search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராவூரணி"

    • அப்பகுதி மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று மாட்டு வண்டியில் வந்த மணமக்களை கண்டு ரசித்தனர்.
    • மணமகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நண்பர்களின் இந்த சிறப்பான ஏற்பாட்டை அனைவரும் பாராட்டினர்.

    பேராவூரணி:

    பொதுவாகவே திருமணங்களில் குதிரை சாரட் வண்டிகளிலும், ஜானவாச காரிலும், மணமக்களை ஊர்வலமாக அழைத்து வருவது வழக்கம். ஆனால், இங்கு மணமக்கள் தனது திருமணம் பாரம்பரிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இந்த சுவாரஸ்யமான நிகழ்வை பற்றி இங்கு காண்போம்.

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்- பழனியம்மாள் தம்பதியின் மகன் வெங்கடேசுக்கும், நடுவிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பாதகுமார்- விஜயராணி தம்பதியின் மகள் நாகஜோதிக்கும் பெரியோர்களால் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு, இவர்களது திருமணம் நேற்று ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

    மணமகனான வெங்கடேஷ் சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். திருமணத்தையொட்டி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர் தான் விவசாய குடும்பத்தில் பிறந்ததால் தனது திருமணம் பாரம்பரிய முறையில் இருக்க வேண்டும் என நினைத்தார்.

    அதற்காக, விவசாய குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளும் தனது திருமணத்தில் பங்கு பெற வேண்டும் என வெங்கடேஷ் அவரது நண்பர்களிடம் கூறினார்.

    அதன்படி, அவரது நண்பர்கள் வெங்கடேஷின் திருமணத்தில் மாடுகளை வைத்து வெகு விமர்சையாக ஊர்வலம் நடத்த வேண்டும் என திட்டமிட்டனர்.

    அதன்படி, திருமணம் முடிந்ததும் ஆத்தாளூர் வீரமாகாளி அம்மன் கோவில் வெளியே தயார் நிலையில் இருந்த அலங்கரிக்கப்பட்ட ரேக்ளா மாட்டு வண்டியில் மணமக்கள் இருவரும் ஏறினர். பின்னர், மணக்கோலத்தில் மணமகன் மாட்டுவண்டியை ஓட்ட அருகில் மணப்பெண் புண்சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்.

    தொடர்ந்து, மாட்டு வண்டியானது சுமார் 2 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று பேராவூரணி அண்ணாசிலை அருகில் உள்ள திருமண மண்டபத்தை வந்தடைந்தது. வரும் வழி எல்லாம் அப்பகுதி மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று மாட்டு வண்டியில் வந்த மணமக்களை கண்டு ரசித்தனர்.

    மேலும், மணமகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நண்பர்களின் இந்த சிறப்பான ஏற்பாட்டை அனைவரும் பாராட்டினர்.

    • இவ்வழியே கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்து வந்தனர்.
    • பொதுமக்கள் மாற்று வழியில் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    பேராவூரணி:

    பேராவூரணி அருகே முடச்சிக்காடு ஊராட்சி அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் சமத்துவபுரம் செல்லும் வழியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பூனை குத்தி காட்டாறு தரைப் பாலமாக உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் பெருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

    இவ்வழியே கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்து வந்தனர். பொதுமக்கள் மாற்று வழியில் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. மேம்பாலம் கட்டி தர கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த பூனைக்குத்தி காட்டாற்று பாலத்தில் 200 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட பாலம் கட்ட பொதுப்பணித்துறை மூலம் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இதற்கான பூமி பூஜையினை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், ஒன்றிய குழு துணை தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து, முடச்சிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, பேராவூரணி தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன்,

    சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், அப்துல் மஜீது, பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • இதனால் மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
    • இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    பேராவூரணி :

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்திற்குள் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன.

    மேலும், பள்ளி வளாகத்திற்குள்ளேயே மின்மாற்றியும் உள்ளது. தாழ்வாகச் செல்லும் மின் கம்பியாலும், பழுதடைந்த நிலையில் உள்ள மின்மாற்றியாலும், அதன் அருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இது குறித்து, முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜமாணிக்கம், சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளர் வீரமணி ஆகியோர் கூறுகையில், "மக்களைத் தேடி முதல்வர் முகாமில், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதற்கு அரசு சார்பில் வந்த பதில் கடிதத்தில், 100 தினங்களுக்குள் அகற்றப்படும் என கூறப்பட்டது.

    ஆனால் தற்போது கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகியும் இதுவரை மின்கம்பி அகற்றப்படாமல், மின்மாற்றி இடமாற்றம் செய்யப்படாமலும் உள்ளது. இதனால் மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அருகில் உள்ள சித்தாதிக்காடு பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு உத்தரவிட்டும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, இம்மாத இறுதியில் மாணவர்கள், பெற்றோர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமத்தினரை இணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளனர்.

    • பேராவூரணி பெரியார் சிலை அருகில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சேதுபாவாசத்திரம் ஒன்றிய விவசாயிகள் சங்க தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார்.

    பேராவூரணி:

    பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள் சங்கங்கள் இணைந்து பேராவூரணி பெரியார் சிலை அருகில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    காவிரி ஆணையத்தின் தலைவர் சட்டத்திற்கு விரோதமாக மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக விவாதிப்போம் என கூறியதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சேதுபாவாசத்திரம் ஒன்றிய விவசாயிகள் சங்க தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார்.

    இதில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பாலசுந்தரம், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த முனைவர் ஜீவானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராவூரணி ஒன்றிய செயலாளர் இந்துமதி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வீரப்பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் பேராவூரணி ஒன்றிய செயலாளர் கருப்பையா, முன்னாள் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், சிதம்பரம், ரவி, வேலுச்சாமி, கருணாமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
    • மூன்று சக்கர சைக்கிள், காதொலிக் கருவி, கண் கண்ணாடி, செயற்கை கால் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வாங்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    பேராவூரணி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் இருந்த போது அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    அதன் பிறகு வந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் எம்.எல்.ஏ.-க்கள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள், பேராவூரணி தொகுதி அசோக்குமார் எம்.எல்.ஏ.-வை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதையேற்று அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், காதொலிக் கருவி, கண் கண்ணாடி, செயற்கை கால் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வாங்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதையடுத்து நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்டதலைவர் பகாத் அகமது,மாவட்ட பொருளாளர்சுதாகர், மாவட்ட ஒருங்கி ணை ப்பாளர் பாலசுப்பி ரமணியன், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரேவதி, பேராவூரணி ஒன்றிய தலைவர் வெங்கடேசன், ஒன்றிய துணை தலைவர் ராஜேஷ்கண்ணன் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அசோக்குமார் எம்.எல்.ஏ -வை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் தனராஜன் தலைமை வகித்தார். முனைவர் பழனிவேலு வரவேற்றார்.

    சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ராணி, ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பேராவூரணி அருகே இல்லம் தேடி கல்வி தன்னார்வலரால் சுற்றுசூழல் தின விழிப்புணர்வு மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.
    • அப்துல்கலாம், இயற்கை உருவங்கள் ஆகியவற்றை மணல் சிற்பம் மூலம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள காலகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரதி. இவர் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் 20- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    ரதி மணல் சிற்பம் உருவாக்குவதில் திறமை மிக்கவர். ஏற்கனவே அப்துல்கலாம், இயற்கை உருவங்கள் ஆகியவற்றை மணல் சிற்பம் மூலம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

    இந்நிலையில், உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். இதனை இல்லம் தேடிக் கல்வித் திட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சமூகஆர்வலர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு பாராட்டினர்.

    ×