என் மலர்
நீங்கள் தேடியது "பனியன்"
- போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள்.
- ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் ராமசாமி. இவர் அதே பகுதியில் பனியன் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சோ்ந்த பிரவீன் குமார், கல்பனா தம்பதியினர் ரூ.1 கோடியே 45 லட்சத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனியன் துணிகள் கொள்முதல் செய்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த மகேஷ் ராமசாமி ஐதராபாத் தம்பதி மீது திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் தெலுங்கானா சென்று தேடிவந்தனர். அப்போது ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அத்தியாவசிய பொருட்களான தேங்காய் எண்ணெய், சீயாக்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.
- இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டையில் அன்னை அமைந்துள்ள அனுபவம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மக்கள் முன்னேற்ற பொதுநல சங்கத்தின் மாநில தலைவர் சமூக சேவகர் டாக்டர் என் விஜயராகவன், தலைமையில், மாவட்ட ஆலோசகர் பழனிவேல் முன்னிலையில் வேஷ்டி, சர்ட், பனியன், துண்டுகள், மருத்துவ பொருட்கள், வலி நிவாரணி தைலங்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், தேங்காய் எண்ணெய், சீயாக்காய், ஷாம்பு, துணிசோப், குளியல் சோப், பற்பசை, பிரஷ், உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழங்கினர்
இந்நிகழ்வில்.மாவட்ட ஓட்டுனர் அணி தலைவர் திருமலை ஐய்யப்பன், மாவட்ட மீனவரனி, தலைவர் ராஜீ மாவட்ட மகளிரணி செயலாளர், காணிக்கை மேரி ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர், மாரியம்மாள் ஒன்றிய மீனவரணி தலைவர், சூர்ய மூர்த்தி திருமருகல் ஒன்றிய இணைச்செயலாளர், சந்தோஷ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் அடைந்து இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மணிய காரம்பாளையம் பகுதியில் பின்னலாடைகளை பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பும் கொரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் கொரியர் நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆன்லைன் ஆர்டர்களுக்கு ஏற்றவாறு அந்தந்த பகுதி வாரியாக அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை கொரியர் நிறுவன கட்டிடத்தின் ஒரு பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். இதையடுத்து தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. உடனே இது குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் முடியவில்லை. இதையடுத்து திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளியில் இருந்து மேலும் 4 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 5 டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தின் காரணமாக கொரியர் நிறுவன கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது மட்டுமல்லாது கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் அடைந்து இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்காமல் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கட்டிடத்தின் பின்புறத்தில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நிட்டிங் , டைலரிங் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய நிலையில் அவற்றுக்கு தீ பரவாமல் இருக்கும் வகையில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் கொரியர் நிறுவனத்தில் இருந்த பல கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து சேதமாகின. இதனைப்பார்த்து ஊழியர்கள் கண்ணீர் சிந்தினர். தீ விபத்தால் அப்பகுதியில் 50 அடி உயரத்திற்கு கரும்புகை வெளியேறியது. இதனால் அப்பகுதி முழுவதும் மேகமூட்டம் போல் காணப்பட்டது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆடை உற்பத்தியாளர்களின் வாட்ஸ் அப்புக்கு அவர்களது செல்போன் எண்ணில் இருந்து ஹாய் மெசேஜ் அனுப்புகின்றனர்.
- தயாரிப்பு சார்ந்த தொழில்நுட்ப விவரங்களையும் அனுப்பி தங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றனர்.
திருப்பூர் :
மோசடி ஆசாமிகள் புதுப்புது வழிகளில் மக்களை ஏமாற்றும் வித்தைகளை தெரிந்து செயல்படுத்தி வருகின்றனர். இதில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களை குறிவைத்து புதுவகை மோசடியை அரங்கேற்றி வருகின்றனர்.
அதன்படி மோசடியில் ஈடுபடும் மர்மநபர்கள் முதலில் ஆடை உற்பத்தியாளர்களின் வாட்ஸ் அப்புக்கு அவர்களது செல்போன் எண்ணில் இருந்து ஹாய் மெசேஜ் அனுப்புகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனையின் ஜோத்பூர் கிளைக்கு டீ- சர்ட் தேவைப்படுகிறது.உங்கள் நிறுவனத்தால் தயாரித்து தரமுடியுமா? என ஆடை தயாரிப்பு ஆர்டர் வழங்குவதற்காக வர்த்தகர்கள் விசாரணை செய்வது போல மர்மநபர்கள் கேட்கின்றனர். டீ- சர்ட்படம், தேவைப்படும் அளவு, நிறம், ஜி.எஸ்.எம்., என தயாரிப்பு சார்ந்த தொழில்நுட்ப விவரங்களையும் அனுப்பி தங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றனர்.புது ஆர்டரை கைப்பற்றும் ஆர்வத்தில் ஆடை உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்து பதில் அனுப்புகின்றனர்.
இதையடுத்து ஆடை தயாரிப்பு ஆர்டரை உறுதி செய்வதற்காக நீங்கள் நேரடியாக ஜோத்பூருக்கு வரவேண்டும். சலுகை கட்டணத்தில் நாங்களே விமான டிக்கெட் புக்கிங் செய்துதருகிறோம் என்கின்றனர்.ஆடை தயாரிப்பு ஆர்டர்களை பெறுவதற்காக பின்னலாடை உற்பத்தியாளர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று வர்த்தகர்களை நேரடியாக சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். தேடிவரும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்கிற அடிப்படையில் கேட்கும் விவரங்களை அனுப்பிவைக்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
அடுத்த சில நிமிடங்களில் கோவையில் இருந்து ஜோத்பூருக்கு ஆடை உற்பத்தியாளரின் பெயருக்கு விமான டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டதாக ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பிவிடுகின்றனர். பெயர் விவரம், பார்கோடு, விமான விவரம், புறப்படும் இடம், சேருமிடம் என பார்ப்பதற்கு அச்சு அசலாக போலி விமான டிக்கெட் உள்ளது.
விமான டிக்கெட்டுக்கான கட்டண தொகை ரூ.7ஆயிரத்தை மட்டும் உடனடியாக வங்கி கணக்கில் செலுத்திவிடுங்கள் என்று கூறி உற்பத்தியாளர்களை வேகப்படுத்துகின்றனர்.பல ஆயிரம் ரூபாய் மதிப்பு ஆடைகள் தயாரிக்க ஆர்டர் கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில் சில ஆடை உற்பத்தியாளர்கள் தொகையை அனுப்பிவிடுகின்றனர். கணக்கில் தொகை வந்துசேர்ந்த மறுகணமே மோசடி ஆசாமிகள் ஆடை உற்பத்தியாளருடனான தொடர்பை துண்டித்துவிடுகின்றனர்.
ஆடை உற்பத்தியாளருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிந்தாலோ தங்களை பற்றிய விவரங்களை துருவினாலோ தொகை அனுப்ப தாமதித்தாலோ உங்களுக்கு ஆர்டர் பெற விருப்பமில்லை . ஆர்டரை கேன்சல் செய்யவா? என்று கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகின்றனர். அதுவரை அனுப்பிய உரையாடல்கள், விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்தையும் உடனேயே அழித்துவிடுகின்றனர்.
இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது:- பின்னலாடை உற்பத்தியாளர்களிடமிருந்து நூதன முறையில் பணம் பறிக்க ஒரு கும்பல் வலை விரித்து வருகிறது. ஆர்டரை எதிர்பார்த்து காத்திருக்கும் குறு, சிறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் தான் இந்த ஆசாமிகளின் இலக்கு.இணையதளங்களில் இருந்து செல்போன் எண், முகவரி விவரங்களை எளிதாக பெற்றுக்கொள்கின்றனர். வாட்ஸ் அப்பில் வர்த்தகர் போலவே உரையாடி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். பெரிய தொகை கேட்டால் சந்தேகம் ஏற்பட்டுவிடும்.
தொகையை இழந்தவர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. அதனாலேயே போலி விமான டிக்கெட் அனுப்பி கட்டண தொகையாக ரூ.7ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரை மட்டும் அனுப்பகோருகின்றனர். தினமும் 10 உற்பத்தியாளரை வீழ்த்தினாலும் இருந்த இடத்திலேயே 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை சுருட்டிவிட முடியும்.கடந்த சில நாட்களில் 100க்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தியாளர்களை வலையில் வீழ்த்த முயன்றுள்ளனர். நான் உட்பட பல ஆடை உற்பத்தியாளர்கள் சுதாரித்துக்கொண்டு தப்பியுள்ளோம். சிலர் வலையில் சிக்கி தொகையை இழந்துள்ளனர்.ஆர்டர் வழங்குவதாக ஆசைகாட்டி மோசடி செய்வோரின் வலையில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது.உஷாராக செயல்படவேண்டும். விமான கட்டணம் உட்பட எதற்காகவும் எந்த ஒரு தொகையையும் அனுப்பக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.