search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் தினம்"

    • ஆரம்ப காலங்களில் குருகுல கல்விமுறை இருந்தது. இதில் மாணவர்கள், குருவின் இல்லத்திற்கே சென்று பயின்றனர்.
    • பெற்றெடுக்காத பல குழந்தைகளுக்கு தாயாக, தோழியாக, வழிகாட்டியாக இருப்பவர்கள் ஆசிரியர்களே.

    தலைப்பாகையும், கைப்பிரம்பும் ஓர் ஆசிரியரின் அடையாளமாய் காணப்பட்டது ஒரு காலம். இன்றோ கணிப்பொறியும், நவீன உத்திகளும் ஆசிரியரின் இடத்தை ஆக்கிரமித்துள்ளன. அன்று புளியங்கொட்டையை கொண்டு 'அ' போட பழகியது குழந்தை. இன்றோ கணிப்பொறியின் முன் அமர்ந்து அலங்கார ஓசையுடன் 'A' போட பழகுகிறது குழந்தை. இது காலத்தின் மாற்றம்.

    ஆரம்ப காலங்களில் குருகுல கல்விமுறை இருந்தது. இதில் மாணவர்கள், குருவின் இல்லத்திற்கே சென்று பயின்றனர். குரு என்பவர் தெய்வத்திற்கு நிகரானவர்களாக கருதப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சென்று பயின்று வரக்கூடிய பள்ளி என்ற ஓர் அமைப்பு தோன்றியது. சுண்ணாம்பு கட்டியும், கரும்பலகையும் பிரதானமாக கருதப்பட்டது. வாய்மொழியாக ஆசிரியர் கற்பிப்பதும், அதை செவிவழியாய் மாணவர்கள் கேட்பதுமாய் இருந்தது.

    இந்த நிலையும் மாறி, வண்ணப்படங்கள், கையால் செய்த மாதிரிகள் கொண்டு கற்பித்து பெரும் மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றமும் காலப்போக்கில் மாறியது. மாற்றத்தின் விளைவாய் கணிப்பொறிவழி கல்வி ஏற்பட தொடங்கியது. வகுப்பறையிலேயே குறுந்தகடுகள் மூலம் கற்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. இன்றைய இணையத்தின் வளர்ச்சிக்கு இணையாக எதுவும் இல்லை. நூலகத்தில் மணிக்கணக்கில், நாட்கணக்கில் தேடித்தேடி சில விஷயங்களை பிடிப்போம். ஆனால் கணினியில் வலைவீசி தேடுபவர்க்கு வலைத்தளங்களில் எதுவும் சிக்காமல் இருப்பதில்லை.

    சமூக வலைதளங்கள் வேறு பல்வேறு நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. அவை நேரத்தை கலாசாரத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளன என்பதையும், மனித உறவுகளையே குறைத்துவிடுகின்றன என்பதனையும் எண்ணிப்பார்க்க இயலாமல் இல்லை. ஒரு புறம் வளர்ச்சி, மறுபுறம் கலாசார சீரழிவு. இதில் எதை ஏற்பது. எதை தவிர்ப்பது என்பதில், காய்ச்சிய இரும்பையும் கையில் பிடிக்கும் துணிச்சலுள்ள இளைஞர் சமுதாயத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

    இங்குதான் தலைகாட்டுகிறார் ஆசிரியர். காய்ச்சிய இரும்பை எப்படியும் வளைக்கலாம், அதை லாவகமாக பக்குவமாக மெருகேற்றி வளைக்கலாம் என்பதை கற்பிக்க முற்படுகிறார் ஆசிரியர். ஆசிரியர் என்பவர் உன்னத ஸ்தானத்துக்கு உரியவர் என்பதை நிரூபிக்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆசிரியர்களின் முக்கியத்துவம் சில நேரங்களில் குறைந்துவிட்டதுபோல் தோன்றலாம். சில நேரங்களில் ஆசிரியர்களுக்கு மாற்றாக தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்துவிட்டதுபோல் மாயையும் உருவாக்கலாம். ஆனால் மிகவும் கூர்ந்து நோக்கும்போது ஆசிரியர் இச்சாதனங்களுக்கு உதவி செய்யும் ஒரு சாதனமாகவே காட்சி தருகிறார்.

    இந்த ஆசிரியர் என்ற உன்னத மனிதரின் இடத்தை வேறு எந்த வளர்ச்சியாலும் பிடிக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு மட்டுமே தாயாக இருக்கிறார். ஆனால் பெற்றெடுக்காத பல குழந்தைகளுக்கு தாயாக, தோழியாக, வழிகாட்டியாக இருப்பவர்கள் ஆசிரியர்களே.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற உயர்ந்த நிலையில் உள்ள ஆசிரியர்கள் என்றுமே யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உன்னதமான, உயர்வான இடத்திலேயே செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. நேற்றைய ஆசிரியரும், இன்றைய ஆசிரியரும், நாளைய ஆசிரியரும், மனித குலத்தை பொறுத்தவரை அற்புதமான நெறியாளர் ஸ்தானத்திற்கு உரியவர்! அதை எந்த விஞ்ஞானமும் மாற்றிட இயலாது. வாழ்வில் அனைத்தும் நெறிப்படுத்த வல்லாரே ஆசிரியர் பெருமக்கள். இதை உணர்த்தும் வண்ணமே டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் இன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    • காலத்தால் அழிக்க முடியாத அத்தகைய கல்வி செல்வத்தை மாணவ செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியர்களே.
    • 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பயன்படும் வகையில் “நான் முதல்வன்“ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆசிரியர் தினத்தையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    அறிவு ஒளியூட்டி அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினமே, உங்கள் யாவருக்கும், என் இதயம் நிறைந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள். ஒரு சிறந்த நாடு, எப்படித் திகழவேண்டும் என்பதற்கு இலக்கணம் கூற வந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர், "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு" என்கிறார். இக்குறட்பாவிலுள்ள 'தக்கார்' என்னும் சொல்லுக்கு ஒழுக்க நெறி தவறாமல் வாழ்வோர் என்று உரையாசிரியர்கள் பொருள் காண்பர்.

    ஆனால் 'தக்கார்' என்று சுட்டப் பெறுவோர் "ஆசிரியர்'' என்று பொருள் காண நான் விழைகின்றேன். ஏனெனில், தமக்குரிய நெறியிலிருந்து வழுவாது, பிறழாது தாமும் வாழ்ந்து, வளரும் இளம் தலைமுறையினரையும் அந்நெறிப்படி வாழக் கற்றுக் கொடுக்கும் பொறுப்புமிக்கவர்களாக இருப்பவர் ஆசிரியர்களே. மனிதர்களை-மதிவாணர்களாக்குவதும், மாமேதைகளாக்குவதும் ஏன் மனிதர்களை மனிதர்களாக்குவதும் கல்விதான். காலத்தால் அழிக்க முடியாத அத்தகைய கல்வி செல்வத்தை மாணவ செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியர்களே.

    அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கவும், பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்க்கவும், அவ்வாறு சேர்க்கப்பட்ட குழந்தைகளை இடைநிற்றல் ஏதுமின்றி முழுமையாகத் தொடரவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற கற்றல் அடைவுகளை உறுதி செய்யவும், ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து, அவர்தம் திறன்களை வளர்க்கும் நோக்கோடு தமிழ்நாடு அரசு 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடியை ஒதுக்கியுள்ளது.

    கொரோனா பெருந்தொற்றினால் மாணவர்களிடையே உருவான கற்றல் இழப்புகளை ஈடு செய்ய, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அவர்தம் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே 2 லட்சம் தன்னார்வலர்களைக்கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் "இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தினை" அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்கென சுமார் ரூ.163 கோடி இதுவரை செலவிடப்பட்டுள்ளது. மேலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பயன்படும் வகையில் "நான் முதல்வன்" என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுமட்டுமல்லாமல், எதிர்வரும் 2025-ம் ஆண்டுக்குள், 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து குழந்தைகளும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவு திறன்களை பெறும் நோக்கோடு, 2021-22-ம் ஆண்டில் "எண்ணும் எழுத்தும் இயக்கம்" தொடங்கப்பட்டு, பல்வேறு செயல்பாடுகளுக்கென ரூ.66.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம், 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும், 3 சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25 ஆயிரம் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் "கவிமணி விருது" வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு தமிழ்மொழி திறனறி தேர்வு நடத்தி, ஆண்டுதோறும் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், மாணவர்கள் என சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வண்ணம் மதுரையில் "முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்" அமைய உள்ளது. நாட்டின் எதிர்கால சொத்துக்களாம் இளைய தலைமுறையை, நன் முத்துக்களாக உருவாக்கம் பெரும் பொறுப்புக்கு சொந்தக்காரர்களாகிய ஆசிரிய பேரினத்தை அரசும், நாட்டோரும், நல்லோரும் மதித்து போற்றுவதன் அடையாளமே இந்த ஆசிரியர் தின விழா கொண்டாட்டம். வகுப்பறை அனுபவங்களின் மூலம் இடையறாது பணி செய்து மென்மேலும் திறம் பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆசிரியர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • கல்விக் குழுமச் செயலாளர், காந்திமதி மோகனகிருஷ்ணன், டாக்டர் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தைத் திறந்து வைத்தார்.
    • விழாவில் பிலோமினா குழுவினர் யோகாசனம் நடைபெற்றது.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. பாரத் கல்விக்குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கணிப்பொறி ஆசிரியை ஜோஸ்பின் ஸ்னேகா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியை உமா வரவேற்றார். கல்விக் குழுமச் செயலாளர், காந்திமதி மோகனகிருஷ்ணன், டாக்டர் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தைத் திறந்து வைத்தார். ஆசிரியை சுப்புலட்சுமி கல்விக்குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். துணைமுதல்வர் பாலசுந்தர் காந்திமதி மோகனகிருஷ்ணனுக்கு சிறந்த கல்வியாளருக்கான ஏகலைவன் விருதை வழங்கினார்.

    விழாவில் பிலோமினா குழுவினர் யோகாசனமும், தேவி, விஜயலட்சுமி ஆகியோரின் ஆசிரியர் தின ஆங்கில உரையாடலும் நடைபெற்றது. மஞ்சுளா குழுவினரின் வில்லுப்பாட்டும், அப்துல்லா குழுவினரின் சைகை நாடகமும் நடைபெற்றது. ஆசிரியர் ஜீவா பாடல்கள் பாடினார். சிறப்பு விருந்தினர் காந்திமதி மோகனகிருஷ்ணன் சிறப்புரையாற்றி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.

    தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். ஆசிரியர் பண்ணிசைப் பாடலுடன் விழா நிறைவு பெற்றது. பாரத் கல்விக்குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

    ×