என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கள்ளழகர்"
- சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் நடிகர் சூரியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- சூரியும் சற்றும் சளைக்காமல் குழந்தைகள், வாலிபர்கள், ரசிகைகள் என்று அனைவரோடும் நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. ஜாதி, மத பாகுபாடின்றி மக்கள் ஒன்று கூடி மகிழும் ஒற்றுமை திருவிழாவான இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வி.ஐ.பி.க்கள் வரிசை என்றில்லாமல் அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து கொண்டாடிய இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரியும் மக்களோடு மக்களாக கலந்துகொண்டார். என்னதான் மதுரையில் பிறந்து வளர்ந்த போதிலும், அவரை பார்த்ததும் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் நடிகர் சூரியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
அவரும் சற்றும் சளைக்காமல் குழந்தைகள், வாலிபர்கள், ரசிகைகள் என்று அனைவரோடும் நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முழுவதுமாக கண்டு ரசித்த பின்னர் அழகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார்.
- ஏராளமான பக்தர்கள் திரண்டு அழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.
மதுரை:
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது.
மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந்தேதி பட்டாபிஷேகமும், 20-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.
சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.
பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.
அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.
நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி இருந்தார். இதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.
அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.
வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும்.
- அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது.
மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பானது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக்கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம்.
இந்நிலையில், மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
மேலும், கள்ளழகர் வைபவத்தில், ஆற்றில் இறங்க 2,400 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ரசாயனம் கலந்த தண்ணீரோ அல்லது பால், தயிர் கலந்த தண்ணீரை அடிக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- மொத்தம் 483 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார்.
- வைகையில் கூடும் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்வார்கள்.
மதுரை அருகே உள்ள அழகர் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்வாக, நாளை மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்காக இன்று மாலையில் அழகர் மலையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.
பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு வையாழி ஆகி தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், வழியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். மொத்தம் 483 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். நாளை அதிகாலையில் மதுரை புதூர் மூன்றுமாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை மறுதினம் (23-ந்தேதி) காலை 5.51 மணியில் இருந்து 6.10 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது அங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்வார்கள்.
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண அழகர் மலையிலிருந்து ஆவலாய் புறப்பட்டு வரும் கள்ளழகர், தங்கையின் திருமணம் முடிந்ததால் ஆற்றில் நீராடிவிட்டு, தங்கையை காணாமலேயே திரும்புவதாக ஐதீகம்.
இதேபோல், வைகைக் கரையில் தவம் செய்துகொண்டிருந்த மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுப்பதற்காக அழகர், மதுரைக்கு வந்து வைகையில் இறங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
அழகர் எந்த நிறத்தில் பட்டுப்புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது, கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்பு பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதி இருக்காது. மஞ்சள் பட்டு கட்டி வந்தால், அந்த வருடத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். எனவே, அழகர் எந்த நிறத்தில் பட்டு உடுத்தி வரப்போகிறார்? என்பதை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது வழக்கம்.
- கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 6ந் தேதி நிறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து 60 அடிக்கு கீழ் குறைந்தது. மழை நின்று விட்டதால் அணைக்கு நீர்வரத்தும் முற்றிலும் நின்றது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 59.19 அடியாக உள்ளது. நீர் இருப்பு 3454 மி.கன அடியாக உள்ளது.
மதுரையில் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீர்பாசனத்துறை அதிகாரிகள் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர். நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் வருகிற 22ந் தேதி வரை 4 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.30 அடியாக உள்ளது. அணைக்கு 209 கன அடி நீரு வருகிறது. 105 கன அடி வெளியேற்றப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 104.69 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறில் மட்டும் 4.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- கள்ளழகர் வருகையின்போது அழகர் வேடமிட்ட பக்தர்கள் அவர் வைகை ஆற்றில் இறங்கும்போது நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடனை செலுத்துவர்.
- தோல் பையில் மோட்டார் பொருத்தி அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை:
மதுரை சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் 23-ந்தேதி சித்திரா பவுர்ணமி தினத்தன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தர உள்ளனர். நடப்பாண்டில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் விரைவாக நடத்தி வருகிறது.
இந்த சூழலில் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர், பானகம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையில் முன் அனுமதி பெற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்பேரில் இனிவரும் ஆண்டுகளில் உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்ற பிறகே நீர், மோர் பந்தல், அன்னதானம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் வழங்க வேண்டும்.
அதேபோல் கள்ளழகர் வருகையின்போது அழகர் வேடமிட்ட பக்தர்கள் அவர் வைகை ஆற்றில் இறங்கும்போது நீரை பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடனை செலுத்துவர். இந்த நேர்த்திக்கடனின்போது தோல் பையில் நிரப்பிய தண்ணீரை துருத்தியின் மூலமாக பீய்ச்சி அடிப்பது வழக்கம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிலர் தோல் பையில் சிறிய மோட்டார் பொருத்தி அதிவேகத்தோடு நீரை பீய்ச்சி அடிப்பதுடன் வாகனத்தில் வரும் அழகர், அழகருடன் பயணிக்கும் பட்டர்கள், பெண்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தோல் பையில் மோட்டார் பொருத்தி அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையொட்டி அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்த விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று (7-ந்தேதி) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதே சமயம் உயரழுத்த மோட்டார் பம்பு, மின் மோட்டார்கள் ஆகியவற்றின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளழகர் அழகர் கோவில் மலையில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றுக்கு வரும் வரை இடையில் உள்ள எந்த இடத்திலும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது என ஐகோர்டு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- விதிகளை முறையாக பின்பற்ற மதுரை மாவட்ட கலெக்டர் உடனடியாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
- இனி எதிர்காலங்களில் இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மதுரை:
மதுரையை சேர்ந்த நாகராஜன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது.
பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமணநீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி அடிப்பார்கள். பக்தர்கள் விரதமிருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக்குதிரை வாகனம் மற்றும் சுவாமியின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் திரவியம் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரால் பட்டர்கள், பிரசாரகர் பணியாளர்கள், பெண்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்ச தடை விதிக்க வேண்டும் என மனு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் என்பது உலக பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த விழாவில் பாரம்பரியமாக கள்ளழகர் வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பது என்பது நடந்து வருகிறது.
தற்போது இது பெண்கள், குழந்தைகள் மீது ஒரு சில இளைஞர்கள் தவறுதலாக வேண்டுமென்றே அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இது போன்ற துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது சட்டத்தின் கடமையாக உள்ளது.
எனவே இனி இந்த விவகாரம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். பாரம்பரிய உடை அணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள், மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அதுவும் அவர்களின் முன் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.
மேலும் கள்ளழகர் மலையிலிருந்து இறங்கி வரும் வழிகளில் எங்குமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க அனுமதிக்க கூடாது. ஆற்றில் இறங்கும் போது மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல்துறையினர் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
எனவே இந்த விதிகளை முறையாக பின்பற்ற மதுரை மாவட்ட கலெக்டர் உடனடியாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு இந்த வருடத்திற்கு மட்டுமானது அல்ல. இனி எதிர்காலங்களில் இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- தேரை அலங்கரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
- கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது தேரோட்ட திருவிழா வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி தேருக்கு புதிய வண்ண அலங்கார திரைச்சீலைகள் இணைத்தல், தேரின் 4 சக்கரங்கள், குதிரைகள் உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி, தேர்கட்டை முட்டு தள்ளுதலுக்கு உரிய பிரேக் ஆகியவை புதுப்பித்து சரிபார்க்கும் பணிகள் மற்றும் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில், கோவில் துணை ஆணையர் ராமசாமி நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தியும், பணியாளர்களின் பணிகளையும் பார்வையிட்டார் அப்போது கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- 2-ந்தேதி புஷ்ப சப்பரம் நடக்கிறது.
- 3-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று காலையில் மேளதாளம் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், வண்ணபூ மாலைகள் இணைக்கப்பட்டு கருடன் உருவம் பொறித்த கொடி காலை 10.25 மணிக்கு ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தத்தால் விசேஷ பூஜைகளும் தீபாராதனைகளும் பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.
இதில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் தீபாராதனை நடந்தது. அப்போது கொடிக்கம்பம் அருகில் நின்ற சுந்தரவல்லி கோவில் யானை துதிக்கையை தூக்கி ஆசிர்வதித்தது. முன்னதாக மூலவர் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதையடுத்து இன்று(செவ்வாய்கிழமை) காலையில் தங்க பல்லக்கு உற்சவமும், இரவில் சகல பரிவாரங்களுடன் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.
26-ந்தேதி இரவு அனுமார் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 27-ந்தேதி இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 28-ந் தேதி காலையில் 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருளுகிறார். அன்று இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.
29-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந்தேதி இரவு புஷ்ப சப்பரத்திலும், 31-ந்தேதி இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி காலையில் 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேரில் சுவாமி, தேவியர்களுடன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் விழா நடைபெறும். அன்று இரவு பூப்பல்லக்கும், 2-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 3-ந்தேதி உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.
- பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
- கிடாய் வெட்டி வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகாலையில் இருந்து மாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பதினெட்டாம்படி கருப்பணசாமி திருநிலைக் கதவுகளுக்கு நிலை உயர மாலைகளும், சந்தனமும், எலுமிச்சம் பழம், பரிவட்டங்கள், பக்தர்களால் சாத்தப்பட்டது. மேலும் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் ஆடி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனை நடந்தது. இங்கும் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
அழகர் மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை ராக்காயி, அம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர். அழகர் மலை அடிவாரம் முதல் சோலைமலை முருகன் கோவில் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கோவில் கோட்டை சுவர் வெளி வளாகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்திருந்து நேர்த்திக்கடனாக பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- தேரோட்டம் ஆகஸ்டு 1-ந்தேதி நடக்கிறது.
- 3-ந்தேதி உற்சவ சாந்தி நடக்கிறது.
மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரம்மோற்சவ விழா தனி சிறப்புடையது. இந்த ஆடி பெருந்திருவிழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.
25-ந் தேதி காலையில் தங்கப்பல்லக்கு, இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 26-ந் தேதி காலையில் சுவாமி புறப்பாடு, இரவு அனுமார் வாகனத்திலும், 27-ந் தேதி இரவு கருட வாகனத்திலும், 28-ந் தேதி காலை பெருமாள் பல்லக்கில் புறப்பாடாகி, மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்தில் எழுந்தருளுவார். இரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
மேலும் 29-ந் தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந் தேதி காலையில் சூர்ணோத்சவம், இரவு புஷ்ப சப்பரமும் நடைபெறும். 31-ந் தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். பின்னர் காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் தேர் வடம் பிடித்தல், இரவு புஷ்ப பல்லக்கு, 2-ந் தேதி சப்தவர்ணம், புஷ்ப சப்பரம், 3-ந் தேதி உற்சவ சாந்தி நடக்கிறது. அதை தொடர்ந்து 16-ந் தேதி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இத்துடன் ஆடி பெருந்திருவிழா முடிவடையும்.
திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- வசந்த உற்சவ திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் திருவிழா நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று 10-ம் நாள் நிறைவு விழா நடந்தது. இதில் மேளதாளம் முழங்க தீவட்டி, வர்ணக்குடை, பரிவாரங்களுடன், சுந்தரவல்லி யானை முன்னே செல்ல, சகல பரிவாரங்களுடன் பல்லக்கில் புறப்பாடாகி, கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவியருடன் அங்குள்ள ஆடி வீதிகள், பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில், அக்ரஹாரம், வழியாக சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
அந்த மண்டபம் முழுவதும் வண்ண, வண்ண, பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி அதே பரிவாரங்களுடன் வந்த பாதை வழியாகவே சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தார்.
விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்