search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனபத்ரகாளியம்மன் கோவில்"

    • பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் உள்ள வனபத்ர காளியம்மன் கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 23-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து லட்சார்ச்சனை, கிராம சாந்தி, கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.


    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு அம்மன், சிம்ம வாகனத்தில் கோவிலை வலம் வந்து குண்டம் அமைக்கப்பட்ட இடத்தில் எழுந்தருளினார்.

    காலை 5.30 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை பூசாரி ஹரி நடத்திய சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் குண்டத்தில் பூப்பந்து உருட்டப்பட்டு முதலில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மற்றும் போலீசார், உள்ளூர் பிரமுகர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் கைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டே குண்டம் இறங்கினர்.


    தேக்கம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் கரகம் எடுத்து வந்தும், பால்குடம் எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம், பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், வனபத்ர காளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்ட பாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்துள்ளதாகவும், அதனை அறங்காவலர் வசந்தா சம்பத் கவனத்திற்கு கொண்டு சென்றபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனையடுத்து கோர்ட்டு அறிவுறுத்தலின்படி மேட்டுப்பாளையம் போலீசார் வனபத்ரகாளியம்மன் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த 3-ந் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் விசாரணையில் வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதில் கைது செய்யப்பட்ட கோவில் பூசாரி ரகுபதி பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் தொட ர்பாக பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரத்தில் 4 பூசாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 3 காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள் வழியாக செல்கிறது.
    • வன பத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றில் கரையோரத்தில் அமைந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    நடிகரும், டைரக்டருமான கே.பாக்யராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    அந்த வீடியோவில் அவர் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை உள்ளிட்ட இடங்களுக்கு தாங்கள் படப்பிடிப்பிற்காகச் செல்வது உண்டு. அந்த பகுதியில் ஓடும் ஆற்றில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்வார்கள். அப்போது ஆற்றின் சுழலில் சிக்கி சிலர் இறந்து போய் விடுவார்கள். இது சாதாரண விபத்து அல்ல, பணம் பறிக்கும் நோக்கில் நிகழ்த்தப்படும் திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த வீடியோ மேட்டுப்பாளையம் மக்களை மட்டுமல்லாது போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. நடிகர் பாக்கியராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனவும், அதுபோன்ற குற்றச்சம்பவம் ஒன்று கூட மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பதிவாகவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் நீரில் மூழ்கி அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகள் தற்செயலானவை அல்ல என்றும், தண்ணீரில் மூழ்கி நீராடும் நபர்களை நீருக்குள் இருக்கும் சில மர்மநபர்கள் கொடூரமான முறையில் கொலைகள் செய்வதாகவும், அவர்களின் உடல்களை நீருக்குள் தேட உறவினர்களிடம் பணம் கேட்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இவ்வாறு பரவும் வதந்திகள் ஆதாரமற்றது. இதுவரை பவானி ஆற்று பகுதியில் இந்த மாதிரியான கொலை சம்பவம் எதுவும் நடந்ததாக மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் எந்தவித வழக்குகளும் பதியப்படவில்லை.

    பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 3 காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள் வழியாக செல்கிறது. அங்குள்ள வன பத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றில் கரையோரத்தில் அமைந்துள்ளது. மேலும், தினமும் சராசரியாக சுமார் 20 ஆயிரம் பக்தர்களும், அதன் வருடாந்திர குண்டம் திருவிழாவின் போது சுமார் 5 லட்சம் பக்தர்களும் வருகின்றனர். 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் ரோந்து காவலர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பவானி ஆற்றில் இன்று வரை எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

    மேலும் தற்கொலை எண்ணத்துடன் ஆற்றில் குதித்த 13 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் மொத்தம் 19 ஆபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டு பவானி ஆற்றில் உயிர்ச்சேதம் ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் எச்சரிக்கை பலகைகள், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    எனவே மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை மற்றும் உண்மையற்றவை. இவ்வாறு வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலும் இருந்து வருகிறது.
    • பக்தர்கள் அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலும் இருந்து வருகிறது.கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    அதேபோல் ஆடிக்கு ண்டம் திருவிழா இக்கோவிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 19-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் ஆடிக்குண்டம் திருவிழா ெதாடங்கியது. இதையடுத்து இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.தொடர்ந்து நாளை பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல்,அதை தொடர்ந்து ஆடி 10-ம் நாள் செவ்வாய்கிழமை அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து ஆடி 11-ம் நாள் மாவிளக்கு, பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, ஆடி 12-ம் நாள் ஆடி அமாவாசை பரிவேட்டை, ஆடி 13-ம் நாள் மகா அபுஷேகம் மஞ்சள் நீராடல், ஆடி 16-ம் நாள் 108 குத்துவிளக்கு பூஜை,ஆடி 17-ம் நாள் மறுபூஜை உடன் ஆடிக்குண்டம் திருவிழா நிறைவடையும்.ஆடிக்குண்டம் திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தாசம்பத்,உதவி ஆணையர் செயல் அலுவலர் கைலசாமூர்த்தி செய்து வருகின்றனர்.

    மேலும் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில், மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் (பொறுப்பு),போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×