தார்கள். முடிவில் பார்வதி பரமேஸ்வரனிடம் முறையிட எண்ணி தவம் இருந்தனர். இது கண்ட பார்வதி தேவியும், காமதேனுவைப் பார்த்து உன்னை அழைத்துச் செல்ல தேவர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூற அப்பொழுது காமதேனு அசுரர்கள் பிடித்து இழுத்த போது ஏற்பட்ட பயம் காரணமாக பார்வதி தேவியின் முன்தான் சாணம் போட்டதை இழிசெயலாக கருதி வருத்தப்பட்டது.
அதற்கு பார்வதிதேவி, நீ செய்த இச்செயல் வருந்தத்தக்கதல்ல. இது நான் இந்த பூமியில் அவதாரம் எடுப்பதற்காகவே நடந்தது என்றாள்.
காமதேனுவும் மகிழ்ந்து தேவியிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தது. தாயே ஈஸ்வரி பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல உன் அவதாரத்தோடு என் பெயரும், இந்த நந்தவனமும் புனிதமாக விளங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
தேவியும் ஆகட்டும் என அருள்பாலித்து மேலும் காமதேனுவிடம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் எப்படி உருமாறி அவதாரமெடுத்து வந்தாலும் மக்கள் அடையாளம் கண்டு என்னை போற்றி வழிபடுகிறார்களோ, அதுபோல் உன் அம்சமாக வழிவரும் பசுக்களால் போடப்படும் சாணமும், கோமியமும் புனிதப் பொருளாக கருதப்படும்.
தேவர்களும், மானுடர்களும் அவைகளை துஷ்ட நிவாரணியாக பூஜாதிகாரியங்களுக்குப் பயன்படுத்துவார்கள். உன் அம்சமாக பூமியில் விளங்கும் பசுக்களை கோமாதா என அனைவரும் வணங்குவார்கள் என்று ஆசீர்வதித்தாள்.
காமதேனுவும் அன்னையின் அன்பான அருள்வாக்கினால் பயம் தெளிந்து மகிழ்ச்சியுடன் வணங்கி விடைபெற்றுச் சென்றது. காமதேனுவை தேவர்களிடம் கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியாகச் சொன்னாள்.
இந்த காடே அந்த நந்தவனம். அம்பிகையின் அவதாரமான இந்த பெண் இங்கு கிடந்த புனிதமான சாணியில் வழுக்கி விழுந்து நமக்கெல்லாம் அடையாளம் காட்டி நாம் பூஜிக்கும் அம்மனாக அவதரித்துள்ளாள் என்றாள்.
மேலும் இந்த பெண் பிறவியில் பிரியவிரதன் மகளாகப் பிறந்து அம்பிகையின் குழந்தையாக ஆட்கொள்ளப்பட்டாள் என்றும் மருத்துவ மூதாட்டி கூறினாள். அப்படியா அது என்ன கதை என்று அனைவரும் கேட்டனர். அதற்கும் மூதாட்டி விளக்கம் அளித்தனர். அப்பெண்ணின் கணவன் பிரியவிரதன் யோகமார்க்கமே சிறந்ததென்று இல்லறம் ஏற்காமல் வாழ்ந்து வந்தான். இது கண்ட பிரியவிரதனின் தந்தை மகனிடம் நீ இல்லறம் ஏற்காவிடில் உனக்கு பிதுர்க்கடன் செய்ய கூட புத்திரபேறு இல்லாமல் போய்விடுமே என்றான்.
ஆனால் மகனோ திருமணத்தை மறுக்கவே பிரிய விரதனின் மனம் மாறியது. அவனுக்கு திருமணமானது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் புத்திர பாக்கியம் இல்லை.
இதனால் கவலையடைந்த பிரியவிரதனும் அவன் மனைவி மாலதியும், புத்திர காமேஷ்டி யாகம் செய்து ஈஸ்வரியை தியானிக்க, தாயும் அருள் கனிந்தாள். மாலதி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியானாள்.
அவளுக்கு பேறுகாலத்தின் போது தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்த சிசு, வானத்தை பார்த்த விழிகளுடன் மல்லாந்து இருந்து அது வெறித்துப் பார்த்தபடி உயிரற்றுக் கிடந்தது. இது கண்டு பெற்றோர் துடித்தார்கள்.
அழுது புலம்பி அந்த ஆதிபராசக்தியிடம் முறையிட்டார்கள். குழந்தையை அம்மன் காலடியில் போட்டான் பிரியவிரதன். திருமணம் வேண்டாம் என்றிருந்த என் மனதை மாற்றி என்னை சம்சாரசாகரத்தில் வீழ்த்தி பாசவலைக்குள் போட்டாயே நான் என்ன பாவம் செய்தேன்? இந்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. என் உயிரையும் எடுத்துக்கொள் என புரண்டு அழுதான்.
கருணை உள்ளம் கொண்ட சக்திதேவி மனம் இரங்கி ஜோதி ரூபவதியாக காட்சியளித்தாள். பிரிய விரதா மனம் கலங்காதே. இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் இல்லறம். இக்குழந்தை என்னுடைய அம்சமாக உனக்கு வந்து பிறந்துள்ளது. என் அருளால் இது உயிர்பெறும். உனக்கு நீ விரும்பியது போல் ஆண் குழந்தை பிறக்கும்.
அதுவரை இப்பெண் குழந்தையை அன்போடு வளர்த்துவா. குறிப்பிட்ட காலத்தில் அவள் என்னோடு ஐக்கியமாவாள். பிறகு காமதேனுவின் வேண்டுகோளுக்கேற்ப மறுபடியும் என் அம்சமாக தர்மத்தை காக்க இப்பூமியில் அவதரிப்பாள் என கூறி அருள்புரிந்தாள்.
அதன்படி மாலதியின் குழந்தையாக அவதரித்து இன்று மண்ணில் துஷ்டனை சம்ஹாரம் செய்து தர்மத்தை காக்கும் பொருட்டு காமதேனுவின் மாட்டுச்சாணத்தில் வழுக்கி விழுந்து தெய்வமானாள்.
இவள் அன்னை பராசக்தியின் அவதாரம். மக்கள் குறை தீர்க்கும் அருள் உடையவளாகவும், பிணி தீர்க்கும் மருந்தாகவும் வையகம் போற்றும் மாபெரும் வடிவாகவும், வடிவாம்பிகையாகவும், நீதி வழங்கும் துலாபாரமாகவும் விளங்குவாள் என கூறினாள்.
இது கேட்டு அங்கு கூடி இருந்தவர்கள் ஆறுதல் அடைந்தார்கள். அப்பெண்ணின் கணவனும் சற்று மனதை தேற்றிக் கொண்டு, அவள் தெய்வப்பிறவி உலகை ரட்சிக்க வந்தவள் என்று எண்ணி மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.
விதிக்குட்பட்டதுதான் மனிதப்பிறவி தெய்வமே மனிதன் அவதாரம் எடுத்தாலும் விதிவசத்திற்குற்பட்டு மனித அவஸ்தை பட்டுத்தான் தீர வேண்டும். அதன்படி இப்பொழுது அக்கிரமத்தையும், அதர்மத்தையும் செய்து வந்த இந்த கொடிய அரக்கனை வேரறுத்து சம்ஹாரம் செய்தாள்.
இவள் பராசக்தியே. இப்பெண் தெய்வத்தை மாதர்குலமே போற்றிக் கொண்டாடும். நாம் அனைவரும் இந்த மாபெரும் சக்தியைத் துதித்து வணங்குவோம் என அனைவரும் கைதொழுதனர். அம்மனுக்குரிய மஞ்சள் பட்டாடை அணிவித்து சமாதானப்படுத்தினார்கள்.
அனைவருக்கும் அருள்புரியும் பொருட்டு பராசக்தி தேவி, தியானம், ஜெபம், நிஷ்டை சமாதி முதலிய நான்கு நிலைகளில் ஒன்றான சமாதி நிலையில் வைத்து மண்மேடையாக்கினார்கள். அதன் மேல் அம்மன் உருவத்தை மண்ணால் செய்து வைத்துவிட்டு வந்தார்கள்.
ஆனால் மக்கள் அந்த பக்கம் செல்லவில்லை. சமாதி என்று நினைத்து பயந்தார்கள். இவ்வாறிருக்க ஒரு நள்ளிரவில் சாமக்கோடாங்கி ஒருவன் பூஜை நடத்த மயானத்திற்கு சென்றான். அப்பொழுது அந்த அம்மன் சமாதியான இல்லத்தில் ஓர் அரிய காட்சியைக் கண்டான். மெய்சிலிர்த்தான்.
தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், காளி பைரவியும் அங்கு வழிபாடு செய்வதை பார்த்து அந்த அம்மனின் மகாசக்தியை ஊர் மக்களுக்கு சொன்னான். பிறகு ஊர்க்காரர்கள் அனைவரும் அங்கு சென்று வழிபட ஆரம்பித்தார்கள். நாளடைவில் அது மாசாணி தலமாக மாறி புகழ்பெற்றது.
- இறைச்சிக் கழிவுகளால் ஆறு மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை' சேகரிக்கும் பணியில் 38 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு ள்ளனர். நாள்தோறும் 6 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பை சேகரிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆனைமலை ஆற்றங்கரையின் ஓரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் சிலர் கோழிக் கழிவு மற்றும் உணவு விடுதிகளின் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் ஆற்றங்கரையில் கழிவுகள் குவிந்து ஆற்று நீர் மாசுபடும் அபாயம் உள்ளது.
ஆனைமலை ஆற்றில் செல்லும் தண்ணீர் அம்பராம்பாளையம் பகுதியில் குடிநீர் திட்டத்துக்கு பயன்பட்டு வருகிறது. இதனால் ஆனைமலை ஆற்றங்கரையில் கழிவு கள் கொட்டுவதை தடுக்கவும், நகரில் பல இடங்களில் குப்பையை கொட்டி சுகாதார கேடு ஏற்படுவதை தடுக்கவும் 8 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள்பொருத்தும் பணியை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொ ண்டுள்ளது.
முதற்கட்டமாக 12-வது வார்டில் ஆற்றங்கரைக்கு செல்லும் மயானப் பாதையிலும், 7-வது வார்டில் ராமபுரம் விதியிலும் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆனைமலை பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:- ஆனைமலை ஆற்றங்கரையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் பேருராட்சி சார்பில் இரவு நேரத்தில் காவலாளி நியமிக்கப்பட்டார். இதனால் கழிவுகள் கொட்டுவது ஓரளவு தடுக்கப்பட்டது.
ஆனாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆனைமலையில் 8 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக 2 இடங்களில் பொருத்த ப்பட்டுள்ளது.இதனை செல்போன் மூலம் கண்காணிக்க முடியும். இறைச்சிக் கழிவுகள், ஓட்டல் கழிவுகளை கடை உரிமையாளர்கள் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இதை மீறி ஆற்றங்கரையில் கழிவுகளை வீசினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனம் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- 36 வயது இளம்பெண் அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
- 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்த 36 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது கணவர் லாரி டிரைவராக உள்ளார். இவர்களுக்கு 19-வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத ஆட்டோ டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.மேலும் இளம்பெண் தனது கணவர் வெளியூருக்கு செல்லும் நேரத்தில் ஆட்டோ டிரைவரை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார்.
அப்போது அவர் ஆட்டோ டிரைவருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.இது குறித்து இளம்பெ ண்ணின் கணவர் ஆட்டோ டிரைவருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டு பிடித்து தருமாறு ஆனைமலை போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- அஜீஸ் கிணற்று சுற்றுச்சுவரில் அமர்ந்து செல்போனில் பேசினார்.
- போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
கோவை
கேரள மாநில் ஆலப்பு லாவை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் அஜீஸ் (வயது 29). இவர் கோவை மாவட்டம் ஆனைமலை தேவதாசம்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று மது போதையில் இருந்த அஜீஸ் அந்த பகுதியில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்கு விழுந்தார். அஜீசுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆனைமலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்த அஜீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- சிறுமிக்கு தாழி கட்டினார்.
கோவை, :
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அவர் பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (27). கூலி தொழிலாளி.
இருவரும் உறவினர்கள் என்பதால் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் அவர்களது காதல் சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு தெரிந்தது. இதனால் சிறுமியின் குடும்பத்தினர் 2 பேரையும் கண்டித்துள்ளனர். அதன்பின்னர் சிறுமி கன்னியப்பனிடம் பேசுவதை குறைத்ததாக தெரிகிறது.
சமபவத்தன்று கன்னியப்பன் சிறுமியை கடத்தி திருமணம் செய்ய திட்டமிட்டார்.
இதையடுத்து அவர் சிறுமியை கடத்தி தம்மம்பதி பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு வைத்து சிறுமிக்கு தாழி கட்டினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து சமூக நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சமூக நல அலுவலர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியை திருமணம் செய்த கன்னியப்பனை படித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகேஸ்வரி வீட்டின் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
- தீனதயாளன், மகேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்து தாக்கினார்.
கோவை:
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை திவான்சாபுதூர் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 33). கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (22). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மகேஸ்வரி வீட்டின் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது தீனதயாளன் அங்கு குடிபோதையில் கையில் கத்தியை வைத்து கொண்டு தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த மகேஸ்வரி அங்கு சென்று அவரை கண்டித்து அமைதியாக வீட்டு செல்லுமாறு கூறினார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த தீனதயாளன், மகேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்து தாக்கினார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மகேஸ்வரியை அவரிடம் இருந்து மீட்டனர்.
இதுகுறித்து மகேஸ்வரி ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனதயாளனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
- கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கோவை:
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 67). காய்கறி வியாபாரி.
சம்பவத்தன்று அவர் தனது மருமகளுடன் பெரியபொது பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்றனர். அங்கு மரத்தில் இருந்த பலாபழத்தை பறித்தனர். பின்னர் பரமசிவம் மரத்தின் மீது ஏறி பழங்களை பறித்தார்.
அப்போது பரமசிவம் நின்றிருந்த மரக்கிளை திடீரென முறிந்தது. அவர் மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருடனை போலீசார் திருப்பூரில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- அங்கமுத்து வேலையை முடித்து விட்டு லாரியில் ஆனைமலை உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இரவு லாரியை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார்.
கோவை:
கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் மதுசெனை (வயது 38). இவர் பழைய பேப்பர் கம்பெனி நடத்தி வருகிறார். இவரிடம் ஆனைமலை திவான்சாபுதூரை சேர்ந்த அங்கமுத்து என்பவர் லாரி டிரைவராக வேலை செய்த வருகிறார்.
சம்பவத்தன்று அங்கமுத்து வேலையை முடித்து விட்டு லாரியில் ஆனைமலை உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இரவு லாரியை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார். அப்போது அவருடன் வேலை செய்யும் மற்றோரு லாரி டிரைவர் சுரேஷ் என்பவர் அங்கமுத்துவிற்கு போன் செய்து லாரியின் ஜி.பி.எஸ் திருப்பூரில் காட்டுகிறது. எங்கே செல்கீறிர்கள் என கேட்டார்.
அதற்கு அங்கமுத்து நான் வீட்டில் தான் இருக்கிறேன் என கூறி வீட்டின் வெளியே சென்று பார்த்தார். அப்போது தான் அவருக்கு லாரி திருட்டு ேபானது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தனது உரிமையாளர் மதுசெனையிடம் தெரிவித்தார். அவர் உடனே ஆனைமலை வந்து போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி குறித்து திருப்பூர் குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சோதனை செய்து லாரியையும், லாரியை திருடி வந்த வாலிபரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் லாரி மற்றும் திருடனை ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் லாரியை திருடியது ஆனைமலை திவான்சாபுதூரை சேர்ந்த பஞ்சலிங்கம் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பஞ்சலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லாரி திருட்டு போன ஒரே நாளில் போலீசாரை லாரியை பறிமுதல் செய்து திருடனை கைது செய்தது பொதுமக்கள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்