search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக நிர்வாகிகள்"

    • குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
    • மாவட்ட அளவில் தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் யாரையும் அதிடியாக நீக்கியதும் இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

    அதே நேரத்தில் எதிராளிகளுடன் ரகசிய தொடர்பில் இருப்பவர்களை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையிலும் அவர் அதிரடியாக இறங்கியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, அந்த கட்சியினரோடும் பா.ஜ,க, வுக்கு ஆதரவான அமைப்பினருடனும் தொடர்பில் இருப்பவர்களையும் கண்காணித்து வருகிறார்.

    அந்த வகையில் குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் திருக்குறளை மேற்கோள் காட்டி அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    "வான் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு" என்கிற திருக்குறளை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியது இல்லை. ஆனால் நண்பர்கள் போல இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று எத்தனை ஆழமான அறிவுரையை வள்ளுவ பேராசான் நமக்கு தந்திருக்கிறார். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம் என விளக்கியுள்ளார்.

    கட்சிக்கு வேண்டாதவர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு கட்சிக்குள்ளேயும் உள்பகை கொண்டு செயல்படுபவர்கள் யாராவது இருந்தாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பதை தனது கடிதத்தின் மூலமாக எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே தெரிவித்திருப்பதாக அ.தி.மு.க.வினர் கூறியுள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி இது போன்ற அதிரடியான வார்த்தைகளை குறிப்பிட்டு கட்சியினருக்கு கடிதம் எழுதியது இல்லை.

    அதே நேரத்தில் மாவட்ட அளவில் தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் யாரையும் அதிடியாக நீக்கியதும் இல்லை. ஆனால் தற்போது கட்சி நிர்வாகிகளை களையெடுக்கும் விதத்தில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியிருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும்.
    • தேர்தல் கூட்டணி பலமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதையடுத்து தொகுதி வாரியாக நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.

    கடந்த 10-ந்தேதி தொடங்கிய ஆலோசனை கூட்டம் 2 கட்டமாக நடந்து வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தொகுதி வாரியாக அழைக்கப்பட்டு பேசி வருகிறார். அப்போது நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை அங்கு பதிவு செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும். தொண்டர்களை ஒருங்கிணைக்க வேண்டும். தேர்தல் கூட்டணி பலமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு வரும் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான கூட்டணி அடித்தளத்தை இப்போதே உருவாக்குவதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று காலையில் கள்ளக்குறிச்சி தொகுதி நிர்வாகிகளுடனும், மாலையில் சேலம் தொகுதி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். கலந்தாலோசனை கூட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது.


    நாளை (1-ந்தேதி) சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். காலையில் 9 மணிக்கு வடசென்னை தொகுதி, 11 மணிக்கு மத்திய சென்னை, மதியம் 3.30 மணிக்கு தென் சென்னை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 3 தொகுதிகளுக்கும் உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இன்றுடன் 35 தொகுதி நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசியுள்ளார். நாளைய தினத்தை தொடர்ந்து 3 நாட்கள் இடைவெளி விட்டு 5-ந்தேதி நடக்கும் கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது. கரூர் மற்றும் புதுச்சேரி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.

    • நாளை தென்காசி, ஈரோடு ஆகிய தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது.
    • தேர்தல் வியூகங்களை இப்போதே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் வாரியாக கடந்த 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை முதல்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இதுவரையில் 7 நாட்கள் நடந்த கலந்துரையாடலில் 23 தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

    கூட்டணி குறித்து சரியான முடிவு எடுக்காதது தேர்தல் தோல்விக்கு காரணம் என்று பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க சரியான திட்டமிடல், தேர்தல் வியூகங்களை இப்போதே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.


    இந்த நிலையில் 2-வது கட்ட கலந்துரையாடல் இன்று தொடங்கியது. மீத முள்ள 17 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை இன்று முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    காலையில் தேனி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டறிந்தார். சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், இந்நாள், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கும் தேனி தொகுதி தோல்விக்கு என்ன காரணம் என்பது பற்றி விவாதித்தார்.

    முன்னதாக ஆலோசனை நடத்துவதற்காக தலைமை கழகத்திற்கு காலை 10.15 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அவரை தொண்டர்கள் வரவேற்று உள்ளே அழைத்து சென்ற னர். மாலை 4 மணிக்கு ஆரணி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

    நாளை தென்காசி, ஈரோடு ஆகிய தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    • நமக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது.
    • நல்ல கூட்டணி அமையுமா? அமையாதா? என்று யாரும் கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த 10-ந்தேதி முதல் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தினமும் 3 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி தொடர்பாக கருத்துக்களை கேட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணி அமையாததே தோல்விக்கு காரணம் என்று கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

    இதற்கு பதில் அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வலுவான கூட்டணியை அமைப்போம் என்று கூறியுள்ளார்.

    இந்த நிலையில் 4-வது நாளான இன்று சிதம்பரம் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய சிதம்பரம் தொகுதி நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மேல் மட்ட நிர்வாகிகள் சரியாக உழைக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

    கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை/ அதனால் யாரும் சோர்ந்து போய் விடாதீர்கள். நமக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது. வரும் காலங்களில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள், கீழ்மட்ட தொண்டர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். நல்ல கூட்டணி அமையுமா? அமையாதா? என்று யாரும் கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
    • ஒன்றிய செயலாளர்கள் அனைவரும் உங்கள் பகுதியில் ஓட்டுகள் குறையாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று தொடங்கி உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சிவகங்கை, வேலூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.

    மாலையில் திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். இந்த ஆலோசனையின் போது பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டுள்ளார்.

    அப்போது பலர் காரசாரமாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகள் சிறப்பாக செயல்படாவிட்டால் பதவியில் நீடிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

    நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நிச்சயமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீழ்மட்ட நிர்வாகிகளை மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் கீழ்மட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்போடு பணியாற்றுவார்கள். மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் இன்று சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிவடைந்திருந்தது.

    இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் வலுவான கூட்டணியை அமைப்போம். ஆனால் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    ஒன்றிய செயலாளர்கள் அனைவரும் உங்கள் பகுதியில் ஓட்டுகள் குறையாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி குறைந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • முன்னாள் அமைச்சர்களிடம் வெற்றி வியூகங்களை எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார்.
    • பிரிந்த தலைவர்களை கட்சியில் சேர்ப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவில்லை என தகவல் வெளியாகவில்லை.

    சேலம்:

    சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 2026 தேர்தலில் பாஜக சவால்களை எப்படி சமாளிப்பது, அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    தன்னை சந்தித்த முன்னாள் அமைச்சர்களிடம் வெற்றி வியூகங்களை எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார். மேலும் பிரிந்த தலைவர்களை கட்சியில் சேர்ப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவில்லை என தகவல் வெளியாகவில்லை.

    மூத்த நிர்வாகிகள், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    • கவர்னர் மாளிகைக்கு வருகிற திங்கட்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இருந்து ஊர்வலமாக சென்று அதிமுகவினர் மனு கொடுக்கிறார்கள்.
    • கவர்னர் மாளிகையிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க உள்ளார்.

    அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மதுரையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொன்விழா மாநாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

    அதன்பிறகு தி.மு.க. ஆட்சியின் 2 ஆண்டு கால அவல நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தி.மு.க.வின் அத்துமீறல்கள், முறைகேடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    குறிப்பாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ரூ.30 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு ஆடியோ பற்றி மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தின் பின்னணியை தி.மு.க. அரசு மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். விஷ சாராய பலி குறித்து அவர் பேசியதாவது:-

    விஷ சாராயம் குடித்தவர்களில் 62 பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுதான் காரணம். ஆளும் கட்சி துணையுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது.

    இந்த விஷயத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது.

    சட்டசபையில் நான் இதுபற்றி பேசியதற்கு கூட முதலமைச்சரிடம் இருந்து விளக்கமான பதில் வரவில்லை.

    எதிர்க்கட்சி தலைவர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லக் கூடாது என்பதற்காக பல்வேறு தகவல்களை முதலமைச்சர் மறைத்து விட்டார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்ச வியாபாரிகள் பயந்தார்கள். தி.மு.க. ஆட்சியில் அந்த பயம் யாருக்குமே இல்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இப்போது இந்த வழக்கை திசை திருப்ப அரசு முயற்சி செய்கிறது.

    எனவே நாம் இந்த விஷயத்தை விடக்கூடாது. கவர்னரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம். தி.மு.க.வின் ஊழல்களையும் பட்டியலிடுவோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அ.தி.மு.க. சார்பில் வருகிற 22-ந்தேதி காலை 10.25 மணிக்கு சென்னை, சின்னமலை தாலுகா அலுவலக சாலை, ஏசு கிறிஸ்து சபை அருகில் இருந்து கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக புறப்பட்டு கவர்னர் மாளிகையை சென்றடைந்து முக்கிய நிர்வாகிகள் கவர்னரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வருகிற 22-ந்தேதி தி.மு.க. ஆட்சி மீது புகார் தெரிவித்து கவர்னரிடம் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டு அருகில் இருந்து ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளேன்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர் குலைந்துள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை. அமளிக்காடாக மாறி உள்ளது. இதுபற்றி விரிவாக கவர்னரிடம் மனு கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலில் முழங்கியவரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வு மிகுந்தவர் மாமன்னன் பூலித்தேவன்.
    • மாமன்னன் பூலித்தேவனின் 307-வது பிறந்தநாள் வருகிற 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    மாமன்னன் பூலித்தேவனின் 307-வது பிறந்தநாள் வருகிற 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-

    இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலில் முழங்கியவரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வு மிகுந்தவர் மாமன்னன் பூலித்தேவன்.

    அவரது 307-வது பிறந்தநாளான 1-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் நெற்கட்டும் செவல் என்ற இடத்தில் அமைந்து உள்ள பூலித்தேவன் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன்.

    அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா கே.பரமசிவன்.

    இசக்கி சுப்பையா, முருகையா பாண்டியன், ராஜேந்திரன், சீனிவாசன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, மகளிர் அணி துணை செயலாளர் வி.எம்.ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி ஆகியோர் மாலை அணிவிக்கிறார்கள்.

    மாமன்னன் பூலிதேவனுக்கு மரியாதை செலுத்தும் இந்த நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×