search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரப்பயிரான"

    • நாட்டின் மொத்த பாக்கு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு மேல் தமிழகத்தில் உற்பத்தியாகிறது.
    • நீண்டகால பலன் தரும் மரப்பயிரான பாக்கு பயிரிடப்படுகிறது.

    சேலம்:

    தமிழகத்தில், சேலம், நாமக்கல், கோயம்புத்துார், நீலகிரி, தர்மபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், நீண்டகால பலன் தரும் மரப்பயிரான பாக்கு பயிரிடப்படுகிறது. நாட்டின் மொத்த பாக்கு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு மேல் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. தமிழக பாக்கு உற்பத்தியில் 40 சதவீதம் சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.

    குறிப்பாக, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூர், கொட்டவாடி, அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூர், கருமந்துறை பகுதியில் ஆண்டு முழுவதும் நீர்பாசன வசதி கொண்ட நன்செய் நிலங்களில், 10,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு பாக்கு பயிரிடப்பட்டுள்ளது.

    பாக்கு மரத்தோப்பு உருவாக்குவதற்கு, மரக்கன்றுகளை குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்காவது நிழலில் வளர்க்க வேண்டும் என்பதால், அகத்தி மரத்தில் வெற்றிலை கொடிக்கால் அமைத்து, அதற்கு நடுவே பாக்கு மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 700 முதல் 800மரக்கன்றுகள் வரை நடப்பட்டு பாக்குத்தோப்புகள் உருவாக்கப்படுகிறது.

    பாக்கு மரங்கள் தொடர்ந்து 30 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும் என்பதால், தவறாது நீர்பாசனம் செய்து, உரமிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். ஒரு ஏக்கர் பாக்குத்தோப்பிலுள்ள பாக்குமரங்களில் இருந்து ஓராண்டுக்கு பாக்குக்காய்களை அறுவடை செய்து கொள்ள ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை வியாபாரிகள் குத்தகை கொடுக்கின்றனர். பாக்குக்காய்களை அறுவடை செய்யும் வியாபாரிகள், தோலுரித்து, வேகவைத்து பதப்படுத்தி ஆப்பி என குறிப்பிடப்படும் கொட்டைப்பாக்கு உற்பத்தி செய்து நாடு முழுவதும் வர்த்தகம் செய்து வருகின்றனர்.

    வாழப்பாடி பகுதியில் 30 ஆண்டுக்கு முன் 10,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு பயிரிடப்பட்ட பாக்கு மரங்கள் முதிர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக மகசூல் கொடுப்பது படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2020க்கு முன் தொடர்ந்து 10 ஆண்டுகள் வாழப்பாடி பகுதியில் பருவமழை பொய்த்து போனதால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பாக்குமரத்தோப்புகள் நீர்பாசனத்திற்கு வழியின்றி காய்ந்து கருகி அழிந்தன. இதுமட்டுமின்றி, முதிர்ந்த பாக்குமரத்தோப்புகளை மீண்டும் உருவாக்குவதிலும், புதிய பாக்குமரத் தோப்புகளை உருவாக்குவதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.

    இந்நிலையில், கடந்த இரு ஆண்டாக வாழப்பாடி பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால், இப்பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமான, அருநுாற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் கரியக்கோயில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை மற்றும் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணைகளும் நிரம்பின. கிராமங்கள் தோறும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    இதனால், பாக்குமரத்தோப்புகள் உருவாக்குவதற்கேற்ற சூழல் உருவாகியுள்ளதால், முதிர்ந்த மரங்களுக்கு அடியிலேயே பாரம்பரிய அடிக்கன்று நடவு முறையில் பாக்குமரக்கன்றுகளை நடவு செய்வதிலும், அணை, ஆறு மற்றும் ஏரிப்பாசன நிலங்கள், ஆண்டுமுழுவதும் பாசன வசதி கொண்ட நன்செய் விளைநிலங்களிலும் பாக்கு மரக்கன்றுகளை நட்டு புதிய பாக்குமரத் தோப்புகள் உருவாக்குவதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    புதிதாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பாக்குமரத்தோப்புகள் உருவாக்கப்படுவதால், எதிர்வரும் 3 ஆண்டுக்கு பிறகு வாழப்பாடி பகுதியில் பாக்கு மகசூல் இரு மடங்காக அதிகரிக்குமென, பாக்கு வியாபாரிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ×