search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்டார் சவேரியார் பேராலயம்"

    • தட்டு தடுமாறி செல்லும் வாகனங்கள்
    • சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ?

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட பல்வேறு சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது.

    நாகர்கோவில் நகரின் பிரதான சாலையாக கருதப்படும் சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டது. பணிகள் முடிவடைந்து மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது.ஆனால் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல முடியாத அளவிற்கு பல்லாங்குழிகளாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.இந்த சாலையின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகிறது. இந்த சாலையில் செல்வோர் அவல நிலையை சொல்லி மாளாத அளவிற்கு மோசமாக உள்ளது. இந்த சாலையில் ஏராளமான வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களும் உள்ளது.

    இங்கு பொருட்கள் வாங்குவதற்காக குமரி மாவட டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் ஏராள மான பொதுமக்களும் வந்து செல்கிறார்கள்.அவர்களும் இந்த சாலையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.இந்த சாலையின் வழியாகத்தான் அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. டிரைவர்கள் பஸ்களை இயக்க முடியாத நிலையில் இந்த சாலை பல்லாங்குழிகளாக உள்ளது.

    எனவே அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் இந்த சாலையில் தட்டு தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.மோசமான சாலையின் காரணமாக தினமும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்லும் நிலையும் உள்ளது.மிகப்பெரிய அளவில் விபத்துகள் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகராட்சி அதிகாரிகள் போர்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. சாலையில் உள்ள பள்ளங்கள் ஒருபுறம் இருக்க சாலை விரிவாக்கத்திற்காக அந்த பகுதியில் உள்ள கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு மின்கம்பங்கள் மாற்றப்பட்டது.

    ஆனால் இன்னும் சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது.எனவே சாலை பராமரிப்பின் போது விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியையும் சேர்த்து தார்தளம் அமைத்து இருவழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    ஏற்கனவே மாநகராட்சி மேயர் மகேஷ் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்துமே போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் இருவழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். எனவே முதல் கட்டமாக இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளையும் சேர்த்து தார்சாலை அமைத்து முதல் கட்டமாக இந்த சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்பது வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது‌.

    மேலும் நாகர்கோவில் வேப்ப மூட்டில் இருந்து டதிபள்ளி செல்லும் சாலை விரிவாக்க பணிக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சுற்றி செல்லும் நிலை உள்ளது.எனவே நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் காலை மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.பொதுமக்கள் நலன் கருதி அந்த சாலை விரிவாக்க பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    ×