என் மலர்
நீங்கள் தேடியது "ஆறுமுகநேரி"
- கொடியேற்று நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கினார்.
- நிறைவு நாளன்று புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி நடக்கிறது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மடத்து விளை புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் தொடக்கமான கொடியேற்று நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கினார்.
ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார், சிங்கித்துறை பங்குத்தந்தை ஷிபாகரன், பெரியதாழை துணை பங்கு தந்தை கிங்ஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மடத்துவிளை ஊர் நல கமிட்டி தலைவர் செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் தினசரி திருப்பலி, மறையுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 2- வது நாளான புனித வின்சென்ட் தே பவுல் மற்றும் மரியாவின் சேனையாளர்கள் சார்பில் இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து பத்து நாள் திருவிழாவில் இளையோர் தினம், திருமணமானவர்கள் தினம், முதியோர் தினம், பக்த சபையார் அன்பியங்கள் தினம், தொழிலாளர்கள் தினம், ஒப்புரவு தினம், ஆலய அர்ச்சிப்பு தினம், பங்கு மக்கள் தினம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிறைவு நாளன்று புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குத்தந்தை அலாசியஸ் அடிகளார் மற்றும் மடத்துவிளை ஊர்நல கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
- மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
- நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலி, புதுநன்மை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
விழா நாட்களில் தினசரி திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தன. விழாவின் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தினம், இளையோர் தினம், திருமணம் ஆனவர்கள் தினம், முதியோர் தினம், பக்த சபையார் அன்பியங்கள் தினம், தொழிலாளர்கள் தினம், ஒப்புரவு தினம், ஆலய அர்ச்சிப்பு தினம், பங்கு மக்கள் தினம் என்று கொண்டாடப்பட்டது.
10- வது நாளான நேற்று காலையில் திருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் புதுநன்மை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மணப்பாடு மறை மாவட்ட முதன்மை குரு ஜான் செல்வம், சேர்ந்தபூமங்கலம் பங்குதந்தை செல்வன், அடைக்கலாபுரம் பங்குத்தந்தை பீட்டர் பால் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலையில் புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பரபவனி தொடங்கியது.
நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார், மடத்துவிளை ஊர்நல கமிட்டி தலைவர் செல்வம் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர். சப்பரபவனி மெயின் பஜார் வழியாக சண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு சென்றது. அங்கு சிறப்பு வழிபாடு முடிந்தபின் மீண்டும் சப்பரபவனி தொடங்கி புனித சவேரியார் ஆலயம் வந்தடைந்தது.
நிறைவு நிகழ்ச்சியாக இன்று காலையில் நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து மதியம் அசனம் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடு களை மடத்துவிளை ஊர்நல கமிட்டியினர், ஆறுமுகநேரி பரதர் சமுதாய கமிட்டி தலைவர் செல்வி உள்பட பலர் செய்திருந்தனர்.
- மருத்துவ முகாமிற்கு ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.
- மருத்துவ முகாமில் 280 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவமுகாம் ஆறுமுகநேரி கா.ஆ. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாசி, ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சீனிவாசன் மற்றும் டாக்டர்கள் அம்பிகாபதி, அகல்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் மகராஜன், ஜெய்சங்கர், ஆனந்த ராஜ் உள்ளிட்ட குழுவினர் சிகிச்சைக்கான நடவடிக்கை களை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி சுகாதார பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன், நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் முகாமை பார்வையிட்டனர்.
இதன் மூலம் 280 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர். இவர்களில் 15 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், கண் சிகிச்சை, பல் சிகிச்சை மற்றும் நீரிழிவு, இரப்பை, குடல் நோய், சிறுநீரக பரிசோதனை ஆகியவை நடந்தன. இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன.
- காயல்பட்டினம் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் 7- வது ஆண்டு புறா பந்தயம் நடைபெற்றது.
- மதுரையிலிருந்து 210 புறாக்கள் பந்தயத்திற்கு விடப்பட்டன.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் 7- வது ஆண்டு புறா பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை அருகே உள்ள ஓகுர் மைதானத்தில் இருந்து மொத்தம் 205 புறாக்கள் பறக்க விடப்பட்டன.
இதில் சிவகங்கை-காயல்பட்டினம் இடையிலான 160 கிலோ மீட்டர் விமான தூரத்தை காயல்பட்டினம் கே.டி.எம். தெருவை சேர்ந்த அகமது ரியாஸ் என்பவரது புறா 2 மணி நேரம் 2 நிமிடம் 10 வினாடியில் கடந்து வந்து முதல் இடத்தை வென்றது.
கூடுதலாக 30 வினாடிகளில் வந்த சுலைமான் நகரை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரது புறா 2- வது இடத்தையும், அதனையடுத்து 10 வினாடி கழித்து வந்த நைனார் தெருவை சேர்ந்த முகமது ஹாஷிம் என்பவரது புறா 3-வது இடத்தையும் பிடித்தன. இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை புறா பந்தய கிளப் நிர்வாகிகள் அகமதுரியாஸ், லெப்பை, முகமது ஹாஷிம், அகமது, இப்னு மாஜா ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல் ஆறுமுகநேரி ஸ்டார் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் மதுரையிலிருந்து 210 புறாக்கள் பந்தயத்திற்கு விடப்பட்டன.
இவற்றில் 160 கி. மீ. சாலை தூரத்தை 1 மணி 54 நிமிட நேரத்தில் கடந்து வந்த லட்சுமி மாநகரத்தை சேர்ந்த ஜோஸ் வினின்ஸ்டன் என்பவரது புறா முதல் இடத்தை பிடித்தது. மேலும் இவரது இரு புறாக்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களை பிடித்தன. இதற்கான ஏற்பாடுகளை கிளப் நிர்வாகிகள் நாராய ணன், ராஜ், பட்டு ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
- ரெயில்வே வளர்ச்சி குழு நிர்வாகிகள் கூட்டம் அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
- திருச்செந்தூர் - சென்னைக்கு நேரடி விரைவு ரெயில் இயக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் ரெயில்வே வளர்ச்சி குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தங்கமணி முன்னிலை வகித்தார். அமிர்தராஜ் வரவேற்று பேசினார்.
நெல்லை - திருச்செந்தூர் இடையில் மின்சார ரெயில் திட்டத்தை வேகப்படுத்தி செயல்முறைக்கு கொண்டு வந்துள்ள தென்னக ரெயில்வே மண்டல மேலாளரை பாராட்டியும், இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நூற்றாண்டு விழா கொண்டாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் நெல்லை - திருச்செந்தூர் இடையிலான ரெயில்வே திட்டத்தை கொண்டுவர அயராது பாடுபட்ட அப்போதைய நெல்லை ஜில்லா போர்டு மெம்பரான ஆறுமுகநேரியை சேர்ந்த டோகோ. பொன்னையா நாடாருக்கு நினைவுத்தூண் அமைப்பது என்றும், ஆறுமுகநேரி ரெயில் நிலைய அணுகு சாலையை தார் சாலையாக மாற்றக் கோரியும், திருச்செந்தூர் - சென்னைக்கு நேரடி விரைவு ரெயில் இயக்க வலி யுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் முருகேச பாண்டியன், சுகுமார், நடராஜன், வெங்க டேசன், மனோகரன்,கற்பக விநாயகம், கணேஷ் மூர்த்தி, சண்முக சுந்தரம், கந்தபழம், குருசாமி, சீனிவாசன், தங்கேஸ்வரன், சுந்தர், லிங்க பாண்டி, கணேசன் ஆகி யோர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.
- குப்பைகளை கொட்டுவதற்காக வெள்ளமடை அருகே 10 ஏக்கரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
- ஆறுமுகநேரி பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
ஆறுமுகநேரி:
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரிக்கு நேற்று கள ஆய்வு பணிக்காக வருகை தந்தார்.
அவருடன் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோரும் வந்தனர். இவர்களை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணை தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை அகற்றும் பணி முடிந்ததும் அங்கு வணிக வளாகம், பஸ் நிலையம், காய்கறி சந்தை ஆகியவற்றை அமைப்பது என்றும், பேரூராட்சியின் குப்பைகளை கொட்டுவதற்காக வெள்ளமடை அருகே 10 ஏக்கரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மெயின் பஜாரில் உள்ள காமராஜர் பூங்கா மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
மேலும் தார் சாலைகள் அமைக்கும் பணிக்காக ரூ.7 கோடி ஒதுக்கப்படுவதாகவும், விரைவில் ஆறுமுகநேரி பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், மாரியம்மாள், தீபா, சந்திரசேகர், சிவகுமார், சகாய ரமணி, நிர்மலா தேவி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து ஆறுமுகநேரி பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பணிக்காக 15 நவீன பேட்டரி வாகனங்களை அமைச்சர் நேரு வழங்கினார்.
பின்னர் அமைச்சர்கள் கே.என். நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது ஆறுமுகநேரி நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், துணைச் செயலாளர் அகஸ்டின், மாவட்ட பிரதிநிதி ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் காமராஜர் பூங்கா உள்ளது.
- பூங்கா விரைவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர், கலெக்டர் ஆகியோர் அறிவித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் அமிர்தராஜ், பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் காமராஜர் பூங்கா உள்ளது. இது 1958-ம் ஆண்டில் அப்போதைய பேரூராட்சி தலைவரான இயேசுதாசன்வேதமுத்து மற்றும் எம்.எல்.ஏ வாக இருந்த எம்.எஸ். செல்வராஜன் ஆகியோரின் முயற்சியால் அமைக்கப்பட்டது. இதனை சில நாட்களுக்கு முன்பு பார்வையிட்ட நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் காமராஜர் பூங்கா நவீன வசதிகளுடன் விரைவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தனர்.
இது ஆறுமுகநேரி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரான பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமைந்துள்ள இந்த பூங்கா வளாகத்தில் பேரூராட்சியின் சார்பில் காமராஜரின் முழு உருவ சிலை அமைக்கப்பட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- தாக்குதல் நடத்திய வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பிரதீப், அலெக்ஸ் ரூபன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் பிரபல தொண்டு நிறுவன நிர்வாகியான பாலகுமரேசன்.
தாக்குதல்
ஆறுமுகநேரியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக சமூக விரோத செயல்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி கடந்த ஆண்டு பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர். இதில் பாலகுமரேசன் கலந்துகொண்டதால் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால் அவர் தனக்கு பாதுகாப்பு தர வேண்டுமென்று போலீசாரிடம் மனு கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு கும்பல் பாலகுமரேசனை பயங்கரமான ஆயுதங்களால் தாக்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்ட பாலகுமரேசன் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இவர் மீதான தாக்குதல் வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தை சேர்ந்த சூசைராஜ் மகன் பிரதீப் என்ற அந்தோணி பிரதீப் (20), காமராஜபுரத்தை சேர்ந்த திலகர் மகன் அலெக்ஸ் ரூபன் என்ற பப்பை (19) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் அளித்த அறிக்கையை மாவட்ட சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ் பிரதீப், அலெக்ஸ் ரூபன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார். இதன்படி அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஐதராபாத் ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற போட்டியில் கமலாவதி பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
- மாணவி அனன்யா,மாணவர்கள் கார்த்தி, அஜெய்கார்த்திக் ஆகியோர் ரோபாட்டிக்ஸ் போட்டியில் சான்றிதழ்களை பெற்றனர்.
ஆறுமுகநேரி:
இந்திய தொழில் நுட்பக் கழகம் சார்பில் தேசிய அளவிலான தொழில் முனைவோர் சாம்பியன்ஷிப் போட்டி ஐதராபாத் ஐ.ஐ.டி.யில் 2 நாட்கள் நடைபெற்றது. தொழில் முனைவோர் சாம்பியன்ஷிப் மற்றும் ரோபாட்டிக்ஸ் என இரு பிரிவுகளாக இந்த போட்டி நடந்தது.இதில் சாகுபுரம் கமலாவதி பள்ளியின் சார்பில் 7 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
தொழில் முனைவோர் சாம்பியன்ஷிப் போட்டியில் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனிஷ் சங்கர், குஷ்வந்த், 8-ம் வகுப்பு மாணவர்கள் கார்த்திக், சிவ சந்தோஷ் ஆகியோர் சிறந்த வடிவமைப்பாளர்க்கான விருதை பெற்றனர். 7-ம் வகுப்பு மாணவி அனன்யா, 5-ம் வகுப்பு மாணவர் கார்த்தி, 4-ம் வகுப்பு மாணவர் அஜெய்கார்த்திக் ஆகியோர் ரோபாட்டிக்ஸ் போட்டியில் சான்றிதழ்களை பெற்றனர்.
தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த அடல் டிங்கரிங்க் ஆய்வக ஆசிரியை சேர்மசத்தியசிலி ஆகியோரை பள்ளியின் அறங்காவலர்களான டி.சி.டபிள்யூ.நிறுவன மூத்த செயல் உதவித் தலைவர் சீனிவாசன், மூத்த பொது மேலாளர் ராமச்சந்திரன், பள்ளி முதல்வர் அனுராதா, மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ். தலைமை ஆசிரியர்கள் ஸ்டீபன் பாலாசீர், சுப்புரத்தினா, அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
- சோமநாத சுவாமி கோவிலில் வருடாந்திர கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது.
- சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் வருடாந்திர கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது.
முதல் நாள் காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து லட்சார்ச்சனை தொடங்கியது. 2-வது நாளிலும் லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடந்தன. நிறைவு நாளான இன்று காலை விநாயகர் பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராயணம். பூரண ஆஹூதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
பின்னர் சுவாமி மற்றும் அம்பாள் கோபுர விமானங்களில் கும்பாபிஷேகம் நடந்தது.அப்போது பக்தர்கள் 'அரகர மகாதேவா' என்று முழக்கம் எழுப்பினர்.இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன.இதன் பின்னர் லட்சார்ச்சனை நிறைவுக்கு பின் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தன.
இதில் பக்த ஜனசபை சார்பில் சண்முக வெங்கடேசன், தெரிசை அய்யப்பன், தங்கமணி, கற்பக விநாயகம், சங்கரலிங்கம், இளைய பெருமாள், தொழிலதிபர் பெருமாள், பேராசிரியர் அசோக்குமார் மற்றும் திருமுறை பன்னிசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.
ஆலய பூஜகர் அய்யப்ப சிவாச்சாரியார் குழுவினர் கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா மற்றும் பக்தஜன சபையினர் செய்துள்ளனர்.
- அனைத்து வார்டு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்து வர 23 வாகனங்கள் இயங்கி வருகின்றன.
- ஆறுமுகநேரி ரெயில் நிலையம் செல்லும் வழியில் ஒதுக்குப்புறமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரி பேரூராட்சி 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய பேரூராட்சி ஆகும்.
18 வார்டுகளிலும் இங்கு அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே ஒரு ஏக்கர் பரப்பளவில் நீண்ட காலமாக கொட்டப்பட்டு வந்தது.இதனால் அப்பகுதி சுகாதாரக் கேடு நிறைந்ததாக காணப்பட்டது.
இதனால் இந்த குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்றும், வேறு இடத்தில் புதிதாக குப்பை கிடங்கை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து கலாவதி கல்யாணசுந்தரம் தலைவராகவும், தி.மு.க. பிரமுகரான கல்யாண சுந்தரம் துணை தலைவ ராகவும் பொறுப்பு ஏற்றனர். இவர்களின் தீவிர முயற்சியால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் நவீன எந்திரங்களின் மூலம் குப்பையை அகற்றும் பணிக்காக ரூ.1.44 கோடி செலவிலான திட்டத்தை செயலுக்கு கொண்டு வந்தனர்.
இதன்படி அங்கு குப்பைகளை பிரித்தெடுத்து உரமாக மாற்றப்பட்டு வருகிறது.இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
அனைத்து வார்டு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்து வர லாரிகள், டிராக்டர்கள், மினி வேன்கள், பேட்டரி வாகனங்கள் என மொத்தம் 23 வாகனங்கள் இயங்கி வருகின்றன.மேலும் நிரந்தர பணியிலும், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 60 பேர் செயல்பட்டு வருகின்றனர்.ஒருங்கிணைந்த இந்த தூய்மை பணியில் தினம்தோறும் மலை அளவிற்கு சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கே கொட்டுவது என்பதுதான் புதிய பிரச்சினையாக உள்ளது.
ராணிமகாராஜபுரம் அருகே காட்டுப்பகுதியில் சில நாட்கள் குப்பைகள் கொட்டப்பட்டன.ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்களை மறித்தனர்.
இதன் பின்னர் அடைக்கலாபுரம் அருகே ஒதுக்குப்புறத்தில் குப்பைகள் போடப்பட்டன.இதற்கும் எதிர்ப்பு எழுந்ததால் ஆறுமுகநேரி 4-வது வார்டு குளக்கரை அருகே குப்பைகளை போடும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இப்படியாக 10 நாட்களில் குப்பை கொட்டும் இடங்களை மக்கள் பந்தாடியதால் என்ன செய்வது என்று தெரியாமல் பேரூராட்சி நிர்வாகம் திக்குமுக்காடியது.
இதனிடையே 4-வது இடமாக ஆறுமுகநேரி ரெயில் நிலையம் செல்லும் வழியில் ஒதுக்குப்புறமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.இந்த நிலையில் நேற்று மதியம் அந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்தது.
இதனால் செல்வ ராஜபுரம் பெரியான்விளை, கீழசண்முகபுரம் ஆகிய குடியிருப்பு பகுதிகள் புகைமண்டலமாக மாறியது.இது சிறுவர்கள், பெரியோர்கள் என அனைத்து தரப்பினரை யும் அவதிப்பட வைத்தது.
இதனால் செல்வராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து முடங்கியது.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதனிடையே திருச்செந்தூரில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு குப்பை கிடங்கில் பரவிய தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
ஏற்கனவே ஆறுமுகநேரி பேரூராட்சியின் சார்பில் நவீன முறையிலான குப்பை கிடங்கு அமைப்பதற்காக புதிய இடத்தை தேர்வு செய்ய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி விரைவில் குப்பை கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- வேல்சாமி,சூர்யா இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.
- சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி செந்தில் நகரை சேர்ந்தவர் வேல்சாமி (50). இவரது மகன் சூர்யா (20).
இவர்கள் இருவருக்கும் இடையில் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. கடந்த 4-ந்தேதி தனது தந்தையான வேல்சாமியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் சூர்யா கைது செய்யப்பட்டார்.
இதனிடையே சூர்யாவை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான அறிக்கையை ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் சமர்ப்பித்தார்.
போலீஸ் சூப்பிரண்டு இதனை ஏற்று மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தார்.இதன்படி சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து சூர்யா பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.