search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் கலந்தாய்வு"

    • தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
    • பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும்.

    சென்னை:

    பொறியியல் படிப்பில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஜூன் 12 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும்.

    இக்கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இவை ஒற்றைச்சாளர முறையில் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

    அந்த வகையில், 2024-2025-ம் கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 6-ந்தேதி தொடங்கியது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஒரு மாத காலம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த அவகாசம் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு பெற்றது.

    ஓட்டுமொத்தமாக 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் இணைய வழியில் விண்ணப்பத்தைப்பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 180 பேர் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் தெரிவித்தார்.

    இணையவழி விண்ணப்பப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே வெளியிட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை 2024 கால அட்டவணையின் படி, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12-ந்தேதி ஆகும்.

    இதைத்தொடர்ந்து ஜூன் 12-ந்தேதி ரேண்டம் நம்பர் எனப்படும் வாய்ப்பு எண் மாணவர்களுக்கு இணைய வழியில் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பிறகு ஜூன் 13 முதல் 30-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு இணைய வழியிலேயே நடைபெறும்.

    ஜூலை 10-ந்தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து விருப்பமான கல்லூரி மற்றும் பாட பிரிவைத் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்படும்.

    • முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.
    • மாணவர்கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.

    இதற்கு ஒரு லட்சத்து 87,693 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-ந்தேதி வெளியிடப்பட்டது.

    அதைத் தொடர்ந்து கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இதில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்புப் பிரிவில் வரும் மாணவர்களுக்கு இன்றும், நாளையும் நடக்கிறது. இவர்களுக்கு விளையாட்டுப் பிரிவில் 38, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில் 11, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 579 இடங்கள் உள்ளன.

    இந்த இடங்களுக்கு 261 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதன்படி மாணவர்கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இரவு வெளியிடப்படும்.

    அதற்கு மறுநாள் மதியம் 3 மணிக்குள் ஒப்புதல் அளித்து உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

    தொடர்ந்து இதர சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

    அதன்பின் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு 28-ந்தேதி தொடங்கி 3 சுற்றுகளாக நடைபெறும். அந்தந்த பிரிவில் வரும் மாணவர்கள் அவர்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3-வது சுற்று கலந்தாய்வு தொடங்கியிருக்கிறது.
    • மொத்தம் 49 ஆயிரத்து 42 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.

    சென்னை :

    தமிழகம் முழுவதும் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும்1 லட்சத்து 57 ஆயிரம் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு ஆன்லைன் கலந்தாய்வை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடக்கிறது.

    இதில் முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு சுற்று கலந்தாய்விலும் விருப்ப இடங்களை தேர்வு செய்தல், ஒதுக்கீடு செய்தல், அதை உறுதி செய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், கல்லூரிகளில் சேருதல், காத்திருத்தல் என்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

    அதன்படி, ஒரு சுற்று கலந்தாய்வு நிறைவு பெறுவதற்கு, 2 வாரங்கள் வரை ஆகிறது. முதல் சுற்று கலந்தாய்வை பொறுத்தவரையில் கடந்த மாதம் 25-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வு மூலம் 10 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தங்கள் விருப்ப இடங்களில் சேர்ந்தனர்.

    அதன் தொடர்ச்சியாக 2-ம் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வு நேற்று காலையுடன் நிறைவு பெற்றது. இதில் 31 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு, இதில் 18 ஆயிரத்து 521 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர்.

    அவர்களில் 13 ஆயிரத்து 197 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கின்றனர். இதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு அடிப்படையிலான 2-வது சுற்று கலந்தாய்வில், 1,426 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்த நிலையில், 1,207 பேர் உறுதி செய்து கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

    ஆக மொத்தம் 2-வது சுற்று கலந்தாய்வில், 14 ஆயிரத்து 404 மாணவ-மாணவிகள் கல்லூரிகள் சேர்ந்து இருப்பதாகவும், 5 ஆயிரத்து 543 பேர் இடங்களை உறுதி செய்து, முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருப்பதாகவும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை நடந்து முடிந்த 2 சுற்றுகள் கலந்தாய்வு முடிவில், மொத்தம் 30 ஆயிரத்து 287 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.

    இதனைத்தொடர்ந்து, என்ஜினீயரிங் 3-வது சுற்று கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் 49 ஆயிரத்து 42 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் நாளை (சனிக்கிழமை) வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • விரும்பிய இடங்கள், கல்லூரிகளில் சேர கடிதம் பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு இன்று கடைசி நாளாகும்.
    • இன்று மாலை வரை கல்லூரியில் சேர இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் சேர முடியாது.

    சென்னை:

    பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் சேருவதற்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது. கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடந்து வருகிறது.

    கடந்த மாதம் 10-ந்தேதி முதல் சுற்று தொடங்கியது. அதன் மூலம் 10,500 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 2-வது சுற்று கடந்த 25-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடந்தது.

    இடங்களை தேர்வு செய்து ஒதுக்கீட்டு கடிதம் பெற்ற 20,735 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு 7 வேலை நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டன. ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற விடுமுறை காரணமாக மாணவர்கள் சேர முடியாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் விரும்பிய இடங்கள், கல்லூரிகளில் சேர கடிதம் பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு இன்று கடைசி நாளாகும்.

    இன்று மாலை வரை கல்லூரியில் சேர இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் சேர முடியாது. அந்த இடங்கள் காலியானதாக கருதப்பட்டு 3-வது சுற்றில் சேர்க்கப்படும்.

    அந்த வகையில் 14,153 பேர் சுயநிதி கல்லூரியில் சேரவும் 5,016 பேர் சேவை மையங்களில் சேரவும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. 1,324 பேர் அரசு பொறியியல் கல்லூரிகளிலும், 242 பேர் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் இன்று வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு 13-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. பி.ஆர்க் மாணவர்களுக்கு உத்தேச ஒதுக்கீட்டு கடிதம் இன்று வழங்கப்படுகிறது.

    • 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
    • 2-வது சுற்று கலந்தாய்வுக்கு 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை :

    என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 10-ந்தேதி தொடங்கியது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வுக்கான அனைத்து நடைமுறைகளும் நேற்று காலையுடன் நிறைவுபெற்றன. அந்த வகையில் முதல் சுற்று கலந்தாய்வில் 13 ஆயிரத்து 893 விண்ணப்பதாரர்கள் விருப்ப இடங்களை தேர்வு செய்திருந்தனர். அவர்களில் 12 ஆயிரத்து 996 பேருக்கு தற்காலிக இடஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. அதில் 5 ஆயிரத்து 887 பேர் இடங்களை உறுதிசெய்து கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர்.

    மேலும் 3 ஆயிரத்து 707 பேர் முதன்மை விருப்ப இடங்கள் கிடைக்கும்பட்சத்தில் ஏற்கனவே தேர்வு செய்திருந்த இடங்களில் இருந்து முன்னேறுவதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உறுதி செய்திருந்த இடத்துக்கான கட்டணத்தை செலுத்தியிருக்க வேண்டும். அந்த வகையில் 3 ஆயிரத்து 707 பேரில், 3 ஆயிரத்து 46 பேருக்கு அவர்களின் முதன்மை விருப்ப இடங்களில் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு முடிவில், 9 ஆயிரத்து 594 மாணவ-மாணவிகள் தமிழகம் முழுவதும் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்வு செய்து அந்த இடங்களில் சேர்ந்திருக்கின்றனர். முதல் சுற்றில் 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 269 கல்லூரிகளில் ஒரு இடங்களைகூட மாணவர்கள் தேர்வு செய்யவில்லை. 116 கல்லூரிகளில் 10-க்கும் குறைவான இடங்களையும், மற்ற கல்லூரிகளில் இரட்டை இலக்கத்தில் இடங்களையும் தேர்வு செய்து சேர்ந்திருக்கின்றனர்.

    இதில் அதிகபட்சமாக எஸ்.எஸ்.என். கல்லூரியில் 87.89 சதவீத இடங்களும், அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாக கல்லூரியில் 86.82 சதவீத இடங்களும், அண்ணா பல்கலைக்கழக குரோம்பேட்டை எம்.ஐ.டி. வளாக கல்லூரியில் 85.58 சதவீத இடங்களும், காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 83.87 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன.

    பெரும்பாலும் மாணவ-மாணவிகள் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கின்றனர்.

    2-வது சுற்று கலந்தாய்வு நேற்று காலையில் இருந்து தொடங்கி இருக்கிறது. இதற்கு சுமார் 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

    • நாளை நடைபெற இருந்த என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது.
    • நீட் தேர்வு முடிவு வந்த பிறகு 2 நாட்கள் கழித்து பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும்.

    சென்னை:

    பி.இ. படிப்பில் சேருவதற்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங் நாளை (25-ந்தேதி) தொடங்கி அக்டோபர் 21-ந்தேதி முடிவடையும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    ஆனால் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளி வராததால் என்ஜினீயரிங் கவுன்சிலிங் நாளை 25-ந்தேதி தொடங்குமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஏன் என்றால் நீட் தேர்வு எழுதி இருக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர இடம் கிடைக்கும்பட்சத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேராமல் மருத்துவ படிப்புக்கு சென்று விடுவார்கள்.

    இதனால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் நிறைய காலி இடங்கள் ஏற்பட்டு விடும். இப்படித்தான் கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் 631 இடங்கள் காலியாக இருந்தன. இதை தவிர்ப்பதற்காகத்தான் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் இடம் கிடைத்த 7 நாட்களுக்குள் மாணவர்கள் சேர வேண்டும். இல்லையென்றால் அந்த இடம் காலியாக இருப்பதாக கருதப்பட்டு வேறு ஒருவருக்கு கொடுக்கப்படும் என்று புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 21-ந்தேதி வெளியாகும் என்பதை கருத்தில் கொண்டு என்ஜினீயரிங் கவுன்சிலிங் 25-ந்தேதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இப்போது நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 28-ந்தேதிக்கு தள்ளிப்போவதால் தமிழகத்தில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் திட்டமிட்டபடி 25-ந்தேதி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்ஜினீயரிங் படிப்பு சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால் இன்னும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

    அந்த தேர்வு முடிவுகளை பொறுத்துதான் பி.இ. என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வை நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே நாளை நடைபெற இருந்த என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது.

    நீட் தேர்வு முடிவு வந்த பிறகு 2 நாட்கள் கழித்து பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

    முன்னதாக என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை 1 வாரம் தள்ளி வைக்கலாமா? என்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். இதற்கு முன்பு ஏற்கனவே ஆகஸ்டு 20-ந்தேதி கவுன்சிலிங் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் 25-ந்தேதிக்கு அதை தள்ளி வைத்தனர். இப்போது நீட் தேர்வு முடிவு வெளியாகாததால் இன்னும் 1 வாரம் வரை தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

    ×