search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர்"

    • நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூர் மற்றும் மதுரையில் தலா ஓரிடம் என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
    • சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்து உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். அத்துடன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக பாஸ்கர் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் , வருமானத்தைவிட 315 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக பாஸ்கர் மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின் அடிப்படையில், நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். நாமக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் நேற்று ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    சேலம், நாமக்கல், தருமபுரி, மதுரை, ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 80 பேர் தனித்தனி குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 7 மணி வரை நடந்தது. மொத்தம் 13 மணிநேரம் இந்த சோதனை நடந்துள்ளது.

    இந்த சோதனையில் நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் சகோதரி வீடு, முன்னாள் நகராட்சி துணைதலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், ஸ்ரீதேவி எக் சென்டர் உரிமையாளர் மோகன், முன்னாள் நகராட்சி பொறியாளர் கமலநாதன், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கோபிநாத், நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பொறியாளர் கணேசன், கொண்டிசெட்டிப்பட்டி பைனான்ஸ் அதிபர் சங்கரன், நல்லிபாளையம் பைனான்ஸ் அதிபர் விஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    நேற்று ஒரே நாளில் நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூர் மற்றும் மதுரையில் தலா ஓரிடம் என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்து உள்ளது.

    மேலும் 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இவை தவிர, 1 கிலோ 680 கிராம் தங்க நகைகள், 6 கிலோ 625 கிராம் வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினிப் பதிவுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன.

    மொத்தம் வழக்குக்கு தொடர்புடைய ரூ.14 லட்சத்து 96 ஆயிரத்து 900 மற்றும் 214 ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் ஆய்வு செய்து வருகிறார்கள், அந்த சொத்துகள் எப்படி வாங்கப்பட்டன, அதற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள். இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் யார், யார் என்பது குறித்தும் விரிவாக ஆய்வு நடத்தி வருகறார்கள். ஆய்வு முடிந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இதனால் இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    ×