search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறக்கும் காவடி"

    • திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா.
    • பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

    நாகர்கோவில்:

    தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலையில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டனர்.

    காவடி ஊர்வலம், புஷ்ப காவடி, பன்னீர் காவடி, எண்ணெய் காவடி, வேல் காவடி, பறக்கும் காவடி என விதவிதமான காவடிகளுடன் பக்தர்கள் பயபக்தியுடன் புறப்பட்டனர். இரணியல் சுற்று வட்டார பகுதி, மார்த்தாண்டம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டன.

    அந்த வகையில் மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வேல்காவடி, பறக்கும் காவடி புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, கணபதிபுரம், ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

    இதுபோல் வடக்கன் பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பக்காவடி மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று பின்னர் திரும்பி கோவில் வந்தடைந்தது.

    தொடர்ந்து அன்னதானமும், மாலை 4 மணிக்கு காவடிகள் வடக்கன்பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டது. மேலும் சேரமங்கலம் ஆழ்வார் சுவாமி கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பக்காவடிகள் சேரமங்கலம், படர்நிலம், பிள்ளையார்கோவில் மணவாளக்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது.

    குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடிகள், வேல் காவடிகள், குளச்சல் அண்ணா சிலை பகுதிக்கு வந்து அங்கிருந்து திங்கள் சந்தை வழியாக திருச்செந்தூர் சென்றன.

    மேலும் குளச்சல் புளியமூட்டு விளைமுத்தாரம்மன் கோவிலில் இருந்து 6 பெரிய காவடிகளும், 6 சிறுவர் காவடிகளும், சிறு குழந்தைகள் முருகன் வேடம் அணிந்தபடியும் சென்றனர்.

    செக்காலத் தெரு முத்தாரம்மன் கோவிலில் இருந்து 6 அடி வேல் காவடி, காவடியும், கள்ளியடப்பு கோவிலில் இருந்து பறக்கும் காவடியும், நுழக்குடி சிவன் கோவில் இருந்து பறக்கும் காவடியும், மகாதேவர் கோவிலில் இருந்து பறக்கும் காவடியும் புறப்பட்டு சென்றன.

    • இலங்கை அகதிகள் பறக்கும் காவடியாக கொம்பு தப்பட்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
    • அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சியும் சமபந்தி விருந்தும் நடந்தது.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரம் ஈழத் தமிழர் குடியிருப்பில் வன பேச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்கொடை விழா 3 நாட்கள் நடந்தது.

    இதையொட்டி முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும் மதியம் 2 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் கன்னியாகுமரியில் இருந்து கொட்டாரம் பெருமாள்புரம் ஈழத்தமிழர் குடியிருப்பு பகுதி வரை இலங்கை அகதிகள் பறக்கும் காவடியாக கொம்பு தப்பட்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

    இந்த பறக்கும் காவடி யில் இலங்கை அகதிகள் 2 பேர் முதுகில் அலகு குத்தி காவடியை தோளில் சுமந்தபடி பவனியாக வந்தனர். பால்குடங்களும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரவு சிறப்பு பூஜை மற்றும் சமபந்தி விருந்து நடந்தது.2-வதுநாள் அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து நையாண்டி மேளமும் வில்லிசையும் நடந்தது. மதியம் சாமி, சாஸ்தா, மற்றும் காலசாமிக்கு பூஜையும் நடந்தது. அதன் பிறகு சமபந்தி விருந்து நடந்தது. இரவு நையாண்டி மேளம், கொம்புதப்பட்டை மேளம்மற்றும் வில்லிசை போன்றவை நடந்தது.

    அதன் பிறகு அலங்கார தீபாராதனையும் பூப்படைப் பும் நடந்தது. 3-வது நாள் அதிகாலையில் சுடலை மாடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அலங்கார தீபாராதனைநடந்தது. அதன் பிறகு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சமபந்தி விருந்து நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கொட்டாரம் பெருமாள்புரம் ஈழத்தமிழர் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் மற்றும் இலங்கை அகதிகள் செய்து இருந்தனர்.

    ×