என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரீகாளஹஸ்தி"
- தெலுங்கு கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
- பக்தர்கள் கோவிலின் மாண்பை இழிவுப்படுத்தும் விதமாக நடக்கக்கூடாது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த 25-ந்தேதி சூரிய கிரகணத்தின்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கிடையே இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இது, திட்டமிட்டு செய்யப்பட்டதாகக் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது தெரிய வந்தது. பக்தர்களின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது. பக்தர்கள் கோவிலின் மாண்பை இழிவுப்படுத்தும் விதமாக நடக்கக்கூடாது.
தற்போதுள்ள அறங்காவலர் குழு எந்தவித சுயநலமுமின்றி கோவிலின் வளர்ச்சிக்காகவும், கோவிலின் புகழை இழிவுப்படுத்தும் விதமாக எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. இதேபோல் கோவிலில் மூலவர் சன்னதியில் சம்பிரதாய உடை அணிந்தவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போது தெலுங்கு கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, மகா லகு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைப் பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
நவம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் செல்போன்களை கோவிலுக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. இதை, பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.
- கோவிலுக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
- நாகசதுர்த்தியையொட்டி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது.
தெலுங்கு கார்த்திகை மாதம் 3-வது நாள் வெள்ளிக்கிழமை வந்ததால் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகாலையில் இருந்து இரவு வரை அலைமோதியது. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். பக்தர்களுக்கு போதிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிர்வாக அதிகாரி சாகர்பாபு கூறியதாவது:-
தெலுங்கு கார்த்திகை மாதத்தில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கோவிலின் தூய்மையை பாதுகாக்கும் வகையில் கோவிலுக்கு வெளியில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே தீபங்கள் ஏற்றுவதற்கு கோவிலின் 3-வது கோபுரம் அருகில் உள்ள நாகாலம்மன் புற்று அருகில் தீபங்கள் ஏற்றலாம். இதேபோல் பிக்சால காளி கோபுரம் நுழைவு வாயில் மற்றும் 2-வது கோபுரம் முன்பு பக்தர்கள் தீபங்களை ஏற்றுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்.
நாகசதுர்த்தியையொட்டி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள பாம்புபுற்று அருகில் வழிபாடு நடத்தலாம். கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் ஆகாச தீபத்தை அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு.தாரக சீனிவாசுலு ஏற்றினார். அங்கு சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பக்தர்கள் புனித நீராடி கோவில்களுக்கு சென்று அங்குள்ள பாம்பு புற்றுக்கு பால் ஊற்றினர்.
- பாம்பு புற்றுக்கு வஸ்திரம் சமர்ப்பித்து நெய் தீபம், கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று நாகசதுர்த்தி உற்சவம் நடந்தது. அதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் புனித நீராடி கோவில்களுக்கு சென்று அங்குள்ள பாம்பு புற்றுக்கு பால் ஊற்றினர். முட்டைகளை வைத்தனர். பின்னர் அங்குள்ள நாகர் சிலைகளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, தேங்காய் உடைத்து, பாம்பு புற்றுக்கு வஸ்திரம் சமர்ப்பித்து மஞ்சள், குங்குமம் தூவி, மாவிளக்கு, நெய் தீபம், கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள 3-ம் கோபுரம் எனப்படும் திருமஞ்சன கோபுரம் அருகில் உள்ள நாகர் சிலைகளுக்கு சிவன் கோவில் சார்பில் வேத பண்டிதர்கள் தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தி நாக தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டனர்.
- கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு, ‘லகு’ தரிசன ஏற்பாடு செய்தது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று தெலுங்கு கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமையை சோமவாரமாக பக்தர்கள் அனுசரித்தனர். சோமவாரம் சிவபெருமானை வழிபட உகந்த நாள் என்பதால் பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பல பக்தர்கள் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் தீபம் ஏற்ற கோவில் வளாகத்தில் நான்கு பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு, 'லகு' தரிசன ஏற்பாடு செய்தது.
கோவில் வளாகத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சன்னதி அருகில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் மாதிரி லிங்கத்தை ஏற்பாடு செய்து வேதபண்டிதர்கள், அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை செய்து, கற்பூர ஆரத்தி, மகா தீபாராதனை காண்பித்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு கிரகண சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
- பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நடை சாத்தப்பட்டது. ஆனால் சிவ ஷேத்திரமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மட்டும் சந்திர கிரகண சமயத்தில் நடை சாத்தப்படாமல் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணிவரை சந்திர கிரகணம் இருந்தது. இந்த கிரகண நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஞான பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு கிரகண சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. மூலவரான ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு நவகிரக கவசம் அலங்கரிக்கப்படுவதால் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மீது கிரகண கால சமயத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படாது என்ற காரணத்தினால் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடத்துவதாக கோவில் வேதப்பண்டிதர்கள் தெரிவித்தனர்.
மேலும் சந்திரகிரகண சமயத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தால் அனைத்து விதமான தோஷங்கள் நிவர்த்தி அடையும் என்பதால் சந்திரகிரகணமான நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சந்திர கிரகண சமயத்தில் பரணி போன்ற நட்சத்திரம் கொண்டவர்கள் சந்திர கிரகண சமயத்தில் சந்திரனை பார்க்க கூடாது என்றும், இதனால் தீயவை நிகழும் என்பவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்து கொண்டால் அனைத்தும் நல்லதாக நடக்கும் என்றும், தோஷம் நீங்கும் என்றும் கோவில் வேத பண்டிதர் அர்த்தகிரி சுவாமி தெரிவித்தார்.
- ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார்.
- லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனை வருகிற 22-ந்தேதி வரை நடக்கிறது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனையை கோவில் நிர்வாகம் நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 10 நாள் லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனை நேற்று தொடங்கியது.
கோவிலில் நடக்கும் நான்கு கால அபிஷேகங்களுக்கு பின் உற்சவர்களான ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பிரதான அர்ச்சகர்கள் லட்ச வில்லார்ச்சனை, குங்குமார்ச்சனையை நடத்தினர்.
அதில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு தம்பதியினர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தம்பதியினர், பிற துறை அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்திருந்தனர். இந்த லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனை வருகிற 22-ந்தேதி வரை நடக்கிறது.
- பெண்கள் சொர்ணமுகி ஆற்றில் தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.
- ஆற்றில் நெய் தீபங்களை விட்டனர்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றுக்கு கடந்த 2019-ம் ஆண்டு முதன்முறையாக, ஜல ஆரத்தி எனப்படும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மாத சிவராத்திரி என்பதாலும், தெலுங்கு கார்த்திகை மாதத்தின் இறுதி நாள் என்பதாலும் இரவு 7 மணி முதல் மகா தீபாராதனைகள் வேத பண்டிதர்களால் நடத்தப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மகா ஆரத்தி காண்பதற்காக திரண்டு வந்திருந்தனர். இரவு 7 மணிக்கு தொடங்கிய சொர்ணமுகி ஆரத்தி நிகழ்ச்சி 9 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் நடைபெற்றது.
முன்னதாக கோவில் வேத பண்டிதர்கள் சொர்ணமுகி ஆற்றுக்கு சாஸ்திர பூர்வமாக சிறப்பு பூஜைகள் நடத்தியதோடு, ஆற்றில் நெய் தீபங்களை விட்டனர். ஆற்றில் தண்ணீர் செல்லும்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்கவும், விவசாய பயிர்கள் நன்றாக விளைந்து விவசாயிகள் சந்தோசமடைய வேண்டுமென்றும் வேண்டினர்.
சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பெண் பக்தர்கள் சொர்ணமுகி ஆற்றில் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபட்டனர். இதில் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. மது சூதன் ரெட்டி, சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு, நிர்வாக அதிகாரி கே.வி.சாகர் பாபு, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் 11 நாட்கள் லட்ச வில்வ அர்ச்சனை நடந்தது.
- பூஜை பொருட்கள் சொர்ணமுகி ஆற்றில் கரைக்கப்பட்டது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 13-ந் தேதியில் இருந்து நேற்று வரை 11 நாட்கள் லட்ச வில்வ அர்ச்சனை, லட்ச குங்கும அர்ச்சனை நடந்தது வந்தது. இறுதி நாளான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு கலச ஸ்தாபனம் ஏற்பாடு செய்து, யாகம் வளர்க்கப்பட்டு முதலில் கணபதி பூஜை, புண்ணியாவதனம் நடந்தது. கலசத்தில் நிரப்பப்பட்ட புனித நீரால் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
அலங்கார மண்டபத்தில் இருந்து கடந்த 11 நாட்களாக நடத்திய லட்ச வில்வ, குங்குமார்ச்சனையில் பயன்படுத்திய பூஜை பொருட்கள் சொர்ணமுகி ஆற்றில் கரைக்கப்பட்டது.
- சாமிக்கு 108 தீபங்களை கொண்ட ஆரத்தி எடுத்தனர்.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று வியாழக்கிழமை என்பதால் கோவில் வளாகத்தில் உள்ள மேதா குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி சாமிக்கு 108 தீபங்களை கொண்ட பர்வ ஆரத்தி, சக்ர ஆரத்தி, கும்ப ஆரத்தி, மகா மங்கள ஆரத்தி எடுத்தனர்.
அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- கால பைரவருக்கு கஜமாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
- தீப, தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு ஏகாந்த சேவைக்குப் பின் கால பைரவருக்கு பலவிதமான சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கும். அதேபோல் நேற்று முன்தினம் கால பைரவருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. அப்போது கால பைரவருக்கு எழுமிச்சை பழ மாலை, கஜமாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து தீப, தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க காலபைரவர் கோவில் பிரகார உற்சவம் நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- இன்று ஸ்ரீகாளஹஸ்தி கோவில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
- ஏழு விதமாக அம்மன்களுக்கு அலங்காரம் செய்யப்படும்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில், சிவன் கோவிலின் துணைக் கோவிலான ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் ஏழு கங்கையம்மனுக்கு பட்டு வஸ்திரம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு ஏழு கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
நாளை அதிகாலை ஏழு கங்கையம்மன் கோவிலில் இருந்து உற்சவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு ஏழு பகுதிகளில் எழுந்தருள்கிறார்கள். நாளை இரவு 8 மணியளவில் ஏழு கங்கையம்மன்கள் ஊர்வலம் தொடங்கி நள்ளிரவு 12 மணியளவில் சொர்ணமுகி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு கூறியதாவது:-
ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழாவையொட்டி விழா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கோவிலில் மின்விளக்கு அலங்காரம், தோரணம் அமைத்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்துள்ளனர். ஏழு இடங்களில் உற்சவர்களை நிலை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஏழு விதமாக அம்மன்களுக்கு அலங்காரம் செய்யப்படும். அம்மன்களுக்கு அலங்காரம்செய்வதற்காக சென்னை, புதுச்சேரியில் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதில் சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம் அருகில் பக்தர்களை கவரும் வகையில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட உள்ளது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற 15-ந்தேதி வரை ஆண்டாள் வீதி உலா நடை பெறுகிறது
- பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி கடந்த 17-ந் தேதி முதல் வருகிற 15-ந் தேதி வரை மனோன்மணி (ஆண்டாள்) வீதி உலா நடை பெறுகிறது. 4-வது நாளான நேற்று காலை உற்சவர் ஆண்டாளுக்கு பல்வேறு நறுமண மலர்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தி, நெய் வேத்தியங்களை கோவில் வேத பண்டிதர்கள் சமர்ப்பித்தனர். தொடர்ந்து கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து மேளதாளங்கள், மங்கள வாத்தியங்களுடன் வேத பண்டிதர்களால் வேத மந்திரங்கள் முழங்க ஆண்டாள் வீதி உலா தொடங்கியது.
நான்கு மாட வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். கோவில் ஆய்வாளர்கள் சுரேஷ் ரெட்டி, பத்ரய்யா மற்றும் அதிகாரிகள் ஜெகதீஷ் ரெட்டி, சுரேஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.