search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சேகர்பாபு"

    • 100 ஆண்டு பழமையான ஈஸ்வரன் கோவில் திருப்பணிகளை முடிக்க வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்திருந்தார்.
    • சங்கரன்கோவில் தங்கத்தேரில் தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் தங்கதேர் உலா நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி குருவிகுளம் ஒன்றியம் சாயமலை கிராமத்தில் 100 ஆண்டு பழமையான ஈஸ்வரன் சமேத சிவகாமி அம்பாள் கோவில் திருப்பணிகளை முடிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்திருந்தார்.

    கும்பாபிஷேக பணிகள்

    அந்த கோரிக்கையின் அடிப்படையில் நேற்று சட்டசபையில் பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேல சிவகாமியாபுரத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான கோவிலான ஈஸ்வரன் கோவிலில் வருகிற 10-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டு 8 மாத்திற்குள் கும்பாபிஷேக பணிகள் நடத்தப்படும் என்றார்.

    மேலும் இதற்கான 10 பணிகளில் 6 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 4 பணிகள் விரைவில் முடிக்கப்படும். இதற்காக சுமார் ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    சங்கரநாராயண சுவாமி கோவில்

    அதனை தொடர்ந்து பேசிய ராஜா எம்.எல்.ஏ. 1000 ஆண்டு பழமை வாய்ந்த சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    மேலும் தற்போது நகராட்சி வசமாக இருக்கும் ஆவுடை பொய்கை தெப்பத்தின் சுற்றுச்சுவர் மோசமான நிலையில் உள்ளதால் அதை பராமரிக்க வேண்டும், அந்த தெப்பக்குளத்தை அறநிலையத் துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஓராண்டுக்குள் ரூ. 6 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். சங்கரன்கோவில் தங்கத்தேரில் தங்க முலாம் பூசும் பணிகள் இன்னும் சில நாட்களுக்குள் பூசப்பட்டு மீண்டும் தங்கதேர் உலா நடைபெறும்.

    ஆவுடைபொய்கை தெப்பம் அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து சுமார் ரூ. 90 லட்சம் செலவில் சரி செய்யப்பட்டு அடுத்த ஆண்டு தை மாதம் கடைசி வெள்ளி அன்று தெப்ப தேரோட்டம் நடக்கும். அதில் ராஜா எம்.எல்.ஏ. பக்தர்களோடு கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

    ஈஸ்வர சமேத சிவகாமி அம்பாள் கோவில் மற்றும் சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் ஓராண்டுக்குள் நடத்தப்படும், ஆவுடை பொய்கை தெப்பமும் சரி செய்யப்படும் என்ற அறிவிப்பு பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    • தமிழக அரசின் திட்டங்களை மத்திய அரசு பின்பற்றும் சூழல் உருவாகியுள்ளது.
    • பக்தர்களுக்குத் அடிப்படை வசதிகளை செய்து தர முதலமைச்சர் உத்தரவு.

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 2,500க்கும் அதிகமான பக்தர்கள் ரெயில்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.

    இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இணை ஆணையர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில்,காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்காக 20 மண்டலங்களில் இருந்து தலா 10 நபர்கள் என 200 பேரை தேர்ந்தெடுத்து விபரங்களை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

    ஆன்மிகப் பயணம் செல்ல விரும்புவோர் 60 வயது முதல் 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், பத்து நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்து வர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காசி-தமிழ் சங்கமத்திற்கு போட்டியாக தமிழக அரசு காசி யாத்திரையை தொடங்கியுள்ளதாக கூறப்படுவது அறியாமையை வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு மே மாதம் 4-ந்தேதி நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பு எண் 27-ல், காசிக்கு 200 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அதற்கு தேவையான நிதி ரூ.50 லட்சத்தை தமிழக அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    தமிழக அரசின் திட்டங்களை மத்திய அரசும் மற்ற மாநில அரசுகளும் பின்பற்றும் சூழல் நாட்டில் உருவாகியுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் ஆகும். இது யாருக்கும் எதிரான அரசு அல்ல, வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருக்குமான அரசு இது.

    யாருக்கும் போட்டி என்பது எங்கள் துறையின் நோக்கம் அல்ல. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற முதலமைச்சரின் உத்தரவின்படி தான் அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

    • கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் தேங்கிய மழைநீர் 95 சதவீதம் அளவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது.
    • திரு.வி.க.நகர் மண்டலத்தில் தண்ணீர் தேங்கிய இடத்தில் ஏற்பட்ட கழிவுகளை அகற்றி ‘பிளீச்சிங்’ பவுடர் தெளிக்கவும் உத்தரவிட்டு உள்ளோம்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந்தேதி தொடங்கியது முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது.

    சென்னையை பொறுத்தவரை கடந்த 31-ந்தேதி முதல் மழை பெய்து வந்தது. நேற்றிரவும் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இதன்காரணமாக, கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.

    வட சென்னையில் திருவொற்றியூர், திரு.வி.க. நகர் மண்டலம் பகுதிகளில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தேங்கிய மழைநீரும் இப்போது வடிந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டல அளவிலான அதிகாரிகளுடன் மழை நீர் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

    அதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் தேங்கிய மழைநீர் 95 சதவீதம் அளவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது.

    திரு.வி.க.நகர் மண்டலத்தில் தண்ணீர் தேங்கிய இடத்தில் ஏற்பட்ட கழிவுகளை அகற்றி 'பிளீச்சிங்' பவுடர் தெளிக்கவும் உத்தரவிட்டு உள்ளோம். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும்.

    கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய பகுதிகளில் அடுத்த ஆண்டு மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தார்.

    அவர் திட்டமிட்டு மேற்கொண்ட பணிகள் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்காமல் வடிந்துள்ளது.

    மேற்கு மாம்பலம், ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் காலனி, ஜி.என்.செட்டி ரோடு, புரசைவாக்கம் டானா தெரு, 70 அடி ரோடு பகுதிகளில் கடந்த ஆண்டு மழையின் போது 10 நாட்களாக தண்ணீர் தேங்கியது.

    ஆனால் இப்போது இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை. முழுவதும் வடிந்துவிட்டது. பெரியமேடு மசூதி பகுதி, பிரகாசம் சாலை பகுதிகளில் ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்கவில்லை. புளியந்தோப்பு, பட்டாளம் பகுதிகளில் தண்ணீர் தேங்காத அளவுக்கு நிரந்தர திட்டம் தீட்டி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தொடர் நடவடிக்கை தான் இதற்கு காரணம்.

    தற்போது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கூட அடுத்த ஆண்டு மழைநீர் தேங்காமல் இருக்க திட்டம் தீட்டி இந்த அரசு செயல்படுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக தண்ணீர் தேங்கி நின்ற இடங்களில் கூட இந்த ஆண்டு ஒருசொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை.

    ஆனால் மக்கள் மீது அக்கறை இருப்பதுபோல் அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த 4 நாட்களில் எங்காவது வந்து சுற்றிப் பார்த்தாரா? நிவாரண பணிகளில் ஈடுபட்டாரா? எதுவும் கிடையாது.

    மத்திய அரசுக்கு பயந்து பயந்துதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தினாரே தவிர மக்களை பற்றி அவர் கவலைப்படவில்லை.

    எனவே அவர் குறை கூறினாலும் எங்கள் பணி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள பணிகள் காரணமாக சென்னையில் தாழ்வான பகுதியில் தேங்கிய மழை தண்ணீர் 95 சதவீதம் வடிந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • தேர் விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப் பட்டுள்ளது.
    • தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம்.

    புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தின் போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக கோயில் பணியாளர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் விபத்து நடைபெற்ற பகுதியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் காயமடைந்தவர்களை சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவியை அமைச்சர் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அமைசசர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    புதுகோட்டை கோயில் தேர் விபத்து குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    காயமடைந்தவர்களில் 7 பேர் சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் உள்ளனர். ஒருவரது நிலைமை கவலைகிடமாக உள்ளது. அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 809 திருக்கோயில்களில் 981 தேர்தல்கள் உள்ளன, எல்லா தேரோட்டத்திலும் விபத்து ஏற்படுவதில்லை. சில தேர் விபத்து பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

    எதிர்காலங்களில் விபத்துக்களை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுத்துக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் தேர் விபத்து நடைபெறாமல் இருக்க இந்து சமய அறிநிலையத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும். எல்லா வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுக்கோட்டை தேரோட்டத்திற்கு அனைத்து துறைகள் சார்பிலும் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த விபத்து யார் அலட்சியம் காரணமாக நடைபெற்றிருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தயங்க மாட்டார்.

    புகாரின் அடிப்படையில் கோயில் ஊரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இறுதி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கவனக்குறைவால் விபத்து ஏற்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு தேரில் இருந்து சிலைகள் கோயிலுக்குள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான கோயில் தேர், நல்ல நாள் பார்த்து பழுது பார்க்கப்படும். அதன் பின்னர் மீண்டும் தேரோட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×