search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிதிராவிட"

    • ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர், நலத்துறை பள்ளிகள் 82.21 சதவீதம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவுக்கான காரணத்தை ஆராய குழு அமைத்து அதனை சரிசெய்ய முயல வேண்டும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. ஈரோட்டில் பிளஸ் - 2 பொதுத் தேர்வில் 95.72 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.11 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இதில் ஆதிதிராவிடர், நலத்துறை பள்ளிகள் 82.21 சதவீதம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிற துறைகளை ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் தேர்ச்சி விகிதம் உள்ளது.

    இதுகுறித்து பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நடராஜ் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் தேர்வு நடந்த 5 பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஆசனூர்-74 சதவீதம், பர்கூர்-80 சதவீதம், கெத்தேசால்-75 சதவீதம், தலமலை-44 சதவீதம், பிளஸ்-2 தேர்வில் ஆசனூர்-68 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதும், பூர்த்தி செய்யாததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பர்கூர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வரை 418 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 418 பேருக்கு ஒரு தமிழாசிரியர், ஒரு ஆங்கில ஆசிரியர் உள்ளனர்.

    இது குறித்து கேட்டால் இந்த பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையில் வருவதில்லை வேறு துறைகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை தான் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது.

    பள்ளி கல்வித் துறையில் காலிப்பணியிடங்களில் 95 சதவீதத்தை நிரப்பி விட்டு மீதி ஆசிரியர்கள் இருந்தால் இது போன்ற பிற துறை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். இதுபோன்ற பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தற்போது பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவுக்கான காரணத்தை ஆராய குழு அமைத்து அதனை சரிசெய்ய முயல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×