search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் பஸ்கள்"

    • அரசு போக்குவரத்து கழகங்கள் தமிழகத்தின் மிகப்பெரிய சேவை நிறுவனமாகும்.
    • பண்டிகைகள் போன்றவற்றிற்கு சிறப்பு பஸ்களை இயக்கி வருகின்றன.

    சென்னை:

    தனியார் பஸ்களை பயன்படுத்தியதால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ. டி.யு.) பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசு போக்குவரத்து கழகங்கள் தமிழகத்தின் மிகப்பெரிய சேவை நிறுவனமாகும். தினமும் 1.75 கோடி மக்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்கள், பருவகால நிகழ்வுகள். பண்டிகைகள் போன்றவற்றிற்கு சிறப்பு பஸ்களை இயக்கி வருகின்றன.

    ஆனால், நீண்டகாலமாக உள்ள இரு நடைமுறை சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது. ஆயுதபூஜை மற்றும் தீபாவளியையொட்டி சிறப்பு இயக்கத்திற்கு தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது. இது எவ்விதத்திலும் சரியற்றது. தனியார் பஸ்களை வாடகைக்கு எடுப்பதற்கு கீழ்கண்ட இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டது:

    1. போக்குவரத்து பஸ்கள் சிறப்பு இயக்கத்திற்கு பயன்படுத்தினால் 1 கிலோ மீட்டருக்கு ரூ.90 வரை செலவாகும். தனியார் பஸ்சை இயக்கும்போது கிலோ மீட்டருக்கு ரூ.51.25 பைசா மட்டும் கொடுத்தால் போதும். இதனால் இழப்பு தவிர்க்கப்படும்.

    2. சிறப்பு இயக்கத்தையொட்டி பஸ்களின் வழித்தடத்தை மாற்றி இயக்கும் போது அன்றாடம் உபயோகிக்கும் பயணிகள் பாதிக்கப்படுவர்.

    மேற்கண்ட இரண்டு காரணங்களும் சரியற்றது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

    அரசு பஸ்களை இயக்கினால் ரூ.90 செலவாகும் என்பது சரியற்றது.

    தற்போது பல கழகங்களில் கிலோ மீட்டருக்கான இயக்க செலவு ரூ.65 மட்டுமே செலவாகிறது. வாதத்திற்காக ரூ.90 செலவாகும் என்று எடுத்துக் கொண்டாலும், பஸ் இயக்கத்தில் மாறும் செலவீனம் நிரந்தர செல்வீனம் என்ற 2 வகையான செலவீனங்களும் உள்ளது.

    தனியார் பஸ்களை இயக்கினாலும் நிரந்தர செலவீனத்தில் எவ்வித மாறுபாடும் ஏற்படாது மாறும் செலவீனம் மட்டுமே மிச்சமாகும் மாறும் செலவீனம் தற்போது கிலோ மீட்டருக்கு சுமார் ரூ.18 ஆகிறது தனியார் பஸ்கள் இயக்குவதால் ரூ.18 மட்டுமே மிச்சமாகும் அதேசமயம், சிறப்பு இயக்கத்தின் மூலம் 1 கிலோ மீட்டருக்கு ரூ.30-க்கு மேல் வருவாய் வரும். எனவே, சிறப்பு இயக்கம் இயக்குவதன் மூலம் 1 கிலோ மீட்டருக்கு ரூ.12 கழகத்திற்கு வருவாய் கிடைக்கும் இவ்வாறு வருவாய் கிடைப்பதை தவிர்த்துவிட்டு, தனியார் பஸ்களை இயக்கியதன் மூலம் சுமார் ரூ.50 கோடி கழகங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, நீதி நெருக்கடியில் உள்ள போக்குவரத்து கழகங்கள் தேவையற்ற முறையில் ரூ.50 கோடி இழப்பு ஏற்படுவது எவ்விதத்திலும் நியாய மற்றது.

    போக்குவரத்து கழகங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ஒரு நாளில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சம் பேர். தற்போது பயணம் செய்பவர்கள் கோடியே 75 லட்சம் பேர். 2 கோடிக்கு மேற்பட்ட பயணிகளை அன்றாடம் கையாண்ட போக்குவரத்து கழகங்களால் 1 கோடியே 75 லட்சம் பயணிகளை கையாள முடியாது என கூறுவதே சரியற்றது.

    எனவே. மேலே கூறியு உள்ள விஷயங்களைப் பரிசீலித்து தமிழகத்தின் சிறப்புக்குரிய பொதுத்துறை நிறுவனமான போக்கு வரத்துக் கழகங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
    • பேருந்துகளின் எண்ணிக்கை, ஓட்டுநர்களின் எண்ணிக்கை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளிப் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசுப் பேருந்துகளை கூடுதல் எண்ணிக்கையில் இயக்கவும், தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் பேருந்துக் கட்டணத்தினை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று.

    இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கப் போகிறது என்றும், இதற்காக புதிய பேருந்துகளை வாங்கி, நிறுத்தி வைக்க முடியாது என்றும், கூடுதலாக ஊழியர்களை நியமிக்க முடியாது என்றும் தெரிவித்திருப்பதைப் பார்த்தால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடுவிழா எடுக்க தி.மு.க. அரசு முடிவு செய்துவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இந்த நடைமுறை முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.

    எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வசம் உள்ள அனைத்துப் பேருந்துகளையும் முழு வீச்சில் இயக்கி, மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் போக்கினை கைவிட வேண்டும். பேருந்துகளின் எண்ணிக்கை, ஓட்டுநர்களின் எண்ணிக்கை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விழா காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது அரசின் தொடர் நடவடிக்கை.
    • முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது.

    பெரம்பலூர்:

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் 24-ந்தேதி ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படும். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    செல்போன் செயலி மூலமாக பதிவு செய்து பயணிப்பவர்களை அரசால் எதுவும் செய்ய முடியாது. அதுகுறித்து புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,

    விழா காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது அரசின் தொடர் நடவடிக்கை. அந்த வகையில் கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறோம். சில நேரங்களில் பஸ்கள் தேவைப்படும் வழித்தடங்களில் புதிதாக சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கும், நாள் முழுவதும் பஸ்களை இயக்கிய பணியாளர்களைக் கொண்டு மீண்டும் இயக்குவதும் பாதுகாப்பற்றது.

    அதனால், முக்கியமான விழா காலங்களில் தனியார் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையின்போது பரீட்சர்த்தா முறையில் அந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டது. அதில், எந்தவித சிரமமும் ஏற்படவில்லை.

    எனவே தீபாவளி பண்டிகையின்போது, தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அரசின் முக்கிய நோக்கம், பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு எவ்வித சிரமமும் இன்றி செல்ல வேண்டும் என்பது தான். விழாக்களை அவர்கள் விருப்பம் போல கொண்டாடுவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.

    வழக்கமாக தமிழகத்தில் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் கூடுதலாக 4 அல்லது 5 ஆயிரம் பஸ்கள் இயக்க வேண்டும் என்றால், அதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் பஸ்களை வாங்கி நிறுத்தி வைத்திருக்க முடியாது. அதுபோன்ற நாள்களில் ஊழியர்களையும் நியமிக்க முடியாது.

    அதனால் இடைக்கால நிவாரணமாகவே தனியார் பஸ்களை அரசு ஒப்பந்த அடிப்படையில், அந்தந்த வழித் தடங்களில் இயக்கப்படுவது தவிர்க்க முடியாதது. பொதுமக்கள் தனியார் பஸ்களை விட, அதிகமாக அரசுப் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது. எனவே பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு, இதுபோன்ற இடைக்கால ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    பேட்டியின்போது கலெக்டர் கிரேஸ் பச்சாவ், அருண் நேரு எம்.பி., பிரபாகரன் எம்.எல்.ஏ. உடனிருந்தனர்.

    • வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி ஆகிய 3 பணிமனைகளையும் முதல் கட்டமாக தனியாரிடம் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளன.
    • பணிமனை பராமரிப்பு மற்றும் பஸ்கள் பராமரிப்பை 30 ஆண்டுகள் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த ரூ.1,540 கோடி ரூபாயில் டெண்டர் விடப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் 500 தனியார் பஸ்களை இயக்க அரசு எடுத்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் தனியார் பஸ்கள் இயக்குவது உடனடியாக அமலுக்கு வராமல் உள்ளது.

    இந்த நிலையில் பணிமனைகள் பராமரிப்பை தனியார் மயமாக்க போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    சென்னையில் வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி ஆகிய 3 பணிமனைகளையும் முதல் கட்டமாக தனியாரிடம் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளன.

    பணிமனை பராமரிப்பு மற்றும் பஸ்கள் பராமரிப்பை 30 ஆண்டுகள் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த ரூ.1540 கோடி ரூபாயில் டெண்டர் விடப்படுகிறது.

    இதே போல் விரைவில் மற்ற பணிமனைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டு உள்ளனர். அரசு பஸ்கள் பராமரிப்பு மிக மோசமாக உள்ளது. எனவே தனியார் மூலம் பராமரிக்க போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை, உதிரி பாகங்கள் பற்றாக்குறையால் தான் பராமரிப்பு குறைபாடு ஏற்படுவதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    இது கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாவதற்கு அறிகுறி என்றார் எச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் சுப்பிரமணியபிள்ளை. மேலும் அவர் கூறியதாவது:-

    போக்குவரத்தை படிப்படியாக தனியார் மயமாக்க இப்படி ஒவ்வொன்றாக தனியார் மயமாக்குவதற்கான பூர்வாங்க வேலைகள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தொழிற்சங்கங்கள் இதை அனுமதிக்காது என்றார்.

    • ரோடுகளில் அசுர வேகத்தில் செல்கின்றன.
    • வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை மார்க்கமாக பழநி-கோவை இடையே இயக்கப்படும் பஸ்களில் வழக்கத்துக்கு மாறாக பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச்சென்று திரும்புவோர், அவசர கதியில் கிடைக்கும் பஸ்களில் ஏறிச்செல்கின்றனர்.

    பயணிகளை அள்ளிச்செல்லும் நோக்கில் அரசு பஸ்களுடன் போட்டி போடும் தனியார் பஸ்கள், ரோடுகளில் அசுர வேகத்தில் செல்கின்றன.தொடர்ந்து, வேகமெடுத்து இயக்கப்படும் பஸ்கள் எதிரே வரும் வாகனங்களுக்குக்கூட வழிவிடாமல் ஒன்றையொன்று முந்திச்செல்கின்றன.இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் பீதிக்கு உள்ளாகி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.அதேபோல் வழியில் உள்ள வேகத்தடைகளை கூட கண்டுகொள்ளாமல், வந்த வேகத்திலேயே அதன்மீதுபஸ்களை கடக்கச்செய்வதால், பஸ் பயணிகள் மட்டுமின்றி, ரோட்டோரம் செல்லும் மக்களும் பீதியில் உறைந்து விடுகின்றனர்.சில தனியார் பஸ்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் இயக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

    எனவே தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • திண்டுக்கல் பஸ்நிலையத்திற்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன.
    • விதிமீறி செயல்படும் தனியார் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதன் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பஸ்நிலையத்திற்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்களின் வருகைக்கேற்ப இடவசதி இல்லாததால் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனிடையே பஸ்நிலையத்திற்குள் நுழைய பெர்மிட் பெறாத தனியார் பஸ்களும் அடிக்கடி உள்ளே வந்து பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதனால் மற்ற டிரைவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.

    இதுமட்டுமின்றி தனியார் பஸ்கள் தாங்கள் பெர்மிட் வாங்கிய வழித்தடத்தில் செல்லாமல் அதிக கலெக்சன் கிடைக்கும் வழித்தடத்தில் இயக்கி வருகின்றனர். இதனால் அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இதுபோல விதிமீறி செயல்படும் தனியார் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதன் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×