என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷவாயு தாக்குதல்"

    • கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த போது திடீரென விஷவாயு தாக்கியது.
    • மீட்புக்குழுவினர் சுமார் 4 மணி நேரம் போராடி 8 பேரின் உடல்களையும் மீட்டனர்.

    மத்தியப் பிரதேசத்தில் 150 ஆண்டுகள் பழமையான கிணற்றில் இருந்து விஷவாயு தாக்கியதில் 8பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேசம் மாநிலம் கொண்டாவத் கிராமத்தில் கங்கௌர் திருவிழாவிற்காக கிராம மக்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக பழமையான கிணற்றில் சுவாமி சிலைகளை மூழ்கடிப்பர். இதனால் அந்த கிராமத்தில் இருந்த 150 ஆண்டுகள் பழமையான கிணற்றை தயார் செய்வதற்காக 5 பேர் இறங்கியுள்ளனர். அவர்கள் கிணற்றில் இறங்கி கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த போது திடீரென விஷவாயு தாக்கியது. இதனால் அவர்கள் கிணற்றில் மூழ்கத் தொடங்கினர். இதனை பார்த்து அவர்களுக்கு உதவுவதற்காக 3 பேர் கிணற்றில் இறங்கினர். அவர்களையும் விஷவாயு தாக்கியது.

    இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்புக்குழுவினர் சுமார் 4 மணி நேரம் போராடி 8 பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்ததுடன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    • கரூரில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
    • சம்பவ இடத்திற்கு கருர் எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் சுக்காலியூர் காந்திநகர் பகுதியில் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்துள்ளது.

    இந்நிலையில், அதில் போடப்பட்ட சவுக்கு குச்சிகள் மற்றும் கான்கிரீட் பலகைகளைப் பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் மேன்ஹோல் எனப்படும் மூடியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த மோகன்ராஜ், ராஜேஷ் ஆகிய 2 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.

    இவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு சென்ற சிவா என்ற மற்றொரு தொழிலாளியும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் மற்ற தொழிலாளர்கள் அங்கு வந்து பார்த்த போது, 3 பேரும் மயங்கி கிடப்பதைப் பார்த்து உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு கருர் எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் கழிவுநீர் தொட்டியில் எவ்வாறு விஷவாயு தாக்கியது என்பது குறித்தும், அது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • செந்தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
    • விஷ வாயு தாக்கி 4 பேரும் மயக்கம் அடைந்தனர்.

    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டம், சதுப்பேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது 31). இவரது மனைவி ஷீலா, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    செந்தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு செந்தமிழ் செல்வனுடன் ராணிப்பேட்டை வி.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (47), வாழைப்பந்தலை சேர்ந்த ராமதாஸ் (26), புளியங்கன்னு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (49) ஆகியோர் தோல் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விஷ வாயு தாக்கி 4 பேரும் மயக்கம் அடைந்தனர். இதில் செந்தமிழ் செல்வனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ராஜா, ராமதாஸ், மகேந்திரன் ஆகியோர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தனர். இதனை கண்ட சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செந்தமிழ் செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எங்கள் பகுதி முழுவதும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால்தான் செப்டிக் டேங்க் கட்டியுள்ளோம்.
    • மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகியுள்ளார்.

    சென்னை:

    சென்னை விநாயகபுரத்தை சேர்ந்தவர் யோகேஷ்பாபு. இவர், ஐகோர்ட்டில், தாக்கல் செய்து உள்ள மனுவில், "எங்களது பகுதியில் கழிவு நீர் இணைப்பு இல்லை. பல முறை சென்னை மாநகராட்சிக்கு மனுக்கள் அனுப்பியும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை.

    இதையடுத்து, எனது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டினேன். இந்த செப்டிக் டேங்க் நிறைந்துவிட்டது. கழிவுகளை அகற்றுவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு செம்டம்பர் 30-ந்தேதி மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, முனுசாமி என்ற ஊழியர் செப்டிக் டேங்கில் இறங்கினார். அப்போது அவர் விஷவாயு தாக்கி இறந்துவிட்டார். தகவல் கிடைத்ததும் வேலை செய்த இடத்தில் இருந்து நான் வீட்டுக்கு சென்றேன். மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். முனுசாமி உடலை வெளியே எடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.55 ஆயிரம் வழங்கினேன்.

    இந்த நிலையில், முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை வழங்குமாறு சென்னை மாநகராட்சி 3-வது மண்டல அதிகாரி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    எங்கள் பகுதி முழுவதும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால்தான் செப்டிக் டேங்க் கட்டியுள்ளோம். முனுசாமியின் இறப்பு துரதிஷ்டவசமானது. அதனால்தான் எனது சொந்த பணத்தை அவரது மனைவிக்கு ரூ.55 ஆயிரம் கொடுத்தேன். இந்த நிலையில் முழு இழப்பீடையும் தருமாறு மண்டல அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது விதிகளுக்கு முரணானது. எனவே, மண்டல அதிகாரியின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சி தரப்பில், "தனியார் செப்டிக் டேங்கில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பாவார். வீட்டு உரிமையாளர்தான் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தரவேண்டும்.

    மாநகராட்சி அந்த தொகையை தந்துவிட்டால் வீட்டு உரிமையாளர் அந்த தொகையை மாநகராட்சியிடம் தர வேண்டும்.

    இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை பிறப்பித்து உள்ளது. உரிய விதிகளின் அடிப்படையில்தான் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிடப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகியுள்ளார். உரிய விதிகளின் அடிப்படையில்தான் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் கொடுத்து உள்ளது. எனவே, அந்த தொகையை மனுதாரரிடம் வசூலிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம்" என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

    • முதலில் லட்சுமணன் என்ற கூலி தொழிலாளி தனது உடலில் கயிறைக் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினார்.
    • நீண்ட நேரம் ஆகியும் லட்சுமணன் கிணற்றிலிருந்து வெளியே வரவில்லை அவரது சத்தமும் கேட்கவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வண்டு மில்லி பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். இவரது வீட்டில் உள்ள உறை கிணற்றை தூர்வார முடிவு செய்தார். இதையடுத்து நேற்று காலை பி.என். காலனியை சேர்ந்த லஷ்மன் (வயது 35), வம்பா (60), சீனிவாச ராவ் (53) என 3 தொழிலாளர்களை தூர்வாரும் பணிக்காக அழைத்து வந்தார்.

    முதலில் லட்சுமணன் என்ற கூலி தொழிலாளி தனது உடலில் கயிறைக் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினார். நீண்ட நேரம் ஆகியும் லட்சுமணன் கிணற்றிலிருந்து வெளியே வரவில்லை அவரது சத்தமும் கேட்கவில்லை. இதையடுத்து வம்பாவும், பிறகு சீனிவாச ராவ் என 2 தொழிலாளர்களும் கிணற்றில் இறங்கினார்.

    கிணற்றுக்குள் இறங்கிய 3 தொழிலாளர்களும் வெளியே வராததால் நாகேஸ்வரராவின் மகன் ராமராவ் கிணற்றில் இறங்கினர். அவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த நாகேஸ்வர ராவ் இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்த போது கிணற்றில் விஷவாயு தாக்கி 4 பேரும் இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தீயணைப்புத்துறையினர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கிணற்றில் இறங்கி இறந்த 4 பேர் உடலையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×