search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஜூன் டெண்டுல்கர்"

    • கோவா மற்றும் கர்நாடகா அணிகள் மோதின.
    • இதில் கோவா அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டாக்டர் கே திம்மப்பையா நினைவு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 19 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதில் கர்நாடகா மற்றும் கோவா அணிகள் மோதின.

    இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 26.3 ஓவர்களில் 87 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். முதல் இன்னிங்சில், கர்நாடகா 36.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் டெண்டுல்கர் 13 ஓவர்களில் 5/41 எடுத்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய கோவா அணியில் அபினவ் தேஜ்ரானா (109) சதம் அடிக்க கோவா 413 ரன்களை குவித்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய கர்நாடகா அணி 30.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் கோவா அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதில் அர்ஜுன் 13.3 ஓவர்களில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அர்ஜூன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    அர்ஜுன், இதுவரை சீனியர் மூன்று வடிவங்களில் 49 போட்டி ஆட்டங்களில் விளையாடி 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 13 முதல் தர ஆட்டங்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் இதற்கு முன்பு யுவராஜின் தந்தையான முன்னாள் இந்திய வீரர் யோக்ரா சிங்கிடம் பயிற்சி பெற்றார்.

    • அர்ஜூன் டெண்டுல்கர் 2.2 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 22 ரன்கள் கொடுத்தார்.
    • அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறிவிட்டார்.

    ஐபிஎல் தொடரின் 67-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது.

    இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. போட்டியின் 2-வது ஓவரை அவர் தான் வீசினார். இந்த ஓவரில், 2-வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஸ்டோய்னிஸிற்கு அவுட் கொடுக்கப்பட்டது.

    ஆனால், அவர் ரிவ்யூ எடுக்கவே, பந்து ஸ்டெம்பிற்கு மேல் சென்றது தெளிவாக தெரிந்தது. இதன் காரணமாக நடுவர் முடிவு திரும்ப பெறப்பட்டது. இந்த ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்காத போதிலும், அவர் கிரீஸிற்குள்ளாக நின்று கொண்டிருந்தார். அப்போது அர்ஜூன் டெண்டுல்கர் பந்தை அவரை நோக்கி எறிவது போன்று ஆக்ஷன் செய்தார். இதற்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஏதோ கூறியபடி நடந்து வந்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சச்சின் மகன் என்பதால் அவருக்கு அபராதம் விதிப்பார்களா என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து கலாய்த்து வருகின்றனர்.

    அர்ஜூன் டெண்டுல்கர் 2.2 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 22 ரன்கள் கொடுத்தார். அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறிவிட்டார். அவரின் 3-வது ஓவரின் முதல் 2 பந்துகளை பூரன் 6 சிக்சர் விளாசினார். இதனால் பயந்து அர்ஜூன் வெளியேறிவிட்டதாகவும் கிண்டலடித்து வருகின்றனர். 

    • ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
    • இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோயை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. அதில் சச்சின் மகன் அர்ஜூன் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷனுக்கு பந்து வீசினார். அவர் வீசிய யார்க்கர் பந்தை அடிக்க முடியாமல் இஷான் திணறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்த வீடியோவுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் கிண்டலாக ஒரு கமெண்ட் செய்தனர். அதில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஒரு போட்டியில் யார்க்கர் பந்தில் இஷான் போல்ட் முறையில் வெளியேறுவார். அந்த வீடியோவை பதிவிட்டு இஷான் பிளாஸ்பேக்கை நினைவுப்படுத்திகிறார் என கமெண்ட் செய்தனர்.

    இன்னும் ஐபிஎல் தொடருக்கு சில நாட்களே உள்ள நிலையில் மும்பை - சிஸ்கே அணி குறித்த கேலி கிண்டலான பதிவுகள் சமூக வலைதளங்களில் வர ஆரபித்துவிட்டது. 

    • அர்ஜூன் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார்.
    • சிக்ஸ் பேக் உடன் தான் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். 23 வயதான இவர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது தியோதர் கோப்பைக்கான தொடரில் தெற்கு மண்டல அணியில் இடம்பெற்றுள்ளார்.

    இந்நிலையில் சிக்ஸ் பேக் உடன் தான் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ஃபிட்னஸ் சார்ந்து அவரது ஆர்வத்தை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கே.எல்.ராகுல், சுப்மன் கில் போன்றவர்கள் ஃபிட்னஸ் சார்ந்து அதிக கவனம் செலுத்துபவர்கள். அவர்களது வழியில் அர்ஜுனும் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியுள்ளார்.

    • அர்ஜூன் டெண்டுல்கரின் இடது கையை நாய் கடித்துள்ளது.
    • இதனால் அவரால் தொடர்ந்து பவுலிங் பயிற்சியில் ஈடுபடவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இவர் தற்போது, ஐபில் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஓரிரு போட்டிகளில் மட்டுமே இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து அவர் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் அர்ஜூன் டெண்டுல்கரின் இடது கையை நாய் கடித்துள்ளது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து பவுலிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து கூறியுள்ளனர்.

    • நீங்கள் இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளீர்கள்.
    • ஐபிஎல்லின் 15 ஆண்டுகால வரலாற்றில், அணியில் இடம்பெற்ற முதல் தந்தை-மகன் ஜோடி என்கிற சிறப்பை சச்சின்-அர்ஜூன் பெற்றனர்.

    ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான தனது மகன் அர்ஜூனுக்கு சச்சின் டெண்டுல்கர் சில அறிவுரைகளை வழங்கினார்.

    23 வயதான அர்ஜுன், ஒரு ஆல்-ரவுண்டர், தனது முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்து வீசிய அவர், இரண்டு ஓவர்களை வீசினார். விக்கெட் ஏதும் எடுக்கவில்லை என்றாலும், இரண்டு ஓவர்களை வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

    இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    அர்ஜுன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு கிரிக்கெட் வீரராக உங்களின் பயணத்தில் இன்னொரு முக்கியமான படியை எடுத்துள்ளீர்கள். உங்கள் தந்தையாக, உங்களை நேசிக்கும் மற்றும் விளையாட்டின் மீது ஆர்வமுள்ள ஒருவராக, விளையாட்டுக்கு உரிய மரியாதையை நீங்கள் தொடர்ந்து அளிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். விளையாட்டு உங்களை மீண்டும் நேசிக்கும்.

    நீங்கள் இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அழகான பயணத்தின் தொடக்கமாகும். ஆல் தி பெஸ்ட்!" என்று அந்த டுவிட்டில் சச்சின் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

    ஐபிஎல்லின் 15 ஆண்டுகால வரலாற்றில், அணியில் இடம்பெற்ற முதல் தந்தை-மகன் ஜோடி என்கிற சிறப்பை சச்சின்-அர்ஜூன் பெற்றனர். டெண்டுல்கர் 2008 முதல் 2013 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆறு ஆண்டுகள் விளையாடினார்.

    ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை அணியில் அர்ஜுன் முதல் முறையாக 2021 ஏலத்தின் போது அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்தில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அர்ஜூன் காயத்தில் இருந்து மீண்டு வந்து அணியில் இணைந்துள்ளார்.
    • பயிற்சியில் அவரது செயல்பாடுகளை கவனிப்போம்.

    மும்பை:

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளார். இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அவர் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை.

    நடப்பு தொடரிலாவது அவர் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாக சாத்தியமுள்ளதா என்று மார்க் பவுச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இது குறித்து பயிற்சியாளர் பவுச்சர் கூறும் போது:-

    காயத்தில் இருந்து அர்ஜூன் மீண்டு வந்து அணியில் இணைந்துள்ளார். எனவே பயிற்சியில் அவரது செயல்பாடுகளை கவனிப்போம். உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த 6 மாதங்களாக சிறப்பாக பந்து வீசி வருவதாக நினைக்கிறேன்.

    எனவே முழு உடல்தகுதியுடன் அணித்தேர்வுக்கு தயாராக இருந்தால் அவரது பெயரை பரிசீலிப்போம்' என்றார்.

    • கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் கிடைத்தும் அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
    • கோவா அணிக்கு இடம் பெயர்ந்த அர்ஜூன் முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

    கோவா:

    ரஞ்சி கிரிக்கெட்டில் கோவா- ராஜஸ்தான் அணிகள் (சி பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் கோவாவில் உள்ள போவாரிம் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த கோவா அணி தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கோவா 8 விக்கெட்டுக்கு 493 ரன்கள் குவித்தது. சுயாஷ் பிரபுதேசாய் இரட்டை சதமும் (212 ரன், 416 பந்து, 29 பவுண்டரி), அர்ஜூன் தெண்டுல்கர் சதமும் (120 ரன், 207 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

    இதில் 7-வது வரிசையில் ஆடிய அர்ஜூன் தெண்டுல்கரின் பேட்டிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த சாதனையாளரான ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் ஆவார்.

    கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் கிடைத்தும் அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கோவா அணிக்கு இடம் பெயர்ந்த 23 வயதான அர்ஜூன் முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

    இவரது தந்தை சச்சின் தெண்டுல்கரும் தனது அறிமுக முதல்தர போட்டியிலேயே சதம் அடித்தது நினைவு கூரத்தக்கது. அதாவது 1988-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த குஜராத்துக்கு எதிரான தனது அறிமுக ஆட்டத்தில் மும்பை அணிக்காக 15-வது வயதில் களம் கண்ட தெண்டுல்கர் 100 ரன்கள் எடுத்தார். இப்போது அவரை போன்று அவருடைய மகனும் சாதித்துள்ளார்.

    • கோவா அணிக்கு மாறுகிறார் அர்ஜூன் டெண்டுல்கர்.
    • கோவா அணிக்காக விளையாட திட்டமிட்டுள்ள அர்ஜூன், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 22 வயதான அர்ஜூன் 2020-21-ம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடினார். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படாமல் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதே போல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தாலும் இந்த சீசனில் ஒரு ஆட்டத்திலும் களம் இறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் அவர் மும்பை அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். அண்டை மாநிலமான கோவா அணிக்காக விளையாட திட்டமிட்டுள்ள அர்ஜூன், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.

    அர்ஜூன் மைதானத்தில் நீண்ட நேரம் விளையாட வேண்டியது முக்கியம். அணி மாறுவதன் மூலம் நிறைய போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அவரது ஆட்டத்திறன் மேம்படும் என்று நம்புகிறோம். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய கட்டத்தை தொடங்குகிறார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×