என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை கிரிக்கெட்"
- ஆரம்பத்தில் ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது.
- அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்துகிறது.
துபாய்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த போட்டி அரசியல் பிரச்சினை, பாதுகாப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் சில முறை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் ஆண்டு போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்தை கடைசி பந்தில் வீழ்த்தி வாகை சூடியது.
ஆரம்பத்தில் ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 20 ஓவர் வடிவம் புகுத்தப்பட்டது. அதாவது அந்த சமயத்தில் எந்த உலக கோப்பை போட்டி நெருங்கி வருகிறதோ அதற்கு சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு அந்த வடிவில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்துகிறது. இந்த தொடர் டி20 வடிவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் ஆசிய கோப்பையும் 20 ஓவர் வடிவில் அரங்கேறுகிறது. இதனை தொடர்ந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் எந்த நாடு நடுத்தும் என்ற தகவலும் எந்த வடிவத்தில் நடக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அதன் விவரம்:-
2025 - இந்தியா (டி20 ).
2027 - பங்களாதேஷ் (ஒருநாள்).
2029 - பாகிஸ்தான் (டி20 ).
2031 - இலங்கை (ஒருநாள்).
- சிராஜின் 21 ரன்னுக்கு 6 விக்கெட், ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு பவுலரின் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவானது.
- முகமது சிராஜ் தனது 2-வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வேட்டையாடினார்.
இலங்கையின் பேட்டிங் முதுகெலும்பை சுக்குநூறாக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 7 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.
மேலும் சில சாதனை விவரம் வருமாறு:-
* முகமது சிராஜியின் 21 ரன்னுக்கு 6 விக்கெட், ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு பவுலரின் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவானது. இதற்கு முன்பு பாகிஸ்தானின் வாக்கர் யூனிஸ் 1990-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இலங்ைகக்கு எதிரான ஆட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.
* அற்புதமாக பந்து வீசிய இந்திய பவுலர்களில் ஸ்டூவர்ட் பின்னி (4 ரன்னுக்கு 6 விக்கெட், வங்காளதேசம் எதிராக), அனில் கும்பிளே (12-6, வெஸ்ட் இண்டீஸ் எதிராக), பும்ரா (19-6, இங்கிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்கு அடுத்த இடத்தை முகமது சிராஜின் பந்து வீச்சு பிடித்துள்ளது.
* முகமது சிராஜ் தனது 2-வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வேட்டையாடினார். பந்து வாரியாக சாதனை விவரம் கணக்கிடப்பட்ட 2002-ம் ஆண்டில் இருந்து ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை அறுவடை செய்த 4-வது பவுலராக முகமது சிராஜ் திகழ்கிறார். ஏற்கனவே இலங்கையின் சமிந்தா வாஸ் (2003-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக), பாகிஸ்தானின் முகமத் சமி (2003-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக), இங்கிலாந்தின் அடில் ரஷித் (2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) ஆகியோர் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள்.
* 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தினார். அதன் பிறகு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் 6 விக்கெட் எடுத்த வீரர் சிராஜ் தான்.
* இலங்கையின் 50 ரன், ஒரு நாள் போட்டி இறுதிப்போட்டிகளில் ஒரு அணியின் மோசமான ஸ்கோராக அமைந்துள்ளது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான இறுதிசுற்றில் இந்தியா 54 ரன்னில் ஆல்-அவுட் ஆகி இருந்ததே இந்த வகையில் சொதப்பல் ஸ்கோராக இருந்தது.
* இந்தியாவுக்கு எதிராக ஒரு அணியின் குறைந்த ஸ்கோரும் இது தான். 2014-ம் ஆண்டு மிர்புரில் நடந்த ஆட்டத்தில் வங்காளதேசம் 58 ரன்னில் அடங்கியதே முந்தைய தாழ்ந்த ஸ்கோராகும்.
- எங்களிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் வெவ்வேறு திறமையுடன் வித்தியாசமாக பந்து வீசக்கூடியவர்கள்.
- ஸ்லிப்பில் நின்றபடி முகமது சிராஜ் பந்து வீசிய விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
இது போன்று வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசுவதை பார்க்கும் போது எனக்கு மிகவும் மனநிறைவை தருகிறது. எங்களிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் வெவ்வேறு திறமையுடன் வித்தியாசமாக பந்து வீசக்கூடியவர்கள். ஸ்லிப்பில் நின்றபடி முகமது சிராஜ் பந்து வீசிய விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் இது ஒரு அற்புதமான செயல்பாடு. அதுவும் இறுதிப்போட்டியில் இது மாதிரி அசத்துவது நீண்ட காலம் மனதில் நிலைத்து நிற்கும்.
சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேலுக்கு லேசான தசைகிழிவு தான். ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் ஆடுவது சந்தேகம் தான். ஸ்ரேயாஸ் அய்யர் நன்றாக இருக்கிறார். பயிற்சியில் ஈடுபடுகிறார். கிட்டத்தட்ட அவர் 99 சதவீதம் உடல்தகுதியை எட்டிவிட்டார்' என்றார்.
- இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
- இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மோதுகின்றன.
மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முந்தைய நாள் இரவு 11 மணி வரை விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் ஓய்வின்றி உடனடியாக களம் இறங்க வேண்டி உள்ளது. சோர்வின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
இதே போல் சூப்பர்4 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்த தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாகும். தொடர்ச்சியாக 13 ஒரு நாள் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வீறுநடை போடும் இலங்கை அதே உத்வேகத்துடன் அடியெடுத்து வைக்கிறது.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அங்கு இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பாகிஸ்தானின் 3-வது மிக மோசமான குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்
- பாகிஸ்தானின் 2-வது மிகப்பெரிய ரன் வித்தியாச தோல்வியாகும்
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா 356 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் 128 ரன்னில் சுருண்டது. இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் பல்வேறு மோசமான சாதனைகளில் இடம் பிடித்துள்ளது.
1. இது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் நான்காவது ஆகும். 2023-ல் இலங்கைக்கு எதிராக 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2007-ல் பெர்முடாவிற்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்திலும், 2008-ல் ஹாங்காங் அணிக்கெதிராக 256 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
2. பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்திய 2-வது அணி இந்தியா ஆகும். 2009-ல் இலங்கை 234 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது. 2002-ல் ஆஸ்திரேலியா 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 1992ல் இங்கிலாந்து 198 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
3. ஆசிய கோப்பையில் மிகப்பெரிய வித்தியாசத்தில் இது நான்காவது வெற்றியாகும். 2009-ல் இந்தியா ஹாங்காங் அணிக்கெதிராக 256 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2023-ல் நேபாளத்திற்கு எதிராக பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2000-ல் வங்காள தேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் 233 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
4. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் 3-வது குறைந்த பட்சம் இதுவாகும். 1985-ல் 87 ரன்னில் சுருண்டு உள்ளது. 1997-ல் 116 ரன்னில் சுருண்டுள்ளது. தற்போது 128 ரன்னில் சுருண்டுள்ளது. 1984-ல் சார்ஜாவில் 134 ரன்னில் சுருண்டுள்ளது.
5. பாகிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன் 2008-ல் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. 2017-ல் 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
6. பாகிஸ்தானுக்கு எதிராக சிறந்த சுழற்பந்து வீச்சு. 1988-ல் அர்சத் ஆயுப் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்துள்ளார். 2005-ல் சச்சின் டெண்டுல்கர் 50 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் சாய்த்துள்ளார். தற்போது குல்தீப் யாதவ் 25 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் எடுத்துள்ளார். 1996-ல் அனில் கும்ப்ளே 12 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்துள்ளார்.
7. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்- தற்போது விராட் கோலி- ராகுல் 233 ரன்கள் எடுத்துள்ளனர். அதன்பின் 1996-ல் சித்து-டெண்டுல்கர் 231 ரன்கள் எடுத்துள்ளனர். 2018-ல் தவான்- ரோகித் சர்மா ஜோடி 210 ரன்கள் எடுத்துள்ளது. 2005-ல் ராகுல் டிராவிட்- சேவாக் ஜோடி 201 ரன்கள் எடுத்துள்ளது.
8. ஆசிய கோப்பையில் இதுதான் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
- காயத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில், முதல் போட்டியிலேயே சதம் விளாசினார் ராகுல்
- விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார்
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு மழை அச்சுறுத்தலாக இருந்த போதிலும் நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்களில் போட்டி நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா இமாலய வெற்றியை ருசித்தது. இந்தியா 356 ரன்கள் குவித்த போதிலும், பாகிஸ்தான் 128 ரன்னிலேயே சுருண்டது.
228 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
மழை குறுக்கிட்ட நிலையில் சிறப்பாக விளையாடி முடித்ததற்கு, மைதான ஊழியர்கள் (groundsmen) முக்கிய காரணமாகும். தார்ப்பாய்களால் மைதானத்தை மூடுவது, பின்னர் நீக்குவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். ஒட்டுமொத்த அணியுமான நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டம்.
நாங்கள் போட்டியை தொடங்கியபோது, இது சிறந்த விக்கெட் என்பது எங்களுக்கு தெரிந்தது. மழைக்கு ஏற்றபடி எங்களை மாற்றிக் கொண்டோம். கே.எல். ராகுல், விராட் கோலி ஆகிய இருவரும் அனுபவ வீரர்கள். அவர்கள் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு, அதன்பின் ஆட்டத்தை கொண்டு செல்வார்கள் என்பது நாங்கள் அறிந்ததே.
பும்ரா சிறப்பாக பந்து வீசினார். இரண்டு வழிகளிலும் பந்தை ஸ்விங் செய்தார். கடந்த 8 முதல் 10 மாதங்கள் கடினமாக உழைத்துள்ளார். கே.எல். ராகுல் ஆடும் லெவனில் இடம்பெறுவது டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் முடிவானது. காயத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து, களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது வீரரின் மனநிலை என்பதை காட்டிவிட்டார்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தோல்வி குறித்து கூறுகையில் "காலநிலை (Weather) நமது கையில் இல்லை. இருந்த போதிலும் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தோம். பந்து வீச்சு, பேட்டிங் ஆகிய இரண்டிலும் எங்களது சிறந்ததை கொடுக்க முடியவில்லை.
எங்களது பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய தொடக்க வீரர்கள் சிறப்பாக திட்டம் தீட்டி, ஆட்டத்தை தொடங்கினர். விராட் கோலி, கே.எல். ராகுல் தொடர்ந்து அதை எடுத்துச் சென்றனர். முதல் 10 ஓவர்களில் சிராஜ் அற்புதமாக பந்து வீசினார். இருந்த போதிலும் எங்களது பேட்டிங் சரியாக அமையவில்லை'' என்றார்.
- சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்களை கடந்தார்
- விராட் கோலி 267 இன்னிங்சில் கடந்து சாதனை
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டம் கொழும்பில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
94 பந்தில் 122 ரன்கள் விளாசிய விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த போட்டியில் சதம் அடித்து 122 ரன்கள் குவித்ததன் மூலம் விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
அவர் 98 ரன்களை தொட்டபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை பதிவு செய்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் விரைவாக 13 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியருந்தார். தற்போது விராட் கோலி 267 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ரிக்கி பாண்டிங் 341 இன்னிங்சிலும், குமார் சங்கக்காரா 363 இன்னிங்சிலும், சனத் ஜெயசூர்யா 416 இன்னிங்சிலும் 13 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
மேலும், 8 ஆயிரம், 9 ஆயிரம், 10 ஆயிரம், 11 ஆயிரம், 12 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்சில் எட்டியவர் என்ற சாதனையும் இவரது கைவசமே உள்ளது.
மேலும், 47 சதங்கள் விளாசி சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். சச்சின் தெண்டுல்கர் 49 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
- நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன்.
- இந்த பேட்டில் இதுவரை அவர் அடித்த ஒவ்வொரு சதமும் அடங்கியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்று போட்டியில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மழையாள் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மிதமுள்ள ஆட்டம் இன்று 3 மணிக்கு நடைபெறும்.
இந்த போட்டிக்கு முன்னர் வளர்ந்து வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் தனது அனுபவத்தை விராட் கோலி பகிர்ந்துள்ளார். இதில் கிருஷாந்த் என்ற வீரர் விராட் கோலிக்கு வெள்ளி பேட்டை பரிசாக வழங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து இலங்கை நெட் பவுலர் கூறியதாவது:-
நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகர். அவரை கடைசியாக 2017 -ல் நெட் பயிற்சியின் போது சந்தித்தேன். இந்த வெள்ளி பேட் அவருக்கு எனது சிறிய பரிசு. இந்த பேட்டில் இதுவரை அவர் அடித்த ஒவ்வொரு சதமும் அடங்கியுள்ளது. இந்த பேட்டை தயார் செய்ய எனக்கு மூன்று மாதங்கள் எடுத்தது.
Start your weekend with an inspiring interaction ?
— BCCI (@BCCI) September 9, 2023
Virat Kohli shares his experience with budding cricketers ??#TeamIndia | #AsiaCup2023 | @imVkohli pic.twitter.com/FA0YDw0Eqf
- ஷாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ரோகித் படைத்தார்.
- ஆசிய கோப்பையில் 23 சிக்சர் அடித்த ஜெயசூர்யாவின் சாதனையை ரோகித் முறியடித்தார்.
கொழும்பு:
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன.
இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடினார். இந்த ஜோடி 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ரோகித் சர்மா 56 ரன்களிலும், சுப்மன் கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.
மேலும் இந்த ஆட்டத்தில் அவர் 4 சிக்சர்கள் அடித்திருந்தார். அதன் மூலம் 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். ஆசிய கோப்பையில் 23 சிக்சர் அடித்த ஜெயசூர்யாவின் சாதனையை ரோகித் முறியடித்தார்.
அதிக சிக்சர்கள் அடித்த முதல் 3 வீரர்கள் விவரம் பின்வருமாறு;-
1. ஷாஹித் அப்ரிடி : 26 (21 இன்னிங்ஸ்) 1. ரோஹித் சர்மா : 26* (24 இன்னிங்ஸ்)
2. சனாத் ஜெயசூர்யா : 23 (24 இன்னிங்ஸ்)
3. சுரேஷ் ரெய்னா : 18 (13 இன்னிங்ஸ்)
அத்துடன் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இலங்கை மண்ணில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற கிறிஸ் கெயில் படைத்திருந்த சாதனையையும் உடைத்து ரோகித் புதிய வரலாறு படைத்துள்ளார்.
அந்த பட்டியல்: 1. ரோகித் சர்மா : 33*
2. கிறிஸ் கெயில் : 30
3. ஷாஹித் அப்ரிடி : 29
4. சுரேஷ் ரெய்னா : 25
- நாய்க்குட்டியை விராட் கோலி பாசமாக கொஞ்சினார்.
- இதனையடுத்து மற்ற வீரர்கள் நாய்க்குட்டியுடன் கால்பந்து விளையாட தொடங்கினர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு முன்னேறின. ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறின.
'சூப்பர்-4' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
'சூப்பர்-4' சுற்றின் 3-வது ஆட்டம் கொழும்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொழும்புவில் இந்திய அணி வீரர்கள் பில்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.
இந்த பயிற்சிக்கு முன்பு வார்ம் அப் செய்வதற்காக வீரர்கள் கால்பந்து ஆட்டத்தில் விளையாடுவது வழக்கம். அப்போது மைதானத்தில் ஒரு நாய்க்குட்டி இந்திய வீரர்களை சுற்றிக் கொண்டு நின்றது. அப்போது அந்த நாய்க்குட்டியை பார்த்த விராட் கோலி அதனை செல்லமாக அழைக்க அது அழகாக வாழை ஆட்டிக்கொண்டு விராட் கோலி இடம் சென்றது.
இதை அடுத்து அந்த நாய்க்குட்டியை விராட் கோலி பாசமாக கொஞ்சினார். இதனையடுத்து மற்ற வீரர்கள் நாய்க்குட்டியுடன் கால்பந்து விளையாட தொடங்கினர். பின்னர் அந்த நாய்க்குட்டி அங்கிருந்து சென்றது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் இலங்கையில் விளையாடி வருகிறோம்.
- நாளை வானிலை தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதி வருகிறது.
முதல் போட்டியில் வங்காளதேசம் அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இன்று சூப்பர் 4-ல் 2-வது போட்டி நடைபெறுகிறது. இதில் வங்காளதேசம் மற்றும் இலங்கை மோதுகிறது. நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் இந்தியாவை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் இலங்கையில் விளையாடி வருகிறோம். நாங்கள் டெஸ்ட் விளையாடினோம். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு தொடரில் விளையாடினோம். அதன் பிறகு எல்.பி.எல். விளையாடி உள்ளோம். தொடர்ச்சியாக இங்கு விளையாடி வருவதால் இந்தியாவை நாங்கள் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.
நாங்கள் புதிய பந்தில் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெறுகிறோம் மற்றும் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவதே எங்களது திட்டம். மிடில் ஓவர்களில் எங்களுக்கு விக்கெட்டுகள் தேவை. ஆனால் நாங்கள் அவற்றைப் பெறவில்லை.
மிடில் ஓவர்களில் சொதப்பினாலும் போட்டியை நன்றாக முடிப்பதை நீங்கள் காணலாம். எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதியில் சிறப்பாக செயல்படுகின்றனர். இது ஒரு அணியின் கூட்டு முயற்சி. போட்டியில் யாராவது தோல்வியுற்றால், மற்றொரு பந்து வீச்சாளர் அதை சரி செய்கிறார்கள். நாளை வானிலை தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுவாக இந்த ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது.
- இதனால் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.
கொழும்பு:
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர்4 சுற்றை எட்டியுள்ளன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், வங்காளதேசமும் மோதுகின்றன.
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 2 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்து தப்பித்தது. இலங்கை அணியில் பேட்டிங்கில் குசல் மென்டிஸ், பதும் நிசாங்கா, அசலங்கா, திமுத் கருணாரத்னே நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் பதிரானா, தீக்ஷனா, ரஜிதா நம்பிக்கை அளிக்கிறார்கள். உள்ளூர் சூழலில் ஆடுவது இலங்கைக்கு கூடுதல் பலமாகும்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போடுகிறது. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால், தொடர்ந்து அதிக வெற்றிகளை குவித்து சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானை (தலா 12 வெற்றி) பின்னுக்கு தள்ளிவிடும்.
ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசம் லீக் சுற்றில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சூப்பர்4 சுற்றுக்கு வந்தது. சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் வங்காளதேச அணி, பாகிஸ்தானிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் உதை வாங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 38.4 ஓவர்களில் 193 ரன்னில் அடங்கியது. அனுபவம் வாய்ந்த ஷகிப் அல்-ஹசன் (53 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (64 ரன்) அரைசதம் அடித்ததால் கவுரவமான ஸ்கோரை எட்டியது. இல்லாவிட்டால் நிலைமை மோசமாகி இருக்கும்
பேட்டிங்கில் சீரற்ற தன்மை அவர்களின் பலவீனமாக உள்ளது. நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தசைப்பிடிப்பால் விலகியது அந்த அணிக்கு இன்னொரு பின்னடைவாகும். டாப்-5 வீரர்களில் யாராவது ஒருவர் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடினால் சவாலான ஸ்கோரை எட்டலாம். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் வங்காளதேசத்தின் இறுதிப்போட்டி கனவு தகர்ந்து விடும் என்பதால், தவறுகளை திருத்திக்கொண்டு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டுவார்கள். மொத்தத்தில், வலுவான இலங்கையின் வெற்றிப்பயணத்துக்கு வங்காளதேச வீரர்கள் முட்டுக்கட்டை போடுவார்களா? அல்லது மீண்டும் அடங்கிப்போவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அங்கு மழை பெய்வதற்கு 68 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக இந்த ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். இந்த மைதானத்தில் இலங்கை அணி இதுவரை 120 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 74-ல் வெற்றியும், 39-ல் தோல்வியும் கண்டுள்ளது. 7 ஆட்டத்தில் முடிவில்லை. அதே சமயம் வங்காளதேசத்துக்கு இது ராசியான மைதானம் கிடையாது. இங்கு அந்த அணி 11 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் தோற்று இருக்கிறது. 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா 375 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் அதிகபட்சமாகும். 2002-ம் ஆண்டு நெதர்லாந்து 86 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இலங்கை: பதும் நிசாங்கா, கருணாரத்னே, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, சமரவிக்ரமா, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), துனித் வெல்லாலகே, தீக்ஷனா, கசுன் ரஜிதா, பதிரானா.
வங்காளதேசம்: முகமது நைம், லிட்டான் தாஸ், அபிப் ஹூசைன், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹரிடோய், முஷ்பிகுர் ரஹிம், ஷமிம் ஹூசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மமுத்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்