search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி20"

    • அதிபரை பாதுகாக்க, பீஸ்ட் காரில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
    • துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளை ஏவும் வசதிகளும் இதில் உள்ளன.

    அமெரிக்க அதிபர் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும், ஒரே பதிவு எண் கொண்ட இரு பீஸ்ட் கார்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படும். அந்த காரில் மட்டுமே அமெரிக்க அதிபர் பயணம் செய்வார். பாதுகாப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா பாதுகாப்பு துறை இதை நடைமுறையாக வைத்துள்ளது.

    அந்த வகையில் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பீட்ஸ் காரில் பயணம் செய்கிறார். டெல்லி சாலைகளில் வலம் வரும் இந்த பீஸ்ட் கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த காரின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

    * சமீபத்திய மாடல் 'பீஸ்ட் காரை' ஜெனரல் மோட்டார்ஸ் (ஜி.எம்.) நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது.

    * இதன் எடை 6,800 கிலோ முதல் 9.100 கிலோ எடை வரை இருக்கும். இதில் 7 பேர் பயணம் செய்யலாம். இதன் நீளம் 18 அடி.

    * அதிபரை பாதுகாக்க, பீஸ்ட் காரில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவசர காலத்தில் பயன்படுத்த அதிபரின் குரூப் ரத்தம் இதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

    * ரசாயன தாக்குதல் நடத்தினாலும், காருக்குள் இருக்கும் அதிபருக்கு பாதிப்பு ஏற்படாது. டயர் பஞ்சர் ஆனாலும் கார் ஓடும். இருள் சூழ்ந்த பகுதியை பார்க்கும் கருவிகள், தாக்குதலில் இருந்து தப்பிக்க புகை மண்டலத்தை ஏற்படுத்தும் சாதனம், எதிரிகளின் வாகனம் பின் தொடர்வதை தடுக்க எண்ணை பீய்ச்சி அடிக்கும் சாதனம் ஆகியவை இதில் உள்ளன.

    * அலுமினியம், செராமிக் மற்றும் எக்கு பயன்படுத்தி கவச வாகனம் போல் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

    * காரின் வெளிப்புற தகடுகள் 8 இன்ச் தடிமன் கொண்டவை. கார் கண்ணாடிகள் 130 மி.மீ. தடிமனில் பல அடுக்குகளாக இருக்கும். காரின் ஒவ்வொரு கதவும் போயிங் 757 விமான கதவின் எடை அளவுக்கு இருக்கும். எதிரிகள் யாரும் கார் கதவை திறப்பதை தடுக்கும் வகையில் அதன் கைப்பிடியில் 120 வோல்ட் மின்சாரத்தை பாய்ச்சி ஷாக் கொடுக்கும் வசதிகளும் இதில் உள்ளன.

    * துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளை ஏவும் வசதிகளும் இதில் உள்ளன.

    * அதிபரின் கார் அணிவகுப்பில், ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு கார்கள் செல்லும்.

    * இதன் விலை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 12 கோடியே 45 லட்சம்). ஆனால் இந்த காரின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ. 124 கோடி ஜி.எம். நிறுவனம் செலவிட்டுள்ளது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
    • விருந்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைலுக்கினார்.

    ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதான பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்று உள்ளனர்.

    இந்த மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு நேற்று இரவு விருந்து அளிக்கப்பட்டது.

    இந்த விருந்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைலுக்கினார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அப்படத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கினார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் ஆகியோர் அருகில் இருந்தனர்.

    • ‘அரசு எங்களை பூச்சிகளைப் போல கருதுகிறது. நாங்கள் மனிதர்கள் இல்லையா?’ என்று ஒரு குடிசைவாசி கேள்வி கேட்பது வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
    • தெருநாய்கள் போன்றவை குரூரமாக சுற்றிவளைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்படுகின்றன.

    புதுடெல்லி:

    தற்போது வெளிநாட்டில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'டெல்லியில் ஏழை மக்களையும், விலங்குகளையும் ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகள் கண்ணில் படாமல் மத்திய அரசு மறைக்கிறது. நம் நாட்டின் உண்மைநிலையை நமது விருந்தினர்களிடம் மறைக்கத்தேவையில்லை' என்று கூறியுள்ளார்.

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் ஆக்கப்பூர்வ கூடலாக இருக்க வேண்டும், உலக பிரச்சனைகளை ஒத்துழைப்போடு கையாள வேண்டும் என்பதே ஜி-20 மாநாட்டின் நோக்கம். இந்த மாநாட்டுக்கு ரஷிய அதிபர் புதின் வராமல் இருக்கலாம். இளவரசர் பொடம்கினின் (முன்னாள் ரஷிய ராணுவ தலைவர். பிரதமர் மோடியை இவ்வாறு குறிப்பிடுகிறார்) கைங்கரியம் முழுமையாக வெளிப்பட்டுள்ளது. குடிசைப்பகுதிகள் துணிகளை கட்டி மூடி மறைக்கப்பட்டுள்ளன அல்லது இடித்து தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வீடிழந்துள்ளனர். தெருநாய்கள் போன்றவை குரூரமாக சுற்றிவளைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்படுகின்றன. பிரதமர் மோடியின் மதிப்பை மெருகேற்றுவதற்கே இவ்வாறு செய்யப்படுகிறது' என்று கூறியுள்ளார்.

    டெல்லியில் குடிசைப்பகுதிகள் துணியை கட்டி மறைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சியையும், தெருநாய்கள் போன்றவை பிடித்து இழுத்துச் செல்லப்படும் காட்சியையும் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.

    மேலும் ஒரு வீடியோவில், 'அரசு எங்களை பூச்சிகளைப் போல கருதுகிறது. நாங்கள் மனிதர்கள் இல்லையா?' என்று ஒரு குடிசைவாசி கேள்வி கேட்பது இடம்பெற்றுள்ளது.

    • ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு.
    • விருந்தில் கலந்து கொள்ள உலக தலைவர்கள், இந்திய மாநில முதல்வர்கள், முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு.

    ஜி20 அமைப்பில் 18வது உச்ச மாநாடு இன்று டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் தொடங்கியது. ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த விருந்தில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டு தலைவர்களை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இணைந்து வரவேற்கின்றனர். விருந்தில் கலந்து கொள்ள உலக தலைவர்களை தவிர இந்திய மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

    சிறப்பு விருந்தின் அங்கமாக 50 முதல் 60 இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விருந்தினர்களுக்கு இசை கலைஞர்கள் இந்திய இசையை விருந்தாக்கவுள்ளனர். விருந்தினர்களுக்கு சிறுதானியங்கள் சார்ந்த உணவு வகைகள், இனிப்பு வகைகள் மற்றும் மும்பையில் பிரபலமான பாவ் என ஏராளமான உணவு வகைகள் தயாராகி இருக்கிறது.

    • ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே ஜி20 உச்சி மாநாட்டின் கோட்பாடு ஆகும்.
    • உண்மையில் மிகப் பெரிய விஷயம். நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜி20 நாடுகளின் 18-வது உச்சி மாநாடு தலைநகர் புது டெல்லியில் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய ஜி20 உச்சி மாநாடு நாளை முடிவடைகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள சர்வதேச தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று உரையாற்றினார். பிறகு, ஜி20 உச்சி மாநாட்டின் நோக்கங்கள், திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    இதன் தொடர்ச்சியாக ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள் உரையாற்றினர். மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த வகையில், ஜி20 மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது..,

     

    "இது உண்மையில் மிகப் பெரிய விஷயம். நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே ஜி20 உச்சி மாநாட்டின் கோட்பாடு ஆகும். பல்வேறு விதங்களில், இந்த குறிக்கோள் குறித்து தான் இந்த மாநாட்டில் நாம் பேசி வருகிறோம்."

    "நிலையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவது, தரமான உள்கட்டமைப்பு முதலீடுகளை மேற்கொள்வது மற்றும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதே இதன் இலக்கு. கடந்த ஆண்டு நாங்கள் இந்த இலக்கை அடைய ஒன்று கூடினோம். இன்று மதியம், அமெரிக்கா மற்றும் எங்களின் கூட்டணி நாடுகள் இதனை சாத்தியப்படுத்துவதற்கு மேற்கொண்ட பணிகளை விவரிக்க விரும்புகிறேன்."

    "பொருளாதார கட்டமைப்பு. இந்த வாக்கியத்தை அடுத்த பத்து ஆண்டுகளில், பலமுறை கேட்க போகின்றீர்கள். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் நாடுகள் இடையே உள்ள உள்கட்டமைப்பு இடைவெளி குறித்த பிரச்சினைகளை விவாதித்து வரும் நிலையில், நமது முதலீடுகளின் பலன்களை அதிகப்படுத்த வேண்டும். இதற்காகவே சில மாதங்களுக்கு முன் பொருளாதார கட்டமைப்பு விவகாரத்தில் அமெரிக்கா தனது கூட்டு நாடுகளுடன் பணியாற்றி தொடர்ந்து முதலீடுகளை செய்யும் என்று அறிவித்தது," என்று தெரிவித்தார். 

    • ஜி20 உச்சி மாநாட்டின் நோக்கங்கள், திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
    • சவால்கள் நிறைந்த காலக்கட்டத்தில் நாம் இப்போது சந்திக்கிறோம்.

    ஜி20 நாடுகளின் 18-வது உச்சி மாநாடு தலைநகர் புது டெல்லியில் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய ஜி20 உச்சி மாநாடு நாளை முடிவடைகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள சர்வதேச தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று உரையாற்றினார்.

    பிறகு, ஜி20 உச்சி மாநாட்டின் நோக்கங்கள், திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இவரை தொடர்ந்து பல்வேறு உலக தலைவர்கள் ஜி20 மாநாட்டில் பேசி வருகின்றனர். அந்த வகையில், பிரிட்டன் பிரிதமர் பேசியது குறித்து தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    அதில், "நிதி நெருக்கடியை தொடர்ந்து சர்வதேச வளர்ச்சியை நோக்கமாக கொண்டு, 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜி20 தலைவர்கள் முதல் முறையாக சந்தித்து பேசினர். அசாத்திய சவால்கள் நிறைந்த காலக்கட்டத்தில் நாம் இப்போது சந்திக்கிறோம். உலகமே இந்த ஜி20 மாநாட்டை உற்றுநோக்கி வருகிறது. நமக்கு எதிரே இருக்கும் சவால்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்," என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்து உள்ளார். 

    • கோவிட் பெரும் தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு நாம் வென்றோம்.
    • பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதையே நாம் குறிக்கோளாக கொள்ள வேண்டும்.

    ஜி20 நாடுகளின் 18வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் தற்போது நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய இம்மாநாடு நாளையுடன் முடிவடைகிறது.

    மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மாநாட்டின் மையக்கருத்தான "வசுதைவ குடும்பகம்" எனும் சித்தாந்தத்தின் ஒரு அம்சமாக "ஒரே பூமி" அமர்வில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    இந்த மாநாடு இந்திய மக்களுக்கான மாநாடாகவே மாறியுள்ளது. இது தொடர்பாக 60-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே இந்தியாவின் கொள்கையாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நாம் உலகளவில் எடுத்து செல்ல வேண்டும்.

    வளமான எதிர்காலத்திற்காக ஜி-20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம். பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வை காண வேண்டும். பல வருடங்களாக தீர்வு காணப்படாத நாட்பட்ட சவால்களுக்கு நாம் புதிய வழிமுறைகளில் தீர்வு காண வேண்டும்.

    உலக நாடுகளிடையே பரஸ்பர அவநம்பிக்கை தோன்றியுள்ள சூழ்நிலையை மாற்றி நம்பிக்கையுள்ள நட்பு நாடுகளாக நாம் மாற வேண்டும். கோவிட்-19 பெரும் தொற்றிற்கு பிறகு உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்தும் நம்பிக்கையும் குறைந்திருந்தது. துரதிர்ஷ்டவசமாக, நாடுகளுக்கிடையேயான போர், அந்நிலையை மேலும் நலிவடைய செய்துவிட்டது.

    இருப்பினும், கோவிட்-19 பெரும் தொற்றை எதிர்கொண்டு வெற்றிகரமாக அதனை முறியடித்த நாம் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையையும் வெற்றிகரமாக மாற்ற முடியும். உலக நன்மையையே பொதுவான குறிகோளாக மாற்றி நாம் அனைவரும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும்.

    இன்று ஜி20 மாநாட்டின் தலைமையாக அமர்ந்திருக்கும் இந்தியாவின் சார்பாக நான், உலக நாடுகள் அனைத்தையும் நாடுகளுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதையே குறிக்கோளாக கொள்ளும்படி அழைக்கிறேன்.

    இந்நேரத்தில் மொராக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இக்கட்டான இந்த சமயத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.

    ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர ஜி-20 உறுப்பினராக்க இந்தியா முன் வருகிறது. இந்த முன்மொழிவுக்கு அனைத்து உறுப்பினர்களும் உடன்படுவார்கள் என நான் நம்புகிறேன். உச்சி மாநாட்டில் உலக தலைவர்களின் உற்சாக கரகோசத்துக்கிடையே உங்கள் அனைவரின் ஆதரவுடன் ஆப்பிரிக்க யூனியனை ஜி-20 யில் நிரந்தரமாக சேர அழைக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • ஒவ்வொரு அதிபரின் முன்பாக நாட்டின் பெயர் அட்டை வைக்கப்படும்
    • தங்கள் கூட்டணிக்கு அஞ்சி நாட்டின் பெயரையே மாற்றுவதாக எதிர்கட்சிகள் கூறின

    வரும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயர் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என பெயர் மாற்றம் செய்யப்படும் என ஒரு தகவல் சென்ற வாரம் வெளியாகியது. பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும், அவ்வாறு பெயர் மாற்றம் வருவதை ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆதரித்தனர்.

    ஆனால், இருபதிற்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை 2024 தேர்தலில் எதிர்க்கும் தலைவர்கள் கண்டனம் செய்துள்ளனர்.

    இந்நிலையில், ஜி20 உறுப்பினர்கள் நாடுகளின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பெரும்பாலான உறுப்பினர் நாடுகளின் அதிபர்களும், பிரதிநிதிகளும் புது டெல்லிக்கு வந்தனர்.

    அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, உச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது. இம்மாநாடு சம்பந்தமாக 'இந்தியா' எனும் பெயர் குறிப்பிடப்பட வேண்டிய பெரும்பாலான அதிகாரபூர்வ பதிவுகளிலும் 'இந்தியா' எனும் வார்த்தைக்கு பதிலாக 'பாரத்' எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

    சர்வதேச மாநாட்டு மையத்தில் பாரத் மண்டபத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு உலக தலைவருக்கும் முன்பாக மேஜையில் அவரவர் நாட்டையும் குறிக்கும் விதமாக ஒரு அட்டை வைக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பாக உள்ள அட்டையில் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    ஜி20 உறுப்பினர் நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி சார்பில் ஒரு இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இது குறித்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரபூர்வ அழைப்பிதழில் பாரத் நாட்டின் ஜனாதிபதி என குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி சென்ற வாரமே எதிர்கட்சி தலைவர்கள் தொடங்கி வைத்த சர்ச்சை இன்னமும் ஓயவில்லை.

    தற்போது பிரதமர் பாரத் நாட்டின் தலைவராக மாநாட்டில் அடையாளப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி நாட்டின் பெயர் மாற்றம் உறுதியாகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A.) என பெயரிடப்பட்டதால், பா.ஜ.க. நாட்டின் பெயரையே மாற்ற துடிப்பதாக அக்கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 13-ஆம் நூற்றாண்டில் ஒன்றாம் நரசிம்மதேவ அரசரால் இந்த சக்கரம் உருவாக்கப்பட்டது
    • இந்தியாவின் மூவர்ணக்கொடியின் மத்தியிலும் இச்சக்கரம் இடம்பெற்றுள்ளது

    உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுடன் இந்தியா உட்பட 19 உலக நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய ஒரு பன்னாட்டு நாடுகளின் கூட்டமைப்பு ஜி20.

    இக்கூட்டமைப்பின் தலைமை இம்முறை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இதன் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இம்மாநாடு நாளை வரை நடைபெற இருக்கிறது.

    இதில் பங்கேற்க இக்கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகளை சேர்ந்த பெரும்பாலான உலக தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளனர். அவர்களை வரவேற்கும் விதமாக அம்மையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய முறைப்படி கைகளை கூப்பி வரவேற்றார்.

    பிரதமர் மோடி நின்று வரவேற்ற இடத்திற்கு பின்னால் ஒடிசா மாநில பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற சூரிய பகவான் கோவிலிலிருக்கும் கொனார்க் சக்கரத்தின் பிரதி அமைக்கப்பட்டிருந்தது.

    இந்தியாவில் 13-ஆம் நூற்றாண்டில் ஒன்றாம் நரசிம்மதேவன் மன்னரால் இந்த சக்கரம் உருவாக்கப்பட்டது.

    ஒடிசாவின் சூரியபகவான் கோவிலில் உள்ள இச்சக்கரம், பண்டைய இந்தியர்களின் அறிவாற்றலையும், முன்னேறிய நாகரிக வளர்ச்சியையும், கட்டிட மற்றும் சிற்பக் கலைகளில் அவர்களுக்கிருந்த நுண்ணறிவையும் பறைசாற்றும் விதமாக இருப்பதாக உலகம் முழுவதும் புகழ் பெற்றது.

    வளர்ச்சியயும் முன்னேற்றத்தையும் குறிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட இச்சக்கரத்தில் உள்ள 24 ஆரக்கால்கள் (spokes) ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தை குறிக்கும்.

    ஜனநாயகத்தின் அடிப்படை சித்தாந்தங்களையும், சமூக முன்னேறத்திற்கான உறுதியான நோக்கத்தையும் இந்த சக்கரம் பிரதிபலிக்கிறது என்பதும் இந்திய தேசிய கொடியாகிய மூவர்ணக்கொடியின் மத்தியிலும் இச்சக்கரத்தின் பிரதி இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • எதிர்க்கட்சி தலைவரை அழைக்கக்கூடாது என்று அவர்கள் முடிவு செய்து விட்டனர்.
    • இந்திய மக்கள்தொகையில் 60 சதவீத மக்களின் தலைவரை அவர்கள் மதிக்கவில்லை.

    புதுடெல்லி:

    ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (சனிக்கிழமை) மாலை விருந்து அளிக்கிறார்.

    அதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர்கள், அனைத்து முதல்-மந்திரிகள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால், காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கு காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், பெல்ஜியம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் கருத்து கேட்கப்பட்டது அப்போது, ராகுல்காந்தி கூறியதாவது:-

    எதிர்க்கட்சி தலைவரை அழைக்கக்கூடாது என்று அவர்கள் முடிவு செய்து விட்டனர். அது சில உண்மைகளை உணர்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் 60 சதவீத மக்களின் தலைவரை அவர்கள் மதிக்கவில்லை.

    இது, மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். இதற்கு பின்னால் எந்த மாதிரி சிந்தனை இருக்கிறது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியுமான பூபேஷ் பாகல் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காதது துரதிருஷ்டவசமானது. மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தில், எதிர்க்கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

    அத்தகைய நிலையில், எதிர்க்கட்சி தலைவரை அழைக்காதது, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் ஸ்பெயின் அதிபர் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.
    • ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள்.

    புதுடெல்லி:

    ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செசும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள இருந்தார். இதற்காக அவர் நேற்று இரவு இந்தியா வர திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கபோவதில்லை என அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் கொரோனா தொற்று காரணமாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடி ‘எக்ஸ்’ சமூக வலைத்தள முகப்பு படத்தை மாற்றியுள்ளார்.
    • முன்புறத்தில் நடராஜர் சிலை நின்றிருக்க, விளக்குகளால் ஒளிரும் பாரத் மண்டபம், முகப்பு படமாக இடம்பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பு படமாக மூவர்ண கொடியை வைத்திருந்தார்.

    டெல்லியில் இன்று ஜி-20 மாநாடு தொடங்கும் நிலையில், அவர் 'எக்ஸ்' சமூக வலைத்தள முகப்பு படத்தை மாற்றியுள்ளார். ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

    முன்புறத்தில் நடராஜர் சிலை நின்றிருக்க, விளக்குகளால் ஒளிரும் பாரத் மண்டபம், முகப்பு படமாக இடம்பெற்றுள்ளது.

    ×