என் மலர்
நீங்கள் தேடியது "கிருஷ்ணர்"
- மாமன் சகுனியின் துர்போதனையின்படி, திருதராஷ்டிரன் மூலமாக பாண்டவர்களுக்கு பொழுது போக்காக சதுரங்கம் ஆட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
- துரியோதனன், நீங்கள் எல்லாம் இனி என் அடிமைகள். திரவுபதியும் எங்களுக்கு ஏவல் செய்ய வேண்டியவள் என்று சொல்லி கைகொட்டிச் சிரித்தான்.
துரியோதனன் பாண்டவர்களுக்கு எப்படியாவது தீங்கு இழைக்க வேண்டும் என்று துடித்தான். மாமன் சகுனியின் துர்போதனையின்படி, திருதராஷ்டிரன் மூலமாக பாண்டவர்களுக்கு பொழுது போக்காக சதுரங்கம் ஆட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் விருப்பமில்லாவிடினும், பெரியய்யாவின் அழைப்பை தட்ட முடியாமல் அவர்கள் வந்தனர். சகுனி தன் தீய எண்ணத்தை மறைத்து உதட்டில் தோனொழுகப் பேசி தர்மரை தன்னுடன் சூதாடுவதற்கு இணங்க வைத்துவிட்டான்.
சகுனி பகடைக் காய்கள் உருட்டுவதில் மகா நிபுணன். தருமர் ஆடுகள், மாடுகள், குதிரைகள், யானைகள், அணிகள், மணிகள், அளவில்லாத பொற்குவியல்கள் என்று வரிசையாகப் பணயம் வைத்து ஆடித் தோற்றுக் கொண்டே போனார். முடிவில் தம்பிமார்களை வைத்து ஆடினார். அதிலும் சகுனி ஜெயித்தான். ஆட்டத்தில் தோற்றதை எல்லாம் மீட்க வேண்டும் என்ற வேகத்தில் திரவுபதியை பணயம் வைத்து ஆடி அதிலும் தோற்றார். முடிவாக சகுனி, உன் நாட்டை வைத்து ஆடு. நீ இழந்ததையெல்லாம் மீண்டும் பெறலாம் என்று தூண்டினான். அவரும் மதிமயங்கி நாட்டையே பணயம் வைத்து ஆடித் தோல்வி அடைந்தார்.
துரியோதனன், நீங்கள் எல்லாம் இனி என் அடிமைகள். திரவுபதியும் எங்களுக்கு ஏவல் செய்ய வேண்டியவள் என்று சொல்லி கைகொட்டிச் சிரித்தான். திரவுபதியின் மீது அவன் மனதில் முன்பே முண்டியிருந்த கோபத்தீயை அணைத்துக் கொள்ள இதுவே நேரம் என்று எண்ணி அவளை சபைக்கு கொண்டு வருமாறு தம்பி துச்சாதனிடம் கட்டளையிட்டான். அவனும் மிக மகிழ்ச்சியோடு புறப்பட்டு போய் திரவுபதியை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து துரியோதனன் முன் நிறுத்தினான்.
துரியோதனன், அவளை துகிலுறிக்குமாறு துச்சாதனிடம் சொன்னான். அந்த துஷ்டனும் சிறிதும் இரக்கமில்லாமல் திரவுபதியின் புடவை தலைப்பை இழுத்து இழுக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் எல்லாம் செயலற்று, வாய்மூடி ஊமைகளாயினர்.
திரவுபதி இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, ஹரி ஹரி கிருஷ்ணா, அபயம்! அபயம்! நீதான் எனக்கு துணை என ஓலமிட்டாள். அந்த அனாதரட்சகன் உடனே கருணை புரிய, திரவுபதியின் புடவை வளர்ந்து கொண்டே போனது. துச்சாதனன் அதைப்பற்றி இழுத்து இழுத்து போட்ட புடவை மலைபோல் கிடக்க அவன் கை ஓய்ந்து, கீழே சாய்ந்தான்.
பீஷ்மப் பிதாமகன் போன்றவர்கள் குறுக்கிட்டு திருதராஷ்டிரனிடம் பாண்டவர், சூதாட்டத்தில் இழந்த நாட்டை அவர்களிடம் ஒப்படைப்பமே முறை என நல்லுரை கூறினார்கள். ஆனால் பிடிவாதமாக மறுத்த துரியோதனன், முடிவாக பாண்டவர்கள் பதினான்கு ஆண்டுகள் ஆரண்யவாசமும், 21 வருடம் அக்ஞாத வாசமும் (அதாவது யாரும் அறியாமல் மறைந்து வாழ்வது) போய்விட்டு திரும்பினால் அவர்களுக்குரிய பங்கை திருப்பித் தருவதாக ஒப்புக் கொண்டான்.
- ஒரு முறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, சோதித்துப் பார்க்க ருக்மணியும், சத்திய பாமாவும் விரும்பினர்.
- சத்திய பாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள்.
கிருஷ்ணர் முதலில் ருக்மணியை திருமணம் செய்தார். பின்னர் சத்திய பாமாவை மணந்து கொண்டார்.
ஒரு முறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, சோதித்துப் பார்க்க ருக்மணியும், சத்திய பாமாவும் விரும்பினர். தங்களுடைய விருப்பத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.
கிருஷ்ணரும் அதற்குச் சம்மதித்தார். அங்கே ஒரு துலாபாரம் (தராசு) கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணர் அதில் அமர்ந்து, ஏதும் அறியாதவர் போல் நடப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்தார். முதலில் சத்திய பாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள். ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை.
தனது முயற்சியில் சற்றும் தளராது சத்தியபாமா மேலும் தனது கழுத்தில், காதில், உடலில் அணிந்திருந்த எல்லா நகைகளையும் எடுத்து தராசில் வைத்தாள். அப்போதும் நகைகள் வைக்கப்பட்ட தட்டு கீழே வரவில்லை. சத்தியபாமா வெட்கத்தால் தலை குனிந்தாள்.
அடுத்து ருக்மணி, தராசின் அருகில் வந்து கிருஷ்ணரைப் பிரார்த்தித்து ஒரு துளசி இலையில் கிருஷ்ணரின் நாமத்தை எழுதி, தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள். என்ன ஆச்சரியம்! அது கிருஷ்ணனுடைய எடைக்குச் சமமாக நின்றது.
இறைவனுக்கும் அவனது திருநாமத்துக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. பக்தியுடன் அவன் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக்கொள்வார்.
- சுமை என்று நினைத்தால் சுமை.
- பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம்.
- இறைவனை முழுமையாக நம்புங்கள்.
துவாரகையை ஆட்சி செய்து கொண்டிருந்த கிருஷ்ணரைப் பார்க்க ஒரு பெண் வந்திருந்தாள். அவள் கிருஷ்ணரின் மீது அளவற்ற பக்தி கொண்டவள். சொந்தம் என்று ஒருவரும் இல்லாத நிலையில், இறைவனே கதி என்று கிருஷ்ணரை நம்பிக் கொண்டிருப்பவள். அவள் கிருஷ்ணரைப் பார்த்து, "பகவானே.. உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர, எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?" என்றாள்.
கிருஷ்ணர் தன்னிடம் பக்திப் பூர்வமாக ஏதாவது கேட்பார். அவருக்கு அதை சேவையாகச் செய்யலாம் என்று நினைத்துதான், அந்தப் பெண் அப்படிக் கேட்டாள். ஆனால் இறைவனின் திருவிளையாடலை யார்தான் அறிய முடியும்.
கிருஷ்ணர் அந்தப் பெண்ணிடம் ஒரு கோணிப்பையைக் கொடுத்து, "நான் எங்கெல்லாம் செல்கிறேனோ, அங்கெல்லாம் இதைத் தூக்கிக்கொண்டு வா. அது போதும். நம் இருவர் கண்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த கோணிப்பை தெரியாது" என்றார்.
கிருஷ்ணர், இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டையை தருவார் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாக இருந்தாலும், இறைவன் சொன்னதை சேவையாக செய்ய வேண்டும் என்ற நோக்கம் அவளிடம் இருந்ததால், கிருஷ்ணர் சொன்னபடியே அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அந்தக் கோணிப்பையை தூக்கிக்கொண்டு சென்றாள்.
பாரம் மிகுந்த அந்த கோணிப்பைக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய அந்தப் பெண்ணிற்கு ஆசை இருந்தது. ஆனால் அவள் அதை அறிவதை கிருஷ்ணர் விரும்பவில்லை. எனவே அவள் அந்த ஆசையை கைவிட்டாள். சில காலம் இப்படியே கடந்தது. அவள் தூக்கித் திரிந்த கோணிப் பையின் பாரம் கூடிக்கொண்டே போனது. அவளால் ஒரு கட்டத்தில் அந்தப் பையை தூக்க முடியவில்லை.
அவள் கிருஷ்ணரைப் பார்த்து, "இறைவா.. உன் கட்டளையை எதிர்பார்த்து உனக்கு பணி செய்ய வந்தேன். நீயோ சுமக்க முடியாத ஒரு அழுக்கு மூட்டையை என்னிடம் தந்து விட்டாய். கருணையே வடிவான உனக்கு இது அழகா?" என்று கேட்டாள்.
"பெண்ணே.. உன் பலவீனத்தில்தான் என் பலம் இருக்கிறது. கவலைப்படாதே நான் உன் பக்கம்தான் இருக்கிறேன். தைரியமாக நான் சொல்லும் வரை என்னுடன் இந்தப் பையை சுமந்துவா. உனக்கு நான் உதவுகிறேன்" என்று சொன்ன கிருஷ்ணர், அந்தப் பெண் தடுமாறிய பல இடங்களில் அவளுக்கு கை கொடுத்து, சில நேரங்களில் அந்த கோணிப்பையை தானும் தூக்கி அருள்புரிந்தார்.
ஒரு நாள் அவர்கள் சேரவேண்டிய இடம் வந்தது. அப்போது கிருஷ்ணர், "இந்த மூட்டையை நீ சுமந்தது போதும்.. கீழே இறக்கி வை" என்றவர், "இந்த மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய உனக்கு ஆசை இருந்தது அல்லவா? இப்போது அறிந்து கொள்ளலாமா?" என்று கூறியபடி அந்த மூட்டையை அவிழ்த்தார்.
அந்த மூட்டையில் வைக்கோல் தென்பட்டது. அதை அகற்றியபோது, அதற்குள் அரிய வகை மாணிக்கங்களும், வைர வைடூரியங்களும், பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் குவிந்து கிடந்தன. தேவலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் மட்டுமே தரக்கூடிய பொக்கிஷம் அவை.
இப்போது கிருஷ்ணர், "இத்தனை காலமும் பொறுமையுடன், நான் அளித்த சுமையை சுமந்தபடி காத்திருந்ததற்காக என்னுடைய பரிசு இது, எடுத்துக்கொள்" என்றாா்.
ஆனந்தத்திலும் வியப்பிலும் மூழ்கிப்போனால் அந்தப் பெண்.
நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு சுமையும், அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும், அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது. அவற்றை சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். எதுவாகினும் நம் கைகளில் தான் அது உள்ளது. நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும். அந்தஅளவு சுமை மட்டுமே கடவுள் தருவார். நாம் தடுமாறும் நேரங்களில், கைகொடுக்கவும் செய்வார். எனவே இறைவனை முழுமையாக நம்புங்கள்.
- நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார்.
- மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் சித்தர் பிரதிஷ்டை செய்தார்.
மதுரை மாநகரில் பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புராணத்தை உள்ளடக்கி இருக்கின்றன. அதேநேரத்தில் சில சமூகத்தினர் தங்களது இஷ்ட தெய்வத்தை பிரதிஷ்டை செய்தும், வணங்கியும் வந்தனர்.
அந்த தெய்வங்களுக்கு பிற்காலத்தில் பெரிய அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டு வழி வழியாக வழிபட்டும் வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு பெற்ற கோவில்தான் வடக்குமாசி வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீராமஸ்வாமி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் ஆகும்.
இக்கோவில் குறித்து கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறியதாவது:-
தேரோடும் வீதியான வடக்கு மாசி வீதியிலே இக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இக் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு யாதவ பெருமக்களால் நிர்மாணிக்கப்பட்ட தாகும். மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் என்னும் சித்தர் தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு சமாதியாகி விட்டார். அவரது சமாதியான தினத்தை இன்றளவும் யாதவப் பெருமக்கள் குருபூஜையாக ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணத்தன்று நடத்துகிறார்கள்.
முன்னொரு காலத்தில் இந்த பகுதி நந்தவனமாக இருந்தது. அந்த நந்தவனத்திலேயே ஒரு கம்பத்தடியில் ஸ்ரீ ஆஞ்சநேயர், கோவில் கொண்டிருந்தார். இதன் அருகே தான் மூலஸ்தான விக்ரகம் இருந்தது. அப்போது அதற்கு கம்பந்தடி கிருஷ்ணன் என்ற நாமம் இருந்தது.
பூம்புகாரில் இருந்து மதுரை வந்த கோவலனையும், கண்ணகியையும் இங்குள்ள வடக்கு மாசி வீதி இடைச்சேரி பெண்ணான மாதரி தான் ஆதரித்ததாகவும், சிலப்பதிகாரத்தில் இருந்து தெரியவருகிறது. மேலும் இடைசேரி பெண்களால் ஸ்ரீநவநீதகிருஷ்ணனை முன்னிருத்தி பாடப்பெற்ற தாகவும் கூறப்படுகிறது.
இந்த நவநீதகிருஷ்ணன் கோவிலின் உபகோவிலான ராமாயண சாவடி கோவிலும் இவ்வீதியில்தான் உள்ளது. பாண்டிய மன்னரிடம் கண்ணகி கோபம் கொண்டு, அங்கிருந்து வந்து கண்ணகி இளைப்பாரிய இடமும் இந்த ராமாயண சாவடி கோவில்தான்.
ராமன் சன்னதி, விநாயகர் சன்னதி, தண்டபாணி சன்னதி, நாச்சிமுத்து, கருப்பண சாமி சன்னதி ஆகிய துணை கோவில்களையும் கொண்டுள்ளது.
வடக்கு பார்த்து உள்ள ஸ்ரீராமஸ்வாமி நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவிலான கிருஷ்ணராக காட்சி அளிக்கிறார். கலை நயத்துடன் கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் 10 தூண்களிலும் கிருஷ்ணரின் தசாவாதார காட்சிகளும் பொறிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநவநீத கிருஷ்ணன் தொட்டில் கட்டும் பிரார்த்தனைக்கு இணங்கி பிள்ளை செல்வத்தை அருள்கிறார். எனவே குழந்தை வரம் வேண்டுவோர் தினசரி வந்து வழிபட்டால் பலன் உண்டு.
இதேபோல வெண்ணை, வெள்ளி கொலுசு வாங்கி கொடுத்து பிரார்த்தனை செய்வோருக்கு மன இன்னல்களை போக்கி எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்திருக்கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தின்போது 10 நாட்கள் பகல் பத்து, ராப்பத்து திருவிழா நடைபெறும். அப்போது 10 நாட்களும் ஸ்ரீகண்ணபிரான் ராமாயண சாவடிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
தினசரி தீர்த்தங்களும், பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சொந்தமான பசுமாட்டை கோவிலுக்கு கொண்டு வந்து தினமும் பூஜை நடத்தப்படுவது சிறப்பாகும்.
ராமாயண சாவடி ஸ்ரீராமர் சன்னதியில் ஸ்ரீராமநவமி உற்சவத்தன்று சீதா திருக்கல்யாணம் வெகுசிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.
ஆயிரம் வீட்டு யாதவர்களுக்கு சொந்தமான ஸ்ரீராமஸ்வாமி, ஸ்ரீநவநீத கிருஷ்ணன் சுவாமி தேவஸ்தானம் யாதவ பெருமக்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிருஷ்ண பகவான் ருக்மணி, சத்ய பாமாவுடன் காட்சி அளிக்கிறார்.
- திருமாங்கல்ய தோஷ நிவர்த்திக்கு உரிய திருத்தலமாகும்.
புதுவை முத்தியால்பேட்டை தெபேசன்பேட் வீதியில் வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண பகவான் ருக்மணி, சத்ய பாமாவுடன் காட்சி அளிக்கிறார்.
நெசவு தொழில் செய்து வந்த பத்மசாலிய சமூகத்தினர் இதை உருவாக்கினர். முதலில் மூலிகைகளாலும் தங்க இழைகளாலும் உருவாக்கப்பட்ட கிருஷ்ணனின் படங்கள் வைக்கப்பட்டு இங்கு பஜனை நடந்து வந்தது. பின்னர் 1922-ல் வேணுகோபால சுவாமியாக சிலை அமைக்கப்பட்டது.
இங்கு பத்மசாலியர்களின் குலதெய்வமான பாவண மகரிஷி மற்றும் அவரது மனைவி பத்ராவதி அம்மை ஆகியோருக்கும் சிலை உள்ளது. சந்தான கிருஷ்ணனின் உருவமான குழந்தை கிருஷ்ணனுக்கும் இங்கு சிலை வழங்கப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயருக்கு என தனி சன்னிதி உள்ளது. தமிழ், தெலுங்கு புத்தாண்டு நாட்களில் இங்கு விஷேச பூஜை நடைபெறும். ஆடி பூரம், பங்குனி மாத ராமநவமி, மார்கழி மாத ஏகாதசி அனுமன் ஜெயந்தி நாட்களிலும் இங்கு விசேஷ பூஜைகளை காண பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.
கிருஷ்ணஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் தாழி அலங்காரம் செய்யப்பட்டு உறியடி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு நடக்கிறது. மாசிமாத தீர்த்த வாரியில் வேணுகோபால சுவாமி உற்சவரும் கலந்து கொள்கிறார்.
இந்த கோவில் திருமாங்கல்ய தோஷ நிவர்த்திக்கு உரியது ஆகும். மேலும் இங்கு சந்தான கிருஷ்ணரும் அருள்பாலிப்பதால் குழந்தை வரமும் வழங்கும் கோயில் என்கிற ஐதீகமும் உள்ளது. இங்கு உள்ள ஆஞ்சநேய சுவாமி நவக்கிரக தோஷ நிவர்த்தி வழங்குகிறார்.
- சேசன்ன மகா பிரபு, நித்யானந்த பிரபு சிலைகளும் உள்ளன.
- மாலையில் சிறப்பு வழிபாடு மற்றம் பஜனை நடைபெறும்.
சேலத்தை அடுத்த கருப்பூரில் கரும்பாலை பஸ்ஸ்டாப் அருகே அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் இஸ்கான் கோவில் உள்ளது. சேலம்-பெங்களுர் செல்லும் சாலையில் இந்த கோவில் உள்ளது.
தற்போது சிறிய அளவில் இயங்கி வரும் இந்த கோவிலில் கிருஷ்ணர் சிலை மற்றும் கிருஷ்ண பலராமரின் அவதாரங்களாக கருதப்படும் சேசன்ன மகா பிரபு, நித்யானந்த பிரபு ஆகியோரின் சிலைகளும் உள்ளன.
இங்கு வந்து வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு மன அமைதி கிடைக்கிறது என்றும், பண ஆசை மற்றும் பேராசை இல்லாத வாழ்க்கை, அடுத்தவருக்கு துன்பம் தராமல் உதவி செய்யும் மனப் பக்குவம் ஆகியவை கிடைப்பதாகவும் பக்தர்கள் கூறினார்கள்.
இஸ்கான் கோவில் குறித்து அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சேலம் கருப்பூர் கோவில் பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது:-
சேலம் கருப்பூரில் 4 ஏக்கர் பரப்பளவில் ரூ. 20 கோடி செலவில் ராதாகிருஷ்ணர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு கோவில் தவிர நவீன பிரசாத அறை மற்றும் அலுவலக கட்டிடம் உள்ளிட்ட வசதிகளுடன் உள்ளது. இஸ்கான் ஆசிரமத்தில் எந்த நேரமும் பக்தர்கள் வந்து எங்கள் வழிபாட்டில் கலந்து கொள்ளலாம்.
தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடு மற்றம் பஜனை நடைபெறும்.ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4 மணி முதல் மதியம் 12மணி வரை பஜனை மற்றும் சொற்பொழிவு நடைபெறும். மதியம் பிரசாதம் வினியோகம் செய்யப்படும். மாலையில் கிருஷ்ணரின் லீலைகள் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும்.
கடந்த 1999-ம் ஆண்டு முதல் சேலத்தில் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. சேலம்-பெங்களுர் பைபாஸ் சாலையில் 24 மணி நேரமும் பஸ் வசதி உள்ளது.
- வெண்ணைத்தாழி வைபவம் இங்கு மிகவும் சிறப்பு
- திருபவித்ரோத்ஸவம் 10 நாட்கள் நடைபெறும்
ஸ்ரீயப் பதியான ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சகை வடிவில் கோலங்கொண்டிருக்கும் திருத்தலங்கள் உலகெங்கிலும் இருந்தாலும், மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற முப்பெருமைகளால் அமையப் பெற்ற திருத்தலம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருத்தலம் ஒன்றே என்றால் அது மிகையல்ல.
மூலவர் பரவாசுதேவப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் கதையுடன் தங்க கவசம் பூண்டு கம்பீரமாய்க் காட்சி தருகின்றார். ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் அருள் வழங்கும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.
செண்பகவனத்து முனிவர்களின் வேண்டுகோளின் படி பிருந்தாவனத்தில் அன்று கண்ணன் செய்து காட்டிய லீலைகளை முனிவர்களுக்கும் காட்டி அருளினான். பரவாசு தேவனாக முதல் சேவை தொடங்கி 323-வது சேவையாக ஸ்ரீவித்யாராஜ கோபாலனாக சேவை சாதித்தருளினான். இதனைக் கண்ட முனிவர்கள் இத்திருக்கோலத்துடனே என்றும் காட்சி தந்தருளப் பிரார்த்தித்தனர்.
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால் நும்இச்சை சொல்லி நும்தோள் குலைக்கப்படும் அன்னை
மன்னப்படு மறைவாணனை வண்துவராபதி மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுதாடுமே என்று நம்மாழ்வாரால் போற்றப்பட்ட ஸ்ரீராஜகோபாலனை மன்னையம்பதிக்கு எழுந்தருளச் செய்த கோபில, கோப்பிரளய மகரிஷிகளைப் போற்றி ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் அழகை இனிக் காண்போம்.
மாடு மேய்க்கும் கண்ணனாக தான் மேய்க்கும் பசுவிடம் சிறிது சாய்ந்து கொண்டு ஒற்றை ஆடையுடன், ஒரு காதில் ஓலையும், ஒரு காதில் குண்டலமும் விளங்க ஒரு கையின் நுனியில் மும்மடிப்புள்ள செண்டாயுதமும் ஏந்தி இடது திருக்கரத்தை சத்யபாமாவில் தோளில் பதியச்செய்த வண்ணம், திருமுடியில் சுற்றிய திருப்பரி வட்டமும் இடையில் ஒற்றை ஆடையுடன் அழகுக்காட்சி நல்கும் நம் கோபாலன் மந்தகாசம் தவழும் செம்பவளச் செவ்வாயுடன், அருள் வெள்ளம் பாய்கின்ற திருமார்பின் அழகும், அடியவர்களை தன் அழகுப் புருவங்களால் ஈர்க்கும் ஆற்றலும் மிக்க இறைவனாக விளங்கக் காண்கிறோம்.
ஆலயத்தின் தென்பகுதியில் ஹேமாப்ஜ நாயகி என்றும், செண்பகலெஷ்மி என்றும் செங்கமலத்தாயார் என்றும் போற்றப்படும் எழில் கொஞ்சும் தாயார் சன்னதி அமைந்துள்ளது.
தாமரை மலரில் வீற்றிருக்கும் தாயார் தன் இரு பக்கங்களிலும் யானைகளுடன் கெஜலெட்சுமியாக அருட்காட்சி நல்குகிறாள்.
இவை தவிர ஸ்ரீ ராமர் சன்னதியும், ஆழ்வாராதிகளுக்கென தனித்தனி சன்னதிகளும், ஆச்சார்யார்களைப் போற்றும் வண்ணம் அவர்களுக்கென தனி சன்னதிகளும் கொண்டு அழகுற விளங்குகிறது இவ்வாலயம்.
இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் 18 நாள் பிரமோற்சவமும், தொடர்ந்து 12 நாள் நடை பெறும் விடையாற்றி விழாவும் பிரசித்தி பெற்றது. கோகுலத்தில் குழந்தை கண்ணன் ஆயர் வீடுகளில் புகுந்து வெண்ணை திருடி தின்னும் வைபவத்தை சித்தரிக்கும் வகையில் வெண்ணைத்தாழி வைபவம் நடை பெறுகிறது.
திருவிழா அன்று ராஜகோபாலசாமி தவழும் கண்ணன் வடிவு அலங்காரத்தில் கையில் வெள்ளி குடத்துடன் பல்லக்கில் கோவிலில் இருந்து வீதி உலா காட்சியாக புறப்படுவார். வீதிகள் தோறும் பெண்களும், பக்தர்களும் கண்ணனுக்கு பிரியமான வெண்ணை மற்றும் விசிறி கொடுத்து வணங்குவார்கள்.
மதியம் வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங் காரத்திலும், குதிரை வாகனத் திலும் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். காலையில் தொடங்கிய விழா இரவு வரை நடைபெறும் இந்த விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
பகவான் கண்ணன் கோப்பிரளயம் முனிவர்களுக்கு 32 திருக்கோலங்களில் தரிசனம் கொடுத்துள்ளார். ஆனால் மூலக் கிரந்தத்தில் 30 அவதாரங்களை மட்டுமே குறிப்புகள் உள்ளது. ஒருவேளை விரிவுக்கு அன்றி 30 மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
30 திருக்கோலங்கள்-
1. அவதார வைபவம்
2. பூதனா சம்ஹாரம்
3. யசோதனையின் மடியில் இருந்து பால் பருகியது.
4. சாயக் கொண்டையுடன் மாயன் தவழ்ந்து வந்தது.
5. நவநீத நாட்டியம்
6. ஆநிரை மைத்தல்
7. வெண்ணைக் களவு
8. புன்னை மரக்கண்ணன்
9. புல்லாங்குழல் இசைத்ததும் பசுக்கள் பால் சுரந்ததும்.
10. உரலிடை யாப்புண்டது.
11. மாடு மேய்க்கையில் கோலை ககீழே ஊன்றி அதன் மேல் திருமுடி வைத்து கட்டியது.
12. கலமும் கயிறும் கொண்டு பால் கறந்த அழகு.
13. கபித்த& வத்ஸாஸ-ரர்களின் வதம்.
14. காளிங்கநர்த்தனம்
15. பெண்களின் மஞ்சள் பூச்சை தம் திருமேனியில் காட்டி அருளின பெண்ணாளன் பெருமை.
16. பொன்னாழியும், புரிசங்கமும் தண்டும் வில்லும் சார்த்தி சேவை தந்தருளியது.
17. குறவை கூத்து
18. இடையருக்கு தம் அவதாரங்களை அப்படியேகாட்டி ஆட்கொண்டது.
19. இடையர்களுடன் அமுதுண்ட காட்சி.
20. கோமர்த்தனம் எடுத்து கல்மாரி காத்தது.
21. பிரம்மனால் அபகரிக்கப்பட்ட நிலை.
22. கோபிநாதனின் கோபிகா லீலை காட்சி.
23. பாரிஜாதா பஹரணம்.
24. ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம்.
25. குவலயா பீட வதம்.
26. முஷ்டிக காணுர வதம்.
27. ருக்மணி சத்யபாமாவுடன் பள்ளியறை காட்சி.
28. வாதுதீர்க்க தூது சென்ற சேவை.
29. பார்த்தசாரதியாக கீதை உபதேசம் செய்தது.
30. ருக்மணி சத்யபாமாவுடன் ஒரு வண்டு போல் எழுந்தருளி 3 வளைவு கொண்ட சாட்டை கயிறுடன் கூடிய பொற்கோலை ஏந்தியும், விக்கிரக வடிவத்தில் சேவை தந்து அருளுவது.
இக்கோவிலில் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் திருத்தேருடன் தாயார் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உயர் அரங்கர்க்கு கன்னி உகந்தளித்த ஆண்டாளாகவே செங்கமலத் தாயார் அருள்பாலிப்பதாக ஐதீகம். 10 தினங்கள் வெவ்வேறு வாகனங்களில் தாயார் புறப்பட்டு ஆலயத்தினுள் உள்ள தாயார் பிரகாரத்தில் உலாவரும் காட்சி மிக உன்னதமாக இருக்கும்.
நிறைவு நாளில் திருத்தேரில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தாயாருக்கென தனித்தேர் வேறு எங்கும் கிடையாது என்பது இதன் தனிச்சிறப்பு. ஆடி 18-ம் நாள் ஆடிப்பெருக்கு நாளன்று கோபாலன் பாமணி ஆற்றுக்குச் சென்று தீர்த்தவாரி கண்டருளி பின்னர் திருப்பாற்கடலின் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீலெட்சுமி நாராயணப் பெருமாள் சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
ஆவணி மாதத்தில் `திருபவித்ரோத்ஸவம்' என்று போற்றப்படும் விசேஷமான உற்சவம் 10 தினங்கள் நடைபெறும். இந்நாட்களில் ஆண்டு முழுவதும் நடைபெற்று வரும் பூஜைகளில் குறைபாடுகள் இ ருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக 365 வகையிலான பூஜைகள் நடைபெறும். இவ்விழா நாட்களில் யாகசாலையில் பல்வேறு ஹோமங்களைச் செய்து பெருமாளுக்கு பூஜைகள் செய்வது மிகச்சிறப்பான ஒன்றாகும்.
இந்நாட்களில் பெருமாள் திருப்பவித்ரமாலைகளை அணிந்து காட்சி தருவார். இவ்விழாவின் இறுதி நாளில் தீர்த்தவாரி ஹரித்ராநதியில் நடைபெற்று விழா நிறைவுறும். மேலும் இம்மாதத்தில் ஸ்ரீஜெயந்தி எனப்படும் கண்ணன் பிறப்பு வைபவம் சிறப்பாக உரியடித்திருவிழாவுடன் நடைபெறுவது மிகச்சிறப்பு அம்சமாகும்.
- மருதூர் கிருஷ்ணரை தரிசித்தால் பிறப்பற்ற வாழ்வை அருள்வார்.
- குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் திரட்டுப்பால் செய்து வழிபாடுகிறார்கள்.
நெல்லையில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் உள்ளது மருதூர். இங்கு புகழ் பெற்ற நவநீத கிருஷ்ணர் கோவில் உள்ளது. மருதூர் அணைக்கட்டின் அருகே தாமிரபரணி கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. கண்ணன் வெண்ணை திருடி உண்டதால் கோபம் அடைந்த யசோதா, கண்ணனை உரலில் கட்டிப்போட்டாள். அந்த உரலை கண்ணன் இழுத்தப்படி சென்றான்.
அப்போது இரு மருத மரங்களுக்கிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் கைகள் பட்டதும் மருத மரங்களாக இருந்த குபேரன் மகன்கள் நளகூபன், மணிக்ரீவன் சாபவிமோசனம் பெற்றனர். அவர்கள் மருத மரங்கள் உள்ள ஊர்களில் எல்லாம் கிருஷ்ணர் காட்சி தர கேட்டுக் கொண்டார். அந்த ஐதீகத்தின் அடிப்படையில் மருதூரில் கிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு மூலவர் நவநீதகிருஷ்ணன் 4 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் கேட்டவருக்கு கேட்டவரம் தருபவராக நின்று அருள்பாலிக்கிறார். அருகே இரண்டடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் இரண்டு வயது பாலகனாக அரை சலங்கையுடன், இருகைகளிலும் வெண்ணெய் ஏந்தி சிறு தொந்தி வயிற்றுடன் அருள் பாலிக்கிறார்.
எதிரில் நாலடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கருடாழ்வார், பக்தர்களின் குறைதீர்க்கும் கிருஷ்ணன் அழைக்கும் குரலுக்கு ஓடி வர தயாராக நிற்கிறார். குறிப்பாக ஏகாதசி விரதம் இருந்து மருதூர் கிருஷ்ணரை தரிசித்தால் பிறப்பற்ற வாழ்வை அருள்வார்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரம் அளித்திடுவார் என்பது ஐதீகம்.
விட்டிலாபுரம் பாண்டுரங்கன்
நெல்லை மாவட்டம் விட்டிலாபுரத்தில் பாண்டுரங்கன் ஆலயம் உள்ளது.இங்கு சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் முன்பக்கம் 16 கால் மண்டபம். அடுத்து பெரிய மண்டபத்தில் பலிபீடமும், கொடிமரமும் அமைந்துள்ளது. கோபுரத்தை விட உயரமாக காட்சிதருகிறது இக்கொடிமரம். மேற்கு நோக்கிய கருடாழ்வார் சன்னதியைத் தாண்டி சென்றால் கருவறை உள்ளது.
அதில் நான்கடி உயரத்தில் நின்ற கோலத்தில் இடுப்பில் கை வைத்தபடி, கருணைப்பார் வையால் காத்து ரட்சிக்கும் பாண்டுரங்க விட்டலேஸ்வரர், அருகே பாமா, ருக்மணி காட்சியளிக்கின்றனர். கருவறைக்கு முன்னால் உற்சவர் நான்கு திருக்கரத்துடன் பாமா, ருக்மணி, பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளாதேவியுடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் பாமா, ருக்மணி, சேனை முதல்வர், உடையவர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.
ருக்மணி சன்னதியில் அற்புதமாக வேலைப்பாடுகள் அமைந்துள்ளது. இசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அரங்கேற்றத்திற்கு முன் இங்குள்ள பாண்டுரங்கனை வழிபடுகிறார்கள். திருமணம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் திரட்டுப்பால் செய்து வழிபாடு செய்கிறார்கள்.
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க பால்பாயாசம் படைத்து வழிபடுகிறார்கள்.16ம் நூற்றாண்டில் விஜயநகரப்பேரரசின் தமிழகப்பிரதிநிதியாக விட்டலராயன் என்ற விட்டல தேவன் ஆட்சி செய்தார். இவருக்கு பண்டரிபுரம் பாண்டுரங்கன் மீது அதிக ஈடுபாடு இருந்தது.
இவரது கனவில் பாண்டுரங்கன் தோன்றி வடக்கில் இருப்பது போல தென்னகத்தில் உனது இருப்பிடத்திலும் அருள்பாலிக்க உள்ளேன். எனவே தாமிரபரணி ஆற்றில் புதைந்து கிடக்கும் எனது விக்ரகத்தை எடுத்து கோயில் கட்டி வழிபடு,'' எனக் கூறி மறைந்தார். பாண்டுரங்கன் கூறியது போலவே ஆற்றில் இருந்து விக்ரகம் எடுக்கப்பட்டது.
ஆற்றில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் தன் பெயரால் விட்டலாபுரம் என்ற நகரை உருவாக்கி, நகரின் நடுவே கோயில் கட்டி விக்ரக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இவரது திருப்பணியில் மகிழ்ந்த பாண்டுரங்கன் இவர் முன் தோன்றி `வேண்டிய வரம் கேள்,' என்றார்.
விட்டலராயனும், `பெருமாளே! தங்கள் சன்னதியை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பெருக வேண்டும். உனது சன்னதிக்கு வந்து பாடி நிற்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களை தந்தருள வேண்டும்,' என வேண்டினார். தன்னலமற்ற இந்த வேண்டுதலை ஏற்ற பெருமாள், அன்றில் இருந்து இத்தலத்தில் கேட்டவருக்கு கேட்டவரம் தந்து அருள்பாலித்து வருகிறார்.
- நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன.
- தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு விநாயகர் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் நவநீதகிருஷ்ணன் சுவாமி கோவில் உள்ளது. `நவநீதம்' என்றால் "வெண்ணெய்" எனப்பொருள். கிருஷ்ணருக்கு பிடித்தது வெண்ணை. இதனால் அவர் நவநீத கிருஷ்ணர் என பெயர் பெற்றார்.
இந்த கோவில் கர்ப்பகிரஹத்தில் "ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்" இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் ஏந்தியவாறு புன்முறுவலுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
கற்பூர ஆரத்தியின்போது அவரது திருமுகத்தில் தவழும் புன்னகை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும். கர்ப்ப கிரஹத்தின் முன்பு உள்ள மண்டபத்தில் "ஸ்ரீ தேவி, பூமாதேவி நாச்சியார்கள்" சமேதராக "ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்" அருள்பாலித்து வருகிறார்.
கர்ப்பகிரஹத்தின் மேலே செப்புக்கலசத்துடன் கூடிய விமானம் உள்ளது. இவ்விமானத்தில் "கிழக்கு முகமாக ஸ்ரீநவநித கிருஷ்ணனும், தெற்கு முகமாக ஸ்ரீ தட்சிணா மூர்த்தியும், மேற்கு முகமாக ஸ்ரீ யோக நரசிம்மரும்,வடக்கு முகமாக ஸ்ரீ பிரம்மாவும்" எழுந்தருளியுள்ளனர்.
இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் உள்ளனர். மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சி அளிக்கின்றன. வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லன்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன.
கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் ஏந்தியிருக்கிறது. இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் தன்வந்திரி ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம் , தசாவதாரத்திற்குள் சேருவதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி (தனிக்கோயிலில்) காணப்படுகிறார்.
இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.
இங்கு இத்திருக்கோயிலின் தன்வந்திரி பகவான் தனி சன்னதியில் உள்ளார். பிரணவ சொரூபியான விநாயகப்பெருமான் தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு ஆலயத்தில் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.வைணவத்தை வாழவைத்த ராமானுஜர் தனி சன்னதியில் உள்ளார். உற்சவமூர்த்திக்கு எதிரில் "பெரிய திருவடி"என்றழைக்கப்படும் "ஸ்ரீ கருடாழ்வார்" பெருமாளை நோக்கி கைகூப்பி வணங்கிய நிலையில் எழுந்தருளி உள்ளார்.
உற்சவர் எழுந்தருளி உள்ள மண்டபத்தின் வடக்குத் தூணில் "சிறிய திருவடி" என்று போற்றப்படும் "ஸ்ரீ ஆஞ்சநேயர்" அருள்பாலிக்கிறார்.பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாக கொடியேற்றமும் உத்திரம் அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மொத்தம் பதினொரு நாட்கள் திருவிழா நடைபெறும்.
தை பொங்கல் மறுநாள் பாரிவேட்டையும்,தசராவில் பத்து நாட்களுக்கு கொலு வைபவும் ,வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு விழாவும் ,கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் அன்று சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். தமிழ் மாதம் கடைசி சனிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து அருகில் உள்ள சிற்றாற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரமளித்திடுவார் என்பது ஐதீகம்.
இந்த கோவிலில் தல விருட்சமாக நெல்லி மரம் உள்ளது.
- வடநாட்டில் மூலஸ்தானத்தில் உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பட்டது.
- தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க நாரதர் வருகிறார். அவையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று நாரதருக்கு மரியாதை செலுத்தினர்.
ஆனால் சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அதனை வெளிக்காட்டாது சென்றுவிட்டு, பின்னொருநாள் வந்து தனது கலகத்திறமையால் சாம்பனுக்கு கிருஷ்ணனாலேயே சாபம் இட வைத்தார்.
பின்னர் தன் தவறை உணர்ந்த சாம்பன், நாரதரிடம் மன்னிப்பு கேட்டு வேண்ட, நாரதர், அவனுக்கு சூரிய புராணத்தை உரைத்தார். அதனை கேட்டு அவன் நோய் நீங்கியதாக புராணம் கூறுகிறது. வடநாட்டில் `மூலஸ்தானத்தில்' உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பட்டது என்பர்.
தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.
திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் `திருக்கண்டியூர்' மற்றும் விழுப்புரம்-முண்டியம்பாக்கம் அருகில் உள்ள`பனையபுரம்' ஆகியன சூரியனை வழிபட ஏற்ற தலங்களாகும்.
உதயாசலம் (கொனாரக்), முல்தானம், மோகேரா, லக்குண்டி (ஹப்ளி அருகில்) அலம்பூர், ஆரவல்லி (இரண்டும் ஆந்திரா), சிரோரா, ஜயபுரி, உதயபுரி, மார்த்தாண்டபுரம், கேரளாவில் வைக்கம் அருகில் உள்ள `ஆதித்யபுரம், கும்பகோணம்-கஞ்சனூருக்குக்கருகில் உள்ள திருயோகியில் சூரிய கோடீஸ்வரர், மற்றும் `சூரியமூலை' ஆகிய இடங்களும், குடந்தை நாகேஸ்வரன் ஆலயத்தில் உள்ள சூரிய சன்னதி ஆகியவையும் வழிபட ஏற்றதாகும்.
- ஆனால் கிருஷ்ணரின் புத்திரனான சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை.
- தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.
நவக்கிரகங்கள் - சூரியன்
ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க நாரதர் வருகிறார். அவையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று நாரதருக்கு மரியாதை செலுத்தினர்.
ஆனால் கிருஷ்ணரின் புத்திரனான சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அதனை வெளிக்காட்டாது சென்றுவிட்டு,
பின்னொருநாள் வந்து தனது கலகத்திறமையால் சாம்பனுக்குக் கிருஷ்ணனாலேயே சாபம் இட வைத்தார்.
பின்னர் தன் தவறை உணர்ந்த சாம்பன், சாரதரிடம் மன்னிப்புக் கேட்டு வேண்ட, நாரதர், அவனுக்குச் சூரிய புராணத்தை உரைத்தார்.
அதனைக் கேட்டு அவன் நோய் நீங்கியதாகப் புராணம் கூறும்.
வடநாட்டில் "முல்தானத்தில்" உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பெற்றது என்பர்.
தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.
திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் "திருக்கண்டியூர்" மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அருகில் உள்ள"பனையபுரம்" ஆகியன சூரியனை வழிபட ஏற்ற தலங்களாகும்.
உதயாசலம் (கொனாரக்), முல்தானம், மோகேரா, லக்குண்டி, அலம்பூர், ஆரவல்லி (இரண்டும் ஆந்திரா), சிரோரா, ஜயபுரி, உதயபுரி, மார்த்தாண்டபுரம், கேரளாவில் வைக்கம் அருகில் உள்ள "ஆதித்யபுரம், கும்பகோணம் கஞ்சனூருக்குக்கருகில் உள்ள திருயோகியில் சூரிய கோடீஸ்வரர், மற்றும் "சூரியமூலை" ஆகிய இடங்களும், குடந்தை நாகேஸ்வரன் ஆலயத்தில் உள்ள சூரிய சன்னதி ஆகியவையும் சூரியனை வழிபட ஏற்ற தலங்கலாகும்.
- திரவுபதிக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
- சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் கொண்டாடக்கூடாது
இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ரக்ஷாபந்தன், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களும் கொண்டாடலாம். ரக்ஷாபந்தன் நாளில், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறி, நேசத்தை உறுதி செய்து சகோதரத்துவத்தை கொண்டாடுகிறார்கள்.
அதன் அடையாளமாக சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி, அவர்களின் நெற்றியில் திலகம் பூசிவிடுவார்கள். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை பாதுகாப்பதாகவும், அவர்களை நேசிப்பதாகவும் பரிசுப்பொருட்களை கொடுத்து உறுதியளிக்கிறார்கள்.
மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணரின் கையில் இருந்து வழிந்த ரத்தத்தை தடுப்பதற்காக திரெளபதி தனது புடவையை கிழித்து கட்டு போட்டாள். இது கிருஷ்ணரின் மனதை நெகிழச்செய்தது. அன்று முதல் திரெளபதியை தனது சகோதரியாக ஏற்று, எப்போதும் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
அதன்படியே கவுரவர்கள் திரௌபதியை துகிலுரிக்க முயன்றபோது அவள் கிருஷ்ணா என குரல் எழுப்ப, அவளது மானத்தை காப்பாற்றினார் கிருஷ்ணர். அதன் நினைவாகவே ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது.
நல்ல நேரம்
பந்தரகல் எனப்படும் முகூர்த்த நேரத்திலேயே சகோதரிகள் தங்களின் சகோதரர்கள் கைகளில் ராக்கி கட்ட வேண்டும். மற்ற நேரங்களில் ராக்கி கட்டுவது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பந்தரகல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி இரவு 9.02 மணிக்கே தொடங்குகிறது. அதனால் இந்த சமயத்தில் மட்டுமே ராக்கி அணிவிக்க வேண்டும்.
அதேபோல் அக்டோபர் 31-ந்தேதி காலை 6.20 மணிமுதல் 7.50 மணிவரையிலான நேரமும், அதன்பிறகு காலை 11.10 மணிமுதல் மாலை 3.50 மணி வரையிலான நேரமும் ராக்கி அணிவிப்பதற்கான நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாக சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் விழா கொண்டாடக் கூடாது என்பது ஐதீகம். ஒருவேளை இந்த முகூர்த்த நேரத்தில் தங்களின் சகோதரருக்கு ராக்கி அணிவிக்க முடியாதவர்கள் ஆகஸ்ட் 31-ந் தேதி மாலை 5.30 மணிமுதல் 7.05 மணி வரையிலான நேரத்தில் ராக்கி அணிவிக்கலாம். ஆகஸ்ட் 30-ந் தேதி சகோதரர்களுக்கு ராக்கி அணிவிக்க நினைப்பவர்கள் இரவு 9.05 மணி முதல் 10.48 மணி வரையிலான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.