என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஞ்சய் ராவத்"

    • நாட்டின் வரலாற்றில் அமித் ஷா ஒரு தோல்வியுற்ற உள்துறை அமைச்சர்.
    • ஒருநாள் கூட அந்தப் பதவியை வகிக்க அவருக்கு உரிமை இல்லை.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதல் முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் இரண்டு வெளிநாட்டினரும் அடங்குவர்.

    இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து மகாராஷ்டிராவின் சிவசேனா (UBT) எம்பி சஞ்சய் ராவத் காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் அமித் ஷா ஒரு தோல்வியடைந்த உள்துறை அமைச்சர், அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினார்.

    அவர் கூறியதாவது, பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நாடு முழுவதிலுமிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். அவர்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆறு பேர் அடங்குவர்.

    பயங்கரவாதிகள் சுடுவதற்கு முன்பு தங்கள் மதத்தைக் கேட்டதாகப் பாதிக்கப்பட்ட சிலரின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். பயங்கரவாதிகள் மக்களைக் கொல்வதற்கு முன்பு மதத்தைக் கேட்டால் அதற்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம்.

    வெறுப்பு அரசியல் ஒருநாள் பெரிய பூமரங் போன்று வெடிக்கும். வேறு யாரும் அதற்குப் பொறுப்பல்ல. மேலும் இது மேற்கு வங்காளத்திலிருந்து ஜம்மு-காஷ்மீருக்குப் பரவிவரும் வெறுப்பின் விளைவு. ஆளும் கூட்டணியினர் அரசை அமைப்பதிலும், கவிழ்ப்பதிலும் எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைப்பதிலுமே 24 மணி நேரமும் மும்முரமாக ஆலோசித்து வருகின்றனர்.

    அதன்பின்பு மக்களை எவ்வாறு பாதுகாப்பார்கள்? நாட்டின் வரலாற்றில் அமித் ஷா ஒரு தோல்வியுற்ற உள்துறை அமைச்சர். முழு நாடும் அவரது ராஜிநாமாவை எதிர்பார்க்கிறது. ஒருநாள் கூட அந்தப் பதவியை வகிக்க அவருக்கு உரிமை இல்லை.

    பஹல்காமில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். ஆனால் அங்கு ஒரு பாதுகாப்புக் காவலர் கூட இல்லை.

    இருப்பினும், அமித் ஷா ஸ்ரீநகரில் தரையிறங்கியபோது, அவரது பாதுகாப்புக்காக 75 வாகனங்கள் கொண்ட ஒரு கான்வாய் இருந்தது. 500க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் இருந்தனர். அவருடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவும் இருந்தது. ஒருவருக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஒரு பாதுகாப்புக் காவலர் கூட இல்லை. இதெல்லாம் ஏன் நடந்தது? ஏனென்றால், இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள இரண்டு லட்சம் பணியிடங்களை மோடி அரசு நிரப்பவில்லை. பாதுகாப்புத் துறையின் பட்ஜெட்டை அவர்கள் குறைத்துள்ளனர். 

    காஷ்மீரின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, மோடி அரசு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்கி, ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது. எனவே, நேற்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு முழுப் பொறுப்பாகிறது.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலுமாக முடிவுக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. மோடி-அமித் ஷா நாடாளுமன்றத்தில் நம் அனைவரிடமும் (பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக) பொய் சொல்கிறார்கள்" என்று தெரிவித்தார்.   

    • 18 நாட்கள் என்ஐஏ காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
    • ராணாவை நாடு கடத்துவது 16 வருடப் போராட்டம். அது காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கியது.

    26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான தஹாவூர் உசேன் ராணா இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, ராணாவை மோடி அரசு தூக்கிலிடும் என்று சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    முன்னதாக ராணா வியாழக்கிழமை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறிது நேரத்திலேயே தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அவரை கைது செய்தது. மேலும் 18 நாட்கள் என்ஐஏ காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் பாஜக இதை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் என்று சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார். அவர் கூறியத்தவது, "ராணாவை உடனடியாக தூக்கிலிட வேண்டும், ஆனால் அவர் பீகார் தேர்தலின் போது தூக்கிலிடப்படுவார். ராணாவை நாடு கடத்துவது 16 வருடப் போராட்டம். அது காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கியது. எனவே ராணாவை மீண்டும் கொண்டு வந்ததற்கான பெருமையை யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று கூறினார்.

    பீகாரில் ஆளும் பாஜக-ஜேடியு கூட்டணி, காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டுள்ளது. பாஜக-ஜேடியு கூட்டணி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவியைக் கோரும் வகையில், பாஜக தனது வாக்கு எண்ணிக்கையை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சஞ்சய் ராவத்தின் கருத்துக்கள் வந்துள்ளன.  

    • பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லாத மோடி, தற்போது சென்றது ஏன்?.
    • பாஜக தலைமையை மாற்ற ஆர்எஸ்எஸ் விரும்புவதால் மோடி விலக உள்ளார்.

    பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றார். அங்கு சென்ற அவர் ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்து பேசினார். பாஜக தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் இரண்டு முறை பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    தற்போது மத்திய அமைச்சராகவும் உள்ளதால், விரைவில் பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் "பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லாத மோடி, தற்போது சென்றது ஏன்?. பாஜக தலைமையை மாற்ற ஆர்எஸ்எஸ் விரும்புவதால் மோடி விலக உள்ளார். ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சென்றிருந்தார். அடுத்த 2029ஆம் மக்களவை தேர்தலிலும் மோடிதான் பிரதமர் எனத் தெரிவித்திருந்தார்.

    • சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
    • சஞ்சய் ராவத் சுமார் 100 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    நீதிமன்ற காவலில் மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் 2-ம் தேதியுடன் முடிந்தது. இதனை தொடர்ந்து சஞ்சய் ராவத் எம்.பி.யின் நீதிமன்ற காவலை 9-ம் தேதி வரை நீட்டித்த கோர்ட்டு, அன்று ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.

    அதன்படி, சஞ்சய் ராவத்தின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து, 100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு சஞ்சய் ராவத் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த சஞ்சய் ராவத் பிரபாதேவி நகரில் உள்ள பிரபலமான சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் சிவசேனா கட்சி நிர்வாகிகளும் வழிபாடு நடத்தினர்.

    • மக்களின் ஆசிர்வாதம் சஞ்சய் ராவத்திடம் இருந்தது.
    • உண்மை வெற்றி பெற்றுள்ளது.

    மும்பை :

    பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டபோது, "கோர்ட்டுக்கு நன்றி" என்று கூறினார்.

    இதையடுத்து அவர் சிவாஜிபார்க்கில் உள்ள பால்தாக்கரே சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

    சஞ்சய் ராவத் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது பற்றி கூட்டணி கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) செய்தி தொடர்பாளர் சுஷ்மா அந்தரே நிருபர்களிடம் கூறுகையில், "புலி திரும்பி வந்துவிட்டது. சஞ்சய் ராவத் போன்ற தலைவர்கள் இருக்கும் வரை கட்சி பயப்பட வேண்டியதில்லை" என்றார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரோஹித் பவார், கூண்டில் இருந்து புலி விடுவிக்கப்பட்ட வீடியோவை டுவீட் செய்து, ராவத்துக்கு டேக் செய்தார். உண்மை வென்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சஞ்சய் ராவத்தின் சகோதரரும், விக்ரோலி எம்.எல்.ஏ.வுமான சுனில் ராவத் கூறுகையில், "மக்களின் ஆசிர்வாதம் சஞ்சய் ராவத்திடம் இருந்தது. சட்டசபையில் காவிக்கொடி ஏற்றப்படுவதை காண அவர் மீண்டும் கட்சிக்காக பணியாற்ற தொடங்குவார். உண்மை வெற்றி பெற்றுள்ளது" என்றார்.

    • ஜனநாயகமும், சுதந்திரமும் தற்போது இல்லை.
    • காழ்ப்புணர்ச்சி அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.

    மும்பை :

    சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத். இவர் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சுமார் 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 9-ந் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் அவர் மகாராஷ்டிரா அரசியல் சூழல் மாசடைந்து உள்ளதாக சாம்னா பத்திரிகையில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    வெறுப்பை உணர முடிகிறது. தற்போது அரசியல்வாதிகள் தங்கள் எதிரிகள் உயிரோடு இருக்க கூடாது என்ற நிலைக்கு வந்துவிட்டனர். ஒருவரை ஒருவர் அழிக்க விரும்புவதால் மகாராஷ்டிரா அரசியல் சூழல் மாசடைந்து உள்ளது.

    காழ்ப்புணர்ச்சி அரசியல் முடிவுக்கு வர வேண்டும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியதற்கு, அவர் உண்மையை தான் கூறி உள்ளார் என்றேன். உடனே ஊடகங்கள் நான் அடங்கிவிட்டதாக கூற தொடங்கிவிட்டார்கள். ஜனநாயகமும், சுதந்திரமும் தற்போது இல்லை. அவை பெயரளவில் மட்டுமே உள்ளன. அரசியல் விஷமாகிவிட்டது. இதுபோல ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட இல்லை.

    தற்போது டெல்லி ஆட்சியாளர்கள் அவர்கள் விரும்புவதை கேட்க விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பப்படி செயல்படாதவர்கள் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். சீனா, பாகிஸ்தான் டெல்லி ஆட்சியாளர்களின் எதிரிகள் அல்ல. ஆனால் நேருக்கு நேராக உண்மையை பேசுபவர்கள் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இதுபோன்ற தலைவர்கள் நாட்டின் மாண்பை குறைக்கின்றனர்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • சாவர்க்கர் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்தமான் தனிமை ஜெயிலில் இருந்து இருக்கிறார்.
    • சாவர்க்கர் ஜெயிலில் இருந்து வெளியே வர கையாண்ட யுக்தி தான் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதம்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர் கடந்த 7-ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வீரசாவர்க்கர் பற்றி கடுமையாக பேசினார்.

    வீர சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்காக வேலை பார்த்தவர், அவர்களிடம் இருந்து ஓய்வூதியம் வாங்கியவர், காந்தி, நேரு போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு துரோகம் செய்தவர் என கூறியிருந்தார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க., சிவசேனா கட்சியின் இரு அணிகளும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில், வீர சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசியது தொடர்பாக சஞ்சய் ராவத் சாம்னாவில் கூறியுள்ளதாவது:

    நான் 3 மாதங்கள் ஜெயிலில் இருந்தேன். பல சுதந்திர போராட்ட வீரர்கள் ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் அதற்கான நினைவிடம் உள்ளது. சாதாரண கைதி, ஒரு நாளை ஜெயிலில் கழிப்பதே கடினம். சாவர்க்கர் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்தமான் தனிமை ஜெயிலில் இருந்து இருக்கிறார். அப்போது அவர் சந்தித்த துயரங்கள் ஏராளம்.

    ஆங்கிலேய அரசு அவரை பொய் பணப்பரிமாற்ற வழக்கில் கைதுசெய்யவில்லை. ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுத புரட்சியை தொடங்கியதால் அவரை கைது செய்து அந்தமான் ஜெயிலில் அடைத்தனர்.

    சாவர்க்கர் ஜெயிலில் இருந்து வெளியே வர கையாண்ட யுக்தி தான் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதம். அது மன்னிப்பு கடிதம் என தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கம் சாவர்க்கரை விமர்சிப்பது அல்ல. சாவர்க்கருக்கு எதிராக பேசியதால், ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் கிடைத்த நேர்மறை சக்தி, நம்பிக்கையை சிதைத்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

    • சந்திரசேகர் பவன்குலே நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
    • அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.

    மும்பை :

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கடந்த உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது மந்திரியாக இருந்த போது நாக்பூரில் குடிசைப்பகுதி மக்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த பிரச்சினையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா தான் என உத்தவ் பாலாசாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், " முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா கட்சி தான். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் பவன்குலே, பிரவீன் தட்கே, நாகோ கானர் நாக்பூர் நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.

    துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஆதரவாளர்களான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டேயை அம்பலப்படுத்த விரும்பியது தெளிவாக தெரிகிறது.

    நான் பா.ஜனதா மாநில தலைவராக இருக்கும் போது தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியாக பார்க்க விரும்புகிறேன் என சந்திரசேகர் பவன்குலே கூறிய மறுநாளே நாக்பூர் நில மோசடி அம்பலமாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நிலமோசடியை திசைத்திருப்ப திஷா சலியன் மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    விரைவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யிடம் புகார் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமர் கோவில் பிரச்சினை முடிந்துவிட்டது.
    • ‘லவ் ஜிகாத்' என்ற புதிய பிரச்சினை கிளப்பப்பட்டு உள்ளது.

    மும்பை :

    உத்தவ் பால்சாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அந்த கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

    ராமர் கோவில் பிரச்சினை முடிந்துவிட்டது. அதை சொல்லி இனிமேல் ஓட்டு வாங்க முடியாது. எனவே 'லவ் ஜிகாத்' என்ற புதிய பிரச்சினை கிளப்பப்பட்டு உள்ளது. தேர்தலில் வெற்றி பெறவும், இந்துக்கள் இடையே பயத்தை ஏற்படுத்தவும் 'லவ் ஜிகாத்' ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா?. நடிகை துனிஷா சர்மா, ஷரத்தா கபூரின் மரணம் லவ் ஜிகாத் என கூறமுடியாது.

    எந்த மதம், சமூகத்தை சேர்ந்த பெண்களும் வன்முறைக்கு ஆளாக கூடாது. 2023-ல் நாடு அச்சம் இல்லாததாக மாறும் என நம்புகிறோம். அதிகாரத்தின் அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது.

    ராகுல் காந்தியின் யாத்திரை வெற்றி பெறும் எனவும், அதன் இலக்கை அடையும் என நம்புகிறோம். 2022-ம் ஆண்டு ராகுல் காந்தியின் தலைமைக்கு புதிய ஒளியையும், அவதாரத்தையும் கொடுத்தது. 2023-லும் அது தொடர்ந்தால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் அரசியல் மாற்றத்தை காண முடியும். பிரதமர் மோடி குறுகிய மனப்பான்மையை விட வேண்டும் என்கிறார். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் குறுகிய மனப்பான்மையுடன், எதிர்க்கட்சிகளின் உரிமைகளையும் அங்கீகரிக்க விரும்பவில்லை.

    இந்து, முஸ்லிம் இடையே பிளவை தூண்டுவது மற்றொரு பிரிவினைக்கு வழிவகுக்கும். மோடியும், அமித்ஷாவும் வெறுப்பு மற்றும் பிரிவினையை விதைக்க கூடாது. இந்துக்களை விழிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது தான் பா.ஜனதாவின் கொள்கை. அதற்காக சமூகத்தில் வெறுப்பையும், பிரிவினையையும் உருவாக்க வேண்டும் என்ற அர்த்தமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவசேனா கட்சியில் எந்த பிளவும் ஏற்படவில்லை.
    • சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வெளியேறினர்.

    மும்பை :

    சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு இரண்டு அணியினரும் உரிமை கோரி வருகின்றனர்.

    இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக ஷிண்டே அணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தனர். இது தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.

    இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவசேனா கட்சியில் எந்த பிளவும் ஏற்படவில்லை. சிவசேனா சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பிரிந்துவிட்டனர். இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமில்லை.

    இந்த பிளவு கானல் நீராக தான் உள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வெளியேறினர். ஆனால் கட்சி அப்படியே தான் இருக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாகும் வரை தேர்தல் சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அவசரம் காட்ட கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது.

    • 2024 பொதுத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல்காந்தி கடும் சவாலாக இருப்பார்.
    • இந்த யாத்திரையில் நான் அரசியல் பார்க்கவில்லை.

    ஸ்ரீநகர் :

    தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    அதன்படி பல மாநிலங்களை கடந்த ராகுல்காந்தியின் பாதயாத்திரை தற்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது. ஜம்முவின் சந்த்வால் பகுதியில் இன்று பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பங்கேற்றார்.

    ராகுல்காந்தியுடன் இணைந்து சஞ்சய் ராவத் நடைபயணம் மேற்கொண்டார். ராகுல்காந்தியுடன் 13 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்ட சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், சித்தாந்த ரீதியாகவும், அரசியல் வேறுபாடுகள் இருந்தபோது ராகுல்காந்தி தனது ஆளுமை குணங்களை தற்போது வெளிக்காட்டியுள்ளார். 2024 பொதுத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல்காந்தி கடும் சவாலாக இருப்பார். ராகுல்காந்தி அதிசயங்களை நிகழ்த்தப்போகிறார்.

    இந்திய பிரதமராகும் தகுதி ராகுல்காந்திக்கு உள்ளது. 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைவராலும் நடைபயணம் மேற்கொள்ள முடியாது. இந்த நடைபயணத்திற்கு திடமான மன உறுதியும், நாட்டின் மீதான அன்பும் தேவை. நாட்டின் மீதான அக்கறையை ராகுல்காந்தி வெளிப்படுத்தியுள்ளார். இந்த யாத்திரையில் நான் அரசியல் பார்க்கவில்லை. பிரதமராக தனக்கு விருப்பமில்லை என்று ராகுல்காந்தி ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால், ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று மக்கள் விருப்பப்பட்டால் அவருக்கு வேறு வழியில்லை' என்றார்.

    • ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்தது.
    • தேர்தல் ஆணையம் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே கூறினார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கட்சிக்கு எதிராக திருப்பினார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த அவர், பா.ஜ.க.வுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். அதன்பிறகு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது.

    கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.

    அதே சமயம் உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்ற வாதத்தை முன்வைத்தது. இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு சிவசேனா பெயர், தேர்தல் சின்னத்தை வழங்கி உத்தரவிட்டது.

    சிவசேனா பெயர், தேர்தல் சின்னம் வழங்கக்கோரி உத்தவ் தாக்கரே பிரிவு விடுத்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

    ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக அங்கீகாரம் செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

    இந்நிலையில், சிவசேனா கட்சி பெயர், சின்னம் ரூ.2,000 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது என உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிவசேனா கட்சி பெயர், சின்னத்தைப் பெறுவதற்கு இதுவரை 2000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதியாக கூறுகிறேன். இது முதற்கட்ட புள்ளிவிவரம் மட்டுமே, அதேசமயம் இது 100 சதவீதம் உண்மை. தொடர்ந்து பல விஷயங்கள் விரைவில் வெளிவரும். நாட்டின் வரலாற்றில் இப்படி நடந்ததில்லை என பதிவிட்டுள்ளார்.

    ×