search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கட்டணம் உயர்வு"

    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தே.மு.தி.க.வினரின் பெயரை கெடுப்பதற்கு சதி நடக்கிறது.
    • தமிழகம் முழுவதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    மின் கட்டண உயர்வு, ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதது ஆகியவற்றை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மின் கட்டண உயர்வும், மின் வெட்டும் வழக்கமாகி விடுகிறது. ரேசன் கடைகளில் மக்களுக்கு பொருட்கள் சரியான முறையில் கிடைப்பது இல்லை. மாதம் தோறும் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்குவதாக கூறிவிட்டு ஒரு சிலருக்கு மட்டுமே கொடுத்துள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தே.மு.தி.க.வினரின் பெயரை கெடுப்பதற்கு சதி நடக்கிறது. மக்கள் பிரச்சனைகளுக்காக தே.மு.தி.க. இதுபோன்ற போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவோம்.

    இவ்வாறு பிரேமலதா பேசினார்.

    சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்தன், சூரியா, பிரபாகரன், மாறன், செந்தில் குமார், பழனி, வேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தாம்பரம் சண்முகம் சாலையில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் செழியன், மகாதேவன் மற்றும் தே.மு.தி.க.வினர் கலந்து கொண்டனர்.

    கோவையில், துணை செயலாளர் பார்த்தசாரதி, தர்மபுரியில் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தி நின்று தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் தி.மு.க., அரசு 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று திருப்பூர் குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சிவசாமி, அம்மா பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், விஜயகுமார் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சி செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, என்.எஸ்.என்.நடராஜன், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன், துணைச்செயலாளர் புதுப்பட்டி பாலு, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அட்லஸ் லோக நாதன், வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிசாமி,எம்ஜிஆர்., மன்ற செயலாளர் சிட்டி பழனிசாமி, எம்ஜிஆர்., இளைஞர் அணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், மாணவரணி செயலாளர் சதீஷ், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், முன்னாள் கவுன்சிலர் ஆண்டிபாளையம் ஆனந்த், பகுதி செயலாளர்கள் பட்டுலிங்கம், குமார், கண்ணன், கருணாகரன், ஹரிஹரசுதன், பி.கே.முத்து, நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் தனபால், ஆண்டவர் பழனிச்சாமி, கவுன்சிலர் தங்கராஜ், மற்றும் சூர்யா செந்தில், நல்லூர் சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தி நின்று தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    • கடந்த 23 மாதங்களில் 33.7 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.
    • வெற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பா.ம.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. தோற்று இருந்தால் நிச்சயம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்க மாட்டார்கள். இது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகம். உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

    கடந்த 23 மாதங்களில் 33.7 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் மின்வாரியத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. மின்வாரியத்துக்கு கடன் வெறும் ரூ.10 ஆயிரம் கோடி தான். ஆனால் இன்னும் மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக பொய் கூறுகிறார்கள்.

    இதற்கு காரணம் நிர்வாக திறமை இல்லாத அரசு ஆட்சியில் உள்ளது. மக்கள் இனியும் வேடிக்கை பார்க்க கூடாது. வீதிக்கு வந்து போராடுங்கள். மின்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. மாதம் தோறும் மின் கணக்கெடுக்கப்படும் என்றார்கள். அது என்னாச்சு? வெற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் பானு, சிவக்குமார் எம்.எல்.ஏ., ஈகை தயாளன், ரா.செ. வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
    • பணத்திற்காக தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கொண்டிருக்கின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை எழும்பூரில் பாமகவினர் போராட்டம் நடத்தினர்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான போராட்டத்தில் ஏராளமான பாமக-வினர் பங்கேற்றனர். மின்கட்டண உயர்வையும், தமிழக அரசையும் கண்டித்து பாமக-வினர் கோஷம் எழுப்பினர்.

    இந்நிலையில் பாமக போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

    * தமிழக அரசு மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

    * 2 மாதங்களில் தமிழக அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்.

    * இன்றும் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவது பெரும் மோசடி.

    * திமுக அரசிற்கு நிர்வாக திறமை என்பதே கிடையாது.

    * பணத்திற்காக தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கொண்டிருக்கின்றனர்.

    * அரசு துறைகளில் மின் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக அன்புமணி குற்றச்சாட்டி உள்ளார்.

    • திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் ஏமாற்றம் 2022 தைப் பொங்கல் பரிசு.
    • 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வு.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக மக்களை அனைத்து வகைகளிலும் வாட்டி வதைப்பதற்கென்றே ஒரு ஆட்சி தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சியாக நடந்து வருகின்றது. வரிக்குதிரை மேல் உள்ள வரிகளைக் கூட எண்ணிவிடலாம், எண்ண முடியாத அளவுக்கு வரிகளையும், கட்டண உயர்வுகளையும் மக்களின் மீது சுமத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் வேதனையில் துடிக்கின்றனர்.

    திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழக மக்கள் கடுமையான மின்வெட்டாலோ, மின் கட்டண உயர்வாலோ பாதிக்கப்படுவது வாடிக்கை. 2011-ல் அம்மா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, மின் பற்றாக்குறையாக இருந்த தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியதை அனைவரும் நன்கறிவார்கள்.

    தமிழக மக்களின் சுமையைக் குறைக்க 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை வழங்கியது அம்மாவின் அரசு. இதன் பலனைக்கூட ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனுபவிக்கக்கூடாது என்ற தீய எண்ணத்துடன் ஆண்டுதோறும் இந்த விடியா

    திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி வருவது எவராலும் ஏற்க முடியாது.

    * திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் ஏமாற்றம் 2022 தைப் பொங்கல் பரிசு.

    * பிப்ரவரி 2022-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு விடியா திமுக அரசு தமிழக மக்களுக்கு அளித்த பரிசு சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு என்று பல வரி உயர்வுகள்.

    * குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டோர் வரை, அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் விடியா திமுக அரசு அளித்த பரிசு, பலமுறை பால் பொருட்களின் விலை உயர்வு.

    * 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வு.

    * தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் இரண்டாம் முறையாக மின் கட்டண உயர்வு. இதன் காரணமாக விசைத்தறி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீட்டு இணைப்பில் பொதுவான பயன்பாட்டாளர்கள் (வணிக கட்டணம் நிர்ணயம்) பாதிப்பு.

    * பாராளுமன்றத் தேர்தலில் 39-க்கு 39 இடங்களைப் பெற்ற இருமாப்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன், நேற்று முதல் தமிழக மக்களின் நெற்றியில் பட்டை நாமத்தைப் போட்டு மூன்றாம் முறையாக 5 சதவீத மின் கட்டண உயர்வை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர்.

    விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும், 2024, ஏப்ரல் மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவைகளை வழங்காமலும் மக்களை துன்பத்திற்குள்ளாக்கிய இந்த ஏமாற்று மாடல் அரசு, மூன்றாம் முறையாக மின்கட்டண உயர்வு என்ற ஒரு பேரிடியை தமிழக மக்களின் தலையில் இறக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    * அம்மா ஆட்சியில் மின்கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் 'மின்சாரத்தை தொட்டால்தான் ஷேக் அடிக்கும், மின்சார கட்டணத்தைக் கேட்டாலே ஷேக் அடிக்குது' என்று வசனம் பேசியவாறு வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதித்ததை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை.

    * 'சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்' என்று நாடக வசனம் பேசிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தி, சொல்லாததையும் செய்துவிட்டார்!

    * ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடுவோம் என்று சொன்னதை இந்த கையாலாகாத அரசு நிறைவேற்றியதா? என்று அல்லலுறும் மக்கள் கேட்கிறார்கள்.

    * உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்! மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை.

    மக்களுக்குத் தேவையில்லாமல் வரி மற்றும் கட்டணச் சுமையை ஏற்றும்போதெல்லாம் அதனை ஒப்பீடு செய்ய, தங்களுக்கு வசதியாக இதர மாநிலங்களையும் விடியா தி.மு.க. அரசு துணைக்கு அழைத்துக்கொள்கிறது. தமிழகத்தில் ஆட்சி செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, மற்ற மாநிலங்களை ஒப்பீடு செய்து வரிச் சுமையை தமிழக மக்கள் தலையில் கட்டுவதற்கல்ல. மத்திய அரசு ஆணையின்படி மின்சார வாரியத்தின் இழப்பை, எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் செய்ததுபோல் மாநில அரசே ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

    எனவே, விலைவாசி உயர்வு, வரி உயர்வு போன்றவைகளால் மக்களின் கோபம் எரிமலையாக வெடிப்பதற்கு முன்பு, பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டண உயர்வையும், விசைத்தறி மற்றும் சிறு, குறு தொழில்கள், தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    நம்மை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்ற மமதையில் பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைக்கனத்தோடு செயல்படுவாரேயானால், கொதிப்படைந்துள்ள தமிழக மக்கள், விடியா திமுக ஆட்சிக்கு தக்க பாடத்தைப் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சொன்னதை செய்யாமல்.... சொல்லாத மின் கட்டண உயர்வை வாக்களித்த மக்களுக்கு பரிசளித்ததுதான் திராவிட மாடல்....
    • விடியல் என்று கூறிவிட்டு மக்களை இருட்டில் தள்ளுவதுதான் விடியா திராவிட மாடல்...

    சென்னை:

    தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு தரும் பரிசு மின் கட்டண உயர்வா?

    அடுக்குமாடி குடியிருப்பு முதல் ஏழை எளிய மக்கள் வரை வாக்களித்தவர்களுக்கும், வாக்கு அளிக்காதவர்களுக்கும் பரிசா இந்த மின் கட்டண உயர்வு...

    சொன்னதை செய்யாமல்.... சொல்லாத மின் கட்டண உயர்வை வாக்களித்த மக்களுக்கு பரிசளித்ததுதான் திராவிட மாடல்....

    விடியல் என்று கூறிவிட்டு மக்களை இருட்டில் தள்ளுவதுதான் விடியா திராவிட மாடல்...

    ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்... என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

      சென்னை:

      தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந்தேதி மின்கட்டணத்தை உயர்த்தியது.

      இதில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம் ரூ.550 ஆக இருமடங்கு உயர்த்தப்பட்டது.

      அதேபோல, பீக் அவர் கட்டணமும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டது.

      தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், இந்த கட்டண உயர்வால் தாங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

      தமிழ்நாடு மின்வாரியம் உயர்த்தியுள்ள 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.

      பீக்-அவர் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

      எனினும் இது பெரும் சுமையாக இருப்பதால், இதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.


      சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அதுபோல், 12 கிலோவாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்கு பதிலாக 3-ஏ என்ற அட்டவணை மூலம் மாதம்தோறும் மின்கட்டணம் வசூலிக்க வேண்டும். வெல்டிங் இணைப்புகளை 3-பி என்ற சிறப்பு அட்டவணையில் இருந்து 3-ஏ அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

      இது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொழில் பிரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அப்போது உடன்பாடு ஏற்பட்டது.

      இதை தொடர்ந்து இப்போது அதில் சில முக்கிய கோரிக்கையை ஏற்று பீக்-அவர்ஸ் கட்டணத்தை அரசு குறைத்து உள்ளது.

      மேலும் மின் பயன்பாட்டை பொறுத்து 15-ல் இருந்து 25 சதவீதம் வரை கட்டணம் குறைத்து அரசாணையும் வெளியிட்டுள்ளது.

      சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்க்கிங் கட்டணத்தை 50 சதவீதம் வரை குறைப்பதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

      இதனால் 196.10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      • ஒரு கிலோ வாட்டிற்கான நிரந்தரக் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 102 ரூபாயாகவும் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது.
      • கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில், அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படாது.

      சென்னை:

      முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      1-7-2023 முதல் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது போல் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளின் பொதுச் சேவை பயன்பாட்டிற்கான ஒரு யூனிட் கட்டணம் 8 ரூபாயில் இருந்து 8 ரூபாய் 15 காசாகவும், ஒரு கிலோ வாட்டிற்கான நிரந்தரக் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 102 ரூபாயாகவும் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது.

      இதன் காரணமாக, பொருட்களின் விலை உயர்வதோடு மட்டுமல்லாமல், மீண்டும் கூடுதல் கட்டணத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு ஏழை, எளிய, நடுத்தர மக்கள், குறிப்பாக வாடகைக்கு குடியிருப்போர் ஆளாக்கப்பட்டு உள்ளார்கள். வீடுகளில் உபயோகிக்கப்படும் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதும், வர்த்தக நிறுவனங்களுக்கு இணையாக வீட்டு பொதுச் சேவை பயன்பாட்டிற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்படக்கூடாது என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில், அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படாது.

      வீட்டு நுகர்வோர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கருத்தில் கொண்டு, வீட்டு நுகர்வோருக்கு என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதே கட்டணத்தை குடியிருப்புகளுக்கான பொதுச் சேவை பிரிவிற்கு வசூலிக்க உத்தரவிட வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      • கட்டண உயர்வின் அளவை 4.7 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதமாக அரசு குறைத்து உள்ளது.
      • வீட்டு இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இருக்காது.

      சென்னை:

      தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் உயர்த்த கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

      இதற்காக ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6 சதவீதம் இதில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது விதியாகும்.

      இதன்படி இந்த மாதத்தை பொறுத்தவரையில் (ஜூலை) 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலை குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால் 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

      ஆனால் கடந்த செப்டம்பர் மாதம்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால் கட்டண உயர்வின் அளவை 4.7 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதமாக அரசு குறைத்து உள்ளது.

      ஆனாலும் இந்த கட்டண உயர்வில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் வீட்டு இணைப்புகளுக்கு உயர்த்தப்பட வேண்டிய கட்டண உயர்வை அரசு ஏற்றுக்கொண்டு மின்வாரியத்துக்கு மானியமாக வழங்க ஒப்புக்கொண்டு உள்ளது.

      இதன் காரணமாக வீட்டு இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இருக்காது. இதேபோல் வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கைத்தறி, விசைத்தறிகள் போன்றவற்றுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச மின்சார சலுகைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

      ஆனால் அதே சமயத்தில் வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

      இதன்படி வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்து உள்ளது.

      • மத்திய அரசினுடைய உதய் மின் திட்டத்தை காரணம் காட்டி மின் கட்டண உயர்வு என்பது ஏற்புடையது அல்ல.
      • தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி மின் கட்டண கணக்கீட்டை 2 மாதத்திற்கு ஒரு முறை என உள்ளதை மாற்றி, பிரதி மாதம் கணக்கிடும் முறையினை கொண்டு வர வேண்டும்.

      சென்னை:

      தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொது செயலாளர் எஸ்.சௌந்தர்ராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

      வணிகர் மற்றும் தொழில் துறையினர் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு தற்பொழுது, ஏழு மாதத்திற்குள்ளாக மீண்டும் ஒருமுறை மின் கட்டணம் உயர்வு, அதுவும் குறிப்பாக வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினருக்கு உயர்வு என்பது துரதிஷ்டவசமானது. இது வணிகத்தையும், உற்பத்தி தொழிலையும் கடுமையான பாதிப்பதோடு வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சியை பாதிக்க செய்து அரசுக்கு வரும் வரி வருவாய் குறைவதற்கான வழிவகையை ஏற்படுத்தும்.

      மத்திய அரசினுடைய உதய் மின் திட்டத்தை காரணம் காட்டி மின் கட்டண உயர்வு என்பது ஏற்புடையது அல்ல. மத்திய அரசினுடைய நீட் தேர்வு, மத்திய அரசினுடைய புதிய கல்விக் கொள்கை, இவ்வாறு மத்திய அரசினுடைய பல திட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வரும் தமிழக அரசு, இந்த உதய் மின் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். தவிர்த்திட வேண்டும்.

      தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி மின் கட்டண கணக்கீட்டை 2 மாதத்திற்கு ஒரு முறை என உள்ளதை மாற்றி, பிரதி மாதம் கணக்கிடும் முறையினை கொண்டு வர வேண்டும்

      இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

      • தமிழக அரசு, மின் கட்டணத்தை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம் என்பது தான் தமிழக மக்களின் கோரிக்கையாகும்.
      • அரசுக்கும் மக்களின் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்து வரும் வேளையில் மின் கட்டண உயர்வு நியாயமில்லை.

      சென்னை:

      த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      தமிழக அரசு, மின் கட்டணத்தை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம் என்பது தான் தமிழக மக்களின் கோரிக்கையாகும். நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஜூலை 1 முதல் 4.70 சத வீதம் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், தொடர்ந்து பல ஆண்டுகளாக முழு அளவிலான மின் கட்டண திருத்தத்தை காண உள்ளதும் ஏற்புடையதல்ல. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் சிரமத்தில் இருக்கும் பொது மக்களுக்கு மின் கட்டணம் உயர்ந்தால் பெரும் சுமையாக இருக்கும். அரசுக்கும் மக்களின் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்து வரும் வேளையில் மின் கட்டண உயர்வு நியாயமில்லை. எனவே தமிழக அரசு, இந்த ஆட்சி முடியும் வரையிலாவது மின் கட்டண உயர்வு குறித்த பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலையில் செயல்பட வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      • 13.12.2022 அன்று நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14.12.2022 அன்று ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
      • சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கேற்ற வகையில், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

      சென்னை:

      அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

      தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் நாளை (9-ந் தேதி) அன்று பேரூராட்சிகளிலும், 13.12.2022 அன்று நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14.12.2022 அன்று ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

      இந்நிலையில், புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள் வழியாக கரையை கடக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களிலும் 9.12.2022 அன்று பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதற்கு பதிலாக வருகின்ற 16.12.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

      சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கேற்ற வகையில், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

      கழக இடைக்காலப் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      ×