என் மலர்
நீங்கள் தேடியது "சுகாதாரத்துறை"
- நன்னீரில் வளரக்கூடிய லார்வா, கொசு ஓழிப்பு பணியில் வேகம் காட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மிகுந்த கவனமுடன் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
மழை காரணமாக டெங்கு பாதிப்பு மெல்ல தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது. இதனால் நன்னீரில் வளரக்கூடிய லார்வா, கொசு ஓழிப்பு பணியில் வேகம் காட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தாலுகா அளவில் டாக்டர், செவிலியர், மருத்துவ பணியாளர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. மாநில எல்லையில் கேரளா மாநிலத்தில் இருந்து வருவோர் உடல் நலம் பரிசோதிக்கப்படுகிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலர் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல் வருமாறு:-
அவ்வப்போது மழை பெய்வதால் வரும் நாட்களில் டெங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஓழிப்பு பணியை வேகப்படுத்த வேண்டும். கொசு இனப்பெருக்கம் அதிகமுள்ள இடங்களை கண்டறிந்து காலை, மாலை இருவேளையும் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.
டெங்கு வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளியின் உடல்நிலையை, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறப்பு என்பது கூடவே கூடாது. மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மிகுந்த கவனமுடன் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலை ஏற்று கடந்த, 15-ந்தேதி டெங்கு சிறப்பு வார்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.தற்போதைய நிலவரப்படி, 9பேர் டெங்கு வார்டில் சிகிச்சையில் உள்ளனர்.
அனைவரும் ஆரோக்கியமுடன் மருந்து, மாத்திரை எடுத்து வருகின்றனர். ஓரிரு நாளில் உடல் நலம் தேறி வீடு திரும்புவர் என அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.
- டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொது மக்களிடயே அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.
அதன்படி பொன்னமராவதி பாப்பாயி ஆட்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- மர்ம காய்ச்சலுக்கு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சுகாதாரத்துறையினர் தீவிர காய்ச்சல் முகாம்கள் நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் பெர்னட். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் அக்சரன் என்ற மகன் உள்ளார். அக்சரன் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கு சென்று வந்தான்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அக்சரனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவனை பெர்னட் கூடங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து அக்சரனுக்கு காய்ச்சல் குணமாகாமல் இருந்துள்ளது.
நேற்று காலை சிறுவன் அக்சரனின் உடல்நிலை மிகவும் மோசம் அடையவே கூடங்குளம் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அவனை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் அக்சரனை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அக்சரன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஏற்கனவே 10 மாத குழந்தை இறந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் நாங்குநேரி பரப்பாடி பகுதியில் 6 வயது சிறுமி இறந்துவிட்டார். இந்நிலையில் நேற்று சிறுவன் அக்சரன் இறந்துள்ளான். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே மாவட்டம் முழுவதும் சுகாதராத்துறையினர் தீவிர காய்ச்சல் முகாம்கள் நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது.
- குழந்தையின் உடல் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்து போன பச்சிளம் குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் வைத்து ஒப்படைத்த சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,
பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்ற சம்பந்தப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையை அணுகி உள்ளார்.
புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதுகாப்பிற்காக மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே வேளையில் குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது. அதன்பின், குழந்தையின் உடல் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குழந்தையின் தந்தை போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியதன் அடிப்படையில் குழந்தை உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அட்டைப்பெட்டியில் வைத்து ஒப்படைக்கப்பட்டது தவறானது என்பதால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பச்சிளம் குழந்தையை அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது தவறு எதுவும் இல்லை.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.
சென்னை:
கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனா பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.
குறிப்பாக, அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அறிகுறிகள் உள்ளோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்துமாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார்.
அதன்படி, தினமும் 350-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் யாருக்கு எல்லாம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தலை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தீவிர நுரையீரல் தொற்றுக்கு உள்ளானவர்கள், இன்புளூயன்சா போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- குழந்தைகள் தட்டம்மை போன்ற அறிகுறிகளுடனும், காய்ச்சலுடனும் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்.
- வேக வைக்காத பச்சையான உணவுகளையோ அல்லது வெளியில் சாப்பிடுவதையோ தவிர்க்க வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் 9,121 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் இறந்துள்ளனர்.
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கடந்த 8-ந்தேதி வரை 461 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடகிழக்கு பருவமழை இந்த மாதமும் பெய்யும் என்பதால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவும் என்றும், இன்னும் 2 வாரங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை இன்னும் முடியவில்லை. மேலும் தற்போது குளிர்காலமும் தொடங்கி விட்டது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தினமும் 10 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்னும் 2 வாரங்கள் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வயிற்றுப்போக்கு, டைபாய்டு, வைரஸ் காய்ச்சலும் அதிகரித்து வருகிறது.
மேலும் குழந்தைகள் தட்டம்மை போன்ற அறிகுறிகளுடனும், காய்ச்சலுடனும் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். சுவாச பிரச்சனைகள் மற்றும் நிமோனியா காய்ச்சலும் அதிகரித்து வருகிறது. அதற்காக பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். நன்கு காய்ச்சிய வெந்நீரை குடிக்க வேண்டும். வேக வைக்காத பச்சையான உணவுகளையோ அல்லது வெளியில் சாப்பிடுவதையோ தவிர்க்க வேண்டும். இதன் மூலம் காய்ச்சல் பரவலில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.
- சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தற்போது பல நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்திவிடும்.
குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம், உத்தர கன்னடம் மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் குரங்கு அம்மையால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இதில் 8 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 13 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலையை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர். நிரஜ் கூறியதாவது:-
குரங்கு அம்மையால் பாதிக்ப்பட்ட 21 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்த குரங்கு அம்மை பரவுகிறது. எனவே வனப்பகுதிக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். குரங்கு அம்மை ஏற்பட்டால் அடுத்த 3 முதல் 5 நாட்களில் அதிக காய்ச்சல் இருக்கும். 2 வது முறையாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தப்போக்கு அறிகுறிகள் இருக்கும், உடல் வெப்பநிலையும் உயரக்கூடும் எனவே பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகா, தமிழகம் இடையே தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் சூழ்நிலையில் கர்நாடகாவில் குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. அத்தகைய அறிகுறிகளுடன் கூட யாரும் இல்லை. ஆனாலும் அண்டை மாநிலங்களில் அத்தகைய பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை பொது சுகாதாரத்துறை மேற்கொள்ளும். கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கண்காணிப்பு பணிகளின் தொடர்ச்சியாக தற்போதும் தேவையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடும். அதே போன்று குரங்கு அம்மை குறித்த விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை இவ்வாறு அவர் கூறினார்.
- வருங்கால மனைவியுடன் திருமணத்துக்கு முந்தைய 'போட்டோசூட்டை' வித்தியாசமாக எடுக்க திட்டமிட்டார்.
- சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றியவர் அபிஷேக். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஒப்பந்த அடிப்படையில் இந்த ஆஸ்பத்திரியில் பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில் அவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அபிஷேக் தனது வருங்கால மனைவியுடன் திருமணத்துக்கு முந்தைய 'போட்டோஷூட்டை' வித்தியாசமாக எடுக்க திட்டமிட்டார்.
அதன்படி தான் பணியாற்றும் பரமசாகர் அரசு ஆஸ்பத்திரியில் போட்டோஷூட் நடத்த முடிவு செய்தார். அப்போது அறுவை சிகிச்சை பிரிவில் வைத்து நோயாளிக்கு அபிஷேக் அறுவை சிகிச்சை செய்வது போலவும், அவருக்கு மணப்பெண் உதவுவது போலவும், அறுவை சிகிச்சை முடிந்ததும் நோயாளி எழுந்து அமர்வது போலவும் போட்டோஷூட் நடத்தி உள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

இந்த போட்டோஷூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதும் அதனை பார்த்து அனைத்து தரப்பினரும் டாக்டர் அபிஷேக்கை கடுமையாக கண்டித்தனர்.
கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் டாக்டர் ஒருவர், போட்டோஷூட் நடத்தி மருத்துவ பணிக்கு இழிவு ஏற்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் ஆபரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் நடத்திய டாக்டர் அபிஷேக்கை பணி நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ரேணுகா பிரசாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி பரமசாகர் அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு நோட்டீசும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பறவை காய்ச்சலால் பறவைகள் உயிரிழந்திருப்பது ஆய்வில் உறுதிசெய்யப்பட்டது.
- ஆந்திராவில் பறவை காய்ச்சலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், பொடலகுரு மண்டலம் சட்லகுட்டா, கும்மல்லா திப்பா ஆகிய பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கி 100-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன.
திருப்பதி மாவட்டம் போல் புலிக்காட் ஏரியில் இருந்து புலம் பெயர்ந்த பறவைகள் மூலம் இந்த நோய் பரவியுள்ளது. ஆந்திராவில் இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் காரணமாகவே பறவைகள் உயிரிழந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்கும் படி தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
- சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டது.
போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.
இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
அதன்படி, சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டது.

சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை தொடங்கியது.
பல்லாவரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
சொட்டு மருந்து செலுத்தும் முகாம்களில் ஏராளமான தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்திக் கொண்டு சென்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
- நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு உத்தரவு.
- மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.
தேசிய சுகாதாரத்துறை வழங்கிய நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு போன்றவற்றை தினசரி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மின் வாரியத்துடன் ஆலோசனை நடத்தி மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டம்.
குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது மக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை வெளியில் வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெயிலில் பணிபுரிவோர் தினசரி 5 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகமாக வெயிலில் இருந்தால் ஹீட் ஸ்ட்ரோக், உடலில் நீர்சத்து குறைந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
- சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் நீர் கட்டியை போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும்.
- வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இனிவரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பொதுமக்களுக்கு அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தட்டம்மை, சின்னம்மை போன்ற வெப்பம் தொடர்பான நோய்கள் அதிக அளவில் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. தட்டம்மை நோய்க்கு காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல் ஆகியவை அறிகுறிகளாகும். முகம் மற்றும் காதின் பின்பகுதிகளில் வேர்க்குரு போன்ற அறிகுறிகள் தோன்றி சிவப்பு புள்ளிகளாக உடல் முழுவதும் பரவி காணப்படும். கண்கள் சிவந்து வீக்கம் ஏற்படும்.
சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் நீர் கட்டியை போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர் கோர்த்து காணப்படும். கொப்பளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர் நீர் வறண்டு கொப்பளங்கள் உதிரும். இந்த நோய் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் பரவும்.
எனவே பொதுமக்கள் வெயில் காலத்தில் இந்த நோய்களில் இருந்து தங்களை காக்க மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும், இளநீர், மோர் மற்றும் இயற்கை பழச்சாறுகளை குடிக்கலாம். திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி பழங்கள் போன்ற நீர் சத்து உள்ள பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மெல்லிய தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீர் குடித்தால் ரத்தக் குழாய்கள் சுருங்கி, உடலின் வெப்பம் அதிகரிக்கும்.
எனவே கோடை காலத்தில் ஐஸ் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.