search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிக்கல்வித் துறை"

    • அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது.
    • மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது.

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நாள்காட்டி 2018 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு (2024-25) அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு வருகிற 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன.

    பிளஸ் 1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு வருகிற 19 ஆம் தேதி துவங்கி, 27 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளன. 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
    • 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும்.

    மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிறு புத்தகங்களின் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். மாணவர் வாசிப்புத் திறன் மேம்பாட்டில் உயரதிகாரி முதல் ஆசிரியர் நிலை வரை ஒரு கூட்டு நடவடிக்கை அவசியமாகிறது.

    வாசிப்பு இயக்கத்தின் நோக்கம், தேவை, கதை வாசிப்புக்கான நேரம், தலைமை ஆசிரியர் பணிகள் போன்ற வழிகாட்டுதல்கள் இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன. இதை தலைமையாசிரியர்கள் முழுமையாக படிக்க வேண்டும்.

    இதுதவிர 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும். 4 முதல் 9 வரை உள்ள வகுப்புகளுக்கான கால அட்டவணையில் நூலக பாடவேளைகள் இருப்பது உறுதி செய்யப்படும்.

    இலக்கிய மன்ற செயல்பாடுகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் பயன்படுத்தப்படும். இதுகுறித்து ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.
    • பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழாவில், கலெக்டர் ச.உமா தலைமையில், பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் ராமலிங்கம் எம்.எல்.ஏ, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் இன்று 379 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    வடக்கிழக்கு பருவ மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் இயல்புநிலை திரும்ப அமைச்சர் பெருமக்கள் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் நிலையை எண்ணிக்கொண்டிருக்கும் இதே வேலையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் எடுத்த முடிவை நாமக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றுகிறோம் என்ற மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 379 ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் குடும்ப உறுப்பினர்களை பிரிந்து பள்ளிக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். பெற்ற பிள்ளைகளை விட்டு மற்ற பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றும் மகத்தான பணியை மேற்கொண்டு வருபவர்கள் நமது ஆசிரியர்கள்.

    ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை. நீங்கள் இல்லை என்றால் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட இயலாது. இவ்வாறு மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.

    இன்றைய தினம் 379 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. 2-ஆம் கட்டத்தில் 964 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியாக கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்லாது பங்கேற்றவர்களுக்கும் சான்று வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. வெற்றி பெற்றவர்களும், பங்கேற்றவர்களும் தொடர்ந்து அடுத்த ஆண்டும் கனவு ஆசிரியர் விருது பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இன்று நமது இனமான பேராசிரியர் அவர்களின் பிறந்த நாள். இச்சிறப்பு மிக்க நன்னாளில் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று அவரது பிறந்த நாளில் கனவு ஆசிரியர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நான் முதல்வன் திட்டத்தையும், சென்ற ஆண்டு பிறந்த நாளின் போது பல்வேறு பள்ளிக்கல்வித்துறை திட்டங்களையும் அறிமுகப்படுத்தினோம்.

    அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ந.லதா, விவேகானந்தா கல்வி நிறுவன தாளாளர் மு.கருணாநிதி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளின் விளையாட்டு திறன், வாசிப்பு திறன் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்படும்.
    • தேர்வுகள் வருகிற 17 முதல் 21 வரை நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழக பள்ளிக்கல்வித் துறை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நடப்பு ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்கள் மதிப்பீட்டுத் தேர்வை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வருகிற 17 முதல் 21 வரை நடைபெறுகிறது.

    இதில் 60 மதிப்பெண்களுக்கான தொகுத் தறி மதிப்பீடு மாணவர்கள் தங்கள் ஆசிரியரின் கைபேசியில் இருந்து தேர்வெழுத ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இதில் பாடங்கள் கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சோதிக்கப்படும். இந்தக் கேள்விகள் அனைத்தும் ஒருவரி கேள்விகளாக இருக்கும். ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் செயலி மூலம் பள்ளிக் கல்வித்துறை அனுப்பும் கேள்விகளை மாணவர்களிடம் கேட்பார்கள். அவர்களின் பதிலை அதில் பதிவு செய்வார்கள். இதில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் எண்ணும், எழுத்தும் திட்ட புத்தகத்திலிருந்து மட்டுமே இடம்பெறும். பாடப் புத்தகத்தில் இருக்கும் கேள்விகள் கேட்கப்பட மாட்டாது. நான்காம் வகுப்பு முதல் பாடப் புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

    மேலும் 40 மதிப்பெண்களுக்கு வளர் அறி மதிப்பீடு என இருவகையாகப் பிரித்து ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் தேர்வு நடத்தி மதிப்பீடு செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இதில் குழந்தைகளின் விளையாட்டு திறன், வாசிப்பு திறன் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்படும்.

    8 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும் எழுத, படிக்க மற்றும் அடிப்படை கணிதத்தை அறிந்து கொள்ள வசதியாக எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, நடனங்கள், பாடல்கள், கதைசொல்லல் மற்றும் பொம்மலாட்டம் மூலம் வாசிக்கும் மற்றும் எழுதும் திறன்களைக் கற்பித்தனர்.

    ஆன்லைன் மதிப்பீடு என்பது பல்வேறு தேர்வு அடிப்படையிலான கேள்விகள் ஆகும். உயர்தர சிந்தனை திறன் மற்றும் அடிப்படையான கேள்விகளும் கேட்கப்படும், என்று கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மொபைல் போன்களில் சுருக்க மதிப்பீடுகளை நடத்துவது நேரத்தைச் செலவழிக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த தேர்வு முறை வருகிற 2025 கல்வி ஆண்டு முறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 14 ஆயிரத்து 19 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன.
    • ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்குவதற்காக ரூ.109 கோடியே 91 லட்சத்து 52 ஆயிரம் நிதிக்கு ஒப்பளிப்பு செய்தும் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா நேற்று அரசாணை பிறப்பித்து இருக்கிறார்.

    சென்னை:

    பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி துறையின் கீழ் உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 19 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன.

    இந்த பணியிடங்கள் நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் வரை மாணவ-மாணவிகளின் கல்வி நலன் கருதி, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதன்படி தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அந்த வகையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் காலியாக உள்ள 14 ஆயிரத்து 19 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி அளித்தும், ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்குவதற்காக ரூ.109 கோடியே 91 லட்சத்து 52 ஆயிரம் நிதிக்கு ஒப்பளிப்பு செய்தும் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா நேற்று அரசாணை பிறப்பித்து இருக்கிறார்.

    • 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் சேரும் மாணவர் ஒருவருக்கு 12 ஆயிரத்து 76 ரூபாய் 85 காசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் சேருபவர்களுக்காக 15 ஆயிரத்து 711 ரூபாய் 31 காசு நிர்ணயம் செய்திருந்தது.

    சென்னை:

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.) 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் மாணவ-மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு சேரும் மாணவ-மாணவிகளுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்தி வருகிறது.

    அந்தவகையில், நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அரசு செலுத்தும் கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் சேரும் மாணவர் ஒருவருக்கு 12 ஆயிரத்து 76 ரூபாய் 85 காசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் சேருபவர்களுக்காக 15 ஆயிரத்து 711 ரூபாய் 31 காசு நிர்ணயம் செய்திருந்தது.

    இந்த சட்டத்தின் கீழ் சேரும் மாணவ-மாணவிகளுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி அளிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த ஆண்டைவிட கட்டணத்தை குறைத்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ரூ.380 முதல் ரூ.1,360 வரை கட்டணத்தை குறைத்து தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்து வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×