search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதவிளாகம்"

    • 4 அரசு பஸ்கள் சிறை பிடிப்பு
    • நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் செப்டம்பர் இறுதிக்குள் சாலைப்பணி முடித்து தருவதாக எழுத்துபூர்வமாக உறுதி அளித்தார்.

    கன்னியாகுமரி:

    கைதவிளாகம் முதல் ஹெலன் நகர் வரை சீரமைக்கப்படாமல் போடப்பட்டுள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி மேல்மிடாலம் சந்திப்பில் மீனவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 அரசு பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன.

    உதயமார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து கைதவிளாகம், மேல்மிடாலம் வழியாக கடலோரச்சாலை செல்கிறது. இச்சாலையை குறும்பனை, மிடாலம், மேல்மிடாலம், ஹெலன் நகர், இனயம், புத்தன்துறை, ராமன்துறை உள்ளிட்ட மீனவர் கிராமங்களை சார்ந்த மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை மக்கள் பயன் படுத்த முடியாத வகையில் குண்டுகுழிகள் நிறைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க வேண்டுமென இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதன்பயனாக தமிழக அரசு ரூ.1.30 லட்சம் மதிப்பில் இச்சாலையை சீரமைக்க ஒதுக்கீடு செய்தது. இத்தொகையில் சாலை சீரமைக்கும் பணியை சில மாதங்கள் முன் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பணி தொடங்கிய சில நாட்களில் பணி கிடப்பில் போடப்பட்டது.

    இதனால் அப்பகுதி வழியாக மக்கள் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனத்தில் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மேல்மிடாலம் மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டடனர். அப்போது அவ்வழியாக வந்த தடம் எண் 302 மணக்குடி - இரயும்மன்துறை பஸ் மற்றும் நாகர்கோவில் செல்லும் 9 எ பஸ், மார்த்தாண்டம் செல்லும் 87 இ, பி ஆகிய 4 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக ஹெலன்நகர் மக்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் அருட்பணி யாளர்கள் ஹென்றி பிலிப், ஆன்றனி கிளாரட், ஜினிஸ் ஆகியோர் பேசினர்.

    தகவல் அறிந்து வந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ், கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. பின்னர் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஹெலன் ஜெனட் செப்டம்பர் இறுதிக்குள் சாலைப்பணி முடித்து தருவதாக எழுத்துபூர்வமாக உறுதி அளித்தார். அதன் பின் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. போராட்டம் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×