search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ. 3 லட்சம் திருடி விட்டு தப்பி ஓடியதால் தீர்த்து கட்டிய கும்பல்"

    • அரிசி மண்டியில் வேலை செய்த பஞ்சப்பள்ளி முரளி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணத்துடன் மாயமானதுடன் செல்போன் எண்ணையும் மாற்றிவிட்டார்.
    • திருடிய பணத்தை வேலை செய்து கழித்து ெகாள்ளும்படியும் கூறி அழைத்து வந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பன். இவர் அந்த பகுதியில் அரிசி மண்டி நடத்தி வருகிறார். அந்த கடையில் 5 பேர் வேலை பார்த்து வந்தனர். தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை சேர்ந்த முரளி (வயது 28) என்பவர் அந்த கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முரளி பழைய இரும்பு கடையில் இருந்த ரூ.3 லட்சத்துடன் மாயமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணகிரி ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள பொன்மலைகுட்டை சாலையில் உடலில் காயங்களுடன் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பஞ்சப்பள்ளி முரளி பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. சிறிது நேரம் ஓடி சென்ற மோப்ப நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதையடுத்து கொலையுண்ட முரளியின் உடல் கிடந்த இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    அரிசி மண்டியில் வேலை செய்த பஞ்சப்பள்ளி முரளி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணத்துடன் மாயமானதுடன் செல்போன் எண்ணையும் மாற்றிவிட்டார். அவரது புதிய எண்ணை கண்டுபிடித்த அரிசி மண்டி உரிமையாளரின் உறவினரான அகர்நிவாஸ் (25), பஞ்சப்பள்ளி முரளியிடம் சமாதானம் பேசி மீண்டும் அவரை கடையில் வேலை பார்க்கும்படியும், திருடிய பணத்தை வேலை செய்து கழித்து ெகாள்ளும்படியும் கூறி அழைத்து வந்தார்.தனியாக வீடு எடுத்து கொடுத்து முரளியையும், அவரது மனைவியையும் அழைத்து வந்து தங்க வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் பந்தாரப்பள்ளி அருகே பஞ்சப்பள்ளி முரளியுடன் அகர்நிவாஸ் மற்றும் அவருடைய கூட்டாளிகளான ஜிஞ்சுப்பள்ளி முரளி (20), கெலமங்கலம் முகமது சலீம் (25), தனசேகர் (24) ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் மது குடித்தனர். பின்னர் மது போதையில் இருந்த பஞ்சப்பள்ளி முரளியை அவர்கள் கட்டையால் அடித்துக்கொலை செய்து கிருஷ்ணகிரி ஆஞ்சநேயர் கோவில் அருகே பொன்மலைகுட்டை சாலையில் உடலை வீசி விட்டு சென்றனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அகர்நிவாஸ், ஜிஞ்சுப்பள்ளி முரளி, முகமது சலீம், தனசேகர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×